நான் வளர்த்த காங்கிரஸ் என்னை ஏன் மறந்தது? | தினகரன் வாரமஞ்சரி

நான் வளர்த்த காங்கிரஸ் என்னை ஏன் மறந்தது?

சென்னையில் பதிப்பிக்கப்படும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் நூல்கள் இலங்கைக்கு தாராளமாக வரும். ஆரம்பத்தில் திராவிட சிந்தனைகள் தாங்கிய, சுயமரியாதை கருத்துகள் கொண்ட நூல்களும் 1949இன் பின்னர் தி.மு.க நூல்களும் இலங்கைககு வரத் தொடங்கின. சுதந்திர போராட்டக் காலத்தில் போராட்ட செய்திகள் இலங்கைக்கு பத்திரிகை வாயிலாக வரும். இங்கே வாழ்ந்தவர்கள் நேரடி இந்தியத் தொடர்புகளைக் கொண்டவர்களாக இருந்ததால் இந்தத் தகவல்கள், புதினங்களை வாசித்து ரசித்தார்கள், ஆவேசப்பட்டார்கள். மேலும் தமிழ் மலையக இளைஞர்களை செதுக்குவதிலும் செம்மைப்படுத்துவதிலும் இந்த இந்திய செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் பணியாற்றி வந்தது. அக் காலத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் உருவானதற்கு திராவிட சிந்தனைகள் உதவியது போலவே, மலையக உழைக்கும் சமூகம் ஒரு அரசியல் – தொழிற்சங்க கட்டமைப்புக்குள் வருவதற்கும் அது பின்னர் இலங்கை – இந்திய காங்கிரசாக தோற்றம் பெறுவதற்கும் மகாத்மாவின் கீழ் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் காரணமாக அமைந்திருந்தது.

“என்னிடம் அக் காலத்தில் ஒரு ரேடியோ இருந்தது. ஆகாஷவாணியை திருப்பி வைத்து காதை அருகே வைத்துக் கேட்டால் நேரு, காந்திஜியின் பேச்சுகளைக் கேட்க முடியும் சுதந்திர போராட்ட செய்திகள் வரும். பத்திரிகைகளில் விரிவாக படங்களுடன் பிரசுரித்திருப்பார்கள். இவற்றை தெரிந்து கொள்ளும் போது நான் உணர்ச்சி வசப்படுவேன். வெள்ளையனே வெளியேறு போராட்டம் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் மிகவும் உணர்ச்சி வசப்படுவது வழக்கம்” என்று அன்றைய நாட்களைப் பற்றி கூறுகிறார் செல்லசாமி. 1947 ஓகஸ்ட் மாதம் இந்தியா சுதந்திரம் பெற்றபோது அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததாம்!

வேலம்மாளுடன் செல்லச்சாமி

இந்திய சுதந்திர போராட்டமும் பின்னர் திராவிட சிந்தனையும் பல விழிப்புற்ற தமிழர்களின் சிந்தனையைத் தூண்டியதுபோலவே இளைஞன் செல்லசாமியின் உள்ளத்திலும் கனலை ஏற்படுத்தியது. அப்போது தான், 1949ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து பாண்டித்துரை தேவர் என்பவர் கொழும்பு வந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆரம்பித்த ஃபோர்வார்ட் புளொக் கட்சியைச் சேர்ந்த அவர் சிறந்த ஒரு பேச்சாளர். பொகவந்தலாவையில் அவர் கூட்டங்களில் கலந்து கொண்டபோது வளர்ந்துவரும் பேச்சாளரான செல்லசாமியின் வீரியம் கொண்ட மேடைப்பேச்சில் பாண்டித்துரை ஈர்க்கப்பட்டார். இந்தப் பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாண்டித்துரை நம்பினார். அந்த நம்பிக்கையே இளைஞன் செல்லசாமியை கடை வாழ்க்கையில் இருந்து பொதுவாழ்க்கைக்கு இட்டுச் சென்றது.

இ.தொ.கா.வின் மலையக தொழிற்சங்க ரீதியான வளர்ச்சிக்கு மட்டுமன்றி தொழிற்சங்கத் தொடர்பில்லாத நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டிருக்கும் கொழும்பு சமூகத்தின் மத்தியிலும் இ.தொ.காவை வளர்த்து எடுத்ததற்கு முக்கிய காரணகர்த்தாவாக விளங்கிய எம்.எஸ். செல்லசாமி தனது 94 வருட கால வாழ்வில் பெரிதாகக் குறைபட்டுக் கொள்ளக் கூடியதாக எதுவும் இல்லை என்றும் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது என்னும் சொல்கிறார். இருந்தும் கூட, பெரியதொரு முள் அவர் நெஞ்சில் தைந்திருப்பதை அவர் பேச்சில் வெளிப்படையாகவே தெரிகிறது. 

“நான் நீண்ட காலமாகவே இ.தொ.காவில் இருந்திருக்கிறேன் என்பது அனைவரும் அறிந்தது. தொண்டமான் குடும்பமும் இதை அறியும். அதன் அன்றைய தலைவர்கள் அனைவருக்கும் நான் செய்த பணிகள் தெரியும். இதை புதிதாக சொல்லத் தேவையில்லை. எனினும் சமீபத்தில் வெளியான இ.தொ.கா எண்பதாவது ஆண்டு சிறப்பு மலரில் என்னைப்பற்றி ஒரு வார்த்தையேனும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. வரலாறு என்றால் அது வரலாறாகத்தான் இருக்க வேண்டும். எனது பங்களிப்பு பற்றி குறிப்பிடாமல் எப்படி இ.தொ.கா வரலாற்றை எவராலும் எழுத முடியும்? நான் அந்த மலரைப் பார்த்தபோது வேதனையாக இருந்தது. இது பண்பல்ல...” என்று தன் வேதனையையும் ஏமாற்றத்தையும் செல்லசாமி எம்மோடு பகிர்ந்து கொண்டார். 

அவர் கூற்றில் உண்மை நிறையவே உள்ளது ஒரு வரலாறு என்றால் அது, தனி மனிதருடையதோ அல்லது நிறுவனமொன்றினதோ, பல கட்டங்களையும் பல எழுச்சி வீழ்ச்சிகளையும், பல தரப்பட்ட மனிதர்களையும் தாண்டி வந்திருக்கும். அவர்களின், அவற்றின் பங்களிப்புடன் வளர்ந்து வந்திருக்கும். ஒரு நதி ஓடைகளையும், சிற்றாறுகளையும், அருவிகளையும் அணைத்துக் கொண்டு பயணிப்பது போலவே வரலாறும் ஒவ்வொருவரையும் அணைத்துக் கொண்டும் அரவணைத்துக் கொண்டும்தான் முன்நோக்கிப் பயணிக்கும். வரலாறு எழுதும்போது இந்த அம்சங்கள் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும். இல்லையேல் அது வரலாறாகாது. சௌமியமூர்த்தி தொண்டமான் மட்டுமே இ.தொ.காவின் வரலாறு அல்ல. அவரின் கீழ் பல தளபதிகள் இருந்தனர். அவர்களில் முதன்மையானவர் எம்.எஸ். செல்லசாமி. மேலும், சதாசிவம், பி.பி. தேவராஜ், சென்னன், ஏ.எம்.டி.ராஜன், ராஜரட்ணம் ஆகியோர் இ.தொ.காவின் தூண்களாக விளங்கினர். முத்து சிவலிங்கம் இன்றுவரை இ.தொ.காவில் நீடித்திருக்கும் ஒரு பழம்பெருந் தலைவர். இவர்களுக்கு முற்பட்டவர் மலையக, காந்தி ராஜலிங்கம். இலங்கை இந்திய காங்கிரசை தோற்றுவித்த ஆரம்பகால தலைவர்களான ஏ.அஸீஸ், வெள்ளையன் ஆகியோரைத்தான் மறந்துவிட முடியுமா? இவர்களின் பங்களிப்புகளைக் குறிப்பிடாமல் எவ்வாறு இ.தொ.கா வரலாற்றை எழுத இயலும்? 

மேலும், இலங்கையின் பழைய பெருந்தோட்ட தொழிலாளர் இயக்கமான இ.தொ.கா வரலாறு இந்த எண்பதாவது ஆண்டிலாவது தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இனிமேலாவது தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களை அழைத்து வரலாற்றை பாரபட்சமற்ற கண்ணோட்டத்துடன் தொகுப்பதற்கான திட்டமொன்றை வகுக்க வேண்டும். அதில், இ.தொ.கா வுக்காக பணியாற்றிய அனைவரின் பங்களிப்பைப் பற்றியும் குறிப்பட வேண்டும். தொண்டமானுடன் பணியாற்றிய பலருக்கு இன்று வயதாகி விட்டது. காலம் அவர்களைத் தன்னுள் இழுத்துக் கொள்வதற்கு முன்னர் இப்பணி தொடங்கப்பட வேண்டும் என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம். 

இன்று எவராலும் கொழும்பு செளமியபவன் தலைமையகத்துக்குச் சென்றால் செளமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் புகைப்படங்களைத் தவிர வேறு எந்தவொரு வரலாற்றை நினைவுப்படுத்தும் இ.தொ.கா முக்கியஸ்தரின் புகைப்படத்தையும் அங்கே காண முடியாது. வரலாற்றில் இ.தொ.காவின் முன்னாள் தலைவர்கள் மறைக்கப்படுவதற்கும், தலைமையகத்தில் அத் தலைவர்களின் புகைப்படங்கள் காணப்படாததற்கும் இடையே ஒரு உளவியல் சார்ந்த ஒற்றுமை உள்ளதை புரிந்து கொள்ளமுடிகிறது. இந்த மூடப்பட்ட மனநிலையை இ.தொ.காவின் இளைய தலைமுறையினர் தகர்க்க முன்வர வேண்டியது அவசியம்.  

செல்லசாமியின் வேதனை மிகச் சரியானது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவே ஒரு குறும் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. 

இனி பாண்டித்துரை தேவர் எப்படி செல்லசாமியின் பால் ஈர்க்கப்பட்டார் என்பதை பார்ப்போம்.  

இளைஞர் செல்லசாமி இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களின் பால் அன்பு கொண்டிருந்ததையும் அவர்களின் வசதிகளை அதிகரிப்பதற்காக பாடுபடத் தயாராக இருக்கும் மனப்பான்மையையும் உணர்ந்து கொண்ட பாண்டித்துரைத் தேவர் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான அறிவு அவருக்கு இருந்ததையும் அவதானித்தார். இந்த இளைஞனை இலங்கை இந்திய காங்கிரசில் சேர்த்து விட்டால் அது அவனுக்கு வழிகாட்டியதாக இருக்கும் எனக் கருதினார். இலங்கை இந்திய மாநாட்டின் இறுதிநாளன்று புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டபோது தலைவராக வி.கே வெள்ளையன் தெரிவு செய்யப்பட்டார். இணைச் செயலாளர்களில் ஒருவராக எம்.எஸ். செல்லசாமி என்ற இளைஞரின் பெயரை பிரேரிப்பதாக பாண்டித்துரை தேவர் எழுந்து சொன்னார். அவர் செல்வாக்கு மிக்கத் தலைவராக விளங்கியதால் எவரும் ஆட்சேபிக்கவில்லை. இப்படித்தான் 1949ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரசின் இணைச் செயலாளராக தெரிவுசெய்யப்பட்டார் செல்லசாமி. அவருடைய அரசியல் பயணம் இங்கிருந்துதான் ஆரம்பமானது. அப்போது முதல் காட்டாற்று வெள்ளமாகப் பிரவகித்த அவரது வேகமும் சுறுசுறுப்பும் மிக்க அரசியல் பயணம், மலையகத்திலும் கொழும்பிலுமாக தொடர்ந்து செயற்பட்டு தற்போது மூப்பின் காரணமாக அடங்கியிருக்கிறது. 

திறப்புவிழா ஒன்றில்: நடுவில் மணவைத் தம்பி, அருகே ஏ.நெய்னார்

தொடர்ச்சியான அவரது அரசியல் பயணத்தில் எதிர்ப்புகளும் சவால்களும் ஏற்பட்டிருக்கின்றனவே தவிர வழமையாக அரசியல் தலைவர்கள் மீது விழும் ஊழல், மோசடி என்ற கறைகள் இவர்மீது படிந்ததாகத் தகவல் இல்லை என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம். 

இலங்கை – இந்திய காங்கிரசில் நான்கு ஆண்டுகளாக இணை செயலாளராகப் பணியாற்றிய செல்லசாமிக்கு அப்போது மாதம் நூறு ரூபா சம்பளமாக வழங்கப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசாக மாறியபோது அதனுடன் பயணித்தார் எம்.எஸ். 1952- 55 காலப்பகுதியில் இ.தொ.கா மேடைகளில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார் அவருக்காக மக்கள் திரண்டனர். காங்கிரஸ் ஒரு தொழிற்சங்கமாக தொண்டமான் தலைமையில் உருவானபோது இலங்கை இந்திய காங்கிரசின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அப்துல் ஹஸீஸ் தனியாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற புதிய தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார். இரு சங்கங்களும் கடுமையாக தொழிற்சங்க மற்றும் அரசியல் களங்களில் மோதிக் கொண்டன. அக்காலக்கட்டத்தில் எம்.எஸ்.சின் பேச்சாற்றலும் பரபரப்பான அவரது செயற்பாடுகளும் இ.தொ.காவை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவின. 

1947 தேர்தலில் கண்டியில் போல் வேதநாயகம் வெற்றிபெற்றதும் தமாராகுமாரி என்ற சம சமாஜகட்சி வேட்பாளரின் வெற்றியும், முதல் பிரதமராகப் பதவியேற்ற டீ.எஸ். சேனநாயக்காகவுக்கு சில சமிக்​ைஞகளை அளிக்கவே, வந்தேறு குடிகளான இந்திய வம்சாவளி மக்களுக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்களை வழங்குவது சிங்கள சமூகத்தின்    பிரநிதித்துவத்துக்கு சவாலாக அமயைலாம் என்பதை உணர்ந்து கொண்டார். நாடு சுதந்திரம் பெற்றதுமே முதல் காரியமாக வம்சாவளித் தமிழர்களை நாடற்றவர்களாக்கினார் டீ.எஸ். இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையையும் வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை விஞ்சி தமது இருப்புக்கே பங்கமாகி விடலாம் என்று சிந்தித்த ஜி.ஜி.பொன்னம்பலம் டீ.எஸ்.சுக்கு ஆதரவு வழங்கினார். 

பிரஜா உரிமை சட்டத்தின் பின்னர் அஸீஸ் அமைத்த ஜ.தோ.கா சுதந்திரக்கட்சி ஆதரவாகவும் தொண்டமானின் இ.தொ.கா ஐ.தே.க ஆதரவாகவும் செயல்பட வேண்டியதாயிற்று. இக்காலப்பகுதியில் இ.தொ.காவில் ஒரு உந்து சக்தியாக நின்று செயல்பட்டார் செல்லசாமி. 

“நான் இ.தொ.காவின் முக்கிய நபராக இருந்தாலும் ஜனாப் அஸீஸ் என்னுடன் நல்ல நட்பை வைத்திருந்தார். அரசியலுக்கு அப்பால் அவர் மீது எனக்கு மரியாதை இருந்தது. சாதாரண தோட்டத்தொழிலாளர்களின் நலன்களில் அவர் உண்மையாகவே அக்கறை கொண்டிருந்தார். அறுபதுகளின் இறுதியில் மலையகத்தில் உணர்ச்சி வசப்படுத்தும் அரசியலை மேற்கொண்டிருந்த இலங்கை தி.மு.கவின் தலைவர் இழஞ்செழியன் இ.தொ.கா வைத் திட்டுவார். எனினும் அவரது பொது நோக்கம், நாடற்றவர் நிலையை நீக்குவதும் ஸ்ரீமா – சாஸ்திரி உடன்படிக்கையை எதிர்ப்பதுமாகவுமே இருந்தது. அதற்காக தமிழரசுகட்சியுடனும் ஜே.வி.பி.யுடனும் அவர் இணைந்து பணியாற்றினார். அதனால் அவர் மீது எனக்கு மரியாதை இருந்தது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது நாங்கள் பேசிக் கொள்வோம். பிழையான சந்தர்ப்பத்தில் ஜே.வி.பியுடன் கூட்டு வைத்துக்கொண்டதால் 1971 ஜே.வி.பி ஆயுத போராட்டத்தை காரணமாக முன்வைத்து ஸ்ரீமா அரசு இலங்கை தி.மு.க.வை அடக்கி ஒடுக்கி விட்டது.” என்று பழைய நினைவுகளில் நீந்தியவர், 

“பெரியவர் தொண்டமான் எவரையும் வா, போ என ஒருமையில்தான் அழைத்துப் பேசுவார். அது அவர் இயல்பு. இ.தொ.காவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் எவருமே அதைப் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில் அவர்களை வளர்த்து விட்டவர் அவர்தான். ஆனால் என்னுடன் பேசும்போது வாங்க, போங்க என்றுதான் அழைப்பார். அன்புடன் நடந்து கொள்வார். அவர் வீட்டுக்கு போனால் அவர் பாரியார் கோதை தொண்டமான் பாசத்துடன் நடத்துவார். தேனீர் சிற்றூண்டி வழங்காமல் அனுப்பவே மாட்டார் என்னுடனான அவர்களின் தொடர்பு நன்றாகவே இருந்தது.” என்று கூறி நிறுத்தினார். 

செல்வா - தொண்டாவுடன் முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

ஏற்கனவே கூறியதுபோல, கொழும்பில் இ.தொ.கா.வுக்கு ஒரு தளத்தை அமைத்தவர் எம்.எஸ். செல்லசாமியே. அப்படி தளமொன்றை அமைப்பதற்கு அவருக்கு உதவியாக இருந்தது அவரது சுறுசுறுப்பும் அடித்தட்டு மக்கள் மீது அவருக்கு இயல்பாகவே இருந்த கரிசனையும்தான். மேல் மாகாண சபையில் உறுப்பினரான அவர் போக்குவரத்து அமைச்சராக விளங்கினார். ஆர்.பிரேமதாசவிடம் அவருக்கு நெருக்கம் இருந்தது. கடின உழைப்பாளியான பிரேமதாசவுக்கு இன்னொரு கடின உழைப்பாளியை பிடித்துப் போவதில் ஆச்சரியம் இருக்க முடியாதே! கொழும்பு தோட்டங்களில் பல குறைபாடுகளை நிவர்த்தி செய்ததோடு கொழும்பு தமிழ் வர்த்தகர்களின் ஆதரவைவையும் அவரால் பெறமுடிந்தது. 83 கலவரத்தின்போது கொழும்பில் தரித்திருந்த அவர் பலரைக் காப்பாற்றினார். காடையர்களின் பிரதான இலக்கு செட்டியார்த் தெருவாக இருந்தது. தனியாளாக செயல்பட்டு செட்டியார்த் தெருவை காப்பாற்றியவர் எம்.எஸ்.தான் என்பதை பலர் மறந்திருக்க மாட்டார்கள். 

94 வயதில் நின்று திரும்பிப் பார்க்கும்போது வாழ்க்கை நிறைவாகத்தான் இருக்கிறது என்று செல்லசாமி கூறினாலும், சில மனக்குறைகள் வருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இ.தொ.கா.தன்னை உதாசீனம் செய்துவருகிறது, யாருமே தன்னைப் பற்றி விசாரிப்பதும் இல்லை என்று அவர் நினைக்கிறார். இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவரை ஒரு முறை சென்று பார்த்து பேசி வந்தால் அது அவருக்கு மன நிறைவைத் தரும். இடையே கசப்புணர்வுகள் ஏற்பட்டாலும் கட்சிக்காக கடுமையாக உழைத்த தலைவர் தொண்டமானுக்கு தோள் கொடுத்த, முன்னாள் இ.தொ.கா பொதுச் செயலாளரைச் சென்று பார்த்து நலன் விசாரிப்பதால் ஒன்றும் குறை வந்துவிடப் போவதில்லை. இரண்டாவதாக, தன்னுடன் தோளோடு தோள் நின்றவர்களும் உதவிகள் பெற்றவர்களும் திரும்பியும் பார்க்கிறார்கள் இல்லையே என்ற ஆதங்கமும் அவரிடம் உள்ளது.

அவரை எவ்விதக் குறையுமின்றி பார்த்துக் கொள்கிறார் திருமதி வேலம்மாள் செல்லசாமி. உணவு ஊட்டி விடுவது, மருந்துகளை எடுத்துத் தருவது, ஆஸ்பத்திரிக்கு அவ்வப்போது அழைத்துச் செல்வது என்று சகலவற்றையும் அவர் செய்வதால், தற்போது குழந்தை போலாகிவிட்ட செல்லசாமிக்கு பராமரிப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கு நெருக்கமானவர்கள் அவரைச் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தால் அதுவே அவர் மனதுக்கு டொனிக் ஆக அமையும் என்பதை அவருடன் கழித்த பொழுதுகளில் இருந்து உணர முடிந்தது.

அமைச்சர் திகாம்பரம் தன் முதல் பாராளுமன்ற உரையில் தன்னைப்பற்றி குறிப்பிட்டதாகச் சொல்லி மகிழ்ச்சி அடைகிறார் செல்லச்சாமி. அமைச்சர் திகாம்பரம் தான்  அமைக்கும் பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு மலையகத்துக்கு சேவையாற்றியவர்களின் பெயர்களை சூட்டி வருகிறார்.

அவர் செல்லசாமி புரம் என ஒரு வீட்டுத்திட்டத்துக்கு பெயர் சூட்ட வேண்டும். இது எமது அன்பான வேண்டுகோள்!

உரையாடியவர் : அருள் சத்தியநாதன்
புகைப்படங்கள் : மணி ஸ்ரீகாந்தன் 

Comments