அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும்

தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவது மீள நடக்காமல் இருப்பதற்கு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டுமென்றும் வெறும் பௌதிக அபிவிருத்தியினால்அரசியல் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்த முடியாது எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டவைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் மீள அமைப்பது யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் முக்கிய செய்தியை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்  

இவ்வாறான சம்பவங்கள் மீள நடக்காது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு என்றும் அவர் தெரிவித்ததார்.1985 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட யாழ்.மாநகர சபைக்கான புதிய கட்டிட நிர்மானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்த இந் நிகழ்வில் உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். யாழ்.மாநகர சபை எவ்வாறு அழிக்கப்பட்டதென்பது வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒரு விடயம். யாழ். நூலகம் ஒரு இரவில் தீக்கிரையானது. கடந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது பிரதமர் அமைச்சரவையில் இருந்த சமயத்திலேயே அவருடைய சகாக்களினால் அது தீக்கிரையாக்கப்பட்டது.  

யாழ். மாநகர சபையானது இராணுவத்தினரால் அதற்கு அண்மையில் உள்ள கோட்டையில் இருந்து செல் அடித்து தகர்க்கப்பட்டது. இவ்வாறு அழிக்கப்பட்ட இரண்டு கட்டிடங்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து மீளமைப்பது வடபகுதி தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கு தெரிவிக்கும் முக்கிய செய்தியாகும்.

யாழ்ப்பாணம் குறூப், பருத்தித்துறை விசேட நிருபர்கள்   

Comments