பெண்ணியம்; இரு பாலினத்தின் ஒரே பயணம் | தினகரன் வாரமஞ்சரி

பெண்ணியம்; இரு பாலினத்தின் ஒரே பயணம்

பல ஆண்டுகளாக பெண்ணியம் ஒரு வசைச் சொல்லாகவே கருதப்படுகிறது. ஆண் -பெண் இருபாலருக்குமான வாய்ப்புகளில் சம உரிமையை ஏற்படுத்துவதற்கான புரிதலே பெண்ணியம் என்பதை பல்வேறு பெண்ணியவாதிகளும் ஒருமித்த குரலில் பலமுறை வலியுறுத்துகின்றனர். அந்த இலக்கை அடைவதற்கு உதவும் அமைப்பு சார்ந்த செயலே பெண்ணியம்.

மலாலா யூசஃப்ஜாய் கூறியது போல, “பெண்களில் பாதிபேர் பின்தங்கிய நிலையில் இருக்கும் போது நம்மால் வெற்றி அடைய முடியாது.” ஆனால் உண்மையில் கணிசமான ஆண்களும், ஏன் பெண்களும் கூட பெண்ணியத்தை ஆண்கள் வெறுக்கும் அம்சமாகவே பார்க்கின்றனர். அத்தோடு ஆண்களைப் புறந்தள்ளிவிட்டு பெண்களுக்கான உலகை படைப்பார்கள் எனவும் நினைக்கின்றனர்.

இந்தப் பார்வையினால், பலர் ‘பெண்ணியவாதம்’ என்ற வார்த்தையிலிருந்தே தள்ளிப் போகிறார்கள், மேலும், பெண்களால் ஆண்களுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக ‘ஆணியவாதிகள்’ குழு போன்றவைகள் அமைக்கப்படுகின்றன.

ஆனால் ஒரு ஆண் பெண்ணியவாதி என்பதை புரிந்து கொள்வது சாத்தியமா? வெள்ளையாக இருப்பவர் நல்லவர்கள் என்று சொல்வார்களே அது தான் நினைவுக்கு வருகிறது.

வெள்ளையர்களுக்கு நிறவெறியால் பாதிக்கப்பட்டவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. ஏதேனும் ஒரு வழியில், தங்கள் வெள்ளை நிறத்தினால் சலுகைகளை பெற்றிருப்பார்கள். அதேபோன்று தான், எல்லா ஆண்களும் ஆண்களுக்கான பெருமைகளை அனுபவிக்க விரும்புவர். ஒரு ஆண் பெண்ணியவாதியாக இருக்கலாம் என்று உணர்வுப் பூர்வமாக அறிய முடியும்.

தான் பெண்ணியவாதி என்றொரு ஆண் சொல்லும்போதே, தான் பரந்த மனப்பான்மை கொண்டவர் அல்லது மென்மையானவர் என்பதை வெளிப்படுத்தவும், பெண்களைக் கவரவும் தான் அதைச் சொல்கிறார் என எழும் சந்தேகம் பொதுவானதாக இருக்கிறது.

மற்றொரு புறம் ஒரு ஆண், பெண்ணியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது தான், பாலின பாகுபாட்டிற்கு எதிரான கடுமையான போராட்டத்தில் அவர் எடுக்கும் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது என்று பலரும் நினைக்கின்றனர். பெண்ணியம் என்ற அமைப்பில் ஓர் ஆணும் இணைந்தால் மட்டுமே பாலின சமநிலை உருவாகும் என்பது அவர்களின் வாதம்.

“பெண்கள் அடுக்களையில் மட்டுமல்ல, நாட்டின் கவுன்சில்களிலும் அங்கம் வகிப்பதற்கு ஒப்பானவர்கள் என்பதை ஆண்கள் உணர்ந்து அங்கீகாரம் அளிக்கும் நாள் வரும். அதன் பின்பு தான் ஒரு சிறந்த சகோதரத்துவம், பாலினம் தொடர்பான ஒருமித்த கருத்து ஏற்பட்டு இனம் தொடர்பான உயரிய வளர்ச்சியை காண முடியும்” என்று பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் சூசன் பி. அந்தோணி 19ம் நூற்றாண்டிலேயே கூறி இருக்கிறார்.

பெண்களுக்கு மட்டுமான ஓர் இடத்தை உருவாக்கி அதில் சமநிலையின்மை, பாலின வன்முறைகள் மற்றும் வன்கொடுமைகள் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேசும் ஒரு பெண்களுக்கான ஒரு இடமாகவே இதை தொடக்ககால பெண்ணியவாதிகள் நம்பினர். ஆனால் ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றுவதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாலினம் தொடர்பான பிம்பங்களில் இருந்து ஆண்களை பெண்ணியம் விடுவித்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.

பெண்களின் சிறப்புகள் என்று சொல்லக்கூடிய சமையல் அல்லது ஃபேஷன் வேலைகளிலும் ஈடுபடுவதனாலோ உணர்ச்சிவசப்படுபவராக இருப்பதனாலோ, ஓர் ஆண் கேலி செய்யப்படுவது உண்மையில் பழமைவாத, ஆண் ஆதிக்கவாதம் மற்றும் சமுதாய கட்டமைப்பால் பின்தங்கிய நிலை என்றே சொல்ல வேண்டும்.

எனவே பெண்ணியம் என்பது பழமைகளை மறந்து தங்கள் பாதையில் பயணிக்க இரு பாலினத்தவருக்கும் உதவும் ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பாலின சமநிலை மற்றும் பெண்ணியம் தொடர்பாக ஆண்கள் குறிப்பிட்ட சில முக்கியமான கருத்துகள் இதோ:

உலகில் நடைபெறும் மூன்றில் / இரண்டு பங்கு பணிகளுக்கு பெண்களே பொறுப்பு வகிக்கிறார்கள், இருந்த போதும் அவர்களின் மொத்த வருமானம் 10சதவீதம் மட்டுமே, அவர்கள் ஒரு சதவிகித சொத்தை மட்டுமே சொந்தமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் நாம் சமமானவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? இதற்கான விடை ஆம் என்று கிடைக்கும் வரை நாம் இந்த கேள்வி கேட்பதை நிறுத்தப் போவதில்லை.- டேனியல் க்ரேக், நடிகர்

வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிராக கொழுந்து விட்டு எரியும் சமுதாய பிரச்சினைகளுக்கு வெளி உலகில் போராட்டக் குரல் எழுப்புகிறோம். ஆனால் வீட்டுக்குள் அதற்கு எதிரான செயலையே நடைமுறைபடுத்துகிறோம். நாம் சொல்லும் காரணங்கள்? நான் மட்டும் என் மகனின் திருமணத்திற்கு வரதட்சணை வாங்காமல் இருப்பதில் என்ன இருக்கிறது? மொத்த அமைப்பிலும் மாற்றம் தேவை, அந்த அமைப்பை மாற்றப் போவது யார்? – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

நான் என்னை பெண்ணியவாதி என்றே சொல்வேன். பெண்கள் உரிமைகளுக்காக போராடும் ஒருவரை நீங்கள் அப்படித் தானே அழைப்பீர்கள்?- தலாய் லாமா

முதலில் பெண்களுக்கு கல்வியை வழங்குங்கள், அவர்களை அவர்களாக இருக்கவிடுங்கள்; பின்னர் அவர்களே என்னென்ன மாற்றம் தேவை என்பதை எடுத்துரைப்பார்கள். அவர்கள் விஷயத்தை முடிவு செய்ய நீங்கள் யார்? – சுவாமி விவேகானந்தர்

தன் உடையலங்காரப் பழக்கம் பற்றி எழுப்பிய கேள்விக்கு இசைக்கலைஞர் இக்கி பாப் அளித்த பதில் - நான் பெண் போல உடை அணிந்து கொள்ள வெட்கப்படவில்லை, ஏனெனில் பெண்ணாக இருப்பதை நான் அவமானமாக நினைக்கவில்லை.

Comments