கல்விமான் வாமதேவனுக்கு 'ஸ்ரீலங்கா திலகம்' தேசிய விருது | தினகரன் வாரமஞ்சரி

கல்விமான் வாமதேவனுக்கு 'ஸ்ரீலங்கா திலகம்' தேசிய விருது

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகரான எம். வாமதேவனுக்கு தேசிய ரீதியாக பாராட்டத்தக்க சேவையாற்றியமைக்காக வழங்கப்படும் 'ஸ்ரீ லங்காதிலகம்' தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 19ஆம் திகதியன்று நடைபெற்ற தேசிய விருது விழாவில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 

எம். வாமதேவன் பெருந்தோட்டத்துறை சமூகத்தினரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக பணியாற்றுவதில் பரந்த அனுபவங்களைக் கொண்ட  முன்னாள் சிரேஷ்ட நிர்வாகியாவார். நுவரெலியா கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த இவர், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கற்று, பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.  1970 இல் திட்டமிடல் பொருளாதார அலுவல்கள் அமைச்சில் திட்டமிடல் உத்தியோகஸ்தராக பணியில் இணைந்தார். 

தேசிய திட்டமிடல் திணைக்களத்தில் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படும் வரை அவ்வமைச்சில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். 2004 இல் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் அதன் பின் தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தார்.  2015 இல்  மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை தேசிய பெறுகைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையிலும் பணியாற்றி வரும் எம். வாமதேவன் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கு பல கட்டுரைகள் எழுதியுள்ளதோடு பெருந்தோட்ட சமூகத்தினரின் சமூக பொருளாதார நிலைமை தொடர்பாக விரிவான ஆய்வுகளையும் நடத்தியுள்ளார். பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தல் மற்றும் திறனை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் வளவாளராக ஈடுபட்டுள்ளார். 

எம். வாமதேவன் UNESCO தேசிய ஆணைக்குழுவினதும் தேசிய நூல் அபிவிருத்தி பேரவையினதும் உறுப்பினராக இருந்துள்ளார். தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மீள் குடியேற்ற அதிகாரசபை,  உடப்புசல்லாவ மற்றும் ஹப்புகஸ்தன்ன பிராந்திய தோட்டக்கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளிலும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.      

Comments