கோட்டா ஜனாதிபதியானால் எஞ்சியுள்ள ஜனநாயகமும் இல்லாதொழிக்கப்படும் | தினகரன் வாரமஞ்சரி

கோட்டா ஜனாதிபதியானால் எஞ்சியுள்ள ஜனநாயகமும் இல்லாதொழிக்கப்படும்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் நாட்டில் எஞ்சியுள்ள ஜனநாயகமும் இல்லாதொழிக்கப்படும் என சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். 

கோட்டாபயவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நாட்டில் இராணுவ மயமான சர்வாதிகார ஆட்சியொன்றுக்கு மக்கள் வழிவகுத்து விடக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் வன்முறைகள் படுகொலைகளுக்கு வழிவகுத்து முழுநாட்டையும் இராணுவ மயமாக்கியவர்களே மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மக்களிடம் ஆணை கோரி வருகின்றனர் என தெரிவித்த சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகள், மக்களை ஏமாற்றி தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக செயற்படுபவர்களை மீண்டும் வெற்றி பெற வைத்தால் நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஓரளவு ஜனநாயகமும் ஒழிக்கப்படுவது உறுதி என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

லசந்த விக்கிரமதுங்க, தாஜுடீன் போன்றோரை படுகொலை செய்தவர்களே தற்போது தேசிய பாதுகாப்பு, நல்லிணக்கம் பற்றி பேசுகின்றனர்.

நிறைவேற்று ஜனாதிபதி பதவியை கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் தமது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு நாட்டை இராணுவ  மயமாக்குவதே அவர்களின் திட்டம். அதற்காகவே ஏமாற்றி மக்களிடம் ஆட்சி அதிகாரத்தை பெற முனைகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ராஜகிரியவிலுள்ள அதன் தலைமையகத்தில் 'ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மக்களின் நிகழ்ச்சி நிரல்' என்ற தொனிப்பொருளில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.  

அரசியல் விமர்சகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரத்ன, காமினி வெயங்கொட, கே.  டபிள்யூ.  ஜனரஞ்சன, பிரியதர்ஷினி ஆரியரத்ன, சரத் விஜேசூரிய ஆகிய பிரதிநிதிகள் இக் கலந்துரையாடலில் பங்கேற்றதுடன் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தனர். 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு மாதுலுவாவே சோபித தேரரின் அமைப்பு முன்னின்று செயற்பட்டது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் ஜனாதிபதியாகிய பின்னர் ஆரம்பத்தில் தாம் ஏற்றுக் கொண்ட அடிப்படை விடயங்களைக் கூட புறந்தள்ளி விட்டார். 

இதில் முக்கியமாக அவரது வெற்றிக்கு வழி வகுத்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கூட அவர் நிராகரித்து விட்டார் என்பதே உண்மை. 2015ஆம் ஆண்டு வெற்றிக்கு பெரும்பாலான கட்சிகள், அமைப்புக்கள், கலைஞர்கள், நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.  

ஒரு பொதுகொள்கைக்காகவே அந்த ஒருமைப்பாடு இடம்பெற்றது. எனினும் அந்த கொள்கை பின்னர் பிளவுபட்டு விட்டது. 2015தேர்தலை அடிப்படையாகக் கொண்ட பொது கொள்கைகள் ஓரளவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.  நீதிமன்ற சுயாதீனம், தகவல் அறியும் சட்ட மூலம், ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments