1832ஜனவரி 30: முடியிழந்த கண்டி மன்னன் ராஜசிங்கன் வேலூரில் மரணம் | தினகரன் வாரமஞ்சரி

1832ஜனவரி 30: முடியிழந்த கண்டி மன்னன் ராஜசிங்கன் வேலூரில் மரணம்

மலைநாட்டுக்கான போக்கவரத்துப் பாதைகளைச் செப்பனிடுவதில் ஆங்கிலேய அரசு அக்கறை செலுத்தியமை காரணமாக 1822ம் ஆண்டில் பொருட்களை எடுத்துச் செல்வதிலும் அஞ்சல் விநியோகத்திலும் காணப்பட்ட இடர்கள் மறைந்தன. எனினும் இவ் வசதிகள் ஊவா பிராந்தியத்தில் மேம்பட காலம் எடுத்துக் கொண்டது. 

 1818ம் ஆண்டு கலவரம் காரணமாக அப்பகுதியில் தொடர்பாடல்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 

அப்பிராந்திய மக்களின் வயல்களும், கமத்தொழில் உபகரணங்களும் சேதமாக்கப்பட்டிருந்தன. ஏராளமான கால் நடைகள் கொல்லப்பட்டு மற்றும் கைப்பற்றப்பட்டும் இருந்ததால் அம்மக்கள் மேலும் ஏழ்மை நிலையை அடைந்திருந்தனர். 

கால்நடைகளின் பற்றாக்குறை காரணமாகவும், பிறமாவட்டங்களிலிருந்து கால்நடைகளை தமது மாவட்டங்களுக்குக் கொண்டுச் செல்வது தடை விதிக்கப்பட்டிருந்தமையினாலும் இந்தியாவிலிருந்து கால்நடைகளை கொள்வனவு செய்ய வேண்டிய தேவையேற்பட்டது. 

படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்துள்ள பிரதேசங்களில் பல தரப்பட்ட அபிவிருத்திப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியது. 1934ம் ஆண்டில் மலைநாட்டு புரட்சி என்னும் நிறைவேறாத சதியும் 1848ல் ஏழுகோரளையும் மாத்தளையிலும் தலைதூக்கிய சலசலப்பும் ஓய்ந்தன. அதன் பின்னர் முழு இலங்கையிலும் ஆங்கிலேயரின் ஆட்சி எதிர்ப்புகளின்றி வேரூன்ற ஆரம்பித்தது. 

1833ம் ஆண்டு மலைநாட்டு பிரதேசங்கள் கரையோர மாநிலங்களோடு இணைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வருடங்களாக பிளவுபட்டும், பிரிந்து நின்றும், பேதமுற்றும் கிடந்த இலங்கை ஒரே குடையின் கீழ் ஒருமித்த இலங்கை என்ற பெயரில் ஆங்கிலேய நிர்வாகத்தின் கீழ் வந்தது. 

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சியாகக் கருதப்படும் ஊவா – வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கு 1817ம் ஆண்டின் பிற்பகுதியில் தூபமிடப்பட்டிருந்தது. அக்காலக் கட்டமானது கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் நாடு கடத்தப்பட்டு தென்னிந்தியாவில் வோலூரின் சிறை வைக்கப்பட்டு ஓராண்டு ஆகியிருந்தது. 

1816ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ம் திகதி வேலூர் திப்புசுல்தான் கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டான் மன்னன் இராஜசிங்கன். திப்பு சுல்தானும் அவனது மகன்மாக்களும் வாழ்ந்த அக் கோட்டைக்குள் மன்னனின் மைந்தர்கள் வாழ்ந்த இடமே மன்னன் இராஜசிங்கனுக்கு ஒதுக்கப்பட்டது. பின்னாளின் ‘கண்டி மஹால்’ என இது அழைக்கப்பட்டது. 

இக் கோட்டைக்குள் அமைந்திருந்த ஏனைய மாளிகைகள், கெட்சூர் மாளிகை, பச்சைபேகம் மாளிகை, பல்கொண்டை மாளிகை என அழைக்கப்பட்டன. 

சிறைக்கைதியாக வைக்கப்பட்ட மன்னனுக்கும் அவனது குடும்பத்துக்கும் சிறைக்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. நீண்டகால வசிப்பிடமாக இராஜசிங்கனுக்கு இக்கோட்டை வழங்கப்பட்டமையினால் மன்னனையும் குடும்பத்தையும் காவல் புரியும் தேவை இல்லையென கருதியே ஆங்கிலேயர் அவர்களை நோட்டமிடவும் காவல் புரியவும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

புதியதோர் வசிப்பிடத்துக்குள் பிரவேசித்த ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன், தனக்கு குதிரையொன்று தேவைப்படுவதாகவும், அதனை தந்துதவுமாறும் கோரியிருந்தான். எனினும் மன்னனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பல்லக்கொன்று வழங்கப்பட்டது.  

இராஜசிங்கனின் பணியாளர்களில் எழுவர் சிங்களவர்கள். ஏனையவர் வடுகர் எனப்படும் தெலுங்கர்கள். அவர்களுக்கிடையில் காவல் சிப்பாய்மாரும் இருந்துள்ளதாக பின்னாளில் தெரியவந்தது. மேலதிகமாக சுதேச வைத்தியரொருவரும் சிகையலங்கார சேவகன் ஒருவனும் நியமிக்கப்பட்டிருந்தனர். மார்ச் மாதத்தில் மன்னனின் உறவினர் பலர் அரசனுடன் இணைந்து கொண்டனர். 

மன்னனின் குடும்ப செலவினங்களுக்காக மாதாந்தம் இந்திய ரூபாய் 200கொடுப்பனவாக வழங்கப்பட்டது. இதனை இலங்கையின் (பிரித்தானிய) அரசு ஏற்பாடு செய்தது. இக் கொடுப்பனவு மன்னன் கொழும்பில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது வழங்கப்பட்ட தொகையாகும். 

இலங்கையின் ஆளுநர் ரொபர்ட் பிரவுன்றிக் இந்திய (பிரித்தானிய) அரசிடம் பணமாகவன்றி பண்டங்களாக கொடுப்பனவை வழங்குமாறு கேட்டுக் கொண்டான். மேலும், இலங்கையில் கண்டி அரியணையிலிருந்து இறக்கப்பட்ட மன்னனுக்கு தொடர்ந்து அரசமரியாதைகளுடனும் வசதி வாய்ப்புகள், வரப்பிரசாதங்களுடனும் வசிப்பதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் ஒரு கைதிக்குரிய வசதிகளை வழங்குமாறும் ஆளுநர் பிரவுன்றிக் கோரியிருந்தான். 

அத்தோடு அரசனின் பரிவாரங்களில் மன்னனின் நெருங்கிய உறவினர்களை மாத்திரம் நியமிக்குமாறும் ஏனையவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுமாறும் கேட்டிருந்தான். 

வேலூர் கோட்டையில் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் மனவேதனையுடன் தான் காலங்கழித்தான் வாழ்க்கை கசந்தது அவனுக்கு. தனக்கு வழங்கப்படும் கொடுப்பனவைக் கூட சில சந்தர்ப்பங்களில் தட்டிக்கழித்தான். மன்னனின் மனைவியருள் ஒருத்தியாகிய உபேந்திரம்மா 1818ஜுன் மாதம் 16ம் திகதி நோய் காரணமாக மரணத்தை தழுவினாள். இது இராஜசிங்கனின் வேதனையை மேலும் அதிகரிக்கச் செய்தது. 

அரசனை மேற்பார்வை செய்யும் அரச அதிகாரிகள் மன்னனின் தேவைகளுக்காக மேலும் வசதிகளை கோரியபோதும் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அனுபவிக்கும் வரப்பிரசாதங்களில் சிலவற்றை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 

அரசனின் மூத்த புதல்வியின் காது குத்தும் வைபவத்திற்காக ஆயிரம் (இந்திய) ரூபா செலவிடப்பட்டது கூட இலங்கை அரசாங்கத்தின் சிபார்சின் பிரகாரமேயாகும். அதற்கடுத்த மகளின் காது குத்து வைபவத்திற்கும் இவ்வாறு செலவிடப்பட்டது. 

தொடர்ந்து தனது தேவைகள் பற்றி மன்னன் கோரிக்கை விடுத்தும் அவை விழலுக்கிரைத்த நீராகின. இதன் காரணமாக அரச அதிகாரிகளுக்கும் மன்னன் இராஜசிங்கனுக்குமிடையில் முறுகல் நிலையே தோன்றியது. அதே வேளை அரசனுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 2000ரூபாவாக அதிகரிக்குமாறும் குதிரையும், இடவசதியுடன் கூடிய பல்லக் கொன்றும் வழங்குமாறும் கோரப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் இராஜசிங்கனின் மாமியாரின் மரணம் நிகழ்ந்தது. அதற்கான கிரியைகளுக்கான செலவினமும் பிரித்தானிய அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

1822ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி மன்னனின் மனைவியருள் ஒருத்தி பெண் குழந்தையொன்றை பிரசவித்தாள். இச் சந்தர்ப்பத்தில் தனது தாயாரும் ஒரு புதல்வியும் மிகக் கடுமையாக நோய்வாய்பட்டமையினால் மன்னன் இராஜ சிங்கன் கலக்க மடைந்தான். 

கண்டியின் மன்னனாக கோலோச்சியபோது தனது குடும்பத்துக்கு வழங்கிய வசதிகளை இப்போது வழங்க முடியாமை காரணமாக மன்னன் நொந்து உடல் மெலிந்தான். வறுமை தன்னை வாட்டியமையினால் தன்னிடமுள்ள பெறுமதிவாய்ந்த ஆடையணிகலன்களை விற்றுத்தருமாறு கோட்டையின் பிரதான பொறுப்பாளனிடம் ஒரு முறை வேண்டி நின்றான் முன்னாள் வேந்தன். தனது புதல்விமார்களுக்கு அதன் மூலம் ஏதாவது ஆபரணங்களை வாங்கி கொடுக்கலாமென கருதினான். 

இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இராஜசிங்கனுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.  

1829ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அரசனின் மற்றுமொரு மனைவியும் குழந்தையொன்றை ஈன்றாள். மூத்த புதல்வி திருமணவயதை அடைந்திருந்தாள். அவளது திருமணத்துக்காகவும், புதிதாக பிறந்துள்ள மகளுக்கான நகைகளுக்காகவும் மூவாயிரம் (இந்திய) ரூபாய் சிபார்சு செய்யப்பட்டது. இது மன்னனுக்கு ஓரளவு மனநிம்மதியை அளித்தது.  

எனினும் சற்றும் எதிர்பாரா நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த மகள் மரணமடைந்தாள். இதனால் வேதனையில் மூழ்கினான் இராஜசிங்கன். புதல்வியின் இறுதிக்கிரியைகள் வேலூர் பாலாற்றங் கரையில் இந்துசமய முறைப்படி நிகழ்ந்தன. 

இராணுவ பேண்ட் வாத்தியக்குழுவும், சிப்பாய்களின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றன. 

மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் ஆண்வாரிசாக ஒரேயொரு புதல்வன் மாத்திரமே இருந்தான். அதிகாரிகள் தொடர்ந்தும் அரசனின் கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிவந்தனர். 

இவ்வேளையில் மன்னனின் தேகநிலை தேய்ப்பிறை காணத் தொடங்கியது. நித்திரையின்றியும் பசியின்மையாலும் மன்னன் அவதிப்பட்டான். அரசனின் கைகளும் கால்களும் மோசமாக வீக்கம் கண்டன. வைத்தியர்களை அழைத்து சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்த போதும் மன்னன் அதை ஏற்பதில் தயக்கம் காட்டினான். தனது வழமையான வைத்தியரிடமே சிகிச்சை பெற வேண்டுமென விரும்பினான். இறுதியில் எவ்வித சிகிச்சைகளும் பலனளிக்காத நிலையில் 1832ஜனவரிமாதம் 30ம் திகதி மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் மரணமடைந்தான். 

மறுநாள் பொழுது விடியுமுன்னர் இறுதிக் கிரியைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென உறவினர்கள் தெரிவித்தமையினால் உறவுக்காரர்களான ஆண்கள் சிலரும் இராணுவத்தினர் சிலரும் இணைந்து பாலாற்றங்கரையில் இறுதிக்கிரியைகளை நிறைவேற்றினர். இராணுவத்தினரின் மரியாதை வேட்டுகளும், அணி வகுப்பு மரியாதைகளும் நடைபெற்றன. 

இராஜசிங்கனின் அஸ்தி அங்கு விசேடமாக அமைக்கப்பட்ட இடமொன்றில் வைக்கப்பட்டது. மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் பின்னர் முடிக்குரிய இளவரசனாக வரவேண்டிய மன்னனின் ஒரே புதல்வனும் 1843ம் ஆண்டு மரணமடைந்தான்.

(தொடரும்...) 

தகவல் – கலாநிதி கொல்வின் ஆர். டி  சில்வா 
(பிரித்தானியரின் கீழ் இலங்கை)
சி.கே. முருகேசு

 

 

Comments