பலாலி 3வது சர்வதேச விமான நிலையம் | தினகரன் வாரமஞ்சரி

பலாலி 3வது சர்வதேச விமான நிலையம்

தற்போது யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை நவீன மயமாக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாக நடைபெற்றுவருகின்றன. விமான நிலைய ஓடுபாதை நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பலாவி விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள நிலப் பரப்பு போதாமையினால் காங்கேசன்துறை பழைய சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள காணியில் பதினெட்டு ஏக்கர் காணி தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.  

வடக்கில் காணிகள் தொடர்பாக மிக கவனத்துடன் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த காணியை பலாலி விமான நிலையத்துக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டமை தொடர்பாக அமைதியாக இருப்பது மிகமுக்கிய விடயமாகும். இரண்டாயிரத்து ஐந்நூறு மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் வடக்கில் செயற்படுத்தப்படும் பாரிய அபிவிருத்தி திட்டமாக பலாலி விமானநிலைய நவீனமயப்படுத்தும் திட்டம் அமைந்துள்ளது. இதில் முந்நூறு மில்லியன் நிதி உதவி இந்தியாவிடமிருந்து கிடைத்துள்ளது. ஏனைய முழுச் செலவையும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள பலாலி விமான நிலையம் நவீன மயமாக்கும் திட்டம் கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் திகதி போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

பலாலி விமான நிலையத்தில் இருந்து ஆரம்பத்தில் அன்று மட்ராஸ் எனக் குறிப்பிடப்படும் சென்னைக்கு விமான சேவைகள் நடந்ததாக வடக்கின் மூத்த பிரஜைகள் கூறுகின்றனர்.  

முதற்கட்ட முடிவில் பெங்களூர், கொச்சின், ஹைதராபாத், மற்றும் மும்பை விமான நிலையங்களுக்கு பலாலி விமான நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் வடக்கு மக்களோ, கூறுவது தமிழ் மக்கள் அதிகமாக உள்ள சென்னைக்கே முதலில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவேண்டுமென கூறுகின்றார்கள்.  

பலாலி விமான நிலையம் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது..  

பிரித்தானிய அரச படைகளின் வசதிக்காகவே இங்கே விமான நிலையம் அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகமகா யுத்தகாலத்தில் விமான நிலையம் யுத்த தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் பலாலி விமானப் படை இராணுவ முகாமில் பிரித்தானிய இராணுவ படையினரால் அமைக்கப்பட்ட அனைத்துமே அவ்வாறே விடப்பட்டன. அவர்கள் ஒரு சில விமானங்களை மாத்திரமே தம்முடன் எடுத்துச் சென்றனர். அன்று சிவில் விமானசேவை திணைக்களத்தால் பராமரிப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1947ம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி எயார் சிலோன் விமானசேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பலாலி விமான நிலையம் உள்ளூர் விமான சேவைக்கு பயன்படுத்தப்பட்டது.  

எயார் சிலோன் விமான சேவை மூலம் கொழும்பு இரத்மலானையிலிருந்து சென்னை வரை விமான சேவைகள் நடத்தப்பட்டது. 1948ல் சுதந்திரம் பெற்ற பின்னர் அன்றைய மெட்ராசுக்கும் பலாலிக்கும் இடையே விமானசேவை ஆரம்பமாயின. 1983ம் ஆண்டு யுத்தம் காரணமாக வடக்கும் கிழக்கும் பாதிக்கப்பட்டபோது பலாலி விமான நிலையம் மற்றொரு பரிமாணத்தை அடைந்தது.  

சிவில் விமான சேவை அதிகாரசபையின் நிர்வாகத்திலிருந்து விடுபட்ட பலாலி விமான நிலையம் முற்றாக பாதுகாப்பு பிரிவினர் வசமாகியது.  

யுத்தத்துக்கு முன்னர் உபாலி நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் கொழும்புக்கு பலாலிக்கும் இடையே விமான சேவைகளை நடத்தின. அன்று அதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாவுக்கும் குறைவானதாகும். அச்சேவையும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் நிறுத்தப்பட்டது.  

யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற வேளையில் யுத்த நடவடிக்கைகளுக்கு தேவையான வளங்களை வழங்க இவ் விமான நிலையம் பாவிக்கப்பட்டது. யுத்த காலத்திலும் கூட கொழும்புக்கும் பலாலிக்குமிடையே சிவில் விமான சேவை நடைபெற்றது. ‘லயன் ஏயார்’ மற்றும் ‘செரண்டீப்’ என்னும் பெயரில் இரண்டு விமான சேவைகள் கொழும்புக்கும் இரத்மலானைக்கும் இடையே பிரயாணிகள் போக்குவரத்து நடத்தின. அவ்வேளையில் ஒரு தடவை விமானத்தில் பயணம் செய்வதற்கு இருபதினாயிரம் ரூபா கட்டணம் அறிவிடப்பட்டது.  

ஆனால் பின்னர் இந்த விமானசேவை புலிகளின் ஏவுகணை தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்டது.  

விடுதலைப் புலிகள் பலாலியில் தரை இறங்கும் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மீது எறிகணை தாக்குதல் நடத்தியதன் காரணமாக நிலைமை முற்றிலும் மாறியது. பலாலி விமான நிலையம் எறிகணை தாக்குதலுக்கு இலக்காக அமையாத வகையில் பலாலி விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதி மாற்றி அமைக்கப்பட்டது.  

பலாலி விமான நிலையத்தை சுற்றியுள்ள காணிகள் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டன. ஈழப் போரின் முடிவைத் தொடர்ந்து மீண்டும் பலாலி விமான நிலையம் மக்கள் மயப்படுத்தப்படும் பணிகள் துரிதமடைந்தன.  

எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில், பலாலி விமானநிலையம் இந் நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மாறவுள்ளது. அதன் பின்னர் A-320 மற்றும் A321 போன்ற எயர் பஸ்கள் கூட பலாலி விமான நிலையத்திலிருந்து பயணங்களை மேற்கொள்ளும் வசதி வந்து விடும். பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் அடைவது தமிழ் மக்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான்!  

இந்தியா, குறிப்பாக தமிழகம் எமக்கு முக்கியமான இடம். யாத்திரை, ஷொப்பிங் என்று அனைத்துக்கும் நாம் இந்தியாவைத் தானே நாடுகிறோம்!  

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்ல ஒரு மணித்தியாலம் தேவைப்படுகின்றது. புதுடெல்லிக்கு செல்ல மூன்றரை மணித்தியாலங்கள் தேவை.

வடக்கில் உள்ளவர்கள் இந்தியாவுக்கு செல்ல கொழும்பு கட்டுநாயக்கவுக்கு வருவதற்கு ஆறு மணித்தியாலயத்துக்கும் அதிக காலம் தேவைப்படுகின்றது வடக்கு மக்கள் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமக மாற்றப்படுவது குறித்து மகிழ்ச்சி அடையாமலா இருப்பார்கள்! முதலில் இந்தியாவுக்கும் அதன் பின்னர் 16 ஐரோப்பிய நாடுகளுக்கும் பலாலியில் இருந்து விமான சேவைகளை ஆரம்பிக்கும் திட்டமுள்ளது.

பலாலியில் இருந்து பிராந்திய நாடுகளுக்கான விமானசேவைகளை செப்டம்பர் மாதம் தொடக்கம் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சர்வதேசத்துடன் பலாலி பிரதேசம் தொடர்பு பெறுவதால் பலாலி உள்ளிட்ட முழு யாழ்ப்பாணமுமே துரித அபிவிருத்திக்கு உட்படும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் நேரடியான மற்றும் மறைமுகமான தொழில் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.  

யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வரையான காங்கேசன்துறை பாதையில் அமைந்துள்ள சிறிய வடை விற்கும் கடைகள் தொடக்கம் பெரிய வர்த்தக நிலையங்கள் வரை முன்னேற்றமடைந்து அபிவிருத்தியடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை! 

தமிழில்: வி.ஆர். வயலட்      

Comments