வாக்குரிமையை எவரும் உதாசீனம் செய்யக் கூடாது | தினகரன் வாரமஞ்சரி

வாக்குரிமையை எவரும் உதாசீனம் செய்யக் கூடாது

தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய 

ஜனநாயக நீரோட்டத்தில் சுதந்திரமடைந்த நாட்டில் வாக்குரிமை மிக முக்கியமானதொன்றாகும். தமக்கு விருப்பமான பிரதிநிதியை தேர்வு செய்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. அப்படியான பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் பயன்படுத்தும் ஜனநாயக ஆயுதம் தான் வாக்குரிமை. இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்து விட்டன. 1948ஆம் ஆண்டு எமது நாடு, சுதந்திரத்தைச் சுவைக்க ஆரம்பித்தது. நாடு இதுவரை பல தேர்தல்களைச் சந்தித்துள்ளது ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

2019ஆம் ஆண்டு தேர்தலுக்குரிய ஆண்டாகும். ஏற்கனவே மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அரசியலமைப்புக்கமையவே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் மேற்கொண்ட நேர்காணல் விபரம்:-

கேள்வி – ஜனாதிபதி தேர்தலுக்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக பேசப்படுகின்றது. நீங்கள் அதற்குத் தயாராகி விட்டீர்களா? 

பதில் – நாங்கள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கின்றோம். எந்த நேரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு கிடைத்தாலும் அதனைச் செய்யத் தயாராகவே இருக்கின்றோம். இது புதியதோ, புதுமையோ அல்ல. 

கேள்வி – ஜனாதிபதி தேர்தல், அவ்வாறானதொன்றல்ல. அதற்கென கால நேரம் இருக்கின்றது. அரசியலமைப்பு விதிகளுக்கமையவல்லவா அதனை நடத்த வேண்டும்? 

பதில் – ஆம்! 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 2014ஜுன் முதலாம் திகதி வரையான திருத்தங்களுக்கமைய ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னராக அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வேட்பு மனுவைக்கோர வேண்டும். வேட்பு மனுவை 16 நாட்களுக்கும் 21 நாட்களுக்கும் இடைப்பட்ட காலத்துக்குள் கோரவேண்டும். 

அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தவேண்டிய திகதியை நிர்ணயிக்கவேண்டும். அது வேட்புமனு ஏற்கப்பட்ட நாளிலிருந்து நான்கு வாரங்களுக்கு குறையாமலும் ஆறுவாரங்களுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். இதன் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கும் டிசம்பர் 7ஆம் திகதிக்குமிடையில் தேர்தலை நடத்தும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம். 

கேள்வி – அவ்வாறானால் வேட்புமனுக்களை எப்போது கோர எண்ணியுள்ளீர்கள்? 

பதில் – வேட்பு மனு கோரவோ, தேர்தலை நடத்தவோ எனக்கு தனி அதிகாரம் எதுவும் கிடையாது. தேர்தல்கள் ஆணைக்குழு கூடியே அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது. நாளை திங்கட்கிழமை ஆணைக்குழு கூடவுள்ளது. அதன்போது ஆரோக்கியமான முடிவு எட்டப்படலாம் என்று நம்புகின்றேன். 

எவ்வாறாக இருந்த போதும் செப்டம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் எந்த வேளையிலும் வேட்பு மனுக்கோரும் அறிவிப்பு வெளிவரலாம். அதற்கு முன்னர் எவ்விதத்திலும் அது சாத்தியப்பட முடியாது.  

ஒக்டோபர் மாத முற்பகுதியில் வேட்புமனுக்களை கோரினால் தான் நவம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கலாம். ஏனெனில் டிசம்பர் மாதத்தில் கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நடைபெறுவதால் அதற்கு பங்கமேற்படாதவகையில் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. 

கேள்வி – உரிய பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவியிலிருக்கும் ஜனாதிபதி பதவிதுறப்பதாக அறிவித்தால், அல்லது மரணமடைந்தால் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும்? 

பதில் – ஜனாதிபதி தம்மால் பதவியில் நீடிக்கமுடியாது என அறிவித்து பதவிவிலகினால் உடனடியாக ஆணைக்குழு கூடி ஆராய்ந்து ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதற்காக வேட்புமனுக் கோரவும், தேர்தலை நடத்தவும் தீர்மானிக்கும். அதன்போது வேட்பு மனுக்கோரல், தேர்தல் நடத்துவது குறித்த விதிமுறைகள் ஜனாதிபதி தேர்தலுக்குரிய சட்ட விதிகளுக்கமையவே முன்னெடுக்கப்படும். அத்தேர்தல் ஒரு பதவிக்காலத்துக்கான தேர்தலாகவே அமையப் பெறும். 

ஆனால் பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதி இயற்கை மரண மெய்தினால், அல்லது விபத்து மூலம் மரணித்தால் பதவியிலிருக்கும் அரசாங்கம் கூடிமுடிவெடுத்து பதவியிலிருக்கும் பிரதமர் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்க முடியும். அது மீதமுள்ள பதவிக்காலத்துக்கான பதவியாகும். இந்த இடைக்கால ஜனாதிபதி முன்கூட்டியே தேர்தலை நடத்தத் தீர்மானித்தால் முன்னர் கூறியது போன்றே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

கேள்வி – திடீரென அவசரத் தேர்தலொன்றை நடத்துவதில் நெருக்கடிகள், அசௌகரியங்களை தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்கொள்ளுமா? 

பதில் – அப்படியான நெருக்கடிகள், அசௌகரியங்கள் எதுவும் கிடையாது. தேர்தல் செயலகம், ஒவ்வொரு வருடமும் அடுத்த வருடத்துக்கான வாக்காளர் இடாப்புகளை ஜூன்மாதம் முதல் தயாரிக்கும் பணிகளை முன்னெடுக்கும். ஆனால் தேர்தல் நடத்தப்படுவது முன்னைய ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புக்கமையவே ஆகும். உதாரணமாக சொல்லப்போனால் வரக்கூடிய இந்த ஜனாதிபதி தேர்தல் 2018ம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புக்கமையவே நடத்தப்படும்.  

அடுத்த எந்தத் தேர்தல் குறித்தும் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் , என எதை வேண்டுமானாலும் நடத்த ஒவ்வொரு வருடமும் தயார் நிலையிலேயே திணைக்களம் இருக்கின்றது. 

கேள்வி – ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்துவதற்கு வாக்குரிமையின் வகிபாகம் எவ்வாறானது? 

பதில் -ஜனநாயகம் எனும் கட்டடத்தின் மிகப் பெரிய தூண் வாக்குரிமையாகும். வாக்குரிமையை பெற்றுள்ள ஒவ்வொரு பிரஜையும் தனது வாக்கை சரியான முறையில் பயன்படுத்தியேயாக வேண்டும்.

வாக்குரிமையை எவராலும் உதாசீனம் செய்யமுடியாது. அதே நேரம் அதனை துஷ்பிரயோகம் செய்வோர் மீது அரசியலமைப்பு விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். 

எனவே ஒவ்வொரு பிரஜையும் தமது வாக்குரிமையை உரியமுறையில் பயன்படுத்தவேண்டுமென்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். தேர்தலொன்றில் வாக்களிப்பதற்கு ஒருவர் உரித்துடையவரா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு வாக்காளர் இடாப்பே சான்றாகும். வாக்காளர் இடாப்பில் பெயர் காணப்படாத எவரும் வாக்களிக்க உரிமை பெறமாட்டார்கள். 

வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்டதன் பின்னர் இடைப்பட்ட காலத்தில் குற்றவாளியாக காணப்பட்டு வாக்குரிமை பறிக்கப்பட்டிருந்தால் அவர் வாக்களிக்கமுடியாது. அவ்வாறான ஒருவர் முறைகேடாக வாக்களிப்பாரானால் நீதிமன்று முன்நிறுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால் 500 ரூபா அபராதத்துக்கும் 6 மாதங்களுக்குட்பட்ட கால சிறைத்தண்டனைக்கும் ஆளாக்கப்படுவார். வாக்குரிமை என்பது தூய்மை மிக்கதும், பெறுமதிமிக்கதுமாகும்.  

கேள்வி – இம்முறை ஜனாதிபதி தேர்தல்களில் வாக்குளிப்பதற்கு எத்தனை பேர் தகுதி பெற்றிருக்கின்றனர்? அதேபோன்று எத்தனை அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன?

பதில் – இந்த 2019ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 2018ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பே பயன்படுத்தப்படும். 2019ன் வாக்காளர் இடாப்பை சீர்ப்படுத்தும் பணிகள் இதுவரையில் முடிவடையவில்லை. எனவே 2018 வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படுகின்றது. 2018ன் வாக்காளர் இடாப்பில் (15,992,096) ஒருகோடி 59 இலட்சத்தி 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். 

என்றாலும் 2018ல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் இடாப்பில் எவரேனும் இடைப்பட்டகாலத்தில் மரணித்திருந்தால் அவரது பெயரை பட்டியலிலிருந்து நீக்கும் அதிகாரம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி, மற்றும் பிரதேச கிராம அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் உரிய மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்திருந்தாலும் இந்த நிலை ஏற்பட்டலாம். 

ஆனால் அனர்த்தங்கள், நெருக்கடி நிலைகளில் வெளியேற்றப்பட்ட, அல்லது தமது பிரதேசத்திலிருந்து வெளியேறியவர்கள் தொடர்பில் விதிவிலக்கு உள்ளது.

அதனை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொள்வர். அவர்களுக்கு வாக்களிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். 

பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்குள் குறித்து சொல்வதானால் தற்போது தேர்தல்கள் செயலகத்தில் 70 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சில கட்சிகள் சீராக இயங்காத போதும் சட்ட அதிகாரத்தின் கீழ் அக்கட்சிகளை பதிவில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

நேர்காணல்: எம்.எ.எம். நிலாம்

Comments