சோதனை, கைதுகள் தொடரும்; அமைப்புகளின் தடை நீக்கப்படாது | தினகரன் வாரமஞ்சரி

சோதனை, கைதுகள் தொடரும்; அமைப்புகளின் தடை நீக்கப்படாது

அவசரகாலச் சட்டம் காலாவதி; பொதுமக்கள் பாதுகாப்பு  சட்டம் பிரகடனம்; விசேட வர்த்தமானியும் வெளியாகியது

அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சோதனைகள், கைதுகள், தடுத்து வைத்தல் மற்றும் அமைப்புகளுக்கான தடை நடவடிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனப் பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பொலிஸாருடன் இணைந்து முப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் ​தேடுதல்களும் தொடருமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து கூறினார்.  

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டதாகக் கருதப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 200 க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்படுவதாகவும், தடை செய்யப்பட்டுள்ள மூன்று அமைப்புகளினதும் தடை நீக்கப்பட்டு விடுவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உண்மையில், சட்டம் தொடர்பாக போதிய அறிவின்மை காரணமாகவே இவ்வாறான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பும் ஜமாத்தே மில்லதே இப்ராஹிம் அமைப்பும் விலயாத் அஸ் ஜெய்லானி அமைப்பும் தடைசெய்யப்பட்டுள்ளன. 2019.05.13 ஆம் திகதிய 2123/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலூடாக இது அறிவிக்கப்பட்டிருந்தது.  

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ள சந்தேக நபர்கள் சுமார் 200 பேர் வரை கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் அவசரகால சட்டத்தின் கீழ் செய்யப்பட்டவையல்ல.  

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் தற்காலிக விசேட ஏற்பாடுகளின் கீழ் செய்யப்பட்டவையாகும்  

எனவே, அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் தடை ஒருபோதும் நீக்கப்படமாட்டாது என்பதுடன் தடுத்து வைக்கப்படுள்ளவர்கள் விடுதலை செய்யப்படவும் மாட்டார்கள்.  

இதனோடு தொடர்புடையதாக பயங்கரவாதிகளிடமிருந்து முடக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலும் எவ்வித மாற்றமும் ஏற்படமாட்டாது என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேக்கர தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் கீழ்,  முப்படையினரும் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட எவ்வித தடங்கலும் இல்லையென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து  கூறினார்.  

அவசரகாலச் சட்டம் காலாவதியானமையால் பொது மக்கள் பாதுகாப்புச்  சட்டத்தின் கீழ் முப்படையினருக்குத் தேசிய பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் நள்ளிரவு வெளியிட்டுள்ளார்.  

இந்த விசேட வர்த்தமானியின் படி, இலங்கையின் அனைத்து நிர்வாக  மாவட்டங்களிலும், நீர்ப்பரப்புக்களிலும் பொதுஅமைதியை பேணுவதற்கு  ஜனாதிபதியினால் முப்படையினருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  

வர்த்தமானியின் பிரகாரம் நாம் பொலிஸாருடன் இணைந்து பணிகளை  முன்னெடுக்க முடியும். அவசரகாலச் சட்டத்தில்நாம் தனியாகச் செயற்படக்  கூடியதாக இருந்தது. தற்போது பொலிஸாருடன் இணைந்து பணிகளை முன்னெடுக்க முடியும். எமது செயற்பாடுகளுக்கு எவ்வித தடங்களும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

கே. அசோக்குமார், சுப்பிரமணியம் நிஷாந்தன்    

Comments