நாள், கோள், நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள், நற்பலன்

மேஷம் 

அன்பார்ந்த மேஷ ராசிக்காரர்களே, என்னதான் கவனத்துடனும், நுணுக்கமாகவும் பேசி முயன்றாலும் ஏன் இப்படித் தோல்விகளாகவும், வீண் விரயங்களாகவும் முடிகிறதே என்று கவலைப்பட்டுப் பிரயோசனம் இல்லை. தற்போது கிரகங்கள் சாதகமான  நிலையில் இல்லாததால் உங்கள் அபார மூளையின் சக்தி இன்னும் கொஞ்சக் காலம் எடுபடாமல்தான் போகும். உங்களை எதிர்த்து இயங்கும் சக்தியானது பலமாக இருப்பதால் விட்டுக் கொடுத்து, காத்திருந்து காரியங்களைச் சாதிப்பதே உத்தமமாகும். வியாபாரிகளுக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்காது. வருமானங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். தொழில் புரிபவர்கள், உத்தியோகங்கள் பார்ப்பவர்கள் நிதானத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல் படுவதே நல்லது. தம்மைச் சுற்றி எதிரிகளின் வலைகள் பின்னப்பட்டிருக்கின்றன என்ற உணர்வு, மனதில் ஆழப் பதிந்து இருப்பதே அவசியம்.

ரிஷபம்

திரும்பிய பக்கமெல்லாம் வெற்றித் திருமகளின் புன்னகையே உங்களுக்குத் தெரிய வாய்ப்புகள் அதிகம். அதிலும், இளம் வகுப்பினர்களுக்கு எல்லாம் சுந்தர மயமாகவே விளங்கும். காதல், கல்யாணம் என்றேல்லாம் பேச வரமாட்டார்கள், செய்து முடிக்கவே முயல்வார்கள், உடனே உடன்பட்டுவிட்டுங்கள். காலம் தாழ்த்தாதீர்கள். வியாபாரிகளுக்கு பல புதிய வாய்ப்புகள் எதிரே தென்படும். பொருளாதார உதவிகள் வலிய வந்து சேரும். லாபங்கள் குவிக்கவும், சேமிக்கவும் உதிய உத்திகள் உதிக்க மிகுந்த உற்சாகத்துடன் செயலில் இறங்குவீர்களானால் வெற்றிகள் நிச்சயமே. தொழில் புரிவோர், பதவிகள் வகிப்போர் தாராளமாக தங்களது முயற்சிகளை, அவைகள் எதுவாயினும் தேவையான இடங்களில் முன்வைத்தால் சாதகமான பதிலைப் பெறலாம்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, துன்பங்களும், தொல்லைகளும், தோல்விகளும் வந்தாலும் கவலையில்லை, ஆனால் அவைகள் இவ்வளவு வேகமாகமாக மூச்சு விடக்கூட நேரம் தராமல் வருகிறதே என்று தடுமாறவேண்டாம். வருகின்றவைகள் வந்து விரைவில் முடிந்து போய்விடத்தானே போகின்றன? ஏதோ கிடைத்துக் கொண்டிருந்த சில நன்மைகளும், புதன் கிழமைக்குப் பின் வறண்டு போக வாய்ப்புகள் தென்படுகின்றன. எதற்கும் எச்சரிக்கையாய், யாருக்கும் பண விஷயங்களில் வாக்குறுதி கொடுத்து விடாதீர்கள். பொல்லாப்புகளும், நோய்களும் போட்டி போட்டுக் கொண்டு உங்களை ஒரு கை பார்க்க முயலும். அசந்து விடாதீர்கள். உறவுகளும், குடும்பமும் காட்டும் சலசலப்புகளை காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, சில காரியங்கள் சரி வருகின்றன, பல விஷயங்கள் காலை வாரி விடுகின்றனவே என்று முணுமுணுக்காதீர்கள். சிக்கல்கள்,விரயங்கள், அலைச்சல்கள் இருந்தாலும் உங்களுக்கு இப்போது குரு பகவானின் அருள் மிகப் பிரகாசமாக அமைந்துள்ளது. ஒன்பதாம் பார்வையான, அருட்பார்வை கிடைக்கப் பெற்ற நீங்கள் தயங்குவதோ, தடுமாறுவதோ இல்லாமல் முன்னோக்கி அடியெடுத்து வைத்தால் வெற்றிகளைத் தவிர வேறொன்று வராது. அவை பணம், பொருள், வீடு, வாகனம், காதல், கல்யாணம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். திட்டங்கள் தீட்டுங்கள், சாதனைகளுக்குச் சொந்தக்காரராய் மாறுங்கள். வியாபார விருத்தி, புதிய முதலீடுகள், துணிந்து பெரிய வணிகத்தில் ஈடுபடுதல் என்பன பலிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, சிதைவுகளும், சேதங்களும், வீண் பழிச் சொல்லும் நிற்காதா என்று யோசித்துப் பிரயோசனம் இல்லை. வருபவைகள் வந்துதான் தீரும். பெரிய சிறப்புடன் தொழில் நடக்காவிட்டாலும், சுமாரான லாபங்களும், கையைக் கடிக்காமல் வாழ்க்கையும் நடக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டுச் சலசலப்புகளை மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.  எதற்கும், யாருக்கும் வாக்குறுதிகளையும் அளிக்காதீர்கள். அரச உத்தியோகத்தவர்கள், அதிகாரம் சற்று உயரும், வியாதிகளும் சேர்ந்தே வரும். வேலை சாப்பாடு, தூக்கம் என்று நிம்மதியைக் கவனியுங்கள். வேறு எதிலும் தலையிட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதே பிரதானம். பெண்களே, குடும்பப் பிரச்சினைகளைச் சமாதானமாகத் தீர்க்க முயலுங்கள், விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, கவலைகள் படாமலும், களைப்படையாமலும் காரியங்களிலேயே கண்ணாயிருக்கும், தீரம் மிகுந்த அன்பர்களே, உங்களுக்கு சவால் விடும் வகையில் காலம் நடக்கிறதே என்பதுதான் ஆச்சரியமான விஷயமாகும். தொழில் என்று பார்த்தால் அதை நடத்துவது என்று சொல்வதைவிட நகர்த்துவதே கஷ்டமான காரியமாய் ஆகிவிட்டது. பொல்லாப்புகளும், பொய்க் கதைகளும் நன்றாகப் பரவி விடுகிறது. உங்களை விளங்கிக் கொண்டவர்கள் போல் நடிக்கிறார்களா, நம்புகிறார்களா என்பதும் சந்தேகமாகவே தோன்றும். இந் நாட்களில் குடும்பத்தில் மூத்த அங்கத்தினர்களும் முடிந்த அளவு விலகி நின்று துன்பங்கள் தருவார்கள். கண்ணையும் காதையும் பொத்திக் கொள்வது மட்டும்தான் வழியாகும். உத்தியோகங்கள், பதவிகளில் உள்ளவர்கள் உள்ளே போய் உட்கார்வதும், தனது வேலை, தானுண்டு என்றிருப்பதே சிறந்ததாகும்.

துலாம்

துலா ராசி அன்பர்களே, உங்களை விட்டு விலகி இருந்தவர்கள், இப்போது உங்களைப் புரிந்து கொண்டு தேடி வருகிறார்கள். வலிமையான நட்பை எதிர்பார்த்து நின்றாலும் அவற்றால் உங்களுக்கு அதிக லாபங்கள் ஏற்படப் போவதில்லை. மிக வேகமாகச் செல்லும் கால ஓட்டத்தில் கிடைக்கும் நன்மைகளை அறுவடை செய்து கொள்வதே புத்தி சாலித்தனமாகும். உதவிகள் செய்ய வேண்டும் என்று நேரத்தை வீணடிப்பது நல்லதல்ல. தொழில் சம்பந்தமாகப் புதிய ஒப்பந்தங்கள், அல்லது ஏற்பாடுகள் செய்வதில் கவனமாக இருங்கள். திருமணத்திற்காகக் காத்திருந்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் திடீர் சம்பந்தங்கள் வரக் கூடும். நிதானமாக நல்ல இடங்களைத் தெரிவு செய்யலாம். உத்தியோகத்தர்களும், பதவிகள் வகிப்பவர்களும் கிடைக்கும் சாதகமான சந்தர்ப்பங்களைக் கவனமாக உபயோகித்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, எதைச் செய்வது, எதைக் கை விடுவது, எங்கே போவது என்று வழிவகைகள் அறியாமலும், புரியாமலும் தடுமாறும் சூழ்நிலையில் சிக்கிக் தவிக்கும் நிலைதான் இப்போது. சிந்தனையில் தெளிவும், உறுதியும் இல்லாததால், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை அடைய முடியாதுள்ளது. சொன்ன சொல்லுக்கு அதிகாரமும் கிடைக்க வில்லை, மதிப்பு மரியாதையும் இல்லாத காலமாகிவிட்டது. எதற்கும் எங்கேயும் நுழைவதற்கும் மனதில் போதிய தைரியம் இல்லை. தொழிலிலும் தொந்தரவுகள், குடும்பத்திலும் குழப்பங்கள், உதவி செய்யக் தக்க உறவினர்களைத் தேடிக் கூட கண்டு பிடிக்க முடியாமல் போகிறது. தொழிலிலும், பதவிகளிலும் உள்ளோர்களுக்கும் தகுதிக்கேற்ப கிடைக்க வேண்டிய மதிப்ப மரியாதைகள் இருக்காது. பதவிக்கேற்ற பொறுப்புகள் மறுக்கப்பட்டு ஒதுக்கப்படுவார்கள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், இடி மேல் இடி விழுந்தால் எதுவும் எரியும் என்பார்கள். ஆனால் தாங்களோ எதற்கும் அசைந்து கொடுக்காத மாபெரும் மனிதர்களாக உலா வருகிறீர்கள். தாங்கிக் கொள்ள முடியாக இன்னல்கள் தலையில் குவிந்திருக்க, உறவுகளும், குடும்பமும் ஒத்துழைக்காமல், புரிந்து கொள்ளாமல் முரண்டு பிடிக்க, சுமை தாங்கியாக, வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் கௌரமாக வாழும் பெரிய மனிதர்கள் ஆவீர்கள். இது தனுசு ராசிக்காரர்களுக்கு மட்டுமே உரிய மிக உயர்ந்த கொடையாகும். இந்தத் தகைமையானது உங்களது உயர்ந்த நிலையை எப்போதும் காத்துக் கொள்ள உதவும். தொழிற் தோல்விகள் இந்த வார நடுப் பகுதியில் இருந்து முடிவுக்கு வரத் தொடங்கும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே, தொழில்கள் நடக்கவும், நல்ல படியாக வருமானங்கள் வரவும் இருக்கிறதே இது போதுமே என்று சொல்லிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் உங்களுக்கு உண்டு. மேலதிகமாக இப்போது செலவுகளும் கட்டுக்குள் வரும் போல் தெரிவதனால் மிகுந்த சந்தோஷம் கொண்டிருக்கிறீர்கள். உடல் சௌக்கியம் நன்றாக வரும், வந்த சிறு பிணி தானாக விலகும். புதன் கிழமைக்கு மேல் பல சுப செய்திகள் வரக் காத்திருக்கின்றன. அரசாங்க சமாச்சாரங்கள் உங்களுக்கு சகாயமாக முடிய சந்தர்ப்பங்கள் உண்டு. மேலதிகாரிகளின் அனுசரனையுடன் பிரச்சினைகளைத் தீர்த்துக் கட்டலாம். அரச உத்தியோகத்தர்களுக்கு சுப நேரம். காத்திருந்த பல விஷயங்களை இப்போது சாதித்துக் கொள்ளலாம். உயர் அதிகாரிகளும், அரசும் வளைந்து கொடுக்க, தேவையானவைகளைத் துணிவுடன் முன் வைக்கலாம்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, சிக்கல்கள், சிரமங்கள் என்று சொல்லிக் கொண்டே ஏராளமாய்ப் பணம் பண்ணும் வித்தையை மறைமுகமாய்ச் செய்யச் சந்தர்ப்பங்கள் வாய்க்கும். வீடு, காணி வாங்க முயலும் போது கையிருப்பு அதிகம் என்பது தெரியத்தானே போகிறது. இடம் மாற்றம், தொழில் மாற்றம் என்றெல்லாம் பேசாவிட்டாலும் அடி மனதில் உதிக்கும் ஆசைகளை நிறைவேற்றத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே உண்மை. எதிர் பாராத பொருளாதாரச் சரிவுகள் வந்து விட்டால், என்ன செய்வது என்ற தேவையற்ற பயமும் உண்டாகும். தேவையானவைகளை வாங்கித் தரவில்லை என்ற குற்றச் சாட்டும், குடும்பத்தில் சலசலப்பும் அதிகமாகவே இருக்கும். உத்தியோகம் பார்க்கும் அன்பர்கள் வாய்விட்டு வாக்குறுதிகள் கொடுக்காதிருப்பது நல்லது.

மீனம்

மீன ராசி அன்பர்களே, வருவது வரட்டும், வெல்லப்போவது நான்தான் என்று ஆக்ரோஷமான முடிவுகளை எடுக்கத் துணிந்து விட்டீர்கள். மனம் சுறுசுறுப்பாகப் பல கட்டளைத் தொடர்ந்து தந்த வண்ணமே இருக்கிறது. பல கோணங்களில் நான் பின் தங்கிவிட்டேன் என்ற மனேபாவம் இப்போது வேகம், வேகம் என்று விரட்டுகிறது. எல்லாமே சாதகமான சூழல் போல்தான் படுகிறது. குடும்ப நண்பர்களும், உறவுகளும் முழு மனத்துடன் ஒத்துழைப்பைத் தருவதற்கு முன்னிற்பதும் சாதகமான விஷயம்தான். முடிவுகளை விடிவுகளாக மாற்ற தீர ஆலோசித்து எடுக்கும் செயல்களே காரமாய் அமையும். அது உங்கள் கைகளில் தான் தங்கி இருக்கிறது. பதவிகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள் இயன்ற அளவு தமது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Comments