32 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பரபரப்பு | தினகரன் வாரமஞ்சரி

32 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பரபரப்பு

குண்டு வெடிப்பில் சேதமான தளபாடங்கள்

அரசியல் ரீதியாக இலங்கையில் பல வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் 1987ஆம் ஆண்டில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. அதிலும், பாராளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுக் கடந்த 18ஆம் திகதியுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமை எத்தனை பேருக்கு நினைவிருக்கும்?  

இப்போது அப்படி ஒரு சம்பவம் நடக்குமாகவிருந்தால், நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று தற்போது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களே சுட்டிக்காட்டும் அளவிற்கு இலங்கையில் அரசியல் செல்நெறி திசைமாறிச்சென்றுகொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது பாராளுமன்றம் மூழ்கியது. அந்தச் செய்தியைப் பத்திரிகையில் பார்த்த சமாமானியர்கள் சிலர், அவர்கள் 225பேரும் சபையில் இருக்கும்போது பாராளுமன்றம் மூழ்கிவிட வேண்டும், மூழ்காதா? என்று ஆதங்கப்பட்டதை நேரில் பார்க்க முடிந்தது. அத்துணை தூரத்திற்கு நாட்டு அரசியல் மக்களை வெறுப்படைச் செய்திருப்பதையே அவர்களின் ஆதங்கம் வெளிப்படுத்துகிறது.  

இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கைக்காக ராஜீவ் கொழும்பு வந்தபோது..

அரசியல் மீது மட்டுமல்லாது, அரசியல்வாதிகள் மீதும் மக்களுக்குத் தற்போது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அரசியல்வாதிகளே நன்கு உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர், சபையில் உரை நிகழ்த்திய மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர், இந்தச் சபையில் 'ட்றோனில்' வந்து குண்டு வெடித்தால்கூட மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.  

அஃது இப்போதைய மனப்போக்கு. ஆனால், அன்று 1987 ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் முழு நாட்டையும் உலுக்கியது. உலகின் கவனத்தை இலங்கை மீது திருப்பியது. உண்மையில், அந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திலிருந்து பல்வேறு அபாயகரமான சம்பவங்கள் தொடராக நிகழ்ந்துள்ளன.  

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலை 4/21 (ஏப்ரல் 21) என்று சுருக்கமாகக் குறிப்பிட்டாலும், 1987 இலும் ஏப்ரல் 21ஆம் திகதிதான் கொழும்பு புறக்ேகாட்டை பஸ் நிலையத்தில் குண்டு வெடித்தது. அதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்து, மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வருடத்தின் மே தின ஊர்வலங்களையும் கூட்டங்களையும் அரசாங்கம் தடை செய்திருந்தது.  

அரசாங்கத்தின் தடையையும் மீறி, தாய் நாட்டைப் பாதுகாக்கும் இயக்கம் நாராஹென்பிட்டியில் நடத்திய கூட்டத்தினைக் கலைப்பதற்குப் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். பொலிஸார் நடத்திய தாக்குதலின்போது துப்பாக்கிச்சூடுபட்டு இருவர் உயிரிழந்தனர்.  

1987 ஜூன் மாதம் இரண்டாந்திகதி அரந்தலாவையில் பிக்குகள் படுகொலை செய்யப்பட்டார்கள். யாழ் குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை அழித்தொழிக்கும் வடமராட்சி சமரை, டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரத்ன ஆகிய தளபதிகளின் வழிநடத்தலில் படையினர் மும்முரமாக முன்னெடுத்து வந்தனர். படை நடவடிக்ைகயை ஆரம்பிப்பதற்கு முன்னர், அங்குச் சென்ற தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, படையினருக்கு உற்சாகமூட்டும் உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.  

வடமராட்சி சமர் உக்கிரமாக இடம்பெற்றுக்ெகாண்டிருந்தபோதுதான் ஜூன் 03ஆம் திகதி வட பகுதிக்கு இந்தியா கப்பல் மூலம் உணவுப் பொருள்களை அனுப்பி வைத்தது. அதனைப் பெரும் பிரயத்தனப்பட்டு இலங்கைப் படையினர் திருப்பியனுப்பினர். இந்தியா அதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக ஜூன் மாதம் 04 ஆம் திகதி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களை விமானத்தில் கொண்டுவந்து வீசியது. அதனையடுத்து ஜூன் 07ஆம் திகதி கட்டுநாயக்க விமானப் படை முகாம் மீது, தென் பகுதியில் இயங்கிய ஆயுதக் குழுவொன்று தாக்குதல் நடத்தியது.   அந்த ஆண்டில் கைச்சாத்திடப்படவிருந்த இந்திய இலங்கை உடன்படிக்ைகக்கு எதிராக ஜூன் 28ஆம் திகதி நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவானது. புறக்கோட்டையில் ஆரம்பமான இந்திய எதிர்ப்பு நடவடிக்கைநாடு முழுவதற்கும் பரவியது. கலவரத்தை அடக்குவதற்குப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது சுமார் 130 பேர் உயிரிழந்தனர். சுமார் 700 பேர் வரை கைதுசெய்யப்பட்டனர். சுமார் 600 அரச கட்டடங்கள் சேதமாக்கப்பட்டன. ஊர்வலங்கள், ஆர்ப்பாட்ங்களுக்கு மத்தியில் இந்திய இலங்கை சமாதான உடன்படிக்ைகயைக் கைச்சாத்திடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்தார். ஜூன் 29ஆம் திகதி ராஜீவ் காந்தியும் ஜே.ஆர்.ஜயவர்தனவும் உடன்படிக்ைகயில் கைச்சாத்திட்டனர்.  

அது தொடர்பாக நடைபெற்ற எந்தவித உத்தியோகபூர்வ வைபவத்திலும் பிரதமர் ஆர்.பிரேமதாச, அமைச்சர்கள் லலித் அத்துலத் முதலி, காமினி ஜயசூரிய முதலானோர் கலந்துகொள்ளாமல் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.  

உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டுவிட்டுச் செல்வதற்கு முன்னர் ஜூன் 30ஆம் திகதி நடைபெற்ற அணிவகுப்பின்போது இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை, கடற்படை வீரரான விஜித ரோகண விஜேமுனி, துப்பாக்கியால் தாக்கினார். இந்தியப் பிரதமர் நாடு திரும்புவதற்கு முன்னர் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வந்தது. தெற்கில் சில அமைப்பினர் "ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவோம்" என்று சுவரொட்டி எழுதியிருந்தனர்.  

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில்தான் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் அல்லோலகல்லோலத்தை ஏற்படுத்தியிருந்தது. சரியாக 32 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும்போது இப்போதும் மெய்சிலிர்க்கின்றது என்கிறார் திவய்னவின் முன்னாள் ஆசிரியர் நாரத நிஸ்ஸங்க.  

"ஆளுந்தரப்பின் கூட்டம் நடைபெற்றுக்ெகாண்டிருந்த மண்டபத்திற்கு வலப்பக்கமாகப் பூட்டிவைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து திடீரென கையொன்று வெளியில் தோன்றியது. வெடிச்சத்தம் கேட்டது; புகை கிளம்பியது! ஜனாதிபதிக்கு அருகில் அமர்ந்திருந்த பாராளுமன்ற செயலணியின் இலிகிதர் சேனாதீர தூக்கி எறியப்பட்டார்! அத்தோடு அந்த அறையினுள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அது ஜனாதிபதி அமர்ந்திருந்த இடத்திற்கு இடப்பக்கமாகச் சென்று வீழ்ந்து வெடித்தது. இன்னுமொரு குண்டு ஜனாதிபதியின் மேசையின் மீது வீழ்ந்தது. இவையனைத்தும் கண் மூடி இமைப்பதற்குள் நடந்தது. என்ன நடக்கிறதென்று எமக்குப் புரியவில்லை" இந்தச் சம்பவத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான அமைச்சர் மொன்டேகு ஜயவிக்கிரமவின் வாக்குமூலம் அது.  

இந்தச் சம்பவத்தில் மாத்தறை மாவட்ட அமைச்சரும் பிரபல அரசியல்வாதியுமான கீர்த்தி அபேவிக்கிரம அவ்விடத்திலேயே உயிரிழந்தார். அதேபோன்று கடுங்காயங்களுக்குள்ளான பாராளுமன்ற செயலணியின் இலிகிதர் சேனாதீரவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, பர்சி சமரவீர ஆகியோர் கடுமையான காயங்களுக்குள்ளானார்கள். சுமார் 15பேரளவில் காயமுற்றனர். பிரதமர் ஆர்.பிரேமதாசவுக்குப் பாதத்தில் சிறு காயம் ஏற்பட்டது.  

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன இந்தச் சம்பவம் பற்றித் தமது அனுபவத்கைக் கூறுகையில், "இந்தத் தாக்குதலின் மூலம் எமது நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதற்குத் தென்பகுதியில் குழுவொன்று இருக்கின்றது என்பது தெளிவாகின்றது. இவ்வாறான சம்பவங்களால் எம்மை அச்சுறுத்த முடியாது. இந்தச் சம்பவத்தால், அமைச்சர் லலித் அத்துலத் முதலிக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. எங்களின் கீர்த்தி அபேவிக்கிரம எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். ஈ.எல்.பீ.ஹுருல்லே, வின்சன்ற் பெரேரா, ஜீ.வி.எஸ்.டி.சில்வா, பர்சி சமரவீர, காமினி ஜயசூரிய உள்ளிட்டோர் காயமுற்றார்கள். பாராளுமன்ற அலுவலர் மரணமடைந்தார். அனைவரதும் இரத்தத்தால் தோய்ந்து எனது உடை நனைந்துவிட்டது. இஃது என்னுடைய இரத்தம் அல்ல. அவர்களின் இரத்தம்! இந்த உடையை ஒரு நினைவுச்சின்னமாக நான் வைத்துக்ெகாள்வேன்." என்றார்.  

சம்பவத்தில் உயிரிழந்த பாராளுமன்ற அலுவலர் சேனாதீரவுக்கு அப்போது 38 வயது. இலிகிதர் தரத்தின் நிர்வாகப் பிரிவில் முதல் நாள்தான் பதவி உயர்வு பெற்றிருந்தார். 15 வருட பாராளுமன்ற சேவை அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ஜே.ஆருக்கும், பிரதமருக்கும் இலக்கு வைக்கப்பட்ட குண்டடிபட்டே அந்த அலுவலர் உயிரிழந்ததாகப் பிரதமர் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.  

ராஜீவ் பின்னால் நரசிம்மராவ், ஏ.சி.எஸ். ஹமீத், கே.டபிள்யூ.தேவநாயகம், ஈ.எல்.பி. ஹுருல்லே, காமினி திசாநாயக்க, ஹுலுகல ஆகியோரை படத்தில் காணலாம்.

அந்தச் சமயத்தில் பாராளுமன்றம் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.  

பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்ற ஊழியர்களான ரணசிங்க ரன்துனு முதியன்சலாகே அஜித்குமார அல்லது அஜித், ஹேவகே குமார திஸ்ஸ, கித்சிறி கொழம்பஆரச்சி, பியசிறி விக்கிரமாராச்சி மற்றும் முதலாவது பிரதிவாதியின் அயல்வீட்டுக்காரரான ஜயசிறி குணவர்தன ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை ட்ரயல் அட் பார் முறையில் நடைபெற்றது. நீதியரசர் அமீர் இஸ்மாயில் (தலைவர்), நீதியரசர் சீ.ஆனந்த கிறேரு, நீதியரசர் ஏ.எல்.எம்.பெர்னாண்டோ ஆகியோர் விசாரணை நடத்தி வந்த வேளையில், வழக்கின் 2ஆம், 3ஆம்,4ஆம் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் தடுப்புக்காவல் உத்தரவின்பேரில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.  

1987 ஜூலை 29ஆம் திகதிக்கும் ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவைக் கொலை செய்வதற்கு கொழும்பு, கம்பஹா, பொரளை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஆகிய இடங்களில் சதி மேற்கொண்டமை, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி உள்ளிட்ட அமைச்சர்களுக்குக் காயம் ஏற்படுத்தியமை, மாத்தறை மாவட்ட அமைச்சர் கீர்த்தி அபேவிக்கிரம, பாராளுமன்ற அலுவலர் சேனாதீர ஆகியோருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டிருந்தன.  

மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த வழக்கின் தீர்ப்பு, 1990 ஒக்ேடாபர் 12ஆம் திகதி வழங்கப்பட்டது. இதன்படி, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத காரணத்தால், முதலாம், ஐந்தாம் பிரதிவாதிகளை விடுதலை செய்வதாக ஏகமனதாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.  

இதன்போது, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாக அரச சட்டவாதி சுரத் பியசேன தெரிவித்திருந்தார். இதற்கு நீதியரசர்கள் குழாம் அனுமதியளித்தது. அப்போது முதலாவது பிரதிவாதியான அஜித் குமார விடுதலை செய்யப்பட்ட போதிலும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற தடுப்புக்காவல் உத்தரவினால், அவர் மீண்டும் மகசின் சிறைச்சாலை செல்ல நேர்ந்தது!  

விசு கருணாநிதி

Comments