முன்வைத்த காலை ஒரு மில்லி மீற்றர் கூட பின்வைக்க மாட்டேன் | தினகரன் வாரமஞ்சரி

முன்வைத்த காலை ஒரு மில்லி மீற்றர் கூட பின்வைக்க மாட்டேன்

சூழ்ச்சிகளால் அரசியல் செய்பவன் நானல்ல. பின் கதவால் அதிகாரத்தை கைப்பற்ற மாட்டேன். நாட்டின் சகல மக்களதும் ஆசிர்வாதத்துடனே அந்த உயரிய இடத்திற்குச் செல்வேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.  

பிரதமராகும் சந்தர்ப்பத்தை கட்சிக்காகவும் எமது தலைவருக்காகவும் பலமுறை நிராகரித்திருந்தேன். முன்வைத்த காலை ஒரு அடியல்ல ஒரு மில்லி மீற்றர் கூட பின்வாங்க மாட்டேன் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐ.தே.கவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களது மாநாடு நேற்று(07)கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்கள் நாட்டின் அடிமட்ட மக்களுடன் நேரடியாக பணி புரிபவர்கள். நவம்பர், டிசம்பர் மாதம் நான் பலமடைய உங்களது ஆதரவு மிகவும் முக்கியம். புதிய இலங்கையை கட்டியெழுப்பவும் அனைத்திலும் ‘ஸ்ரீலங்கா பெஸ்ட்’ என்பதை அடையவும் அனைவரும் என்னை பலப்படுத்த வேண்டும்.

எதிர்கால நோக்கு, புத்தாக்கச் சிந்தனையுடன் எமது வேலைத்திட்டங்கள் அமைய வேண்டும். அந்த வேலைத்திட்டம் மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

நாட்டு மக்கள் மிகவும் அர்ப்பணிப்புடன்தான் தலைவர்களையும் அரசாங்கமொன்றையும் உருவாக்குகின்றனர். ஆகவே, நாம் இரவு பகல் பாராது மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை பாதுகாத்து நாட்டை வளமானதாக மாற்ற வேண்டும். அரசியலில் மக்கள் நம்பிக்கையிழந்தவர்களாக உள்ளனர். அல்லது அரசியலில் அதிருப்தியில் உள்ளனர்.

நாம் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு நடைமுறைக்கு ஏற்ற தீர்வை வழங்க வேண்டும். சாதாரண மக்களின் யுகமொன்றை உருவாக்க வேண்டும். மிகவும் வறுமையான, கிராம, நகர, சிறிய நடுத்த, மத்தியதர மக்கள் என அனைத்து மக்களும் பொருளாதாரத்தின் பிரதிபலனை அடையும் வேலைத்திட்டமொன்று அவசியம். நாட்டை பாதுகாக்கும் சிறந்த முறைதான் சமூக பொருளாதாரத்தை பலப்படுத்துவது. அதற்கான புத்தாக்க வேலைத்திட்டம் என்னிடம் உள்ளது. நாட்டின் பொருளாதார பிரதிபலனை 20 சதவீதமான செல்வந்த வர்க்கமே அனுபவிக்கிறது. தனிநபர் வருமானம் 4000  டொலர்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆனால், கிராமத்தில் உள்ள சாதாரண ஒரு மனிதர் 4000 டொலர் வருமானத்தை பெறுகிறாரா?.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments