சஜித்தே ஐ.தே.க வேட்பாளர் | தினகரன் வாரமஞ்சரி

சஜித்தே ஐ.தே.க வேட்பாளர்

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் மங்கள

பெரும்பான்மையானோரின் கருத்துக்கு மதிப்பளிப்பவர் பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க எனவும் கட்சிக்குள் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் மங்கள சமரவீர யாழ்ப்பாணத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஐக்கிய  தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானது என்பதுடன் எதிரணியினரால் சோடிக்கப்பட்ட ஒரு செய்தியெனவும் அமைச்சர் மங்கள தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டத்திலோ அல்லது  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ இவ்வாறான முடிவை இதுவரை எடுக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். யாழ். நகரில் நேற்று என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா  கண்காட்சியை பார்வையிட வருகை தந்த அமைச்சரிடம், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதாக வெளிவந்துள்ள செய்தி தொடர்பாக வினவிய போதே, அவர் இவ்வாறு  குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும்,  நாட்டு மக்களிடையேயும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதி வேட்பாளராக  வரவேண்டும் என்ற கருத்து நிலவுகின்றது.

இந்நிலையில் பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க எப்போதும் கட்சியின் பெரும்பான்மை விருப்பத்தையும் மக்களின்  விருப்பத்தையும் மதிக்கும் ஒரு தலைவர்.

எனவே பிரதமர் ரணில்  விக்கிரமசிங்கவின் முன்மொழிவுடனும் சபாநாயகர் கரு ஜயசூரியவின்  ஆசீர்வாதத்துடனும் கட்சியின் பெரும்பான்மை விருப்பத்துடனும் சஜித்  பிரேமதாஸவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்பதை திட்டவட்டமாக  தெரிவிக்கிறேன்.

பதுளை, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதிகளில் சஜித்  பிரேமதாஸ ஆதரவு கூட்டத்தில் திரண்ட மக்கள் பெருவெள்ளத்தின் ஊடாக சஜித்  பிரேமதாஸவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்பதை மக்கள் இந்நாட்டுக்கு  உணர்த்திவிட்டனர்.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால்  கட்சியில் பிளவு ஏற்பட்டு விடாதா? என வினவிய போது, ஐக்கிய தேசிய கட்சிக்குள்  பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. 95 வீதமானவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு  ஆதரவு வழங்கும் போது 5 வீதமானவர்களை கொண்டு கட்சிக்குள் பிளவு ஏற்படும்  என்ற ஒரு உணர்வை சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் ஒரு கட்டமாகவே  ஜனாதிபதி வேட்பாளராக ரணில் போட்டியிடப் போவதாக பிரதமரே அறிவித்துள்ளார் என்ற போலியான செய்தியை உருவாக்கியுள்ளார்கள். எதிரணியின் கைக்கூலியாக செயற்படுபவர்களின் செயலே இதுவாகும் என்றார்.

யாழ்ப்பாணத்திலிருந்து அசோக்குமார்

Comments