என்னைவிட அவர்தான் மிக அறிவாளி! | தினகரன் வாரமஞ்சரி

என்னைவிட அவர்தான் மிக அறிவாளி!

விருதுகள் வாங்கப்படுவதற்கும் வழங்கப்படுவதற்கும் வித்தியாசம் உண்டா? 

உண்டு! 

விருது வாங்கிய கலைஞர் என்பதைவிட, விருது வென்ற கலைஞர் என்பதுதான் மரியாதை என்கிறார் நண்பர். ஏனென்று கேட்டால், இப்போது நிறையபேர் விருதுகளை வாங்கிக்ெகாண்டிருக்கிறார்கள். மிகச் சொற்பமானவர்களுக்ேக விருதுகள் வழங்கப்படுகின்றன என்பது அவரது கருத்து. 

அப்படியும் விருதுகளை வென்றவர்களையும் சிலருக்குப் பிடிக்காது; பொறாமைப்படுவார்கள், கோபப்படுவார்கள். ஒரு துறையில் சமமான திறமைகொண்ட பலர் இருக்கலாம். ஆனால், விருது ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். இந்தச் சூழலில் ஒருவர் விருது பெறும்போது, விருது பெறாதவர்களின் குமுறலும் கோபமும் அதிகமாக இருக்கும். அவர் எப்படியோ வாங்கிவிட்டார் என்ற குமுறல் வெளிப்படும். எனக்கு ஏன் வழங்கவில்லை என்ற கோபம் கொந்தளிக்கும்! 

விருது என்பது கலைஞர்களுக்குப் பெரிய ஊக்கத்தையும் மனவெழுச்சியையும் வழங்கும் மாமருந்து என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் வருகைதரு பேராசிரியர் மறைமலை இலக்குவனார். அந்த விருதுடன் வழங்கும் பணமோ, பதக்கமோ, சான்றிதழோ முதன்மையானதாகக் கருதப்படுவதில்லை என்கிறார் அவர். அந்த விருது வழங்கும் பாராட்டும் கௌரவமும் அங்கீகாரமும்தான் கலைஞர்களையும் கவிஞர்களையும் பெரிதும் ஊக்கப்படுத்தும் உந்து சக்தி என்கிறார் பேராசிரியர். 

ஆனால், இலங்கையில் கவிதைத் துறையில் சிரேஷ்ட நிலையில் உள்ள கவிஞர்களுக்கு இந்த விருதிலும், கௌரவத்திலும் அவ்வளவாகப் பிடிப்பு இல்லை என்பது ஓர் இரத்தினக் கவிஞரின் கருத்து. பொன்னாடையையும் பதக்கத்தையும் வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்? பொற்கிழி வழங்கினால் சிறப்பு என்று சில கவிஞர்கள் வெட்கத்தைவிட்டு வாய்விட்டே சொல்லியிருக்கிறார்கள். 

மேலும் சிலர், தமக்குக் கிடைத்த விருதையும் கௌரவத்தையும் தங்களின் கடிதத் தலைப்பில் பதிப்பித்து மனம் மகிழ்கிறார்கள். அவர்களுக்குப் பணம் தேவையில்லை; பிரபல்யம் தேவைப்படுகிறது. ஏனென்றால், இன்று பிரபல்யமாக முடிந்தவர்கள்தான் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள் என்பது அவர்களின் கருத்து. 

அதனால், எப்போது யாருக்கு விருது வழங்கப்பட்டாலும், ஒரு விமர்சனம் இருக்கும். இவருக்கு அவரைத் தெரியும், அவருக்கு இவரைத் தெரியும் என்பார்கள். இல்லாவிடில், நடுவர் குழாமில் இருந்தவர் மோசம் செய்துவிட்டார் என்பார்கள். அவர்களுக்கு எங்களைப் பிடிக்காது; அதனால், வெட்டி விட்டார்கள் என்று பேசுவார்கள். இவையெல்லாம் அநாவசியமான கருத்துகள்; அலட்டிக் ெகாள்ள ​வேண்டிய அவசியமே இல்லை என்பது பேராசிரியர் மறைமலை இலக்குவனாரின் அறிவுரை. 

இன்னும் சொல்லப்போனால், 1968ஆம் ஆண்டு கண்ணதாசன் கவியரசராகக் கோலோச்சிய காலத்தில், தமிழ்க் கவிதைக்காக அ.சீனிவாசன் எனும் ஆங்கிலப் பேராசிரியர் அக்காடமி விருது பெற்றிருக்கிறார். ரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது பாரதியார் கோபப்பட்டிருக்கிறார். பாரதியாருக்குப் பின்னர் அவர் வழியில் ஏறு நடைபோட்ட பாரதிதாசனுக்குச் சாகித்திய அக்காடமி விருது வழங்கப்படவில்லை. அவர் மறைவுக்குப் பின்னரே வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், கவிதைக்கான விருது இறந்த பின்னரும் வழங்கப்படவில்லை.1980ஆம் ஆண்டு கண்ணதாசன் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர், சேரமான் காதலி எனும் நாவலுக்காகவே சாகித்திய அக்காடமி விருதைப் பெற்றார். ஆனால், கவிதைக்காக விருது கிடைக்கவில்லை.  

எனவே, விருதைப் பற்றி அலட்டிக்ெகாள்ளாதீர்கள்! விருதுகள் சில வேளைகளில் பொருத்தமானவர்களுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். 

விருது வாங்குவதற்குத் தகுதி வாய்ந்தவர் யார் என்றால், "எனக்கு இந்த விருது வேண்டாம்! என்னை விடத் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள் என்று யார் சொல்கிறார்களோ அவர்கள்தான் விருதுக்குத் தகுதியானவர்கள்" என்கிறார் பேராசிரியர். 

உலகம் ஆயிரம் சொல்லட்டும்! உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்! கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளையும் படித்துப் பாருங்கள்! 

உன்னைப் பார்த்து
உலகம் உரைக்கும் 
தன்னம்பிக்கை தளரவிடாதே ! 
இரட்டைப் பேச்சு பேசும் உலகம் 
மிரட்டும் தம்பி மிரண்டுவிடாதே ! 
ஒவ்வொரு வாயிலும்
ஒற்றை நாக்கு 
உலகின் வாயில் இரட்டை நாக்கு ! 
எனக்கு நேர்ந்த
இழிமொழி எல்லாம் 
உனக்கு சொல்கிறேன் 
உள்ளத்தில் எழுது ! 
மங்கயரிடையே
மௌனம் காத்தேன் 
கவிஞன் என்ற 
கர்வம் என்றது ! 
பெண்கள் சிலருடன்
பேசத்தொடங்கினேன் 
கண்களை கவனி 
காமம் என்றது ! 
திசைகள்தோறும் தேதி
கொடுத்தேன் 
ஐயோ புகழுக்கு 
அலைகிறான் என்றது ! 
நேரக்குறைவு நிறுத்திக்கொண்டேன் 
கணக்குப் பார்க்கிறான் 
கவிஞன் என்றது ! 
அப்படி இருந்தால் அதுவும் தப்பு , 
இப்படி இருந்தால் 
இதுவும் தப்பு . 
கத்தும் நாய்க்கு
காரணம் வேண்டாம் 
தன் நிழல் பார்த்து 
தானே குரைக்கும் ! 
உலகின் வாயைத்
தைத்திடு அல்லது 
இரண்டு செவிகளை 
இறுக்கி மூடிடு ! 
உலகின் வாயைத் தைப்பது கடினம்  
உந்தன் செவிகளை 
மூடுதல் சுலபம்!

Comments