கல்வி கண் திறக்கும் மலையக அபிவிருத்தி மன்றம் | தினகரன் வாரமஞ்சரி

கல்வி கண் திறக்கும் மலையக அபிவிருத்தி மன்றம்

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 13ஆவது ஆண்டு நிறைவு விழா மிக விமரிசையாக தனது (இல 344/4) புதிய கட்டடத்தில் கொண்டாடப்பட்டது. கடந்த 26ஆம் திகதி மாலை 6மணிக்கு மன்றத்தலைவர் மு. தேவராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்றத்தின் தூண்களாகத் திகழும் போஷகர்கள், மன்ற உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் இணைந்து கொண்டனர்.  

இம்மன்றத்தின் 13வருட வரலாறென்பது வெறும் சம்பவத் தொகுப்பல்ல. கால வரிசைப்படி தொகுக்கப்பட்ட கணக்குப்பட்டியலுமல்ல, மக்கள் மன எழுச்சிகளின் பிரதிபலிப்பு. ஆனால் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் வரலாறு வித்தியாசமானது. ஏமாந்துபோன இளம் பட்டாளத்தின் மனவயலில் விழுந்த ஆசை விதையில் வளர்ந்த மரமே மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமாகும். அந்த ஆசைகளை கொள்கைகளாக நெறிப்படுத்திய இம் மன்றத்தினரின் தீர்க்க தரிசனத்தின் பிரதிபலிப்பே இம் மன்றமாகும். இம்மன்ற உறுப்பினர்களின் துணிவு, திறமை, நேர்மையின் அடையாளமே கடந்த 13வருட வரலாறாகும்.  

இம் மன்றத்தின் ஒவ்வொரு நகர்விலும் செயல்பாட்டிலும் அரசியல் நெருக்கத்தை காண இயலவில்லை. அரசியல் நெருக்கம் சமுதாய அமைப்புக்களை கெடுத்து விடுகின்றன என ரூசோ கூறுகிறார். இம் மன்றத்திற்குள் அரசியல் நெருக்கம் விழுந்திருந்தால் இன்று அதன் பாதை வேறு வடிவத்தை அடைந்திருக்கும். இம் மன்றத்தின் 13வருட வெற்றி வாழ்க்கைக்கு அம் மன்றத்துக்குள் காணப்பட்ட நேர்மை, உண்மை, யோக்கியம், அர்ப்பணிப்பு, கண்ணியம் என்பனவே காரணம். 

விழாவின் துவக்கத்தின் மங்கள விளக்கேற்றும் வைபவம் இடம்பெற்றது. அதனையடுத்து தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் பயின்று வந்த நுவரெலியா பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தின் அக்கரைமலை பிரிவைச் சேர்ந்த மாணவர் துர்கேஷ்வரன் கணேஷனின் அகால மரணத்தையொட்டி ஒரு நிமிட நேரம் மெளன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.  

வரவேற்புரையை மன்றத்தின் பணிப்பாளர் எஸ். மோகன்ராஜ் நிகழ்த்தினார். அவரின் உரையில் ஒரு பட்டிமன்ற பேச்சாளரின் சாயல் தென்பட்டது. அவர் தன் பேச்சின்போது மிகவும் சிந்திக்க வைக்கக்கூடிய விடயங்களை நகைச்சுவையுடன் சபையில் முன் வைத்தார். அதற்கு உதாரணமாக கீழ்வரும் சம்பவத்தையும் தெரிவித்தார். சிக்கனம் ஒரு சிறந்த வருமானம் என்பதை மிக அழகாக நுட்பமாக தெரிவித்து, சபையோரை சிந்திக்க வைத்தார். "கடந்த வருடம் மன்றத்தின் பிறந்த தினத்தை 100கிலோ கிறாம் எடையைக் கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடினோம். இன்று நான்கு கிலோகிராம் கேக்கை வெட்டி 14ஆவது ஆண்டு பிறப்பை கொண்டாடுகிறோம். கடந்த வருடம் பெட்டியில் அடைக்கப்பட்ட பிரபல கம்பெனி தயாரிப்பு குளிர்பானத்தை வழங்கினோம். இன்று நாங்களே தயாரித்த குளிர்ப்பானத்தை உங்களுக்கு வழங்குகிறோம். இந்த சிக்கனத்தை கடைப்பிடித்தல் மூலமாக அப்பணத்தை எமது கல்விப் பணிக்கு பயன்படுத்துகிறோம் என்றார்.  

வாழ்க்கையைச் சுவைப்பதற்குச் சிக்கனமும் சேமிப்புமே ஆதாரம். சிக்கனம் ஒரு சீர்திருத்த மருந்து என்பதை அவரின் வார்த்தைகள் வெளிச்சம் போட்டு காட்டின. உண்மையில் அவரின் இவ் வார்த்தைகள் சபையோரை சிரிக்கவும் சிந்திக்க வைத்தன.  

விழாவில் பேராசிரியர் சந்திரபோஸ் சிறப்புரையாற்றினார். அவரின் ஆழமான சிந்தனைகளைக் கொண்ட உரையானது பலரையும் வியக்க வைத்து “எமது சமூகம் பலவீனத்தை எட்டக் கூடாது. ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினையின்போது எமது இளைஞர்கள் சமூக உணர்வோடு கறுப்புச் சட்டை அணிந்து காலி முகத்திடலை இளைஞர் சமுத்திரமாக்கி தங்களின் பலத்தை அடையாளம் காட்டினர். இச் செயல் அரசியல்வாதிகளையே திகைக்க வைத்தது. அவர்களை சிந்திக்கவும் வைத்தது. நாம் உழைப்புக்கு வந்தோம் என எண்ணக்கூடாது. நேர்மையுடன் உண்மையான சமூகமாகவே வந்தோம். கடந்த 13வருடமாக மலையகக் கல்வி சமூகத்திற்கு இம்மன்றம் பெரும் பணியை வழங்கி வருகிறது.  

இன்று மலையக சமூகத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குள் அதிகமானோர் பிரவேசம் செய்ய இம் மன்றம் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இம் மன்றமானது இன்று பெரும் பலம் கொண்ட நிறுவனமாக வளர்ச்சியை எட்டியுள்ளது.  

சிறுபான்மை மக்களாக இருப்பவர்கள் எவ்வாறு உலகத்தில் தங்களை வெற்றியாளர்களாக அமைத்துக் கொண்டார்கள் என்பதற்கு நல்லதோர் உதாரணமாக வாழ்பவர்கள் யூதர்கள். ஹீப்கு மொழியை தாய் மொழியாகக் கொண்ட இச்சமூகத்தினர் உலகம் முழுவதும் விரிந்து வாழ்கின்றனர். இவர்களே இன்று பெரும் விஞ்ஞானிகளாக வாழ்கின்றனர். துன்பப்படும் சமூகம் கல்வித் துறையின் மூலமாக சாதிக்க வேண்டும். இம் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் மேன்மேலும் தன் சமூக கடமைகளை மேற் கொண்டு சாதனைப் படைக்க வேண்டுமெனவும் தனது வாழ்ந்துரையில் தெரிவித்தார்.  

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சேவைகள் இன்று விரிவடைந்துள்ளது. பெரும் அமைப்பாக செயல்படுகிறது. இவ் இளைஞர்களின் சமூக கடமை உணர்ச்சியை பாராட்டுகிறேன். மென்மேலும் இவ் அமைப்பு வளர்ச்சிப் பெற வாழ்த்துகிறேன் என விவேகா பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான கே.ரி. குருசாமி தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.  

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லிமிடெட் (வீரகேசரி) பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன் இம் மன்றத்தின் பரிணாம வளர்ச்சி போற்றுதற்குரியது. இளம் சமூகம் தான் இணைந்த சமூகத்தின் மீது பெரும் அக்கறை கொண்டு கல்வி கற்கும் சமூகத்துக்கு பெரும் சேவையை மேற்கொண்டு வருகிறது. இச் சேவை மேலும் வளர்ச்சியடைந்து பல சாதனைகளுக்கு உரிமையாகும் மன்றமாக திகழ வேண்டுமென பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்தார்.  

விழாவில் புசல்லாவ பொட்டாசி தோட்டத்திலிருந்தது முதன் முதலாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு தெரிவான செல்வி எஸ். அருள் மொழிக்கு மடிகணனி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தில் புதிய அலுவலக கட்டடத்தின் உரிமையாளர் நித்தார் ஹாஜியார் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். அத்துடன் மத்துகம கலைமகள் மகா தமிழ்வித்தியாலயம், ரத்தோட்ட தங்கந்த த.ம.வி, இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய ஸ்பிங்வூட் த.வி, அக்கரப்பத்தனை ஹூட்வீல் த.ம.வி, மஸ்கெலியா, மொக்கா வின்னஸ் கல்லூரி, மாத்தனை தம்பலகல கணேஸ்வரா வித்தியாலயம், இரத்தினபுரி ரத்ங்க த.வி உள்ளிட்ட மேலும் எட்டு பாடசாலைகளுக்கு கணினி, போட்டோ கொப்பி இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.  

போசகரும், வர்த்தகருமான ஆர். பாலசுப்பிரமணியம், மன்ற சட்ட ஆலோசகர் சட்டத்தரணி பதுளை சேனாதிராஜா, இணை பணிப்பாளர் கே. சிவசுப்பிரமணியம், ஹட்டன் மொக்கா தமிழ் வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பலர் தமது வாழ்த்துக்களை மன்றத்துக்கு தெரிவித்தனர். நன்றியுரையை மன்றத்தின் செயலாளர் சங்கர் சுரேஷ் வழங்கினார்.

கே.பி.பி. புஸ்பராஜா
(படங்கள் : வட கொழும்பு தினகரன் நிருபர்)     

Comments