கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் | தினகரன் வாரமஞ்சரி

கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும்

“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா 

பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. 

காணும் காட்சியெல்லாம் நந்தலாலா 

காய்ந்தே தெரியுதையே நந்தலாலா...” 

இப்படிப் பாடிக்கொண்டு போகிறார் ஒரு முதியவர். வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. தெருவில் ஆட்களே இல்லை. எங்காவது ஒன்றிரண்டு பேர் மட்டும் அவசரமாக எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய முகங்களும் காய்ந்து வரண்டே உள்ளன. தொலைவில் நான்கைந்து மாடுகள் எதையோ மேய்வதற்கு முயற்சிக்கின்றன. நிலத்தில் புற்களே இல்லை. மாடுகளிலும் ஒரு சொட்டு தசைப் பிடிப்பில்லை. கோழிகள் சோம்பிச் சோம்பி விழுந்து சாகின்றன. ஒரு சொட்டு நிழலுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டலைகின்றன நாய்கள். விசர் முற்றிப்போகுமோ என்று அச்சமாயிருக்கிறது. வளவுகளில் தென்னைகள் எல்லாம் தலைகுத்தி முறிந்துள்ளன. ஊரே இழவு வீடாகத் தோன்றுகிறது. 

இதுவே கிளிநொச்சியின் நிகழ்காலக் காட்சிகள். 

சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு வெள்ள நிவாரணம் பெற்ற சனங்கள் இப்பொழுது வரட்சி நிவாரணத்துக்காக விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளத்துக்குக் காரணமும் இந்தச் சனங்கள்தான். இப்பொழுது பற்றியெரியுமளவுக்குக் கொதித்துக் கொண்டிருக்கும் வரட்சிக்குக் காரணமும் இந்தச் சனங்கள்தான். வெள்ளம் வந்தாலும் லாபம். வரட்சி வந்தாலும் லாபம். இரண்டுக்கும் நிவாரணம் கொடுப்பார்கள் அல்லவா. ஆகவே எது வந்தாலும் அது நன்மையே என்றுதான் எல்லோரும் கணக்குப் பார்க்கிறார்கள். இல்லையென்றால், இப்படிப் போய் தலை வரண்ட வேலையைச் செய்வார்களா? 

எங்கள் வீட்டிலிருக்கும் தென்னைகளிலிருந்த குரும்பையெல்லாம் உதிர்ந்து கொட்டி விட்டது. ஐந்து தென்னைகள் இன்றோ நாளையோ தலையைக் கவிழ்க்கும். இவ்வளவுக்கும் இந்த மரங்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வளர்க்கப்பட்டவை. 

இப்படித்தான் ஊர் முழுவதிலும் பத்துப் பதினைந்து ஆண்டுகளாகப் பாடுபட்டு வளர்த்த மரங்கள் எல்லாம் வரண்டு வாடிப்படுகின்றன. இது ஏதோ இந்த ஆண்டு வந்த வரட்சியினால் மட்டும்தான் நடக்கிறது என்று யாரும் எண்ணி விட வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் கிளிநொச்சியில் வரட்சி ஏற்படுகிறது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை வெள்ளப் பெருக்கு நிகழ்கிறது. இரண்டின்போதும் சனங்கள் அல்லாடுகிறார்கள். இரண்டின்போதும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அல்லற்படும் சனங்களோடு கிடந்து மாய்கிறது. இரண்டின்போதும் அரசியல் தலைவர்கள் வந்து, தாம் ஆபத்பாந்தவர்கள் எனத் தோற்றம் காட்டுவதற்காக அல்லற்படும் சனங்களோடு நின்று படங்களை எடுத்துப் பரப்புரை செய்கிறார்கள். 

ஆகவே, எல்லோருக்கும் வெள்ளமும் வேண்டும். வரட்சியும் வேண்டும் என்றாகி விட்டது. இல்லையென்றால் வெள்ள அரசியலை எப்படிச் செய்வது? வரட்சி அரசியல் வியாபாரத்துக்கு என்ன வழி? சனங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டுமல்ல, அதிகாரிகளுக்கும் வெள்ளம் வேண்டும். ஏனென்றால், வெள்ள நிவாரணத்திலும் கையை வைக்கலாம். வரட்சி நிவாரணத்திலும் சுருட்டிக் கொள்ளலாம் அல்லவா! 

கடந்த வெள்ளப் பெருக்கின்போது நாடு முழுவதிலுமிருந்து பெருமளவு நிவாரணம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு வந்திருந்தது. ஜனாதிபதியும் பிரதமரும் கூட போட்டி போட்டுக்கொண்டு  வெள்ள நிவாரண உதவிகளைச் செய்திருந்தனர். ஆனால், எவ்வளவு நிவாரணப் பொருட்கள் கிடைத்தன? என்னென்ன பொருட்களும் உதவிகளும் கிடைத்தன? யாரெல்லாம் உதவினார்கள்? அந்த நிவாரணம் எந்த அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டது? எவ்வளவு பகிரப்பட்டது? என்ற விவரமெல்லாம் யாருக்குமே தெரியாது. எல்லாமே மூடு மந்திரம். மூடப்பட்டிருக்கும் அந்த ரகசியப் பெட்டியைத் திறப்பதற்கு இரண்டு மூன்று ஊடகவியலாளர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தார்கள். அவர்களால் முடியவில்லை. “தகவல் அறியும் சட்டம் இருக்கிறதல்லவா! அந்தத் தூண்டிலைப் பயன்படுத்தி உண்மை என்ற மீனைப்பிடிக்கலாமே” என்று உங்களுடைய தலைக்குள்ளே அருமையானதொரு ஐடியா தோன்றலாம். 

இந்தத் தகவல் அறியும் சட்டமூலம் என்ற தூண்டிலையே விழுங்கி விடக்கூடிய பெரிய திமிங்கலங்கள்தான் அதிகாரத்திலிருக்கின்றன. ஏதோ அர்ஜூன் மகேந்திரன், ராஜபக்ஸ தரப்பினர் மட்டும்தான் ஊழல் திமிங்கலங்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களுடைய கண்களையே திருடி விற்று விடுவார்கள். அவர்களையே தின்று ஏப்பம் விடக்கூடிய அளவுக்கு இவர்கள் பலே கில்லாடிகள். அவர்களுடைய ஊழல்கள் உலகறிந்தவை. இவர்களுடைய ஊழல்கள் ஊருக்குள் ரகசியமாகப் புதைக்கப்பட்டவை.  

ஆக மொத்தத்தில் எல்லோருக்கும் வெள்ளமும் தேவை. வரட்சியும் தேவை. அவரவர் தேவைகளுக்கு ஏற்ப இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

இல்லையென்றால், ஊர்களிலிருக்கும் குளங்களையும் தாழ்வான நிலங்களையும் மண்ணை நிரப்பி மூடிக் கொண்டிருப்பதை எந்த முட்டாள்கூட ஏற்றுக்கொள்வாரா? 

பட்டப்பகலிலேயே குளங்கள் மூடப்பட்டு, அங்கே குடியிருப்புகள் உருவாக்கப்படுகின்றன. வயல் நிலங்கள் மண் நிரப்பப்பட்டு அங்கே வணிக வளாகங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. பரந்தனில் இரண்டு போகமும் நெல் விதைத்து அறுவடை செய்யப்பட்ட வயல் நிலத்தில் இப்பொழுது மிகப் பெரிய திருமண மண்டபமும் சுற்றயலில் வாகனத் தரிப்பிடமும் உருவாக்கப்பட்டுள்ளன. இது பரந்தன் ஐந்தாம் வாய்க்கால் என்ற பகுதியில் ஏ.9பிரதான வீதிக்கு அண்மையாக உள்ளது. இதற்கெல்லாம் அனுமதியைக் கொடுத்தது யார்? அந்த அனுமதி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது? இதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கும் சுட்டிக் காட்டுவதற்கும் ஊரில் எந்த அமைப்பும் கிடையாது. கமக்காரர் அமைப்பு, விவசாயத்திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், பிரதேச சபை, கிராம அபிவிருத்திச் சங்கம், காணிப் பயன்பாட்டுக்குழு, நகர திட்டமிடல் மற்றும் நிர்மாணிப்பாளர்கள், விவசாயிகள் சங்கம், சுற்றுச்சூழலியலாளர்கள், இயற்கை நேசர்கள் என்றிருக்கும் எந்தத் தரப்புக்கும் இந்தத் தவறுகள் கண்ணில் படுவதில்லை. 

பெய்யும் மழையை நிலத்தில் தேங்காமல் விரட்டி விடுவதன் பலனே இந்த வெள்ளமும் வரட்சியுமாகும். ஆனால் இதைப்பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. 

பதிலாக இது கால நிலை மாற்றம். அதனால்தான் இந்தப் பாதிப்புகள் என்று சமாதானம் சொல்லி விடுவதிலேயே பலருடைய கவனமும் உள்ளது. ஆனால், கால நிலை மாற்றம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதே மனித ஆற்றலாகும். மனித வரலாறே இயற்கையைப் படித்துப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற முன்னேற்பாட்டையும் வழிவகைகளையும் செய்வதையே உணர்த்துகிறது. இந்த வரலாற்றுண்மையை நாம் மட்டும் மறுதலித்துப் புது வழி காண்போம் என்று அடம்பிடிப்பது முட்டாள்தனமின்றி வேறென்ன? 

இப்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் 9933குடும்பங்களைச் சேர்ந்த 34785பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீருக்கே பல குடும்பங்கள் அல்லாடுகின்றன. மிகப் பெரிய நீர்த்தேக்கமான இரணைமடுவை வைத்திருக்கும் கிளிநொச்சியில் இப்படியொரு நீர்ப்பஞ்சமா என நீங்கள் வியக்கலாம். ஆம், நீங்கள் கேட்பது நியாயமே. ஏனென்றால், ஒரு மாதத்துக்கு முன்பு 18000ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப்படக்கூடியதாக இருந்தது. இரணைமடு நீர்த்தேக்கம் மட்டுமல்ல, கனகாம்பிகைக்குளம், பிரமந்தனாறுக்குளம், அக்கராயன்குளம், முறிப்புக்குளம், வன்னேரிக்குளம் என இன்னும் பல பாசனக்குளங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உண்டு என்பது உண்மையே. ஆனாலும் வரட்சியும் உள்ளதே. 

ஒவ்வொரு ஆண்டும் வரட்சிக்காக அரசாங்கத்தினால் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் உருவாகும் வரட்சி என்பது ஒரு நிரந்தரப்பிரச்சினையாக உள்ளது. இதற்கு என்ன தீர்வு? இதுவே முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.  

தற்போதுள்ள வரட்சியினால் 3000க்கு மேற்பட்ட தென்னைகள் அழிந்துள்ளன. இதில் இளைய தென்னைகளே அதிகம். இதற்கு நஸ்ட ஈடு என்ற பேரில் ஒரு சிறிய தொகைப் பணம் பாதிக்கப்பட்டோருக்குக் கிடைக்கக் கூடும். அது தென்னைகளால் தொடர்ந்து கிடைக்கும் வருமானத்துக்கு ஈடாகப்போவதில்லை. ஆக இப்படித்தான் உள்ளது நமது நிலையும் சூழலும். 

இப்படி இயற்கையைப் புரிந்து கொண்டு செயற்படாமல், அதற்கு மாறாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தால் எப்படி வளர்ச்சியும் அபிவிருத்தியும் ஏற்படும்? மக்களுக்கான பாதுகாப்பு எப்படிக் கிடைக்கும்? 

யுத்தம்தான் இடப்பெயர்வையும் அழிவையும் தரும் என்றில்லை. இயற்கைக்கு எதிரான நமது வாழ்க்கை முறையும் செயற்பாடுகளும் கூட நம்மை இடம்பெயரவைக்கும். படைகளாலும் ஆயுததாரிகளாலும்தான் எமக்கு ஆபத்தென்றில்லை. நமது முட்டாள்தனமான செயற்பாடுகளும் நம்மைப் பாதுகாப்பற்ற நிலைக்குள் தள்ளும். 

இப்போதுள்ள சூழல் மாற்றத்துக்குள்ளாக்கப்படவில்லை என்றால் எதிர்காலத்தில் கிளிநொச்சியிலிருந்து மாபெரும் இடப்பெயர்வு நடந்தே தீரும். கடந்த நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திலிருந்தும் தென்பகுதியிலிருந்தும் கிளிநொச்சியைத் தேடி லட்சக்கணக்கானோர் குடியேறுவதற்காக வந்தனர்.

இப்பொழுது கிளிநொச்சியில் தொடர்ந்தும் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு காலம் வடக்கின் நெற்களஞ்சியம் என்றும் பச்சை மாவட்டம் என்றும் வர்ணிக்கப்பட்ட கிளிநொச்சி, இப்பொழுது வரட்சியான மாவட்டம் எனவும் வறுமையில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் என்றும் பேரெடுத்துள்ளது.  

இதற்கெல்லாம் காரணம் என்ன? காரணர்கள் யார்? 

கருணாகரன்

Comments