எனக்கு விருது வழங்க நீ யார்? | தினகரன் வாரமஞ்சரி

எனக்கு விருது வழங்க நீ யார்?

தமிழ் பாரம்பரிய கலைகளுக்கான கலைஞர் விருது வழங்கும் விழா மிக அமர்க்களமாக நடந்துமுடிந்திருக்கிறது. 

இனி ஒவ்வொரு வருடமும் இந்த விழா தொடரும். இதனை ஆரம்பித்து வைத்த அமைச்சர் மனோ கணேசனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உண்மையில், எவரும் சாதித்திராத ஓர் அரிய சாதனையை அமைச்சர் நிலைநாட்டியிருக்கிறார். 

இதனால், கலைஞர்கள் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள். இத்தனை ஆண்டு காலம் தம் உள்ளத்தில் பொதிந்திருந்த ஆதங்கம் நிறைவேறியிருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். 

கிடைத்திருந்த ஐயாயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களிலிருந்து சுமார் 200பேரைத் தெரிவுசெய்து கௌரவித்திருக்கிறார்கள். விருது வழங்குவதைவிட, விருதுக்குரியவர்களைத் தெரிவு செய்வதுதான் மிக மிகக் கஷ்டமானது என்பதை விழாவை நடத்துபவர்களுக்குத்தான் தெரியும். எவ்வாறிருப்பினும், ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலும், பொருத்தமானவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று விருது பெறாதவர்களும் வழிமொழிகிறார்கள். ஆங்காங்கே சில பொச்சரிப்புகள் எழுவதைத் தவிர்க்க முடியாது! என்றாலும், அவ்வகையான பொல்லாங்குகளை வலிந்து ஏற்படுத்திவிடும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும். 

நடந்து முடிந்த விருது விழாவிலும் அப்படியொரு சம்பவம் நடந்ததுள்ளமை சிறு கீறலை ஏற்படுத்திவிட்டுள்ளது. இருந்தாலும் இத்துணை பெரிய விழாவில், அஃது ஒரு பொருட்டில்லை என்று பெரியவர்கள் எண்ணக்கூடும். இருந்தாலும், இந்தச் சிறு சம்பவமும் மீண்டு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இங்கே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. 

விழாவில், அமைச்சர் அவர்களே விருதுகளை வழங்கி கௌரவித்தார். சான்றிதழ்களை வழங்குவதற்காகச் சில கலைஞர்களை அழைத்திருந்தார்கள். அதில் சில முன்னணி நடிக, நடிகைகளும் அடங்குவர். அவர்களைக்ெகாண்டு சான்றிதழ் வழங்குவதற்குத் தீர்மானித்ததன் மூலம், அவர்களுக்கும் ஒரு கௌரவம் வழங்கியதாகவும் இருக்கும் என்று நினைத்தது தவறில்லை. ஆனால், நடிகையிடம் தாம் சான்றிதழ் பெறப்போவதில்லை என்று அடம்பிடித்த ஒரு கலைஞர், அந்த நடிகையை மேடையில் அவமானப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அவர் அந்த நடிகையைவிடச் சாதித்தவர் என்று சொல்லவும் முடியாது. வயதில் சிறியவராக இருந்தாலும், மிகக் குறுகிய காலத்தில் அந்த நடிகை தனக்ெகன ஓர் இடத்தைத் தக்கவைத்துக்ெகாண்டுள்ளார் என்பது உண்மை. 

நமது நாட்டில், பிரபல்யத்தைப் பெறுபவர்கள்தான் கலைஞர்கள் என்ற ஒரு தப்பான எண்ணத்தால், அமைதியாகச் சாதிப்பவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை. 

"நீ யார் எனக்கு விருது வழங்க? உன்னிடம் நான் வாங்கமாட்டேன்" என்று முகத்துக்கு நேரே அவரைத் திட்டித்தீர்த்தார். அதேநேரம், அவரைவிட சாதனை படைத்தவர்கள், அந்த நடிகையிடம் சான்றிதழைப் பெற்றுக் ெகாண்டு மகிழ்ச்சியுடன் சென்றதை காணக்கூடியதாகவிருந்தது. மேடைக்கு அழைத்து அவமானப்படுத்தப்பட்டபோது அந்த நடிகை கூனிக்குறுகிக் கண்ணீர் விட்டதை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இனிவரும் காலங்களில் எந்தவொரு தமிழ் விழாவிலும் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அந்த நடிகை திடசங்கற்பம் பூண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் ஆற அமர தெரியவந்துள்ளது. யார் என்றாலும் இப்படியொரு மனத்தாக்கம் ஏற்படவேசெய்யும். எனவே, இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள் விழாவிற்கு வந்திருந்தவர்கள். 

உண்மையில் விருதுக்குப் பொருத்தமானவர்கள் யார் என்பதை தெளிந்துகொள்வதற்குக் கீழுள்ள கதையையும் படித்துப் பாருங்கள். 

நாரத முனிவர் அவ்வையாரை நாடி வருகிறாராம் “அவ்வையே! சிறந்த அறிஞர் என்னும் விருது உங்களுக்கு வழங்க எண்ணுகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்” என்றாராம்.  

அவ்வையார் தயங்காமல் உடனே சொல்கிறார். “நானா சிறந்த அறிவாளி! எங்களைப் போன்ற புலவர்களுக்கெல்லாம் தலைவர் அகத்தியர் இருக்கிறார். அவருக்குத் தான் இந்த விருது பொருந்தும்”. “நாரதர் அகத்தியரைப் போய் பார்த்து அவ்வை கூறியதைச் சொல்கிறார். அகத்தியர் சிரித்துவிட்டு அவ்வையாரை விடவா நான் அறிவாளி?” என்று கூறியவர், சரி! அவர்கள் ஏற்கவில்லை யென்றால் இந்திரனுக்கு அந்த விருதைக் கொடுத்து விடுங்கள். இப்போதுதான் அவர் ஐந்திரம் என்றொரு நூல் எழுதியுள்ளார். அவருக்கு இந்த விருது மிகவும் பொருந்தும் என்றாராம்.  

நாரதர் இந்திரனிடம் போய் விருது வாங்கிக்கொள்ளுமாறு வேண்டுகிறார். இந்திரன் விருது வாங்கிக்கொள்ள மறுத்துவிடுகிறார். கலைமகளின் அருள் இல்லாவிட்டால் இந்த நூலை என்னால் எழுதியிருக்கமுடியுமா? என்று கேட்டு விருதைக் கலைமகளிடம் கொடுக்கச் சொல்கிறார். ஆனால், கலைமகளும் விருது பெற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்.  

‘என்னைப் படைத்து என்னையாளும் தலைவன் பிரம்மன் தான் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்கிறார். பிரம்மன் திருமாலையும், திருமால் லட்சுமியையும், லட்சுமி ஈஸ்வரியையும் பொருத்தமானவர்கள் எனக் கைகாட்டிவிடுகின்றனர். ஈஸ்வரி எல்லாம் வல்ல பரமசிவனைக் கைகாட்டக் கடைசியில் பரமசிவன் சொல்கிறாராம். “எனக்குப் பிரணவ மந்திரம் கற்றுக்கொடுத்த முருகனுக்கே இந்த விருது பொருந்தும்“ என்கிறார்.  

கடைசியில் முருகனும் விருது வாங்கிக்கொள்ள மறுத்துவிடுகிறார். முருகன் என்ன சொன்னார் தெரியுமா? “எனக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கும் அவ்வையாரே இந்த விருதுக்குத் தகுதியானவர்” எங்கெல்லாமோ சுற்றிய விருது தொடக்கத்தில் அடக்கத்துடன் விருது பெற மறுத்த அவ்வையாருக்கே பொருத்தமாக அமைந்தது.  

தன்னை விட அறிவாளி இவ்வுலகில் இருக்கிறார் என்று தன்னடக்கம் கொள்பவர்களே தலைசிறந்த அறிவாளிகள் என்னும் கருத்தை இந்தக் கதை அருமையாக உணர்த்துகிறது. எல்லோரும் இதனை உணர்ந்துகொண்டால், விருதுகளுக்காக வீண் சண்டைகள் வராமல் போய்விடும் என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.  

Comments