உதவி ஆசிரியர்களின் சேவை நிரந்தரமாக்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

உதவி ஆசிரியர்களின் சேவை நிரந்தரமாக்கப்பட வேண்டும்

கூட்டத்தோடு கோவிந்தா போடும் கட்சியல்ல இ.தொ.கா என்கிறார் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவருமான கணபதிகனகராஜ் தினகரன் வாரமஞ்சரிக்கு அவர்     வழங்கிய நேர்காணல்

கே: இன்றைய குழப்பமான அரசியல் சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்? 

ப: இலங்கை அரசியலில் குழப்பகரமான சூழல் கடந்த 2015ம் ஆண்டே ஆரம்பித்து விட்டது. அதன் உச்சக்கட்டத்தை இப்போது அவதானிக்க முடிகிறது. அதுவும் தவிர்க்க முடியாமலுள்ள  ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் இருக்கின்ற பிரதான கட்சிகளின் செயற்பாடு நாட்டில் அரசியல் குழப்ப நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றது. கடந்த நாலரை வருடங்களில் மக்களின் ஜனநாயக உரிமை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. தோல்லி பயத்தினால் உள்ளூராட்சி மன்ற தேர்தல்  மிக நீண்டகாலம் இழுத்தடிக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மாகாண சபை தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்ற காரணத்திற்காகவே தேர்தல் முறை மாற்றம் என்ற பெயரில்  மாகாணசபைத்   தேர்தலை காலவரையரையின்றி ஒத்திவைத்துள்ளார்கள்.

புதிய அரசியல் யாப்பு ஒன்றின் மூலம் நாட்டின் இனப்பிரச்சிணைக்கு  தீர்வை கொண்டுவரப்போவதாக வழங்கிய தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு 19ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை கொண்டு வந்தார்கள். குறைந்த பட்சம் அந்த திருத்தத்தின் மூலமாவது தமிழ் மக்களின் சில எதிர்பார்ப்புகளை  நிறைவேற்றுவதற்கு வாய்ப்பிருந்தது. 19வது அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் பெரும்பாலும் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாகவே அரசியல் குழப்பகரமான நிலையை நாடு அனுபவித்து கொண்டிருக்கிறது. 

கே: இன்றைக்கும் இ.தொ.கா ஐயாவின் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறது. அடுத்தக் கட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நகர்த்திச் செல்வதாகத் தெரியவில்லையே..? 

ப: தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மலையகத்திற்கு அடித்தளமாக செயற்பட்டவர். அவருடைய காலத்திலேயே இந்திய வம்சாவளி மக்க்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டது. மலையக மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வும் எட்டப்பட்டது. ஐயா,  மலையக மக்களின் பிரச்சினைகள் என கண்டறிந்தவற்றுக்கு மேலதிகமாக இதுவரை எவரும் புதிய பிரச்சினைகளை இனங்காணவில்லை. இந்நிலையில் அவருடைய பெயரை குறிப்பிட்டு அந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு தற்போதைய தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் செயற்பட்டு வருகின்றோம். குறிப்பாக எமது சமூகம் எதிர்நோக்கிய பிரஜா உரிமை பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டுவந்தது யார்? மலையகப் பாடசாலைகளை உருவாக்கி கல்வி தரத்தை உயர்த்துவதற்கு காரணமாக இருந்த ஆரம்பகர்த்தா யாா்? தோட்டக் குடியிருப்புக்களை தொழிலாளர்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து அதை அரசாங்கத்தின் முலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது யாா்? மலையகத்தில் தனிவீட்டுத் திட்டத்தை முதன் முதல் ஆரம்பித்தது யாா்? தோட்ட குடியிருப்புக்களுக்கு மின்சார வசதியை வழங்கியது யாா்? தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க முதன் முதல் வழிசமைத்தது யார்? மலையகத்தில் தொழில் நுட்ப கல்லூரிகளை தொடங்கியது யார்? மலையக இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்க தொழிலை பெற்றுக்கொடுத்தது யார்? மனசாட்சி உள்ளவர்களின் பதில் தலைவர் தொண்டமான் என்றுதானே இருக்கும். அப்படி இருக்கையில் ஐயாவின் பெயரை குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது? அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூட மலையக மக்களைப்பற்றி பேசும்போது செளமியமூர்த்தி தொண்டமான் இந்திய வம்சாவளி மக்களின் உயர்விற்காக உழைத்த மாபெரும் தலைவர்  என்றார்.  அமரர்  ஐயா இனங்கண்ட இந்தப் பிரச்சினைகளில் பல தீர்க்கப்பட்டிருந்தாலும் தற்போதைய தலைவர்களின் வேலை அதன் தொடர்ச்சியைத்  தீர்த்துவைக்க வேண்டியதாகவே இருக்கின்றது. அதனால் அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்ற அதேவேளையில் காலத்தின் தேவைகளுக்கேற்ப புதிதாக இனங்காணும் பிரச்சினைகளையும் நாம் சரியான முறையில் கையாண்டு வருகிறோம். 

கே: ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கிறது உங்களது நிலைப்பாடு என்ன?  

ப: ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும், நாட்டின் அரசியலின் போக்கு தொடர்பாகவும் இ.தொ.கா மிகுந்த அவதானத்துடன் கவனம் செலுத்தி வருகின்றது. நாம் 32அம்ச கோரிக்கை பட்டியலொன்றை தயாரித்துள்ளோம். அதில் மலையக மக்களின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எவருடன் பேசினாலும் இதனை அடிப்படையாகக் கொண்டே எமது பேச்சுவார்த்தை அமையும். அத்துடன் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எமது தலைவர்  ஆறுமுகன் தொண்டமான் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் யாருக்கு ஆதரவு என்பதை வெளியிடுவார்.  

கே: கோட்டாபே  ராஜபக்ஷ அல்லது  சுதந்திரக்கட்சி  நிறுத்தக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது உங்களுக்கு வாய்ப்பாக அமையுமா? (ஏனெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எடுத்த தீர்மானம் அரசியல் ரீதியில் உங்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தமை காரணமாகவே இக்கேள்வியை முன்வைக்கிறேன்).  

ப: உங்கள் கேள்வி  நாம் கோட்டாபே  ராஜபக்ஷவை ஆதரிக்கப்போவது போன்ற தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறதே? நாம் கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடனும் கூட்டணி அமைத்து வேலை செய்திருக்கிறோம். எம்மை பொறுத்தவரையில் எமது சமூகத்தின் சார்பாக பேரம் பேசும் சக்தியை கொண்டிருந்தால் எவர் வெற்றிபெற்றாலும் எமது ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும். இவ்வாறான நிலை கடந்த காலங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா,  ரணில் விக்கரமசிங்கவை ஆதரித்தது. ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.  எனினும் அத்தேர்தல் மூலம் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ஷவிற்கு  இ.தொ.கா.வின் ஆதரவு தேவைப்பட்டதால் அவரின் அழைப்பின்  பேரில் அவருடைய அமைச்சரவையில் எமது கட்சியின் உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர். எனவே  தேர்தலொன்றில்  யார் வெற்றிபெறப் போகிறார்கள் என முன்கூட்டியே ஆரூடம் கூறமுடியாது. அத்துடன் எமது கொள்கையோடு அதிகளவில் இணங்கிப்போகின்ற வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எமது ஆதரவை தெரிவிக்கின்றோம். அவரின் வெற்றிக்காக உழைக்கின்றோம். துரதிர்ஷ்டவசமாக நாம் ஆதரித்த வேட்பாளர் தோல்வியுற்றதால் வெற்றிபெற்றவருடன் இணைந்து செயற்பட்டு வந்திருக்கின்றோம்.  

கே: கோத்தாவிற்கு தமிழர் வாக்கு பெரும்பாலும் கிடைக்காது என்ற நிலையில் அவருக்கோ அல்லது சுதந்திரக்கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கோ ஆதரவளிப்பது குறித்த உங்களது பார்வை.... 

ப: யூகத்தின் அடிப்படையில் எதனையும் உறுதியாகக் கூறமுடியாது. நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்ட இ.தொ.கா,  நிலைமையை அலசி ஆராய்ந்து சுதந்திரமாக முடிவெடுக்கும். ஜனாதிபதி வேட்பாளர்கள் எமது சமூகம் தொடர்பில் என்ன வேலைத்திட்டங்களை முன்வைக்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். கூட்டத்தோடு கோவிந்தா போடும் கட்சியல்ல இ.தொ.கா. கொள்கையோடு செயற்படுவதும், எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதும் எதிர்நீச்சல் போடுவதும் எமக்கு புதிய விடயங்கள் அல்ல. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் இ.தொ.காவின் நிலைப்பாடு வெளியிடப்படும் போது உங்கள் கேள்விகளுக்கு சிறந்த பதில் கிடைக்கும். கொஞ்சம் காத்திருங்களேன். 

கே: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு அப்பால் ஒரு சமூக, விஞ்ஞான, பொருளாதாரப் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை. எவ்வளவு காலத்திற்குதான் சம்பளப் பிரச்சினை பற்றியே பேசிக்கொண்டிருப்பீர்கள். இந்தக் கட்டமைப்பிற்குள் இருந்து எப்போது வெளியில் வருவீர்கள்? உதாரணத்திற்கு திகாம்பரத்தார் வீடு, கிராமம் என்று இன்னொரு பரிமாணத்திற்கு மலையக மக்களை அழைத்துச் சென்றுள்ளார். இதுபோல உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? 

ப: முதலில் கடந்த நான்கரை வருடங்களில் மலையகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான கிராமத்தை உங்களால் காட்ட முடியுமா? பிழையான உதாரணத்தை காட்டி அதை மலையகத்தின் மற்றுமொரு பரிமாணம் என்று காட்டி நமது சமூகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். தோட்ட லயன்களை முற்றாக இல்லாமலாக்கி முழுமையாக கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினை அடிப்படையாக கொண்டு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பெற்ற 4000ம் வீடுகளை தொழிலாளர்களுக்கான கிராமங்களை அமைத்து கொடுப்பதே இ.தொ.கா   தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திட்டமாகும். நல்லாட்சியில் இத்திட்டம் தொழிற்சங்கத்திற்கு அங்கத்தவர்களை சோ்த்துக்கொள்வதற்காக பல கூறுகளாக கூறுபோடப்பட்டதை மலையகத்தின் மற்றுமொரு பரிமாணம் என்கிறீா்களா? தோட்டங்கள் உள்ளவரை தொழிலாளர்கள் இருப்பார்கள்.  தொழிற்சங்கம் என்ற வகையில் அவர்களுக்கு சம்பளப் பிரச்சினையை பேசவேண்டியது எமது கடமையாகும். அதேவேளையில் தோட்டங்களை தொழிலாளர்களுக்கே பிரித்து கொடுத்து அவர்களை சிறுதோட்ட முதலாளிகளாக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் முன்னிலைப்படுத்தி வருகிறோம். அதேபோல தோட்டங்களில் காணப்படுகின்ற தரிசு நிலங்களை அந்தந்த தோட்டங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு பிரித்து கொடுத்து புதிய, புதிய தொழில் முயற்சிகளை உருவாக்க நிதியுதவி உட்பட சகல வசதிகளையும் வழங்கி உற்சாகமளிக்க வேண்டும் என்பதையும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வருகிறோம். 

(மிகுதி அடுத்த வாரம்)  

நேர்கண்டவர்: தலவாக்கலை பி.கேதீஸ் 

Comments