இலங்கையின் வெப்பநிலை அதிகரிப்பு நுகர்வு செலவீனத்தை மேலும் உயர்த்தும் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் வெப்பநிலை அதிகரிப்பு நுகர்வு செலவீனத்தை மேலும் உயர்த்தும்

உலகளாவிய ரீதியில் இடம் பெற்று வரும் காலநிலை மாற்றங்களால் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை ஒரு முக்கிய கேந்திரப் புள்ளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரே நாளில் நாம் பார்க்கும் தொலைக்காட்சி செய்திகளில் கிழக்கில் கடும் வரட்சியால் கால்நடைகளும் சாவு, வடக்கில் குடிநீருக்கு தட்டுப்பாடு, மத்திய மலை நாட்டில் அடைமழையால் வெள்ளப்பெருக்கு மண்சரிவு, தென்மேற்குப் பிராந்தியங்களில் கடுங்காற்று, சில பிரதேசங்களில் கடும் வெப்பம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

மிகச் சிறிய தீவாகிய இலங்கைக்குள் ஒரே நாளில் இவ்வளவு எதிரும் புதிருமான வானிலை நிகழ்வுகள் ஏற்படுவது எவ்வாறு? முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு இவ்வாறு தீவிரமான வானிலை மாற்றங்களாக அடிக்கடி ஏற்படுவது ஏன் போன்ற வினாக்கள் நம்முன்னே விரிகின்றன.  

மனித நடத்தைகள் காரணமாக இயற்கைச் சூழலுக்கு ஏற்படுத்தப்பட்ட தீங்குகளின் விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறோம் என்பதே இதற்கான விடையாகும்.  உலகளாவிய ரீதியில் இயற்கைக்கு சமநிலையில் மனிதனால் ஏற்படுத்தியவர்களை மட்டுமல்ல – எல்லா மக்களையுமே ஒருசேரப் பாதிக்கும் என்பது வெளிப்படை. 

அண்மையில் உலக வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி 2020ஆம் ஆண்டில் சுமார் நாற்பது இலட்சம் இலங்கையர்கள் தீவிரமான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மக்களின்  ஜீவனோபாயம், வாழிடம், நாளாந்த நடவடிக்கை, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட சகல அம்சங்களையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும். எதிர்காலத்தில் ஏற்படவுள்ள இப்பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய தயார் நிலையில் இருக்கிறோமா என்றால் இல்லை என்றே கூறவேண்டியிருக்கிறது. 

இலங்கையின் சராசரி வெப்பநிலை கடந்த சில தசாப்தங்களில் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கிறது. சராசரியாக 2-5 பாகை செல்சியஸ் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொழும்புப் பிரதேசத்தில் வெப்பநிலை அதிகரிப்பின் தன்மையினை உணர முடிகிறது. இரவு நேர வெப்பநிலை அதிகரிப்பு மின்சாரப் பாவனையில் கணிசமான அதிகரிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது. அத்துடன் சராசரி மனிதனின் செயற்பாடு திறனிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தி உடல் உள ரீதியில் நீண்டகால எதிர்க்கணிய விளைவுகளை உருவாக்கியுள்ளது.  

காலநிலை மாற்றங்களால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் தன்மையை விவசாயத்துறை கொண்டுள்ளது. இலங்கைப் பொருளாதாரத்தில் விவசாயத்துறையின் பங்கினை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. தேசியப் பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்பு சுமார் 7% ஆக இருக்கின்ற போதிலும் நாட்டின் மொத்த தொழிற்படையில் சுமார் 30% சதவீதத்தினர் விவசாயத் துறையிலேயே தங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி நாட்டின் கிராமியத்துறை சனத்தொகையில் சுமார் 70% சதவீதத்தினர். விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.  

மேலும் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 43 சதவீதம் விவசாய நடவடிக்கைகளிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் மொத்த உணவுத் தேவையில் 80 வீதத்திற்கும் மேல் விவசாயத்துறையில் இருந்தே பெறப்படுகிறது. ஏற்றுமதிகளைப் பொறுத்தமட்டிலும் விவசாய ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளன. 

காலநிலை பாதிப்புகள் விவசாயத்துறையை கடுமையாகத் தாக்கும்போது நாட்டின் நாடி, நரம்புகளில் அதன் பாதிப்புக்கள் தெறித்துத் துடிக்கின்றன. 

காலநிலை மாற்றங்களால் மழைவீழ்ச்சிப் போக்கில் ஏற்படும் சீரற்ற தன்மை, மழைப் பொழிவும் வரட்சியும் மாறி மாறி ஏற்படல் ஆகியன விவசாயத்துறையின் உற்பத்தித் திறனைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் விவசாயத்துறையைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாக மாறி உணவு, குடிநீருக்காக போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.  தீவிரமான காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் அதிகளவு நிதியை செலவிட நேரிடும் இயற்கைப் பேரிடர்களின் போது உடனடி மீட்பு நடவடிக்கைகளுக்காக பெருமளவு நிதி தேவைப்படும். அதேவேளை வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப நீண்ட கால ரீதியில் அதிகளவு நிதிவளங்கள் தேவைப்படும். 

பெருந்தோட்ட விவசாயத்திலும் இயற்கையின் சீற்றம் தொடர்ச்சியாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மண்சரிவுகள் மழைநீர் வீடுகளுக்குள் உட்புகுதல், காற்று மற்றும் காட்டுத் தீ போன்ற நிகழ்வுகள் பெருந்தோட்டப் பிரதேசங்களை அடிக்கடி பாதித்து வருகிறது. தேயிலேயே இற்றை வரையில் இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்து வருகிறது. காலநிலை மாற்றங்கள் இலங்கையின் தேயிலைச் செய்கையிலும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்திவுள்ளது. அத்துடன் வரட்சி, உறைபனி மழைபோன்ற நிகழ்வுகளால் மலை நாட்டின் மரக்கறிப் பயிர்ச் செய்கையும் கணிசமான அளவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.  

காலநிலை மாற்றங்களால் அடிக்கடி அழுத்தங்களை சந்திக்கும் மற்றொரு துறையாக கடல்வள மற்றும் மீன்பிடித்துறையைக் கூறலாம்.  

புயல் காற்று அடிக்கடி உருவாகி மீன்பிடித்தொழிலை இடருக்குள்ளாக்கி வருவதுடன் காற்றின் வேகம் அடிக்கடி வேறுபடுவதன் காரணமாக மீனவர்களையும் கடல்சார் ஊழியர்களையும் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. மீன்பிடியை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. 

உலக வெப்பமயமாதல் நிகழ்வுகளின் காரணமாக உலகின் துருவப் பகுதிகளில் உறைந்துள்ள உறை பனி கணிசமாக உருகி வருகிறது. அத்துடன் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பனிபடர்ந்து காணப்பட்ட பல மலை முகடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பனி உருகி வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்ட நிலையில்  வெறும் மலை முகடுகளாகவும் ஆறுகள் வற்றிப்போன நிலையிலும் உள்ளன. அவை அத்தனையும் சேர்ந்து கடல் நீர்மட்டம் உயர்வுக்கு இட்டுச்சென்றுள்ளன.

அண்மையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு புவியில் கருத்தரங்கத்தில்  வாசிக்கப்பட்ட, ஒரு ஆய்வுக் கட்டுரையில், புவி வெப்ப மயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்வதனால் அடுத்துவரும் மூன்று அல்லது நான்கு தசாப்தங்களில் யாழ்ப்பாணக் குடா நாட்டின் பல பிரதேசங்கள் கடல் நீரில் மூழ்கி விடும் என்னும் தகவல் வெளிப்படுத்தப்பட்டது. எனவே இதனையும் ஒரு சிவப்பு எச்சரிக்கையாகவே நாம் பார்க்க வேண்டும். 

இலங்கை ஒரு உயர்மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்டது. அத்துடன் துரிதமாக நகரமயமாக்கலுக்கு உள்ளாகி வரும் போக்கும் அவதானிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு பாவனையிலுள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையிலும் கணிசமானளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்றன சூழலுக்கு உகந்த தராதரங்களை உடையனவாக இல்லை. அத்தோடு பயன்படுத்தப்படும் குளிர் பதன இயந்திரங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் மெகா கட்டுமானத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும்போது இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இவற்றால் வெளிவிடப்படும் காபன் காலடித்தடங்கள் இலங்கையின் சராசரி வெப்பநிலை மேலும் அதிகரிக்க ஏதுவாகலாம். 

இலங்கையின் சராசரி வெப்பநிலை ஏற்கனவே உத்தமமட்ட வெப்பநிலையை விட கூடுதலாகச் சென்றுவிட்டது. எனவே இதுமேலும் அதிகரிக்கும்போது அது நுகர்வுச் செலவீட்டை மேலும் அதிகரிக்கும். சுருக்கமாகச் சொன்னால் மின் விசிறியோ, குளிர் பதன இயந்திரமோ இன்றி வாழ முடியாத சூழல் தவிர்க்க முடியாதவாறு உருவாகும். இந்த நிகழ்வுகளால் இலங்கை வாழ் சராசரி குடிமகனின் வாழ்க்கைத் தரம் 7% இனால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

நீண்டகால அடிப்படையில் வெப்பநிலை உயர்வினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியோ, அதனால் தொழிலாளர் உற்பத்தித்திறன் வாழ்க்கைதரம் பொருளாதார செயலாற்றும் அரசாங்க செலவீடுகளில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் பற்றியோ போதிய அக்கறை செலுத்தப்படவில்லை. அதற்கான தயார் நிலையிலும் இலங்கை இல்லை. திரி பற்றவைக்கப்பட்ட ஒரு வெடிகுண்டின் மீது இலங்கை அமர்ந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.   

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

Comments