நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் கிழக்கு தமிழர்கள்; யார் இதற்குக் காரணம்? | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் கிழக்கு தமிழர்கள்; யார் இதற்குக் காரணம்?

கிழக்குத் தமிழர்கள் அவர்களுடைய பாரம்பரிய பூமியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சியில் சமகால சமூகத்தோடு ஒப்பீட்டளவில் பார்க்கும்போது பின் தள்ளப்பட்டு நிற்கிறார்கள் என்பது யாராலும் ஒப்புக்கொள்ளக் கூடியது.

கிழக்கில் பல தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டன என்பதற்கு பல சான்றுகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி ஒரு தமிழ்ப் பத்திரிகையில் "அழிக்கப்பட்ட தமிழ்க்கிராமங்கள்" என்ற தலைப்பில் வாராவாரம் தொடர்ச்சியாக எழுதி வந்திருந்தார். அது இப்போதைய வாசகர்களின் மனதில் நிழலாடும். அதனை இக்கட்டுரை மீள்பதிப்புச் செய்ய முற்படவில்லை. ஆயினும் ஞாபகம் வருகிறது. அந்தக் கட்டுரை மாதக்கணக்கில் வாராவாரம் வெளிவந்தபோது யாரும் அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. அவர் முன்வைத்த கருத்துக்களும் சான்றுகளும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதவை.

சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதே கருத்தை முன்வைத்தபோது மாத்திரமே பல பேருக்கு "சுள்ளாப்பு” வந்தது. உண்மைகள் உறங்குவதில்லை. பல பேர் கூடி நின்று கூக்குரலிட்டாலும், ஒப்பாரி வைத்தாலும் உண்மைகள் அமைதிப்படலாம். ஆனால், அதே உண்மைகள் ”ஒளிந்து” கொள்ளாது. வள்ளுவப் பெருந்தகையும் இதே கருத்தையே வலியுறுத்துகிறார். இதைப்புரிந்து கொண்டு பேசுங்கள், எழுதுங்கள். எப்போதும் செய்த தவறுக்கு மனம் வருந்த வேண்டும். அதற்கு பிராயச்சித்தம் செய்ய முற்பட வேண்டும். முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்க முற்படக் கூடாது

கடந்த காலத்தில் மூன்று தசாப்தங்கள் வடக்கையும் கிழக்கையும் விடுதலைப் புலிகள் ஆட்சி செய்தார்கள். அதன் முடிவு வேறுவிதமாகிவிட்டது. அந்தக்காலம் அரசாங்கத்தின் கைப்பிள்ளையாக அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, அரசின் மடியில் தவண்டு விளையாடியவர்கள் யாரென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அப்படி அரசின் மடியில் தவண்டு விளையாடியது குற்றமாகவோ, குறையாகவோ யாரும் கருத முடியாது. காற்றுள்ள போது தூற்றிக் கொள்வது மனித இயல்பு, தூற்றிக் கொண்டார்கள் என்று விட்டுவிடுவோம்.

இவ்வாறு தமது காரியங்களை செய்யாதவர்கள், தாம் பல்லினம் வாழுகின்ற சமூகத்தில் ஒரு அங்கம், இன்னொரு சமூகத்திற்கு நமது காரியங்கள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாதென்றோ அல்லது நமது பல்லின சமூகங்களின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாதென்றோ கருதிச் செயற்படவில்லை. இதனால் கிழக்கில் வாழும் தமிழ்ச் சமூகம் பாதிப்படைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் அவற்றை தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார். அதில் தமிழ்மக்கள் எவ்வளவு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பார்கள் என்பது தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. அதன் பாதிப்புக்கள் இப்போதும் தொடர்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதன் இறுதி வடிவமே கல்முனை வடக்குப் பிரதேச செயலகமும், அது எதிர்பார்க்கும் அந்தஸ்துமாகும். இப் பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்படும் என்ற முதல்கடிதம் பொது நிர்வாக அமைச்சால் பாண்டிருப்பு மனோகரம்பிள்ளைக்கே வந்தது அவர் பல பொதுப் பதவிகளை வகித்திருந்தார். விடுதலைப் புலிகளின் சூட்டுக்கு இலக்காகி மறைந்துவிட்டார்.

தமிழிலே நம் நாட்டுப் பழமொழி ஒன்றிருக்கிறது அது ”மங்கை சூதகமாடினால், கங்கை நீராடலாம், கங்கை சூதகமாடினால் எங்கே போவது” இது எதை விளக்குகிறது? தனது குடிமக்களை காக்க வேண்டிய அரசு அதே குடிமக்கள் பாதிக்கப்படும்போது அதற்கு உறுதுணையாக இருக்கிறதே. அது அம் மக்களின் பாதிப்பை கண்டுகொள்ளவில்லையே என்பதை இலகுவாக விளக்குகிறது. இங்கு கல்முனை பற்றிய சில விடயங்களை குறிப்பிட வேண்டும். இவை சொர்ணம் ஜுவலர்ஸ் தொழிலதிபர் , பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் இருந்து பெறப்பட்டவை.

கல்முனை பட்டிண சபையின் தலைவராக இருந்தவர் விஜயா ரேடிங் முதலாளி. கல்முனையின் பள்ளிவாசலுக்கும் கல்முனை பஸார் தபால் கந்தோருக்கும் காணி வழங்கியவர் அன்னமலையைச் சேர்ந்த சம்புனாதப்போடி. கல்முனை நகரிலுள்ள சில கடைகள் இப்போதும் தமிழரின் உடமையானதாகவே இருக்கிறது. அவற்றில் சில டாக்டர் பூபாலபின்ளைக்கு சொந்தமானவை. அவர்களது பரம்பரையினர் அக்காலத்தில் இந்தியாவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் செய்து வந்தவர்கள்.

கல்முனை வாடிவீட்டு வீதியில் கே.கே. எம். பிடவைகக் கடை முதலாளிதான் கே. குழந்தை மரைக்கார் ஆரம்பத்தில் அவரது வியாபாரம் சற்று ”கோணல் மாணலாக” இருந்தது பின்னாளில் அவர் சமூகம் மதிக்கத் தக்கதாக வாழ்ந்தார். கல்முனை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் தலைமைப் பொறுப்பை ஏற்று நடாத்தினார்.

அவரோடு சொர்ணம் விஸ்வநாதன் மிக அன்னியோன்னியமாக இருந்ததாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். கல்முனையில் "சொர்ணம்” ஸ்தாபிக்கப்படுவதற்கு ஒத்தாசை காட்டியவர் கே.கே.எம் என பதிவிடுகிறார். இப்படியெல் லாம் தமிழர்களும் முஸ்லீம்களும் இணங்கி வாழ்ந்த வாழ்க்கையை வளரவிட வேண்டும். ஹரீஸ் எம்.பி போன்றவர்கள் அதற்கு குறுக்கே நிற்கக் கூடாது. கடந்த தேர்தலில்கூட சம்மாந்துறை நௌசாத், அவர் மறைந்த சம்மாந்துறை மஜீதின் மருமகன். அவர், வீரமுனை வட்டாரத்தில் போட்டியிட்டு பிரதேச சபைக்கு தெரிவானார். இப்போதைய அரசியல்வாதிகள் கல்முனையின் வரலாறு தெரியாமலும். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையேயுள்ள அன்னியோன்னியம் தெரியாமலும் பேசுகிறார்கள். அவர்கள் பேசவில்லை ”உளறுகிறார்கள்” என்பதே சரியான கணிப்பு.

இவ்விடயத்தில் இறுதியாக ஒன்றை குறிப்பிடவேண்டியுள்ளது. பொத்துவில் முன்னாள் எம்பி., மறைந்த எம்.சி.கனகரெட்ணம், சம்மாந்துறை முன்னாள் எம்.பி. மறைந்த மஜீத், கல்முனை முன்னாள் எம்.பி. மறைந்த மன்சூர், கல்குடா முன்னாள் எம்.பி. மறைந்த தேவநாயகம் போன்றோர் சம்பாதித்த நல்ல பெயரை இப்போதைய முஸ்லிம் எம்.பிக்களோ அல்லது தமிழ் எம்.பிக்களோ சம்பாதிப்பார்களா? காலம் பதில் சொல்லும்.

கொக்கட்டிச் சோலை படுகொலை 1987 ஜனவரி 28ல் நடந்தது நுாற்றுக்கு மேற்பட்டோர் அதில் கொல்லப்பட்டார்கள். அதேபோன்று பல படுகொலைகள் இந்த நாட்டில் நடந்தன. அப்போது மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த ”ஜோசப் அண்ணன்” அதனை ஐ.நா.வரை எடுத்துச் சென்று நியாயம் கேட்டார். நியாயம் கிடைத்தது அப்போதைய அரசுக்கு அது ஒரு தலைவலியை கொடுத்தது. அதனால், பலத்த உயிர் அச்சுறுத்தலுக்கு அவர் அப்போது ஆளாகியிருந்தார்.

இதில் அவர் தமிழ் மக்களின் காவலனாக, நியாயத்தை தட்டிக் கேட்பவராக இருந்தார். அவரும் இறுதியில் அநியாயத்தின் கையினால் காலமானார்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை ஆகிய இடங்களிலெல்லாம் அப்போதும் சரி இப்போதும்சரி தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட வண்ணம் இருக்கிறார்கள். திருமலையில் ஒரு பிள்ளையார் கோயிலை உடைத்து ஒரு விகாரை கட்டும் அளவுக்கு மனசாட்சி, நீதி, நியாயம், அரசின் நிர்வாகம் என்பன வளைந்து கொடுத்திருக்கிறது. இறுதியாக மேல் நீதி மன்றம் கைவைத்ததால், அது சற்று ஓய்ந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு விடயத்திற்கும் மேல்நீதி மன்றை நாடுவது ஒரு சமூகத்திற்கு சாத்தியமாகுமா? இல்லை.

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதானமானவர்கள். அபிவிருத்தி என்று கூறும்போது அது அரசின் கைநீளாமல் நடக்க மாட்டாது. இப்போது எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அதை வேகப்படுத்த வேண்டும். நமது எல்லைக் கிராமங்கள் பறிபோகின்றன. நமது புணானையிலிருந்து தமிழர்கள் 41 பேரின் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.

இவையெல்லாவற்றையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தட்டிக் கேட்க வேண்டும். கைத்தொழில், விவசாயம் மீன்பிடித் திட்டங்களை புதிது புதிதாக நமது பகுதிக்கு கொண்டு வரவேண்டும். அவற்றால் ஆயிரமாயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்க வேண்டும். இவை ஒவ்வொன்றிலும் மக்களது பங்களிப்பை அல்லது அவர்களின் பங்குபற்றுதலை பெற்றுக்கொள்ள வேண்டும். வாகரையில் இல்மனைட் தொழிற்சாலையை எதிர்ப்பதில் தவறில்லை. அரசினால் மக்களுக்க இனாமாக கிடைத்த இறால் பண்ணைகளையும் எதிர்க்கலாமா? அரச அதிகாரிகள் கதிரையில் இருந்து சம்பளம் பெறுகிறார்கள். இவர்களை தட்டிக் கேட்க வேண்டும். மட்டக்களப்பு கடற்தொழில் கூட்டுத்தாபனம் மூடப்பட்டு எத்தனை வருடம். இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஆதலால், பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களோடு நயந்தும் பரிந்தும் பேசி விடயத்தை சாதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பது அவசியம். மொழித் தேர்ச்சியற்றவர்கள் எப்படி அமைச்சர்களோடு கதைத்து விடயத்தை சாதிக்க முடியும். சைகை காட்டியா அமைச்சர்களுக்கு விடயத்தை விளக்குவது?

இப்போதிருக்கின்ற தமிழ்மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனேகருக்கு தாய்மொழியில் இவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விருந்துண்பதற்கும், வீதிப்பலகைதளை திறப்பதற்கு காட்டும் கரிசனைகளை பல திட்டங்களை வரவழைக்க காட்ட வேண்டும். இவர்கள் அசந்து தூங்கினால், தமிழினத்தின் எதிரிகள் ஆட்களையே தூக்கிவிடுவார்கள். இதனால் பாதிக்கப்படப் போவது தமிழினமே.

தயவு செய்து தமிழ்ப் பிரதிநிதிகள் தங்கள் செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். தங்களது காரியாலயத்திற்கான பணியாளர்களைக்கூட தங்கள் உறவினர்களாக நியமிப்பது பொருந்துமா என்பதை சிந்திக்க வேண்டும்.

தமிழ்த்தரப்பு அரசியல் கட்சிகள் புதிதாக வேட்பாளர்களை தெரிவுசெய்யும் போது இதிலுள்ளவற்றை அளவுகோலாக எடுக்க முடியும். தழிழர்களின் நெருக்கடி தீர நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தவறுக்கு காரணம் தெரிகிறதல்லவா. அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும். பழைய குருடி கதவைத்திறடி என்ற கதை இனிமேல் வரவே கூடாது.  

எஸ். தவபாலன்

Comments