'ஏற்று' நீர்ப்பாசனத் திட்டம் மீள் உருவாக்கம் பெறுமா? | தினகரன் வாரமஞ்சரி

'ஏற்று' நீர்ப்பாசனத் திட்டம் மீள் உருவாக்கம் பெறுமா?

இலங்கை பூர்வீகமாகவே விவசாயப் பொருளாதாரத்தில் தங்கியிருக்கும் நாடென்பதால் அப்பொழுதிருந்தே விவசாய அபிவிருத்தித் திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டு வந்துள்ளன.  

1968ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், உணவு உற்பத்தியினைப் பெருக்குவதற்கும், வெளியிலிருந்து வரும் இறக்குமதியினைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தது. அத்துடன் படித்த வாலிபர்களுக்கும், யுவதிகளுக்கும் வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.  

அரசு, நாட்டின் பல பாகங்களிலும், விவசாய விஸ்தரிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. அவ்வாறு அமைக்கப்பட்ட விவசாயத் திட்டங்களில் ஒன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தின் தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டம் ஆகும்.  

இத்திட்டத்தோடு இராஜாங்கணை, விஸ்வமடு, முத்ததையன்கட்டு, மற்றும் பெண்களுக்காக பிரத்தியேகமாக மிருசுவில் விவசாயத் திட்டமும், ஏற்படுத்தப்பட்டன.  

தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை என அழைக்கப்படுகின்ற மாவட்டத்தின் தென்கோடியில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பழுகாமம் - திக்கோடை வீதியின் வடக்குப் பக்கமாக அமைந்துள்ளதாகும்.  

இத்திட்டம், 500 ஏக்கருக்குமேல் விஸ்தீரணமான நிலப்பரப்பைக் கொண்டது. இதில் விவசாயம் மேற்கொள்வதற்காக அப்போதைய காலகட்டத்தில் கொங்கிறீற் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன.  

அப்போதிருந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கண்காணிப்பின் கீழ் அப்போது மாவட்ட காணி உத்தியோகத்தராக இருந்த ம.சிங்காரவேலும், இத்திட்டத்திற்குரிய அதிகாரியாக செ.கனகசபையும், செயற்பட்டனர்.  

இது ஒரு ஏற்று நீர்ப்பாசனத் திட்டமாகும், இத்திட்ட ஆரம்பத்தில் அப்போது 100 இளைஞர்களுக்குரிய திட்டமாக இது வடிவமைக்கப் பட்டிருந்த போதிலும், முதற் கட்டத்தில் 50 இளைஞர்களே உள்வாங்கப் பட்டிருந்தனர்.  

காடு மண்டிக் கிடந்த அந்த நிலப்பரப்பை பண்படுத்திய பின்னர், அவர்களுக்கு விவசாயப் பயிற்சியும் வழங்கப்பட்டன. அத்தோடு அவ்விளைஞர்கள் ஏனைய இடங்களில் அமைந்துள்ள விவசாயக் கிராமங்களையும் சென்று பார்வையிட்டனர். (தற்போது அவர்கள் வயது முதிர்ந்தவர்களாகவும், பலர் இறந்தும் விட்டனர்)  

ஆரம்ப கட்டமாக 30 ஏக்கர் நிலத்தில் மாத்திரம் மிளகாய், வெங்காயம் மரவள்ளி, கௌபி, போன்ற பயிரினங்கள் செய்கை பண்ணப்பட்டு அறுவடையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்போதைய காலகட்டத்தில் இவ்விவசாயத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. இந்தப் பயிர்ச் செய்கை வெற்றியளித்ததன் பிற்பாடு அப்பகுதியிலிருந்த ஏனைய காடுகளும் களனிகளாக்கப்பட்டு பிரதேச மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் மேட்டு நிலம் என்ற அடிப்படையில் 52 குடும்பங்களுக்கு 104 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது.  

பின்னர் அம்மக்கள் அவரவர் நிலங்களில் மிளகாய்ச் செய்கைக்கு முன்னுரிமை கொடுத்து அதனை மேற்கொண்டு வந்தனர். மிளகாய்ச் செய்கையில்  வெற்றிகண்டு கிராமமக்கள் பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்து காணப்பட்டார்கள்.  

இம் மிளகாய் பண்ணையை இலங்கையின் வேறு மாவட்டங்களின் விவசாயிகளும் ஏனைய பொதுமக்களும் பார்வையிட்டுச் சென்றனர்.  

அன்றிலிருந்து தற்போது வரைக்கும் இக்கிராமம் “கொச்சிப்பாம்” என்றுதான் அழைக்கப்பட்டு வருகின்றது.  

இந்நிலையில் இக்கிராமத்தினை அப்போது வந்து பார்வையிட்ட “றெட்பாணா” எனும் அமைப்பினர், இக்கிராமத்தில் மேலதிகமாக இருந்த காணிகளை ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வீதம் மேலும் 100 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாடு செய்ததோடு அவர்களையும் மிளகாய், மரவள்ளி, கௌபி, போன்ற பயிர்களைச் செய்வதற்கு ஊக்கமளித்தனர்.  

எனினும் பின்னாட்களில் இத்திட்டங்களுக்கு ஊக்கம் கொடுக்க யாருமற்ற நிலைமை காணப்பட்டது. அதனால் படிப்படியாக இந்த விவசாயிகளிடத்திலும் விவசாய முயற்சிகள் மங்கிப் போயின.  

இந்த கொச்சி பாம் திட்டத்திற்கு அப்போது தனியான ஒரு கூட்டுறவு சங்கம் இயங்கி, அதனூடாக விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள், பசளைகள் போன்றன விநியோகிக்கப்பட்டன.  

அது மட்டுமல்லாமல் உற்பத்தியாகின்ற விளைபொருட்களும் நியாயமான விலையில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டன. இதனால் விவசாயிகள் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்தனர். இவற்றுக்கு மேலதிகமாக விவசாயிகளுக்கு இலகு கடன் திட்டமும் அமுலாக்கப்பட்டு வந்தது.  

அந்த கூட்டுறவுச் சங்கம் பண்ணையாளர்களின் நலன் கருதி சிறப்பாகச் செயற்பட்டதனால் அரசாங்கத்தினால் உழவு இயந்திரம் ஒன்றும் வழங்கப் பட்டிருந்தது.  

கொச்சிப்பாம் திட்டத்திற்கு வேண்டிய நீர் வசதிகளையும், வாய்க்கால் திருத்த வேலைகளையும், நீர்ப்பாசனத் திணைக்களம் செய்து வந்தது.  

3 நீர் இறைக்கும் இயந்திரங்களும் இந்த விவசாயப் பண்ணையில் பொருத்தப் பட்டிருந்தன. 1983 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பூ.கணேசலிங்கம், மின்சாரம் மூலம் நீர் இறைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். அந்த வேளையில்தான் அப்பகுதியில் வன்செயல்கள் ஆரம்பமாகின. பின்னர் இத்திட்டம் படிப்படியாக செயலிழந்து, செல்லச் செல்ல இதற்கான நீர் நவகிரிக் குளத்திலிருந்தும், கடுக்காமுனைக் குளத்திலிருந்தும் பெறப்பட்டன.  

பின்னர் இவ்வாறு பெற்று வந்த நீரும் வன்செயல்கள் காரணமாக முற்றாகத் தடைப்பட்டது. இப்பகுதியில் வன்செயல்கள் உக்கிரமடைந்த 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த விவசாயத் திட்டம் முற்று முழுதாக கைவிடப்பட்டது.  

தற்போது அவற்றின் தடயங்களையும் மக்கள் குடியிருப்புக்களையும் மாத்திரமே காணக் கூடியதாகவுள்ளது.  

யுத்தத்தினால் அங்கு காணப்பட்ட குடியேற்ற அதிகாரி காரியாலயம், கூட்டுறவுச் சங்கக்கட்டிடம், ஒன்றுகூடல் மண்டபம் நீர்ப்பாசனக் காரியாலம், பயிர் செய்கைகளிலிருந்த குடியிருப்புக்கள் மற்றும் அங்கிருந்த வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் என்பன உடைக்கப்பட்டிருந்தன.  

அங்கிருந்த பெறுமதியான பொருட்களும் சூறையாடப்பட்டன. இதில் மீதமடைந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான பொருட்களை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளார்கள். மேலும் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டு மக்களும் இடம் பெயர்ந்தனர். பின்வந்த காலப் பகுதியில் இப்பகுதி மனித நடமாட்டமின்றிய பகுதியாக காட்சி தந்தது.  

பின்னர், நிலைமை படிப்படியாக சீரடையத் தொடங்கியவுடன் மக்களும் சிறிது சிறிதாக இங்கு மீளக் குடியமர்ந்தார்கள், அங்கிருந்த அனைத்து விவசாயத் திட்டங்களும் தூர்ந்துபோன நிலையில் மக்கள் தற்போது வான் மழையை நம்பி மாரி காலத்தில் மாத்திரம் மரவள்ளி, பயறு, சோளம் போன்ற சேனைப் பயிர்ளைச் செய்து வருகின்றனர்.  

இன்னமும் அதிகமான நிலங்கள் தரிசாகவும், காடுகள் மண்டியும் கிடக்கின்றன. அப்போதிருந்த விவசாயத் திட்டத்தினை மீள் உருவாக்கம் செய்வதற்கு கிராம மக்கள் பல அரச சார்பற்ற அமைப்புக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், அரசாங்க அதிகாரிகளிடமும் எடுத்துக் கூறியுள்ளனர்.  

எனினும், இன்றுவரை இந்த இளைஞர் விவசாயத்திட்டக் கிராம மக்களின் வேண்டுகோள்கள் கரிசனைக்கு எடுக்கப்படவில்லை என்றே அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  

இத்திட்டத்தினை மீள் புனருத்தாரணம் செய்வதற்கு கிராம மக்கள் தயாராக உள்ளனர்.  

தூர்ந்து போயுள்ள வாய்க்கால்களை புனரமைத்தல், ஒன்றுகூடல் மண்டபம் அமைத்தல், வீதிகளைப் செப்பனிடல், காணிகளைத் துப்பரவு செய்தல் போன்ற வேலைகளை மேற்கொள்ளவும் முடியும். அம்மக்களைக் கொண்டு வேலைத் திட்டங்களை மேற்கொள்ளவும், ஏற்பாடுகளைச் செய்யலாம் எனும் பரிந்துரைகளையும் கிராம மக்கள் முன்வைக்கின்றனர்.  

விவசாயச் செய்கைக்கு உபகரணங்கள், உரமானியம், மற்றும் தேவையான உள்ளீடுகளை வழங்குதல், போன்றவற்றினைச் செய்யும் பட்சத்தில் இக்கிராமத்தவர்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வரமுடியும். என எதிர்பார்க்கின்றனர்.  

இதன் மூலமாக சுமார் 500 ஏக்கர் நிலத்தில் தொடர்ச்சியாக மிளகாய், கத்தரி, வெண்டி, சோளம், பயறு, கௌபி, போன்ற தானிய வகைகளை நாளாந்தம், உற்பத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும் தேவையினைப் பூர்த்தி செய்யலாம் என எதிர்பார்க்கின்றனர்.     

அந்த திட்டத்தை மீளவும் இயங்க வைப்பதற்கு எவ்வளவு நிதி தேவை அதற்குரிய மதிப்பீட்டு விபரத்தை சம்மந்தப்பட்டவர்கள் அல்லது அக்கிராமத்து மக்கள் எனக்குத் தரும் பட்சத்தில் அதனை வைத்துக் கொண்டு அதற்குரிய நிதியை நாம் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே இத்திட்டத்தைப் பற்றிய விபரத்துடன் அதற்குரிய செலவு மதிப்பீட்டு அறிக்கையும் எமக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதனை அமுல்ப்படுத்த முயற்சிக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மேற்படி நாடாளுன்ற உறுப்பினரின் கருத்திற்கிணங்க தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த ஏற்று நீர்ப்பாசனத்திட்டத்தை மீண்டும் அமுல்ப்படுத்துவதற்குரிய திட்ட வரைபை அக்கிராமத்து மக்கள், அல்லது சம்மந்தப்பட்டவர்கள், தயார்செய்து நாடாளுன்ற உறுப்பினருக்கு கிடைக்கச் செய்யும் பட்சத்தில் அதற்குரிய முன்னெடுப்புக்களை மேற்கொள்ளலாம் என தெரியவருகின்றது.

வ. சத்திவேல்

Comments