கலைஞர் விருதுவிழா ஓர் அற்புத அனுபவம் | தினகரன் வாரமஞ்சரி

கலைஞர் விருதுவிழா ஓர் அற்புத அனுபவம்

ரஞ்சனி ராஜ்மோகனுக்கு விருது.

கடந்த 02.09.2019திங்களன்று மாலை கொழும்பு நெலும் பொகுன அரங்கில் நடைபெற்ற தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள், கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் விழா 2019 ‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!’ என்ற ஒரு புத்துணர்வை ஏற்படுத்துவதாக அமைந்தது. இந்த விழாவை சிறப்பிக்க நாடாளவிய ரீதியில் கலந்து கொண்ட அனைவர் மனதிலும் இவ்வுணர்வு ஊடுருவி நின்றது என்பதில் சந்தேகமே இல்லை.  

முத்தமிழான இயல், இசை, நாடகம், ஆகியவற்றோடு ஈழத்து தமிழ் சினிமாவையும் பெருமைபடுத்துவதாக அமைந்திருந்தது. இதுவரை இவற்றை போஷனை செய்தவர்கள் மறக்கடிக்கப்பட்டதால் அவர்களை ஞாபகமூட்டி பாராட்ட எடுக்கப்பட்ட ஒரு சிறப்பு விழாவே இது.  

இந்த அமைச்சு நடத்திய இந்த விருது வழங்கும் வைபவம் தமிழ் மணக்கும் விழாவாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது.  

இந்த விருது வழங்கும் வைபவத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பன்னிரண்டு கலைஞர்களுக்கு ‘வாழ் நாள் சாதனையாளர்’ விருதும் பொற்கிழியும் நற்சான்று பத்திரத்தோடு ‘கலையரசு’ என்ற அரச கௌரவ பத்திரமும் வழங்கப்பட்டன.  

தமது வாழ் நாளையும் பொன், பொருளையும் தம் கலைச் சேவைக்காக தொலைத்து விட்டு, தள்ளாத வயதில் தளர் நடையுடன் மேடையை நோக்கி வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதற்காக வந்தனர்.  

அவ்வாறு மேடைக்கு வந்த ஒரு சிலரால் இன்னொருவரின் துணையின்றி மேடை ஏற முடியாமல் தவித்தபோது, விழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அவர்களுக்கு கைகொடுத்து மேடைக்கு அழைத்துச் சென்றதைப் பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது.  

அன்றைய தினம் விருது பெற்றவர்களில் சிலருக்கு இதுவே முதல் கௌரவிப்பு மேடை... இவ்வளவு காலமாக எந்தத் தமிழ் அமைச்சரின் கடைக் கண் பார்வையாவது இவர்கள் மீது விழவில்லை எனினும் அமைச்சர் மனோ கணேசனின் பார்வை காலம் கடந்தாவது இவர்கள் பேரில் விழுந்திருப்பதைக் கண்டு சரஸ்வதியும் இலக்குமியும் அக மகிழந்து மனம் பூரித்ததை பரிசு பெற்ற இந்த கலையரசர்களின் முகங்களில் காண முடிந்துது.  

அவர்களைத் தொடர்ந்து முப்பது வயது தொடக்கம் அறுபது வரையிலான எண்பது கலைஞர்களுக்கு விருதும் பொற்கிழியும் கலைமாமணி என்ற அரச கௌரவ உறுதிப் பத்திரமும் வழங்கப்பட்டன.  

இந்த எண்பது பேர்களில் எதையுமே பண்ணாத புல்லுருவிகளும் அடங்கியிருந்தனர். தொலைக் காட்சியில் அரசாங்க ஊதியம் பெற்றுக் கொண்டு ஓய்வு பெறும் வரை தமிழுக்கும் கலைக்கும் ஒரு துரும்பைக் கூட எடுத்து போடாதவர்களும், வானொலியில் அரசாங்க ஊதியம் பெற்றுக் கொண்டு வாய்ச் சிலம்பம் வீசி ஓய்ந்தவர்களும் இந்த பரிசு பெறும் சாதனையாளர் குழுவில் இடம் பிடித்திருந்தனர்.

இதைக் கண்ட போது சற்று வேதனையாகவும் இருந்தது. இப்படிப்பட்ட விழாக்களில் புல்லுருவிகள் ஊடுருவுவது தவிர்க்க முடியாதது என்பதால் இதற்கு விழாக் குழுவினர் பொறுப்பாக முடியாது.   

அடுத்ததாக பதினெட்டு வயது முதல் முப்பது வயது வரையிலான வளர்ந்து வரும் சாதனையாளர்கள் ஐம்பது பேருக்கு ஊக்கு விக்கும் விருதும் பொற்கிழியும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  

ஈழத்து தமிழ் சினிமாவுக்கு பணியாற்றி மறைந்த சகலரது புகைப் படங்களும் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டன. இது அவர்களை கௌரவப்படுத்துவதாக இருந்தது.  

ஈழத்து தமிழ் சினிமா பாடல்கள் இசையோடு மேடையில் இசைக்கப்பட்டன.  

பரதம் பயின்ற பாதங்கள் பார்ப்பவர் உள்ளங்களையும் கண்களையும் ஆகர்ஷித்தன.  

ஆண்டாண்டு காலமாக அரை நித்திரையில் எவ்வித அசைவுமின்றி இன்றி இருந்த, இந்து சமய கலாசாரத் திணைக்கள பணிப்பாளர் முதல் சிற்றூழியர்கள் வரை வியர்வை சிந்தி செயல் படுவதை இவ் விழாவில் காண முடிந்தது.  

சகல கலைஞர்களிடமும் மனம் நோகாமல் மிக மென்மையாகவும் பொறுமையாகவும் இதமாகவும் புன்னகைத்து மென்னுரையாடிய இந்து சமய கலாசாரத் திணைக்கள பணிப்பாளர் முதல் சிற்றூழியர்கள் வரை அனைவருக்கும் பாராட்டுகள்!  

இந்த விழாவின் கதாநாயகனாகிய அமைச்சர் மனோ கணேசன் சலிக்காமல் தனது கரங்களினாேலயே சகலருக்கும் விருதுகளையும் பொற்கிழிகளையும் சான்றிதழகளையும் வழங்கி, கலைஞர்கள் அனைவரையும் கௌரவித்தார். ஒரு அமைச்சர் மேடையில் பல மணித்தியாலம் நிற்பது ஆபூர்வமானது.  

அவரது சொற்பொழிவில் தமிழ்க் கலைஞர்கள் சிங்கள கலை விழாக்களில் கௌரவிக்கப்படுவதில்லை என்பதை பகிரங்கமாக, ஆதங்கத்துடன் சொன்னார். அந்த ஆதங்கம் தான் இந்த விழாவை அவர் ஏற்பாடு செய்வதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.  

ஈழத் தமிழ் சினிமா உள் நாட்டில் மீண்டும் வளர வேண்டும் என்றதோடு உலகளாவிய ரீதியில் வாழும் இலங்கையர் சென்னை கோடம்பாக்கத்தில் தங்களது பணத்தைக் கொட்டாமல் நாம் இலங்கைத் தமிழர் என்ற உணர்வோடு நமது நாட்டில் அந்த பணத்தை ஈழத்து தமிழ் சினிமாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையருக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார்.  

அமைச்சர் மனோ கணேசன், இனி வரும் காலங்களில் நான் இல்லாமல் போகலாம். இன்று விநாயக சதூர்த்தி. நான் பிள்ளையார் சுழி போட்டு விட்டேன். இது உங்கள் உரிமை. இனிவரும் காலங்களில் இருப்பவர்களை ஊக்கப்படுத்தி, இந்த செயல்பாட்டை நீங்கள் வருடா வருடம் முன் எடுத்துச் செல்லுங்கள் என மிக உருக்கமாக வேண்டிக் கொண்டார்.  

சிலர், இது மனோ கணேசனின் அரசியல் என்றது என் செவிகளில் விழுந்தது. அவர்கள் சொன்னது உண்மை என்றால் இந்த விழாவை நாடாளவிய ரீதியில் அவர் செய்திருக்க வேண்டியதில்லை.  

இதில் விசேஷம் என்னவெனில் மனோ கணேசன் இந்த நிகழ்வில் ஒரு வார்த்தை அரசியலும் பேசவில்லை என்பதுதான். அது அவரின் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தியது. அதில் இருந்து இந்த விழாவின் நோக்கம் அரசியல் அல்ல என்பதும் புலனாகிறது.  

மனோ கணேசனை நான் இங்கு பாராட்டப் போவதில்லை.  

அதற்கு பதிலாக போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் இகழ்ந்து பேசும் வாயே, நாளை புகழந்து பேசும் காலம் வருமே. நீ கலங்காதிரு மனமே” என அவருக்கு சொல்ல விரும்புகிறேன்.

இனி உனது பயணம் விசாலமானது. அந்த பாதையில் நீ பயணிக்கும் போது முத்தமிழை நீ மறக்காது சுமந்து செல். அப்போது இகழச்சியும் தோல்வியும் என்பது உனக்கு துச்சமே!.    

 

Comments