சந்திரையான்-2 தோல்வியில் முடிந்த பயணம் | தினகரன் வாரமஞ்சரி

சந்திரையான்-2 தோல்வியில் முடிந்த பயணம்

கண் கலங்கினார் சிவன்; அரவணைத்தார் மோடி

இந்தியா நிலவுக்கு அனு ப்பிய சந்திரையான்-2விண்கலத்தின் சந்திரகலம் சந்திரத் தரையை 2.1கிலோ மீற்றர் தூரத்தை அண்மித்த நிலையில் அதனுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் ஏமாற்றத்தையும் இந்திய விண்வெளி வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

இந்தியாவின் வரலாற்றுச் சாதனை நிகழ்வாகக் கருதப்பட்ட `சந்திரையான்-2'  நிலவின் தென் துருவத்தை நெருங்கும் வேளையில் இஸ்ரோ கட்டுப்பாட்டு  மையத்துக்கும் லேண்டருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனினும் பிரதமர்  மோடி உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பைப்  பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சந்திரயான் 2நிகழ்வுகளை நேரடியாகப் பார்வையிட சென்ற  பிரதமர்  மோடி, நேற்று காலை 8மணிக்கு சந்திரயான் 2திட்டம் தொடர்பாக நாட்டு மக்கள்  மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார்.

இந்தியாவுக்காகத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். கடந்த சில மணி நேரங்களாக முழு  தேசமும் மிகுந்த கவலையில் உள்ளது. நமது விஞ்ஞானிகள் அனைவரும் ஒற்றுமையுடன்  நின்று விண்வெளி திட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளதை நினைத்து நான்  உட்பட ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறோம். இன்று சந்திரயான் 2நிலவில்  கால்பதிக்கவில்லை. அதனால் இது நமது இறுதி கிடையாது. இதனால் நம் நிலவைத்  தொடும் தீர்மானம் இன்னும் வலுப்பெற்றுள்ளது. இது நமக்கான பின்னடைவு இல்லை  தொடக்கம் என்றார் மோடி.

அவரது  உரையைத் தொடர்ந்து அனைத்து விஞ்ஞானிகளுடனும் கை குலுக்கி ஆறுதல் தெரிவித்தார் பிரதமர். இறுதியாக இஸ்ரோ தலைவர் சிவனை சந்தித்து கைகுலுக்கினார் மோடி, அப்போது பிரதமரை பார்த்ததும் கண்ணீர்விட்டு அழுதார்  சிவன். பின்னர் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. இந்த சம்பவம் மொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளையும் கலங்கச் செய்தது.

சந்திரையான்_2கடந்த ஜுலை 22ம் திகதி சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. அது மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாம் பிரிவான ஆர்பிட்டர் சந்திர சுற்றுவட்டம் பாதையில் சுற்றிவந்து கொண்டிருக்கும். அதில் இருந்து பிரியும் லேண்டர் கலம் மெதுவாக சந்திரனின் தென்துருவப் பகுதியில் இறங்கும். இறங்கிய பின்னர் அதன் கதவு திறந்துகொள்ள ரோவர் என அழைக்கப்படும் சந்திரவாகனம் வெளிப்பட்டு தரையில் நகர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். இதுவே சந்திரையான் _2திட்டமாகும். இதன் அடுத்தடுத்த நிலைகளில் முன்னேற்றம் கண்டு இறுதியில் சந்திரனில் மனிதர்களை இறக்கி மீண்டும் அழைத்து வருவதை இந்தியா மேற்கொள்ளவிருந்தது.  

ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று பகுதிகளையும் ஏந்தித்தான் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3ரொக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. சந்திரையான்-2,  ஆகஸ்ட் 14-ல் பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து தப்பித்து நிலவுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரமான 3,84,000கி.மீ தூரத்தை 5நாள்களில் கடந்து நிலவின் வட்டப்பாதைக்கு ஆகஸ்ட் 20-ல் வந்தடைந்தது. பின்னர் முறையே ஆகஸ்ட் 28, 30மற்றும் செப். 1தேதிகளில் நிலவையொட்டிய சுற்றுப்பாதையின் திசை நான்கு முறை மாற்றப்பட்டது. திட்டமிட்டபடி செப்.2ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் (விக்ரம் சாராபாயின் நினைவாக) எனப் பெயரிடப்பட்டிருக்கும் லேண்டர் பகுதி பிரிந்து நிலவை நோக்கி நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்தது. 

நேற்று முன்தினம் தரையிறங்குவதற்கான இறுதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான கட்டளைகள் இஸ்ரோ கலக் கட்டுப்பாட்டாளர்களினால் விடுக்கப்பட்டன.  

லேண்டர் மிதந்துகொண்டே தரையிறங்குவதற்கு உகந்த இடமா என நோட்டமிடுகிறது. சரியென்றால் திட்டம் 1இன்படி 65நொடிகளில் 10மீற்றர் இடைவெளி வரை சென்று தரையிறங்கும். இல்லையென்றால் திட்டம் 2இன்படி 40நொடிகளில் 60மீ. 25நொடிகளில் அடுத்த 10மீற்றர் என இறுதியாக 13நொடிகளில் சரியான இடத்தில் தரையிறங்கும்.  

ஆனால் தரையிறங்குவதற்கு 2.1உயரம் இருக்கையில் அதனுடனான தொடர்பு திடீரென துண்டுக்கப்பட்டது. விஞ்ஞானிகள் தொடர்புகளை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சந்திரையான் 2விண்கலத்தின் செயல்பாடு 95சதவிகிதம் வெற்றிபெற்றுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விக்ரம் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டாலும் ஆர்பிட்டரை நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது வெறும் 5சதவிகித தோல்வியே. நிலவில் கால்பதிக்கும் திட்டத்தில் 95சதவிகிதம் வெற்றிபெற்று விட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சந்திரையான் 2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் நிலவை அடுத்த ஒரு வருடத்துக்குச் சுற்றிவரும். இந்த ஆர்பிட்டர் நிலவை தொடர்ந்து ஓராண்டுக்கு படம்பிடித்து அனுப்பும். இதனைக்கொண்டு தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரையும் ஆர்பிட்டரால் படம் பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் லேண்டரின் நிலைபற்றி உறுதியான தகவல்கள் கிடைக்கும் என பிடியை நிறுவனத்துக்கு இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

Comments