அகழ்வாரை என்றும் தாங்குமாம் நிலம் | தினகரன் வாரமஞ்சரி

அகழ்வாரை என்றும் தாங்குமாம் நிலம்

விவசாயிகளின் வாழ்க்கை மிக மோசமாகிக் கொண்டு போகிறது.  விவசாயம் செய்யும் ஒவ்வொரு விவசாயியும் தன் மகனை அல்லது மகளை அந்தத்  தொழிலில் விட விரும்புகிறார்கள் இல்லை. ஏதாவது ஒரு அரசாங்க வேலையை பெற்றுக்  கொள்ளும் நோக்கிலேயே மக்களை படிப்பிக்கிறார்கள். ஆனால் அந்த வேலை  கிடைத்தபிறகு அவர்கள் பகுதி நேரமாக விவசாயத்தையும் மேற்கொள்வதை  காணக்கூடியதாக உள்ளது. காரணம், என்னதான் விலைத்தளம்பல் காணப்பட்டாலும்,  விவசாயத்தில் குறிப்பாக நெற்செய்கையில் பெருமளவு லாபமீட்ட முடிகிறது.  

மரக்கறி, பழமரங்கள், தென்னை என பயிரிடுவோர் கூட்டாக பயிரிடுவது  குறைந்துவிட்டது. தனித்தனி ஒருசிலரே பயிரிடுவதும் அவர்களது தோட்டம்  ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இருப்பதும் பெரும் அழிவை ஏற்படுத்துகிறது.  இந்தப்பயிர்களில் மிக அதிகமாக பூச்சித்தாக்கம் ஏற்படுகிறது. கூடவே  விலங்குகளினாலும் அழிவை சந்திக்கிறது. மாறாக நெற்செய்கையானது பொது  பாதுகாப்பிற்குள் வருகிறது. நெற்காணிகள் ஒரே எல்லைக்குள் அமைகின்றன.  அவற்றின் விதைப்புக்காலம். நீர்ப்பாசனம், அறுவடை என்பன குறித்த  காலத்திற்குள் செய்யப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டு, அந்த காலத்தில்  கால்நடைகளை திறந்து விடக்கூடாது என்ற சட்டமும் போடப்படுகின்றது. இதனால்  நெற்செய்கை ஒரு கட்டுக் கோப்பினுள் நிற்கிறது.  

 கடும் வரட்சி காரணமாக மல்லாவி கிளிநொச்சி பிரதேசங்களில் வாழை  தென்னை மரங்கள் முற்றாக பட்டுப்போய்க்கிடக்கின்றன. சாலையோரத்து  காரைப்பற்றைகளே காய்ந்து போய்க் கிடக்கின்றன. ஒரு தீக்குச்சியை  தட்டிப்போட்டால் பக்கென்று பற்றிக்கொள்ளும். குடிநீருக்காகவும்  குளிப்பதற்காகவும் மக்கள் நீரோடும் வாய்க்கால்களை நோக்கி நெடுந்தூரம்  செல்கிறார்கள். பாளைவிடும் பருவத்தில் வாடிவிழுந்துகிடக்கும் தென்னைகளை  வருத்தத்தோடு பார்த்து விவசாயி நொந்து போகிறான். விவசாயிகளின் துயரைப்போக்க  எந்த திட்டமாவது எவரிடமாவது இருக்கிறதா?  

இருந்தாலும் இவ்வருடம் சிறுபோக நெற்செய்கைக்கென பங்குக்காசு  அறவீட்டில் மிக அதிகமான தொகை அறவாக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஏக்கர் கொண்ட ஒரு  பங்கு எழுபத்தையாயிரமாக கொள்வனவு செய்திருக்கின்றனர். இந்தப்பணத்தை  கட்டிய விவசாயி ஒரு ஏக்கர் செய்கைக்கு சராசரியாக நாற்பதாயிரம், என்றால்,  ஒருபங்கின் விதைப்பு செலவு அறுபதாயிரம் ஆகிறது. இது குத்துமதிப்பான  கணக்குத்தான். ஆக, ஒருலட்சத்து முப்பதாயிரம் செலவு செய்தால் அவன்  பெறப்போகும் விளைச்சல, சிறப்பானதாக இருந்தால் மட்டும் அவன் ஒரு பத்துமுதல்  முப்பதாயிரத்துக்கு உட்பட்ட லாபத்தை இல்லை வருமானத்தை காணமுடியும். அது  நான்குமாத அலைச்சலையும் உழைப்பையும் கொடுத்தபின்னர் பெறப்படுவதாகும்.  

 இதுவே போர் நடந்த காலத்தில் விவசாயிகள் பட்டதுயரத்துடன்  ஒப்பிட்டு பார்க்காமல் இருக்கமுடியவில்லை. ஒழுங்காக பசளை வராது. களை  நாசினிகள் கிடையாது. கைகளால்தான் களையெடுத்தார்கள். கிருமிநாசினிகளும்  புட்டியில் இருந்த விலையைவிட அதிகம் கொடுத்தே வாங்கினோம்.  மண்ணெண்ணையைவிட்டு உழவு இயந்திரங்கள் உழுதாலும், அதற்கான கூலி மிக அதிகம்.

எனவே மாடுகளே பெரும்பாலும் தோள் கொடுத்தன. நீர்ப்பாசன வாய்க்கால்கள்  செப்பனிடாமல் கரைந்தழிந்து போனதால், பெருமளவு மண்மூடைகளும்  வாழைக்குத்திகளும் நீரை மறித்து கட்ட பயன்பட்டன.  

 கைகளால் அறுவடை செய்து கைகளால் கதிர்கட்டி கைகளால் சூடடித்து  விளைந்த நெல்லை வீட்டுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. வந்துமென்ன அடிக்கடி  இடப்பெயர்வுகளால் பெருமளவு விவசாயிகளுக்கு விஸ்தாரமான வீடுகள் கிடையாது.  கொண்டுவந்த நெல்லை மேடுபார்த்து அடுக்கி வைத்துவிட்டு தரப்பால் கொண்டு மூடி  பாதுகாக்க வேண்டி வந்தது. இவ்வருட வேளாண்மைக்கு மனைவியின் தாலிக்கொடியை  அடகுவைத்தவர், அதை மீட்க முடியாமல் அடுத்த வருட நெற்செய்கைக்காக அதை விற்க  வேண்டிய நிலை வந்தது. காரணம் விளைந்த நெல்லை கொள்வனவு செய்ய வியாபாரிகள்  இல்லை. வழமையாக செய்தவர்களும் களஞ்சிய வசதி இன்மையால் கொள்வனவுசெய்வதை  அவ்வப்போது தேவைக்கேற்ற அளவிலேயே வைத்துக் கொண்டனர். அடிக்கடி  விமானத்தாக்குதல்கள் நடப்பதால், நெற் களஞ்சியங்கள் அழிந்து போகும் என்ற  அச்சத்தாலும், நெல் கொள்வனவு செய்யப்படாமல் கிடந்தது. கிளாலி வழியாக   படகுகளில் மிக குறைந்த அளவில் நெல் யாழ்ப்பாணம் சென்றது.  தென்பகுதிக்கு நெல் ஏற்றுவோர் அதை ஓமந்தையில் இறக்கி மறுபடி ஏற்றி மீண்டும்  வவுனியாவிலும் ஒருதடவை இறக்கி ஏற்ற வேண்டி இருந்ததால் அந்த செலவையும்  விவசாயிகளின் தலையிலேயே வைத்தனர்.  

இயக்கப்போராளிகளின் நிதித்துறை, பொருண்மியமேம்பாட்டுத்துறை  என்பவற்றுடன் மகளிர் மேம்பாட்டுத்துறையும், இயக்கத்திலிருந்து ஆண்டுதோறும்  விலகிச் செல்வோருக்கான தண்டனைக்கால பண்ணைகளிலும் விவசாயமே செய்யப்பட்டது. 

இவற்றை அவர்களே கொள்வனவு செய்ததுடன் விற்பனை சந்தையையும் தம்மிடமே வைத்துக்  கொண்டிருந்தனர்.  

பொதுமக்களில் சிலர் தமது நெல்லை அவித்துக் குத்தி  அரிசியாக்கி விற்றும் பணமாக்கினர். அது தமது சொந்த வீட்டில்  இருப்பவர்களாலேயே முடிந்தது. இந்த காரணங்களால் மாரிகாலம் வந்தததும்  பெருமளவு அரிசித் தட்டுப்பாடும் நிலவியது. காரணம், நெல்லை அவித்து  காயவைப்பதற்கான தளங்கள் இல்லாமையேயாகும். இந்த காரணங்களாலேயே நாங்கள் பாரிய  இடப்பெயர்வுகளை சந்திக்க நேர்ந்த போதெல்லாம் பண்டைக்கால மக்களைப்போல  உரலும் உலக்கையும் சுளகும், கொண்டு திரிந்தோம்.  பல தடவைகள்  கஸ்டப்பட்டு  விதைத்த, பயிரிட்ட தோட்டங்களை, அது பயன் தரும் நேரத்தில் கைவிட்டுவிட்டு  உயிர் கொண்டு ஓடினோம். ஆயினுமென்ன மழைத்துளி வீழ்ந்ததுமே விவசாயி யாரிடமாவது நிலத்தை குத்தகைக்கு பெற்றும் உழுது விதைத்தான்.

வள்ளுவர் என்ன சொன்னார்  

அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்று. ஆனால் விவசாயி என்ன துன்பம்  வந்தாலும் இயற்கை அனர்த்தங்களால் தன் விளைச்சல் பாழ்பட்டாலும் நிலத்தை  அகழ்வதை நிறுத்துவதில்லை. அதனால்தான் உலகம் நிலைத்திருக்கிறது.  

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments