வட புலத்து இளைய தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு கலாசாரத்தை விதைக்கட்டும்! | தினகரன் வாரமஞ்சரி

வட புலத்து இளைய தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு கலாசாரத்தை விதைக்கட்டும்!

யாழ். மண்ணில் ஒரு கண்காட்சி மண்டபம் அமைக்கப்பட வேண்டும் 

யாழ்ப்பாண சமூகம் நீங்கள் நினைப்பது மாதிரி அறிவுசார் மற்றும் வாசிப்பு சமூகமாக இன்றைக்கு இல்லை. இங்குள்ள பெற்றோர் பிள்ளைகள் ஏட்டுக் கல்வியில் ஊன்றி நிற்க வேண்டும் என்பதில் தான் அக்கறையாக இருக்கிறார்கள். பாடசாலை முடிந்தால் டியூஷன். இவற்றுக்கான உசாத்துணை நூல்கள், மாதிரி வினாத்தாள் என்பனவற்றில் கரிசனை காட்டுகிறார்களே தவிர வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் இல்லை, பரவலாகவும் கிடையாது புத்தகங்கள், தினசரிகளுக்கு செலவு செய்வது வீண் வேலை என்றொரு மோசமான அபிப்பிராயம் வளர்ந்து வருகிறது. வாசித்தால் புத்தகம் விற்கும். விற்றால் விற்பவனுக்கு இலாபம் என்பதால் நூல் விற்பனையோடு தொடர்பு உடையவர்கள் இப்படியெல்லாம் புலம்புகிறார்கள் என்று நினைக்க வேண்டாம்...” 

இவ்வாறு என்னுடன் பேச ஆரம்பித்தார் இலங்கையின் தமிழ்ப் புத்தக விற்பனைத் துறையில் முன்னணி வகிக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் அதிபர் ஸ்ரீதர் சிங். யாழ் புத்தகத் திருவிழா தொடர்பாக, பிரதான அனுசரணையாளர் என்ற வகையில், அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதுதான், புத்தக வாசிப்பு கலாசாரம் வடக்கில் எப்படி இருக்கிறது என்பது பற்றிக் குறிப்பிட்டார். 

“புத்தகம் வாங்கினால் விற்பவருக்கு இலாபம் என்ற ரீதியாக இதைப் பார்க்கக் கூடாது. வாசிப்பு என்பது அறிவு, சிந்தனையுடன் தொடர்பு கொண்டது. வலை தளத்தில் அலைவதும் சமூக வலைத்தளங்களில் ஊடாட்டம் செய்வதும் வாசிப்புக்கு நிகராகாது. இரண்டும் தரும் அனுபவங்கள் வெவ்வேறானவை. கூட்டன் பேர்க் அச்சு இயந்திரத்தைக் கண்டு பிடித்த பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட சிந்தனைப் புரட்சிக்கு வாசிப்பே காரணமானது இன்றைக்கும் அறிவில் புரட்சி செய்பவர்களின் பின்னணியில் நூல் வாசிப்பே உள்ளது. இணையம் அதற்கு பக்கபலமாகவே உள்ளது.” 

பூபாலசிங்கம் ஶ்ரீதர்சிங்

இவ்வாறு பேசிச் சென்றவரிடம், யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள புத்தகக் காட்சி தொடர்பான விவரங்களைக் கேட்டேன். 

“இப்போதுதான் முதல் தடவையாக ஒரு முழுமையான புத்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முப்பது காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தடவையாக இலங்கை நூல் பதிப்பாளர், இறக்குமதியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் யாழ்ப்பாணத்தில் கண்காட்சியை நடத்த முன்வந்திருக்கிறது. இந்த சங்கம்தான் வருடா வருடம் கொழும்பு பண்டாரநாயக்க மண்டபத்தில் பிரமாண்டமான புத்தக விழாவை நடத்தி வருகிறது. இந்த வகையில் அகில இலங்கை புத்தகக் கண்காட்சியாக இதைக் கருத முடியும். பெரும்பாலும் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களே காட்சியில் இருக்கும்....” என்று கூறியபோது, இடை மறித்து, நூல் கண்காட்சியின்போது கலை கலாசார, இலக்கிய அம்சங்கள் இடம் பெறுவது வழக்கம் தானே, எனவே யாழ் பண்பாட்டு கலை அம்சங்களை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவா? என்று அவரிடம் கேட்டேன். 

இம்முறை அப்படி கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றே தெரியவருகிறது. ஏனெனில் திறந்த வெளியில் அல்லாமல் வீரசிங்கம் மண்டபத்தில்தான் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கே முப்பது கூடங்கள் தான் அமைக்க முடியும். கண்காட்சியில் பங்கு கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மேலதிகமான புத்தங்களை வைத்துக் கொள்வதற்கான களஞ்சிய வசதியை செய்து கொடுப்பதற்கும் வசதி இல்லையாம். தாம் வந்த வாகனங்களில் தமது புத்தகங்களை வைத்துக் கொள்ள வேண்டிய சூழல்.  

பார்வையாளர்களும் உள்ளே வந்தால் வீரசிங்க மண்டபம் நிறைந்துவிடும். எனவே அந்த மண்டபத்துள் கலைநிகழ்சிகளை நடத்துவதோ, இலக்கிய சொற்பொழிவுகளை நடத்துவதோ சாத்தியமாகப் போவதில்லை. எனவே இம்முறை புத்தகக் கண்காட்சி மட்டுமே நடக்கும் என்பது அவர் கூறிய பதிலின் சாராம்சம். 

இது ஒரு பரிசோதனை முயற்சிதான் என்கிறார் பூபாலசிங்கம் 

“ஒரு பரந்துபட்ட அளவிலான நூல் காட்சி எவ்வளவுதூரம் இம் மண்ணில் சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இது பரீட்சைக் காலம். மறுபக்கம் நல்லூரில் தேர்ந்திருவிழா. பாடசாலை விடுமுறை. இவற்றுக்கு மத்தியிலேயே இத் திருவிழாவை நடத்துகிறோம். நான் முன்னரே கூறியபடி இளம் வாசகர்கள் எவ்வளவு தூரம் அக்கறை காட்டுவார்கள், பெற்றோர் வருகை எவ்வாறிருக்கும் என்பதைக் காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம். இந்த கண்காட்சி வெற்றிகரமாக யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பதற்கான முக்கிய காரணம் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் என்பதை குறிப்பாக சொல்லி வைக்க வேண்டும். அவர் பாடசாலைகளுக்கும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும், நூலகங்களுக்கும் அறிவித்தல்களை விடுத்திருக்கிறார். நிதி ஒதுக்கித் தந்துள்ளார். இது எமக்கு பெரிய பலமாக இருக்கிறது” என்பது ஸ்ரீதர்சிங்கின் பார்வை. 

இவர் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நூல் காட்சிகளை நடத்திய அனுபவம் கொண்டவர். கொழும்பிலும், பெரும்பாலான தமிழ் வாசகர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் இவர்களே பொது நூல்களையும் பக்தி புத்தகங்களையும் வாங்கிச் செல்கிறார்கள் என்றும் இவர் கூறுகிறார். இவர் மட்டுமல்ல, நூல் காட்சியில் பங்கு கொள்ளும் நூல் விற்பனையாளர்களின் கருத்தும் இதுதான். 

இம்முறை யாழ். கண்காட்சியில் யுனிலங்கா, பூபாலசிங்கம், சேமமடு ஜெயா, குமரன் பதிப்பகம், புக்வின், ஸ்ரீலங்கா புக் டிபோ, அநுர பப்ளிகேஷன் ஆகிய தமிழ் நூல் விற்பனையாளர்கள் கலந்துகொள்கிறார்கள். விஜிதயாபா, சமரநாயக்க, சரசவிய, கொடகே உட்பட பல சிங்கள, ஆங்கில நூல் விற்பனையாளர்களின் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி வெளியீட்டுத் திணைக்கள வெளியீடுகளையும் இப் புத்தக விழாவில் பெற்றுக் கொள்ளலாம். கல்வி தொடர்பான ஏராளமான நூல்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வருடமும் மிகப் பிரமாண்டமான நூல் கண்காட்சி செப்டம்பர் மாதம் கொழும்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டாவது பெரிய நூல் கண்காட்சி ஜுன் மாதம் கண்டியில் நடைபெறும். இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை யாழ்ப்பாணம் பிடித்திருக்கிறது. யாழ். விழாவில் நியூசென்சரி புக்ஹவுஸ், கவிதா புத்தக நிலையம் உட்பட சில இந்திய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.

வெளிநாட்டு புத்தக நிறுவனங்கள் இலங்கையில் நூல்காட்சி நடத்தும்போது சில பிரச்சினைகளை சந்திக்கின்றன. அவற்றில் முக்கியமானவை இரண்டு. முதலாவது உணவு, தங்குமிட, போக்குவரத்து செலவு. யாழ். கண்காட்சியில் கலந்து கொள்ள வேண்டுமானால் கொழும்புக்கு நூல்களைக் கொண்டுவந்து பின்னர் யாழ்ப்பாணத்துக்கு அவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். இரண்டாவது யாழ்ப்பாணத்தில் களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டும். கண்காட்சி முடிவடைந்தததும் மிகுதியான நூல்களை இங்கே எங்காவது பத்திரமாக விட்டுச் செல்ல வேண்டும். எனினும் இந்தக் கண்காட்சி வெற்றிகரமாக அமைந்துவிட்டால் அடுத்த வருட கண்காட்சியில் மேலும் பல தமிழக புத்தக வெளியீட்டாளர்கள் இக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.  சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக நூல் பதிப்புத்துறை ஒரு இருண்ட காலத்தை எதிர் நோக்கியிருந்தது.

புக்வின் மோகன்

அங்கு வாசிப்பு பழக்கம் அருகத் தொடங்கியிருந்தது. அந்த இருண்ட சூழலை வருடா வருடம் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி படிப்படியாகத் தீர்த்து வைக்க ஆரம்பித்தது. அந்தப் பத்து நாட்களில் பல லட்சம் புத்தங்கள் விற்றுத் தீர்ந்தன. பதிப்பங்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது. தற்போது வருடம் முழுவதும் தமிழக மாவட்டங்களில் நூல் காட்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே தரமான நூல்களைக் கொண்டுவந்தால் விற்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வீழ்ச்சி கண்டிருந்த வாசிப்பு கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. 

“அதாவது, வாசிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது என்பதைக் குறையாக சொல்லிக் கொண்டிருக்காமல் அதைக் கட்டி எழுப்புவதற்கான வழிவகைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். ஒரு வருட காலத்தில் நூறு புத்தகங்களை ஒரு மாணவன் வாசித்தால் அவனுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்படும் எனக் கல்வியமைச்சு அறிவித்திருப்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவ்வாறு ஆயிரம் மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களில் நூறு மாணவர்களுக்கு சீனாவுக்கு கல்விச் சுற்றுலாவை பெற்றுத்தர கல்வி அமைச்சர் முடிவு செய்துள்ளார். இவ்வாறு வாசிப்பை பாடசாலைகளுக்கு கொண்டு செல்வதில் ஒரு ஆக்க பூர்வமான திட்டத்தை கல்வி அமைச்சு செயற்படுத்தி இருக்கிறது. இத்தகைய ஒரு வாசிப்பு கலாசாரத்தை யாழ்ப்பாணத்தில் கட்டி எழுப்ப நாம் முயலவேண்டும். கண்காட்சி முடிந்ததும் எல்லாம் முடிந்து விட்டது என்று நாம் எண்ணக் கூடாது” என்று எம்முடன் பேச ஆரம்பித்தார் புக்வின் மோகன். 

அவர் ஒரு முக்கியமான கோரிக்கையை முன் வைத்தார்.  “கொழும்பில் எல்லா வகையான மாநாடுகளையும், கண்காட்சிகளையும் நடந்துவதற்கு பண்டாரநாயக்க மண்டபம் உள்ளது. டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் எக்ஸிபிஷன் சென்டர் உள்ளது. ஆனால் வட பிராந்தியத்தில் ஒரு விசாலமான கண்காட்சி மண்டபம் இல்லை. வீரசிங்கம் மண்டபத்தை விட்டால் வேறு மண்டபம் கிடையாது. வீரசிங்கம் மண்டபம் எழுபதுகளின் தேவைகளுக்காகக் கட்டப்பட்டது. இன்றைய தேவைகளுக்கு ஏற்ற ஒரு மண்டபம் மிக அவசியம். ஒரு விசாலமானதும் வசதிகள் கொண்டதுமான மாநாட்டு மண்டபம் இல்லாததால் தான் இது முழுமையான நூல்கண்காட்சி விழாவாக அமையவில்லை. எனவே ஒரு வசதியான கண்காட்சி மண்டபத்தை யாழ்ப்பாணத்தில் அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை யாழ். மக்களிடம் சொல்லி வைக்க விரும்புகிறேன்” என்கிறார் புக்வின் மோகன். இது ஒரு நல்ல யோசனை. கட்டாயம் நிறைவேற்றி வைக்கப்பட வேண்டிய கோரிக்கை. 

புக்வின் மோகன் 2016 முதல் யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைந்த ஒரு பெரிய நூல் கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி பேசி வந்தவர். அதற்கான ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டவரும் கூட. தற்போது அது செயற்பாட்டுக்கு வந்திருப்பதில் இவர் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார். வீரசிங்கம் மண்டபத்தில் இரண்டு கூடங்களில் சுமார் 1500 தலைப்புகளில் இவர் புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளார். கிழக்கு பதிப்பக நூல்களை இவரது கூடங்களில் பெற்றுக் கொள்ளலாம். 

யாழ். வீரசிங்க மண்டபத்தில் 27 முதல் செப்டம்பர் 1ம் திகதிவரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை இந் நூல்காட்சி இடம்பெறவுள்ளது. 27ம் திகதி காலை 8 மணிக்கு திறப்பு விழா நடைபெறும். பிரதம அதிதியாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொள்கிறார். இந்த சந்தர்ப்பத்தை யாழ். மாவட்ட, வட மாகாண மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வருடா வருடம் இன்னும் பெரிய அளவில் நூல்கண்காட்சிகள் இங்கே நிகழ்வதற்கு வாசகர்கள் தான் வழி வகுக்க வேண்டும். ஒரு வாசிப்பு கலாசாரத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான மூலைக்கல்லாக இக் கண்காட்சியை பயன்படுத்திக் கொள்வோம். 

கம்பியூட்டர்களுக்கும் ஸ்மார்ட் போன்களுக்கும் சற்று ஓய்வு கொடுத்துவிட்டு வீரசிங்க மண்டபத்துக்கு ஒரு நடை வாருங்கள். நீங்கள் விரும்பும் புத்தங்களை வாங்கிச் செல்லுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சின்ன நூலகத்தை அமைத்துக் கொள்வதற்கான முதல் வாய்ப்பாக இது இருக்கட்டும் ஏனெனில் நல்ல வாசிப்பு தரும் விரிவும் ஆழமும்...   

அருள் சத்தியநாதன்

Comments