ஊழியம், ஊழியர்கள் மற்றும் இலங்கை ஊழியத்தின் சந்தைப் பெறுமதி | தினகரன் வாரமஞ்சரி

ஊழியம், ஊழியர்கள் மற்றும் இலங்கை ஊழியத்தின் சந்தைப் பெறுமதி

இலங்கையில் வியாபாரம் செய்வதை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதை தடுக்கும் மிகப்பிரபலமான பிரதான காரணியாக பார்க்கப்படுவது, இலங்கையில் தொழிலாளர் சம்பளங்கள்  மிக உயர்வாக இருக்கின்றன என்பதாகும். தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களுக்கே மிகவும் சாதகமாக இருக்கின்றன. அச்சட்டங்கள் மிக இறுக்கமானதாகவும் தொழில் வழங்குநருக்கு எப்போதும் எதிராக உள்ளதெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இலங்கையைச்  சேர்ந்த கம்பனிகள் கூட ஊழியச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு தமது உற்பத்தி நடவடிக்கைகளை இடமாற்றியுள்ளதை அவதானிக்க முடிகிறது. 

உழைப்பின் விலை அதிகரித்துச் செல்வது ஒரு பொருளாதாரத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கும்.  அதிலும் முதல் விளைவுப் பொருளுற்பத்தியும் ஆரம்பக் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளிலும் தங்கியுள்ள பொருளாதாரங்களில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

உழைப்பின் விலை உயர்வாக உள்ளபோது அவ்வுழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களின் மற்றும் சேவைகளின் விலைகள் குறைவாக இருந்தால் அந்த நாடு ஊழிய உற்பத்தித்திறன் தொடர்பில் சிக்கல்களை எதிர்கொள்ளும் உண்மையில் உழைப்பின் விலை அதிகரிப்பை நாம் அதனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் வெளியீடுகளின் பணப்பெறுமதிகளுடன் தொடர்புபடுத்தியே ஆராய்தல் வேண்டும். இந்த எண்ணக்கருவே “ஊழிய உற்பத்தித் திறன்” (Labor Productivity) என்னும் எண்ணக்கருவின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. 

இலங்கை போன்ற நாடுகளின் ஊழிய உற்பத்திறன் ஒப்பீட்டு ரீதியில் மிகக்குறைவாகக் காணப்படுகிறது. உலகளாவிய ரீதியில் அமெரிக்க ஊழியம் ஐரோப்பிய ஊழியத்தை விட பல மடங்கு உற்பத்தித்திறன் வாய்ந்ததெனவும் ஐரோப்பிய ஊழியம் ஆசிய ஆபிரிக்க ஊழியத்தை விட பலமடங்கு திறன் வாய்ந்ததெனவும் முன்னொரு கருத்து நிலவியது. எனவே நாடுகளிடையே உள்ள உழைப்பும் உழைப்பாளர்களும் ஓரினத்தன்மை வாய்ந்தன அல்ல. 

அதுமட்டுமன்றி ஒரு நாட்டுக்கு உள்ளேயும் ஊழிய உற்பத்தித்திறன் மாறுபடும். உதாரணமாக சேவைத் துறையில் ஈடுபட்டுள்ளோரின் உற்பத்தித்திறன் கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளோரின் உற்பத்தித் திறன் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளோரை விட உயர்வாக உள்ளமையும். பொதுவாக அவதானிக்கத் தக்க பண்பாடும் விவசாயத்துறைக்குள்ளும் முறைசார்ந்த (பெருந்தோட்டத்துறை போன்ற) துறையின் ஊழியம் முறைசாராத ஊழியத்தின் உற்பத்தித் திறனை விட உயர்வாக இருப்பதனையும் காணலாம். 

மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியின் சந்தைப்பெறுமதியில் அதற்கு பங்காற்றிய உழைப்பின் பங்களிப்பு சராசரியே ஊழிய உற்பத்தித்திறன் எனப்படுகிறது.

ஊழியத்தின் விலை அதிகரித்துச் செல்லும்போது அந்த ஊழியத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சேவைகளின் விலைகளும் (அவற்றின் சந்தைப் பெறுமதியை தீர்மானிப்பது விலையாம்) அதிகரிக்குமாயின் ஊழியத்தின் உற்பத்தித்திறன் தொடர்பில் சிக்கல்கள் எழாது. 

உதாரணமாக, ஜப்பான் நாட்டில் ஊழியத்தின் விலை. இலங்கையின் ஊழியத்தின் விலையை விட பன்மடங்கு அதிகமாகும். ஆயினும் அந்நாட்டின் ஊழிய உற்பத்தித் திறன், அதாவது அந்நாட்டு ஊழியத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சேவைகளின் விலைகள் உயர்வாக இருப்பதனால் அந்நாடு உலக சந்தையில் போட்டி போடக்கூடியதாக இருக்கிறது. என்றாலும் கூட ஜப்பான் தனது கைத்தொழில்களை அண்டை ஆசிய நாடுகளுக்கு விஸ்தரிப்பு செய்தமைக்கு ஜப்பானியல் ஊழியத்தின் விலை அதிகரித்துச் சென்றமையே பிரதான காரணமாக அமைந்திருந்தது. 

ஊழியத்திற்கு பதிலாக இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தி அதாவது மூலதனச் செறிவுடைய தொழில் நுட்பத்தையும் “ரோ​போ” எனப்படும் எந்திரன் பொறியியலை பயன்படுத்துவதன் மூலம் உற்பத்திச் செயன்முறையை நவீன மயப்படுத்துவதன் மூலம் மனித உழைப்பின் தங்கியிருப்பதைத் தவிர்க்கலாமே என்ற கருத்துருவம்  இன்று நடைமுறைப் பயன்பாட்டில் உள்ளது. வாகனத் தயாரிப்பு உள்ளிட்ட நுணுக்கமான துறைகள் தொடக்கம் நுகர்வோர் பொருள் தயாரிப்பு மற்றும் வங்கித்துறைச் சேவைகள் போன்ற சேவைத்துறைகளில் தானியங்கிச் செயற்பாட்டுக் கருவிகளும் மென்பொருட்களும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எனப்படும் தொழில் நுட்பமும் பயன்படுத்தப்படுவதை காண்கிறோம். இவற்றின் மூலம் ஊழியத்தின் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது. 

எவ்வாறாயினும் இப்புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவது அவற்றை உற்பத்தித்துறையில் பயன்படுத்துவதும் அவ்வளவு இலகுவானதல்ல. மிகப்பெரும் பொருட்செலவில் அவற்றை உருவாக்க வேண்டியுள்ளதால் சிலவேளை உழைப்பின் விலையை விட இவற்றைப் பொருத்துவது செலவு கூடியதாக இருப்பதால் சிறிய நாடுகளும் உற்பத்தி நிறுவனங்களும் இவற்றைப் பயன்படுத்த முடியாது. மறுபுறம் மனிதர்களுக்கு தேவையான எல்லாப் பொருட்கள் சேவைகளையும் இத்தொழில் நுட்பங்களை மட்டும் வைத்து செய்து விடவும் முடியாது.  அமெரிக்க நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி ஒரு பொருளின் உற்பத்தி செயற்பாட்டில் உழைப்பானது மூன்றில் இரண்டு மடங்கு பங்களிப்புச் செய்வதாகவும் மூலதனத்தின் (இயந்திர சாதனங்களின்) பங்களிப்பு மூன்றில் ஒருபகுதி மாத்திரமே எனவும் கண்டறியப்பட்டது. கைத்தொழிற்துறையிலும் தொழில்நுட்பத் துறையில் மைல்களை எட்டியுள்ள அமெரிக்காவின் உற்பத்தித்துறையிலும் உழைப்பின் பங்களிப்பே அதிகம் என்றால் ஏனைய நாடுகளைப் பற்றி கூற வேண்டியதில்லை. மேற்குலகைச் சேர்ந்த பல்தேசியக் கம்பனிகள் உழைப்பு விலை குறைவாக உள்ள நாடுகளை நோக்கி தனது உற்பத்திச் செயன்முறையில் உழைப்பு அதிகம் தேவைப்படும் செயற்பாடுகளை விஸ்தரிப்பு செய்வதன் நோக்கம் இதுவேயாகும். மேலே சொன்ன செயற்கை நுண்ணறிவும் எந்திரன் பொறியியல் தொழில் நுட்பமும் ஊழியத்தின் தேவையை ஓரளவு குறைத்துள்ள போதிலும் இன்னமும் உழைப்பு என்ற உற்பத்திக்காரணி உற்பத்தித்துறையில் தீர்மானிக்க ஒருகாரணியாக உள்ளமையை எவரும் மறுத்துவிட முடியாது. 

இலங்கையில் ஊழியத்தில் விலை தொடர்ச்சியான அதிகரிக்கிறது. கூலி உயர்வுப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள் எனப் பல ஆயிரக்கணக்கான வேலை மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இழக்கப்படுகின்றன. கூலி உயர்வுகளை வழங்குவதன் மூலம் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. ஆனால் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சேவைகளின் விலைகள் சர்வதேச சந்தையில் கூலி உயர்வுக்கேற்ப அதிகரிப்பதில்லை. அரசாங்கத் துறையில் வழங்கப்படும் சம்பள அதிகரிப்புகள் தனியார் துறை கூலி உயர்வுக்கு காரணமாகின்றன. இதனால் தனியார்துறை உற்பத்திச் செலவுகள் அதிகரித்து உற்பத்தி பாதிக்கப்படுகிறது.  ஊழியத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்காமல் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. ஊழியத்தின் உற்பத்தித்திறன் அதிகரிக்க இரு விடயங்கள் நடைபெறவேண்டும். ஒன்றில் தரப்பட்ட ஊழியத்தைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும்பொருட்கள் சேவைகளின் பெறுமதிகள் அதிகரிக்க வேண்டும். இதற்கு அவ்வெளியீட்டுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வேண்டும். இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களாகிய தேயிலை, ஆடை போன்றவற்றின் விலைகள் அவ்வாறு ஒரு போதும் அதிகரிக்க முடியாது. அவ்வாறு விலைகள் உயர்ந்து செல்லும் கைத்தொழில் மற்றும் அறிவுச் செறிவுடைய (Knowledge intensive) உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆற்றலோ புறச்சூழலோ இலங்கைக்கு இல்லை. 

இரண்டாவதாக ஒரு குறிப்பிட்டளவு வெளியீட்டைப்பெற பயன்படுத்தப்படும் ஊழிய எண்ணிக்கையை குறைக்கலாம் அல்லது தரப்பட்ட எண்ணிக்கையுடைய ஊழியர்களைக் கொண்டு பெறக்கூடிய பௌதீக ரீதியிலான உற்பத்தி வெளியீடுகளை அதிகரிக்க முயற்சிக்கலாம். 

புதியதொழில் நுட்பங்கள், கருவிகள், தொழில்புரியும் சூழலின் மேம்பாடு, ஊழியர்களை மனதை வெல்லும் செயற்பாடுகள் போன்றவற்றின் ஊடாக வெளியீட்டை அதிகரிக்க முயற்சிக்கலாம்.  ஆனால் பொதுவாகவே தமது தொழில் வழங்குநரை தம்மைச் சுரண்டும் ஒரு தரப்பாக நோக்கும் சிந்தனை கொண்ட ஊழியப் படையினால் அவ்வாறான மாற்றங்களை இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியாது. நிறுவனத்தின் மேம்பாட்டிற்கான பங்களிப்புச் செய்யும் நோக்கில் தமது பணியைச் செய்வதாகக் கருதும் ஆளணியினரை காண்பது அரிதாக உள்ளது. 

உழைப்பாளிகளின் உரிமைகள் அவர்களது கடன்கள் பற்றி காதுகிழியக் கத்தினாலும் தொழில் ஒன்றைப் பெறும் வரையில் பலவீனமான நிலையிலுள்ள ஆளணியினர் தெரிவில் அமர்ந்த பின் மிகவும் வலுவானநிலைக்கு மாறிவிடுகின்றனர். தொழில் பாதுகாப்பு பற்றிய இறுக்கமான சட்டங்களும் நிர்வாக நடைமுறைகளுமே இதன் பின்னணியில் உள்ளன.  அரசியல் பின்புலங்கொண்ட பலமிக்க தொழிற்சங்க நாடு பற்றியும் அர்ப்பணிப்பு பற்றியும் பீற்றிக் கொண்டாலும் பணம் என்று வரும்போது வாயைப் பிளந்து செயற்படுகின்றனர். 

மேற்சொன்ன காரணங்கள் வலுவாக புரையோடிப் போயுள்ள இலங்கைப் பொருளாதாரத்தில் ஊழியத்தின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதும், உற்பத்திச் செலவைக் குறைப்பதும் நேர்க்கணிய மனோபாவத்தை ஊழியர்கள் மத்தியில் உருவாக்குவது அவ்வாறு இலகுவாக நடந்துவிடக்கூடிய ஒன்றல்ல. அதற்கு நீண்ட கால அர்ப்பணிப்பும் எதிர்கால தூரநோக்குச் சிந்தனையுடைய அரசியல் தலைமைகளும், கொள்கை வகுப்பாளர்களும் அவற்றை நடைமுறைப்படுத்தி முன்கொண்டு செல்பவர்களும் அவசியம்.   

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments