ஜனாதிபதியின் பலத்தை வெளிப்படுத்திய சு.க.வின் 68 ஆவது மாநாடு | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதியின் பலத்தை வெளிப்படுத்திய சு.க.வின் 68 ஆவது மாநாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. 

சுதந்திரக் கட்சி உருவான மறுநாள் ஜனாதிபதியின் பிறந்த தினம். ஜனாதிபதிக்கும் கட்சிக்கும் 68 வயது! கட்சியின் ஆண்டுவிழாவில் அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை, இன்னமும் அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருக்கிறது. அவரது உரைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. பத்திரிகைகள் அனைத்திலும் பிரதான தலைப்புச் செய்தியான ஜனாதிபதியின் வெளிப்படையான உரைதான் அமைந்திருந்தது. 

சிலவேளை, ஜனாதிபதியின் வெளிப்படையான கருத்துகளுக்காக பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்திருந்தனவா, அல்லது கோத்துவிடும் நோக்கமா? என்பது தெரியவில்லை! ஏனெனில், ஜனாதிபதியின் வெளிப்படையான;  ஒளிவு மறைவற்ற கருத்துகள் சில சமயங்களில் குழப்பத்திற்கு வித்திட்டுவிடுகின்றன. இதில் பெரும்பங்கு ஊடகங்களுக்கு இருக்கின்றன. 

ஊடகங்கள் வழங்குகின்ற வியாக்கியானங்கள் சில சந்தர்ப்பங்களில் எதிர்மறை விளைவுகளைத் தோற்றுவித்துவிடும். அதேவேளை, பெரும்பாலான ஊடகங்களும் ஊடகவியலாளர்களும், அதிலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கருத்துகளை அறிக்கையிடும் செய்தியாளர்கள் உரைகளை ஒப்புவிப்பார்களே தவிர, வியாக்கியானப்படுத்துவதில்லை. தாங்கள் ஏன் கையைச் சுட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்கள் சொன்ன மொழியிலேயே ஒப்புவித்துவிட்டு உடம்பைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலைதான் நீடித்து வருகிறது. 

இலங்கை அரசியல் செல்நெறி மட்டுமல்ல, நாட்டில் புரையோடிப் போயுள்ள பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இழுபறிபடுவதற்கு ஊடகங்களின் மெத்தனப்போக்கும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. 

கடந்த மூன்றாந்திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் ஆண்டுவிழாவில், ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துகளுக்குத் தற்போது அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் வியாக்கியானம் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். 

விசேடமாக எதிர்வரும் 2020இல் சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசாங்கமே அமையும் என்று ஜனாதிபதி ஏன் சொன்னார் என்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர சொல்கிறார், சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தத் தரப்புக்கும் வெற்றி பெற முடியாது என்பதையே ஜனாதிபதி அவ்வாறு சுட்டிக்காட்டினார் என்று. இஃது உண்மையில் ஐக்கிய தேசிய கட்சிக்குப் பொருத்தப்பாடான கருத்தாக இருக்காது. அந்தக் கட்சியும் அடுத்த ஆட்சி தம்முடையதாகவே இருக்கும் என்று உறுதியுடன் தெரிவித்து வருகிறது. சுருங்கச் சொன்னால், சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றியபோது ஜனாதிபதியின் பலம் வெளிப்படுத்தப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகையொன்று தனது வியாக்கியானத்தைக் குறிப்பிட்டிருந்தது. 

உண்மையாக ஜனாதிபதியின் பலத்தை இழக்கச் செய்தது அரசியலமைப்பேயன்றி வேறொன்றில்லை. அவர் போட்டியிட்டபோதே நிறைவேற்றதிகாரத்தை இல்லாதொழிப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி, அவர் தெரிவுசெய்யப்பட்டதும், அதிகாரத்தால் வலுவிழந்த ஒரு ஜனாதிபதியாகவே அவர் தம்மை தகவமைத்துக்கொண்டார் என்கிறார்கள் அரசியல் விம ர்சகர்கள். அதுபோலவே, அடுத்து வருகின்ற ஜனாதிபதியானவர் தற்போது இருப்பதைவிடவும் வலுவிழந்தவராகவே இருப்பார் என்கிறார் ஜனாதிபதி. ஆகவே, தனிப்பட்ட நபர்களின் ஆளுமைகள் எந்த வகையிலும் ஜனாதிபதியின் அதிகாரத்தை தூக்கி நிறுத்தப்போவதில்லை. அதற்குப் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் இடமளிக்காது. எனவே, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் கவனம் செலுத்துவதை விடுத்துப் பொருத்தமான பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்ய அனைவரும் பாடுபட வேண்டும் என்கிறார் ஜனாதிபதி. 

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்குப் பிரதமரும் உறுதிபூண்டிருக்கும் நிலையில், இனி வரும் காலத்தில், யார் ஜனாதிபதியாக வருகிறார்கள் என்பதைப் பற்றி அலட்டிக்ெகாள்ள வேண்டியதில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களை வைத்து அரசியல் காய்நகர்த்தலில் ஈடுபடுவது மீண்டும் மக்களை ஏமாற்றும் செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.

"நான்  அரசாங்கத்தில் ஜனாதிபதியாக இருந்ததால்தான், உள்ளே இருந்து போராடியதனால்  தான், வெளியிலும் போராடியதனால் தான் இறுதியில் எதுவுமே செய்ய முடியாத போது  ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக ஆக்குவதற்கு  தீர்மானம் எடுக்க வேண்டி வந்தது. அங்கிருந்த மிக மோசமான நிலைமையாகும். நான்   அரசாங்கத்தின் உள்ளிருந்து நாட்டையும் மக்களையும் ஜனநாயகத்தையும்  பாதுகாக்கவும் ஊழல் மோசடிகளுக்கெதிராக நான் போராடி இருக்காவிட்டால்  அப்படிக் கூறுகின்றவர்களின் மானங்களை மறைத்துக்கொள்ள உடலில் எதுவும்  எஞ்சியிருக்காது. நானே அதனைப் பாதுகாத்திருக்கிறேன்.  

எனவே, நாம் சிறந்ததோர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம். எமக்கு  சுதேச முற்போக்கான மனிதநேயமிக்க அரசியல் முன்னணியொன்று தேவை. இன்று நாம்  ஆரம்பித்திருப்பது அடுத்த ஜனாதிபதித் தேர்தலேயாகும். நாம் இன்னும் சில  வாரங்களில் மாவட்ட மாநாடுகளை நடத்துவோம். கட்சியைப் பலப்படுத்துவோம்.  மக்கள் நேயமிக்க விரிவான அரசியல் முன்னணியொன்றை அமைப்போம். 

உங்களில் அநேகமானவர்கள் ஜனாதிபதி அபேட்சகர் யார்? யாருக்கு  நாம் ஆதரவு வழங்கப் போகிறோம்? எனக் கேட்கின்றனர். நான் அதற்கு வழங்கும்  பதில் என்னவென்றால், எமது கொள்கையின்படி, 2020இல் அரசாங்கத்தை அமைக்கப்போவது  நாங்கள் தான் என்பதை உங்களுக்கு கூறுகிறேன். அதற்குத் தயாராகுங்கள்.  நாம் எமது பலத்தைக் காட்டுவோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 68  வருடங்கள். எனக்கும் 68 வருடங்கள். 68 என்பது முதிர்ச்சியாகும். நாம்  பெரும் பலத்துடன் கட்சியைக் கட்டியெழுப்பி அடுத்துவரும் ஓரிரு மாதங்களில்  நாட்டில் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிகரமானதொரு போராட்டத்தை  மேற்கொண்டு 2020இல் புதியதோர் அரசாங்கத்தை அமைப்போம்." என்று தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி.

"உண்மையில்  இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியான பாதை எது என்பதை உங்களால் மதிப்பீடு  செய்ய முடியுமா? சரியானவர்கள் யார் என்பதை உங்களால் உறுதிப்படக் கூற  முடியுமா? எந்த கட்சியின், எந்த தலைவரின் பாதை சரியானது என்பதை உங்களால்  கூற முடியுமா? இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பும் தற்போது  குழப்பங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. இது கவலைக்கிடமானதாக உள்ளது.  நாட்டைப்பற்றி சிந்திக்கையில் கவலை ஏற்படுகிறது. அதுவே உண்மையான நிலைமை.  நாம் தொலைக்காட்சிகளில், செய்தி அறிக்கைகளில், கலந்துரையாடல்களில் பலவற்றை  கூற முடியும். சத்தமிட்டு கூச்சலிட்டுப் பேச முடியும். ஆனால், பிரச்சினைகள்  தீர்க்கப்படப்போவதில்லை. 

சுமார் 05 வருடங்களுக்கு அண்மித்த எனது ஆட்சிக்காலத்தை யார்  எந்த வகையில் விபரித்தாலும் மேற்குறிப்பிட்ட பண்புகளுடன் கூடிய அபிவிருத்திப்  பாதையை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நான் முயற்சித்ததையும் அதற்காக  நான் போராட நேர்ந்ததையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஊழல், மோசடியை  ஒழிப்பதற்கும் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கும் எதிராகவும்  அபிவிருத்தியை சரியான திசைக்குக் கொண்டு செல்வதற்கும் ஒழுக்கமான சமூகமொன்றைக்  கட்டியெழுப்புவதற்கும் நாட்டில் அனைவருக்கும் சமனாக சட்டத்தை  அமுல்படுத்தும் நிலைக்குக் கொண்டுவரவும் நான் போராட வேண்டியிருந்தது. 

2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில்  எதிர்நீச்சல் அடித்தே நான் வெற்றி பெற்றேன். அது எவ்வளவு சவால் மிக்கது  என்பதை அன்று கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கும்  மக்களுக்கும் தெளிவாக தெரியும். அன்று அந்த சவாலை வெற்றிகொண்டு  உருவாக்கப்பட்ட அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இன்று சிலர்  மறந்து விட்டனர். ஆனால், பலர் ஞாபகம் வைத்துள்ளனர். அந்த அரசாங்கம் ஓரளவு  வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும் மற்றைய பிரிவினர் என்னால் என்றுமே  அனுமதிக்க முடியாத நாட்டுக்கு பொருத்தமற்ற பல செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.  அவை எமக்கு பொருத்தமானதல்ல. பிரபு வர்க்கத்தினை சாராத ஜனாதிபதி என்ற  காரணத்தினால் அத்தகைய சாதகமான செயற்பாடுகளுக்கான பாராட்டுக்கள் இந்த  நாட்டுக்கு சாபக்கேடாக உள்ள பிரபு வர்க்கத்தை சார்ந்த அரசியல்வாதிகளால்  குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கின்றது. இன்று எமது நாட்டில் நிலவும்  பிற்போக்கான நிலைமைக்கு மக்கள் அறிய முடியாதவாறு திரைமறைவில்  மேற்கொள்ளப்படும் இந்தப் பிரபு வர்க்கத்தின் அரசியலே காரணமாகும். அதன்  அடிப்படை வியாபாரமாகும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழிக்கு ஏற்ப  இந்த ஏமாற்றுத்தனமான அரசியலை மக்களுக்கு வெளிப்படுத்துவதைப்போன்றே அதனை  தோல்வியடையச் செய்ய வேண்டியது இந்த யுகத்தின் முதன்மை கடமையாகும்.  

இதற்காக பலமான மக்கள் பலத்தினை, மக்கள் சக்தியை  ஒன்றுதிரட்டுவதே இன்று எம்முன் காணப்படும் பொறுப்பாகும். நாட்டின்  அபிவிருத்தி அரசியல் தலைமைத்துவத்தின் வடிவமாக அமைய வேண்டியது நாம்  கட்டியெழுப்பும் இந்த அரசியல் சக்தியாகும். அது பிரபு வர்க்கத்தினரற்ற  அரசியல் சக்தியினால் இயக்கப்பட வேண்டும். இன்று எமது நாட்டின் செல்வந்த,  மோசடி அரசியல்வாதிகள் ஓர் அணியில் திரண்டுள்ளனர். மக்கள் அதனை  புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு கட்சி, இன, மத, பேதமில்லை. மோசடிமிக்க  பிரபு வர்க்கத்தினர் ஓர் அரசியல் அணியில் இணைந்துள்ளனர்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இதனைப் புரிந்து கொள்ள  வேண்டும். மோசடிமிக்க பிரபு வர்க்க நண்பர்கள் கூட்டணி மக்களுக்கு இன்றும்  இரகசியமாகவே உள்ளது. அதனை பகிரங்கப்படுத்த வேண்டியது அவசியமாகும். நாட்டில்  பெரும்பாலானோர்கள் பிரபு வர்க்கத்தை சாராத செல்வந்தர்கள் அல்லாதவர்களே  ஆவர். நாட்டின் எதிர்காலம் இவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.  

இன, மத, பேதமின்மின்றி இவர்களது போராட்டம் அநீதிக்கு எதிராக  அமைய வேண்டும். எனினும், பிரபு வர்க்கத்தினரின் அரசியலில் இனவாதம், மதவாதம்  என்பன அவர்களது இறுதி அரசியல் துரும்பாகவே பயன்படுத்தப்படும் என்பதை  புரிந்துகொள்ள வேண்டும். 

இன்று நாட்டிற்குப் பொருத்தமான அரசியல்வாதி யார்? என்பதை  அறிந்துகொள்ள வேண்டும். எனது ஆட்சிக்காலத்தில் இந்த அரசாங்கத்தினால்  செய்யப்பட்ட மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட மத்திய வங்கி கொள்ளைக்கு  பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இந்த நாட்டு அரசியலில் இருந்து விலகிக்கொள்ள  வேண்டும். அவர்கள் இன்று தூய்மையான கனவான்களாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்  தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றனர். இன்னும் பல விடயங்கள் எதிர்வரும்  காலத்தில் வெளிவரும். அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான  ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அர்ஜூன் மகேந்திரனை விட பெரிய கனவான்களும்  பொறுப்புக்கூற வேண்டியவர்களாக நீதிமன்றக் கூண்டில் நிற்பதற்கான கோவைகள்  தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். 

நாட்டு மக்களின் வாக்குப் பலத்திற்கு நடந்தது என்ன? மாகாண சபை  முறைமை இல்லாது போய்விட்டது. மீண்டும் மாகாண சபை தேர்தல்கள் இல்லை.  ஆயிரக்கணக்கான அதிகாரிகள் சம்பளம் பெறுகின்றனர். மாகாண சபை சொத்துக்கள்  டிரில்லியன் கணக்கில் காணப்படுக்கின்றன. மாகாண சபை முறைமைக்கும்  தேர்தலுக்கும் மூடு விழா நடத்தப்பட்டு விட்டது. உயர்நீதிமன்றத்தில் என்னால்  விளக்கம் கோரப்பட்டமைக்கமைய பாராளுமன்றத்தில் உரிய அறிக்கை பிரதமரால்  முன்வைக்கப்படாமையினால், மாகாண சபைத் தேர்தல் முடக்கப்பட்டுள்ளது எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் அப்படி ஒரு தேர்தல் எப்போது வரும் எனக் கூற  முடியாது.

முன்னாள் ஜனாதிபதிகளைப் போன்று ஏன் உங்களுக்கு செயற்பட  முடியாது? என்று சிலர் கேட்கின்றனர். நான் ஆறாவது ஜனாதிபதி என்பது  உங்களுக்கு தெரியும். 19ஆவது திருத்தத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதிகள்  செயற்பட்டதைப்போன்று செயற்படுவதற்கு நான் முற்றுப்புள்ளி வைத்தேன்.  ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு 450 கோடி ரூபாவுக்கும்  அதிகம் செலவிடுகிறார். ஆனால், யார் தெரிவு செய்யப்பட்டாலும் எதிர்காலத்தில்  தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி 19ஆவது திருத்தத்திற்கு அமைய எதையும் செய்ய  முடியாத ஒருவராகவே இருப்பார். அவரிடம் பாதுகாப்பு அமைச்சும் இருக்காது.  அந்த அனைத்து அதிகாரங்களும் பிரதமரிடமே இருக்கும். இன்று நாட்டு மக்கள்  இந்த பிரச்சினை பற்றி பேசுவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை. இன்று  எல்லோரும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றியே பேசுகின்றனர். ஆனால், 2020இல்  நாட்டைப் பொறுப்பேற்பது ஜனாதிபதியன்றி பிரதமரே என்பதை மறந்து விட வேண்டாம்" என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெளிவுபடுத்தல்.

விசு கருணாநிதி

Comments