வறுமையால் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மாவட்டம் | தினகரன் வாரமஞ்சரி

வறுமையால் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மாவட்டம்

‘எட்டு பாரிய நீர்ப்பாசன குளங்களையும் 400கும் மேற்பட்ட சிறிய குளங்களையும் மூன்றில் இரண்டு பங்கு விவசாய பொருளாதாரத்தையும் தன்னிறைவாக நெல் உற்பத்தியையும் கொண்ட கிளிநொச்சி மாவட்டமே இன்று வறுமையில் அல்லாடுகிறது’

‘2009யுத்தத்தின் பின்னர் புனர்நிர்மாண பணிகள் உச்சம் பெற்றபோது நிறைய வேலை வாய்ப்புகள் கிட்டின. பின்னர் அது குறையவே வேலை வாய்ப்புகள் அருகிப் போயின. ஏ9வீதி வழியாக செல்லும்போது நாம் காணும் கிளிநொச்சியல்ல உள்ளே சென்று பார்த்தால் நீங்கள் காணும் கிளிநொச்சி...’

‘இம்மாவட்ட உற்பத்திகள் மூலப் பொருட்களாக வெளியே சென்று மீண்டும் முடிவுப் பொருட்களாக மாவட்டத்துள் வருகின்றன. இங்கே உள்ள சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் திறந்த பொருளாதார சந்தையுடன் போட்டி போட முடியாது திணறுகின்றனர்’

அண்மையில் கிளிநொச்சியின் கிராமம் ஒன்றில் வாழ்கின்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண் தனது கிராம அலுவலரிடம் “ஐயா மூன்று வேளை சாப்பிட்ட எங்கள் குடும்பம் தற்போது இரண்டு வேளையே சாப்பிடுகிறது. அதுவும் அரைகுறை. அந்த இரண்டு வேளை ஒரு வேளையாக மாறுமுன் எங்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார். இந்தத் தகவலை கூறிய கிராம அலுவலர், இப்படி பல குடும்பங்கள் வாழ்கின்றனர் எனவும் தன்னுடைய கிராமத்தில் மட்டுமல்ல, ஏனைய கிராமங்களிலும் இப்படியான குடும்பங்கள் வாழவே செய்கின்றன என்று சக கிராம அலுவலர்கள் கூறுகின்றனர் என்றார். இவர்களின் வறுமையினை போக்க என்ன செய்வது என்றே தெரியவில்லை எனவும் ஆதங்கப்பட்டுக்கொண்டார். 

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை என்றுமில்லாத வகையில் வறுமை அம்மாவட்டத்தை ஆக்கிரமித்துவருகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட வறுமை இவ்வாறு காணப்படவில்லை என அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியேற்றத்தின் ஆரம்பத்தில் அதிகளவு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றமையால் தினக் கூலி வேலைகள் அதிகம் காணப்பட்டன. மூன்று வேளை உணவுக்கு நெருக்கடி ஏற்படாத அளவில் நிலைமை காணப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை அவ்வாறில்லை 

இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம் கடந்த சில வருடங்களாக வறுமையில் முன்னணி மாவட்டமாகத் திகழ்கிறது. வறுமை இரண்டு வகையாக கணிக்கப்படுகிறது. ஒன்று முழு வறுமை. அடுத்தது, ஒப்பீட்டு வறுமை. ஒருவர் தன்னுடைய அத்தியாவசிய அடிப்படைத்தேவைகளை உணவு, உடை, உறையுள் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைமை முழு வறுமையாகும். ஒப்பீட்டு வறுமை என்பது இரு பகுதியினரிடையே அவர்களுடைய வருமானம், வாழ்க்கைத்தரம் என்பவற்றை ஒப்பிட்டு வறுமையைக் கணிப்பதாகும். இது நடுத்தர மற்றும் வசதிபடைத்தவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வதாகும். குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகம் ஒப்பீட்டு வறுமையே காணப்படுகிறது. 

ஆனால் எங்களுடைய மாவட்டத்தை பொறுத்தவரை முழு வறுமையே நிலவுகிறது. எட்டு பாரிய நீர்ப்பாசன குளங்களையும், 400க்கும் மேற்பட்ட சிறிய குளங்களையும் கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு விவசாய பொருளாதாரத்தை மேற்கொள்கின்ற குறிப்பாக தன்னிறைவான நெல் உற்பத்தியை கொண்டுள்ள மாவட்டமாக காணப்படுகிறது. இதனை தவிர கால்நடை வளர்ப்பு, சிறு கைத்தொழில், மீன்பிடி என கிளிநொச்சி பொருளாதாரம் விளங்குகிறது. 

கிளிநொச்சி மாவட்டம் 1984பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. 1348.19சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட மாவட்டத்தில் 43405குடும்பங்களைச் சேர்ந்த 141486மக்கள் வாழ்கின்றனர். கரைச்சி, கண்டாவளை. பூநகரி, பளை என நான்கு பிரதேச செயலகங்கள், மூன்று பிரதேச சபைகளைக் கொண்ட மாவட்டம் இது. 

யுத்தக் காலப்பகுதியான 2005ஆம் ஆண்டுக் காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை 12.7வீதமாக காணப்பட்டது. ஆனால் 2017ஆம் ஆண்டு கிளிநொச்சி வறுமை 18.2வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக இலங்கை புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தின் வேலையற்றோரின் வீதம் கடந்த வருடம் 6.1வீதமாகக் காணப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமைக்கு வேலைவாய்ப்பின்மையும், மாவட்டத்தின் குறைவான மொத்த தேசிய உற்பத்தியும் செல்வாக்குச் செலுத்துகிறது எனக் கூறப்படுகிறது. 

அபிவிருத்தி அடைந்த நாடுகளின் நகரத்தை போன்று வீதி நடுவே வீதி விளக்குகள் பொருத்தப்பட்ட இருவழிப் பாதைகளை கொண்டுள்ள ஏ9பிரதான வீதியை பார்த்து யாரும் ஏமாந்துவிடக் கூடாது. அதுவல்ல கிளிநொச்சி. உண்மையான கிளிநொச்சியை காணவேண்டுமாயின் ஏ9வீதியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் சில கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும் யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் முழுமையான அபிவிருத்திகள் கிளிநொச்சியின் கிராமங்களை சென்றடையவில்லை. கிராம மக்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கித்தவிக்கின்றார்கள். உட்கட்டுமான அபிவிருத்தி போதுமான அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை. 

2009க்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டம் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதற்கு பதிலாக வீக்கம் அடைந்திருக்கிறது. இதுவே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 141486மக்கள் தொகையை கொண்ட மாவட்டத்தில் 15க்கு மேற்பட்ட காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்களும். எட்டு வரையான வங்கிகளும் காணப்படுகின்றன. இவற்றின் செயற்பாடுகளும் ஒரு வகையில் மக்களிடத்தே பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. மிக குறைவான மொத்த தேசிய உற்பத்தியை கொண்டுள்ள மாவட்டத்தில் அதிகளவான கடன்கள் முக்கியமாக நுண் கடன்கள், லீசிங்குகள் என்பன மக்களை நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்றன. 

மாவட்டத்தை பொறுத்தவரை எட்டு பாரிய நீர்ப்பாசன குளங்கள் காணப்படுகின்ற போதும் அதன் நன்மையை ஒரு குறிப்பிட்ட வீத மக்களே பெற்று வருகின்றனர். இந்தக் குளங்களின் பயன்பாட்டு எல்லை ஒரு குறுகிய பரப்புக்குள் மாத்திரமே காணப்படுகிறது. அத்தோடு இந்த மாவட்டத்தின் உற்பத்திகளில் பெரும்பாலனவை மூலப்பொருட்களாக மாவட்டத்தை விட்டு வெளியே செல்கிறது. பின்பு அவை முடிவுப் பொருட்களாக மாவட்டத்திற்குள் வருகிறது. இங்கே சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் போதுமான அளவில் இல்லை. திறந்த பொருளாதார சந்தைக்குள் சுயதொழில் மேற்கொள்கின்றவர்கள், குடிசை மற்றும் நடுத்தர கைதொழில்களை மேற்கொள்கின்றவர்கள் போட்டிப் போட முடியாது திணறுகின்றனர். இதனால் அவர்களில் பலர் அதில் தோல்வியும் அடைகின்றனர். 

மாவட்டத்தில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள், கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் என்பன தொழில் வழங்கும் மையங்களாக காணப்படுகின்றன.

அதில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிரந்தரமற்றவை. இதனை தவிர குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் சில நூறு பேருக்காவது ஒரே இடத்தில் தொழில் வழங்கும் அளவில் தொழில் மையங்கள் உருவாக்கப்படவில்லை. மாவட்டத்தை பொறுத்தவரை அரசின் வறுமை ஒழிப்புத் திட்டத்தில் சமூர்த்தி ஒன்றே கணிசமான பங்களிப்பைச் செய்தாலும் அது வறுமையை ஒழிப்பதில் வெற்றி பெறவில்லை. 

எனவே, கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவுகின்ற மிக மோசமான வறுமையை நீக்குவதற்கு விசேட திட்டங்கள் வகுப்படல் வேண்டும் மாவட்டத்தை பொறுத்தவரை நிலம். நீர், மனித வலு என்பன காணப்படுகின்றன. எனவே இவற்றை மூல வளங்களாக கொண்டு தொழிற்துறைகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலமே வறுமையை போக்க முடியும்.

தமிழ்ச்செல்வன்

 

Comments