முற்பகல் செய்யின்... | தினகரன் வாரமஞ்சரி

முற்பகல் செய்யின்...

“தோன்றில் புகழொடு தோன்றுக; அஃதிலால்  

தோற்றலில் தோன்றாமை நன்று”

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு இசைவான இலட்சியக் கதாநாயகனாகப் பிறந்தவர்தான் சமூகஜோதி சனூஸ் ஹாஜியார்.

 இயற்கையிலேயே இனிய சுபாவம் கொண்ட இவர், பிறரை நேசிப்பதில் பெயர் பெற்றவர். “பிறர் பிள்ளை தலைதடவினால்... தன் பிள்ளை தானே வளரும்” என்ற தாரக மந்திரத்திற்கு புத்துயிரூட்ட வந்த புத்திமான்.  

இற்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக பிறருக்கு ஒளி ஈந்து தன்னை அர்ப்பணித்து உருகும் மெழுகு திரிபோல, சமூகத்திற்காக தன்னலம் கருதாது பாடுபடும் ஹாஜியாரை நாடி, சமூகஜோதி, ரத்னதீபம், தேசாபிமானி சாமஸ்ரீ போன்ற இன்னோரன்ன பட்டங்களோடு பொன்னாடை, பூமாலைகளாக கழுத்தில் நிறைந்து புகழாரம் சூடிக்கொண்டன.

 அரசியல் தொடக்கம், ஆன்மீக, கலை இலக்கிய கலாசார நன்நோக்கு மன்றங்களில் எல்லாம், ஆலோசகராக, நிர்வாக உறுப்பினராக நிறைவான பணி ஆற்றிவரும் இவரின் அயராத பணிகண்டு மனைவி ஆயிஷாவும் சில வேளைகளில் ஆவேசப்படுவதும் உண்டு.

“என்னங்க...? இப்புடியே... சமூக சேவ.... சமூக சேவெண்டு சதாவும் அலைஞ்சிட்டுத் திரிஞ்சா... நமக்குட்ட ரெண்டு பொம்புளப்புள்ள, ஒரு ஆம்புள... வயசாயிடிச்சி வருகுதுகள். அதுகளுக்கு, வீடு கட்டணும், வளவு வாங்கணும்... இதுகளுக்கெல்லாம் எங்க போறது? இப்புடி சின்னப்புள்ள மாதிரி என்று சினந்தபோது; கோபம் என்றால் என்னவென்றே கொஞ்சம்கூட தெரியாத ஹாஜியார் முகத்தில் கல கலவென்று கொடுப்பு நிறைய சிரிப்பை உதிர்த்தவாறே,

“ஒண்டுக்கும் பயப்புடாதீங்க புள்ள, படைச்சவன் படி அளக்காமலா உட்றுவான். எல்லாம் அவன் பாத்துக்குவான். நம்பிக்கைய மட்டும் தளர உடாதீங்க. விளங்குதா? என்று கூறியவாறே செல்லமாக அவள் கன்னத்தில் ஒரு கிள்ளொன்றுவிட்டதுதான் தாமதம், அவள் மகுடிக்கு ஆடி வாலைச் சுருட்டிக் கொண்ட பெட்டிப்பாம்பு போல அடங்கிப் போவது இருவருக்கும் கடையிலே இடையிடையே நடக்கும் வழமையான சீன்ஸ்தான்.

 அன்று உள்ளூராட்சி தேர்தலுக்காக நாடெங்கும் பீரங்கிப் பிரசாரம் தடபுடலாக நடந்து கொண்டிருந்தவேளை. சனூஸ் ஹாஜியார் மட்டும் ஒதுங்கிக் கொள்வாரா என்ன? சாரத்தை மடிச்சிக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் புழுதி கிளப்பிக் கொண்டிருந்தார். அவரின் சுவாரஸ்யமான ஆன்மீக ரீதியிலான கருத்துக்களை கேட்பதற்கென்றே வாலிபர் தொடக்கம், வயோதிபர் வரை மழை என்ன? புயலடித்தாலும் காத்துக் கொண்டிருப்பர் கால் கடுக்க, வெகு நேரம்வரை...

அவ்வளவு செல்வாக்கும், மரியாதையும் பெற்ற இவர், அன்று தான் சார்ந்த வேட்பாளர் பற்றி விளாசிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்த கல்லொன்று மேடையை நோக்கி பக்கத்தில் விழுந்தது. அதை எப்படியோ லாவகமாக கைப்பற்றிக் கொண்ட ஹாஜியார் ஆத்திரத்தால் ஆவேசப்பட்டு திட்டித் தீர்க்கவில்லை, பெட்டிப்பாம்பாகிப் பின்வாங்கவில்லை, வெட்டிமுழக்கினார். வீராவேசத்தோடு.

 என்னருமை சகோதர, சகோதரிகளே, வாலிப நெஞ்சங்களே இது ஒரு வெற்றுக் கல் அல்ல வெறிபிடித்த ஒருவரின் உணர்ச்சிக்கல், இலட்சியத்திற்காக உயிரையும் துச்சமென மதித்துப் பாடுபட்ட எத்தனையோ தியாகிகளின் மேனிகளில் இருந்து இரத்தம் சிந்தவைத்த இரத்தினக்கல். இதற்காக அவர்கள் பல்லிபோல் பயந்து ஒழிந்திருந்தால், இசுலாம் தழைத்திருக்குமா? ஈமான் நிலைத்திருக்குமா? சத்தியம் புதைந்து அசத்தியம் அரசோச்சியிருந்திருக்குமே. முழு உலகிற்குமே முத்திரையாக அவதரித்த சத்தியத்தூதர் சாந்த நபிக்கு தாயிப் நகரத்தின் கொடுங்கோலர்கள் அன்று எறிந்த அதே கல்லைவிடவா இது? எறியுங்கள் சோதரர்களே நன்றாக எறியுங்கள். அப்பாவிகளுக்கல்ல, எனக்கு எறியுங்கள். ஒன்றும் அறியாத அப்பாவிகளின் இரத்தம் ஓட்டுவது அநியாயமாக அவர்களின் தன் மானத்திற்குப் பங்கம் விளைவிப்பது அத்தனையும் இசுலாத்தில் விலக்கப்பட்ட கொடிய ஹறாம் ஆகும் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் என்ற சீர்திருத்தக் கருத்துக்களை  சிந்தியபோது அவையில் இருந்தோரின் கைதட்டல் ஆரவாரத்தோடு, “நாரேதக்பீர் அல்லாஹு அக்பர்... நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்” என்ற முழக்கம் வான் முட்ட இருந்த அச்சம்பவம், இன்றுவரை அழியா நினைவுச் சுருதியாக என்னுள் ஹாஜியாரை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.  

 இது மட்டுமா அன்று சமூக சேவைக்கென்றே முழுவீச்சாக செயல்படுவதில் முன்னணியில் திகழும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஓராண்டு பூர்த்தி விழாவைக் கொண்டாடிய மகிழ்ச்சிப் பெருவிழாவில் வைத்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்த வளரும் இளமொட்டுகளை வாழ்த்தி வரவேற்கும் அரிய நிகழ்வொன்றின் போது மாணவர்களின் தலைதடவி, தனது ஆனந்தக் கண்ணீரால் அங்கிருந்தோர் அனைவரினதும் கண்களைக் குளமாக்கி, அதில் பேரின்பம் கண்ட சனூஸ் ஹாஜியாரின் சமூகப்பற்றை சாதாரண தூரிகையால் விளக்குவதென்பது கடலுக்கு கரையை தேடும் அரியமுயற்சிதான். இதைவிடவும் விரிந்து விசாலமாகியிருந்தது. இவரின் மனம் சமூகம் என்கின்ற பொது நல ஆழியில்.இதனால் தானோ என்னவோ அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் குர்ஆனை மனனம் செய்யும் ஹாபிஸ்ஆகி, அல்-ஆலிம் பரீட்சையிலும் தேறி வீட்டோடு சங்கமிக்க, ஒரேயொரு செல்வ மகன் அப்துல்லா ஏ. எல். பரீட்சையில் சிறப்புச்  சித்தியடைந்து தொழில் ஒன்றிற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.  

 இதற்கிடையில் சமூக சேவை சமூக சேவை என்று சமூகத்திற்காகவே இரவு பகல் பாராது தன்னை தூய இலட்சியத்திற்காக முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்த சனூஸ் ஹாஜியார், மேடையொன்றில் இன்னொருவருக்கு தன் கரத்தால் பொன்னாடை போர்த்திக் கொண்டிருந்த போது, “பிறெஸ்ஸர்” முற்றி மயக்கம் போட்டு கீழே விழ, கையொன்று காலொன்று செயலிழந்து கட்டிலோடு படுத்த படுக்கையாகக் கிடக்கும் அப்பரிதாபச் செய்தி அலை காற்றோடு காற்றாய் அப்பகுதியையே கலக்க அவரின் வீடு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

 அதற்குள் அங்கு கூடி நின்ற முக்கிய குடும்ப உறுப்பினர் சிலர், தங்களுக்குள் மெல்லக் குசுகுசுத்துக் கொண்டது. ஹாஜியாரின் காதுகளுக்குள்ளும் கொஞ்சம் கசியத் தொடங்கியது. “என்ன மடையன்ராப்பா... இந்தாள்... நல்ல உசாரா இரிக்கேக்க படிச்சிப் படிச்சிச் சென்னம் கேட்டாரா? சமூக சேவைண்டு செல்லிக்கிற்று ராப்பகலா ஓடித்திரிஞ்சி என்னத்தக் கண்டாரு? இப்ப ரெண்டு கொமருகள். ஒரு பொடியன் இந்த வீடு வாசலும் இல்ல. சீதனம் இண்டு அலையிற இந்தக் காலத்துல குமருகள கையேத்துக்க ஆரு வரப்றோன்? இந்த மனிசனும்  ஏலாவாளி. பிள்ளையளை நிலம சே... என்ற பெருமூச்சோடு கத ஓங்கி அடங்குவதற்குள் வெளியில் இருந்து யாரோ சிலர் கதவு தட்டும் சப்தம் கேட்டு மனைவி ஆயிஸா தான் கதவைத் திறந்தாள்... அங்கே....  

 ஊரில் பெரிய பணக்காரப் புள்ளிகளில் முதன்மை ஆளாகப் பேசப்படும் இசுமான் போடியாரும் அவரது மனைவி பிள்ளைகளும் நின்று கொண்டிருந்தார்கள். சலாம் கூறி உள்ளே நுழைந்த அவர்களுக்காக, அன்பான உபசரிப்பு நடந்து கொண்டிருக்கையில்,  இசுமான் போடி வந்த உள்நோக்கம் பற்றி வாய்திறக்கலானார்.  

 தம்பி சனூஸ் எல்லாமே அல்லாட விதிப்படிதான் நடக்கும். சமூகம்... சமூகம் இண்டு ஓடித்திரிஞ்சீங்க, அல்லா சோதிக்க நாடினான்போல... இப்ப கட்டிலோட முடங்கிற்றீங்க இதையுமே பெரிசா யோசிக்காம இரிக்கிறத்தப் பாக்குறான் என்றவர் ஒங்குடகொம்புறப் புள்ளயளுக்கு ஏதும் கலியாணம் பேசிரிக்கியளா? எனக் கேட்டபோது, மனைவி ஆயிஸாதான் பதில் சொன்னாள்... “எங்கபோடியார், இரிக்கிறத்துக்கே ஊடு வளவு இல்லாம இரிக்கி இதுக்குள்ள இதுகள ஆருதான் ஏத்துக்க முன்வரப் போறாங்க? என்றதன் இயலாமையை வெளிக்கிடுவதற்கிடையில், குறுக்கிட்ட போடியார்.  

 அதப்பத்தி நீங்க ஆரும் எதுவுமே யோசிக்க வேணாம். இரிக்கிற சொத்துப் பத்தெல்லாம் என்ர ரெண்டு ஆம்புளப் புள்ளையளுக்குத்தான் எழுதி வெச்சிரிக்கன். எங்குட நீண்டகால நிய்யதது எதுவுமே எதிர்பார்க்காம ஏழக்குமருகள கட்டிவைக்கணும் எனும் எண்ணத்தில் ஊரில யோசிக்கேக்க, சனூஸ் ஹாஜியாரின் பிள்ளைகள்தான் மனசிக்குப்பட்டது. அதனாலதான் என்ர மூத்த மகன் இசுமாயில் இன்ஜினீயரையும், இளைய மகன் றியாஸ் டொக்டரையும் கட்டிவைக்கலாம் எண்டு பெண் கேட்டுத்தான் இங்க வந்திரிக்கம். என்ன செல்றியள்? எனக் கேட்டபோது... அங்கே.... அதிர்ச்சி நிறைந்த ஆனந்தக் கண்ணீர் எல்லா முகங்களிலும் கிளையோடுவதை அவதானித்த சனூஸ் ஹாஜியாரும் கட்டிலில் இருந்தவாறே வடிந்த நீரைக் கையால் துடைத்துக் கொண்டு வல்லோனைத் துதித்துக் கொண்டிருந்தார். அவனின் கருணை மழையில் நனைந்தவாறு.

 இத்தனை சுவாரஷ்யத்திற்கும் இடையில் உள்ளூராட்சி சபை தேர்தல் மேடையில் கல்லெறிபட்டும் தனக்காக முன்னின்று போராடி தனது வெற்றிக்காக உழைத்த சனூஸ் ஹாஜியாருக்கு நன்றிக்கடன் தீர்ப்பதற்காக அவர் மகன் அப்துல்லாவிற்கான “வாரர்போட்”  உத்தியோகத்திற்கான நியமனக் கடிதத்தை அங்கு வந்திருந்த அரசியல் பிரமுகரான அகமது லெப்பை அவனின் கரங்களுக்குள் நீட்டியபோது... அன்று தனக்கும் தன் கணவருக்கும் இடையில் நடந்த கருத்து மோதல் ஒன்று ஆயிஸாவின் ஞாபகத்திற்கு வந்து அவவின் மனச்சாட்சிக்குள் முட்டி மோதிக் கொண்டிருந்தது.

 என்னங்க இப்புடியே சமூக சேவ... சமூக சேவண்டு குழந்தப்புள்ள மாதரி ஓடித் திரிஞ்சா... இந்த மூணு புள்ளையளையும் காப்பாத்துற ஆரு...? ஒண்டுக்கும் பயப்புடாதீங்க புள்ள... அதெல்லாம் படைச்சவன் பாத்துக்குவான்... ஈமான மட்டும் தளர உட்றாதீங்க வார்த்தைகளுக்கு வலு சேர்ப்பது போல மருதம் கலைக்கூடல் மன்றத்தினரால் ஹேகரிக்கப்பட்ட பத்து இலட்சம் ரூபா பணமுடிப்பொன்றை அதன் தலைவர் ஆயிஸாவின் கரங்களுக்குள் சங்கமிக்க ஆடிப்போன அவவின் வாய் தானாகவே முணுமுணுத்துக் கொண்டது.

 சும்மாவா சொல்லிவைச்சாங்க நம்ம மூதாதையர் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று... கணவர் அப்ப செய்துவைச்ச நல்ல செயல்கள் அவர் ஆடி ஓடி அடங்கினத்திற்குப் பிறகும் இப்ப நல்லாவேல செய்யுது. எல்லாப்புகழும் அந்த வல்ல நாயகனுக்கே.

சாய்ந்தமருதூர்
கேயெம்மே அஸீஸ்

Comments