பகுத்தறிவாளராக விளங்கிய மருத்துவர் கார்லோ | தினகரன் வாரமஞ்சரி

பகுத்தறிவாளராக விளங்கிய மருத்துவர் கார்லோ

செப்டம்பர் 02ஆம்  திகதி தனது 86 வயதில் காலமான கார்லோ பொன்சேகா பற்றி இலங்கை மருத்துவ  சபையின் தலைவர் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் கொல்வின் குணரத்னவின் நினைவுகள்

எனக்கு காலோவுடன் முதலில் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது  நாம் கல்வி கற்ற கொழும்பு மருத்துவ பீடத்தில் அல்ல. கார்லோவுக்கு MBBS  பரீட்சையில் முதல் தரத்தில் பட்டம் கிடைத்தது. அவரது குழுவில்  கார்லோவுக்கும் மற்றொருவருக்குமே இவ்வாறு முதல் தரத்தில் பட்டம் கிடைத்தது. 

அவர் கொழும்பு மருத்துவ கல்லூரியில் இருந்த காலத்தில் தங்கியிருந்தது  மருத்துவ மாணவர்களுக்குரிய விடுதியிலாகும். கொழும்பு கேரி கொலேஜ்ஜூக்கு  அருகில் இருந்த மூன்று நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில்தான் அந்த  தங்குமிடம் இருந்தது.  

முதல் தரத்தில் பட்டம் கிடைத்ததால் அந்தக் காலத்தில்  பேராசிரியர் ராஜசூரியவின் வார்ட்டில் கார்லோவுக்கு ஒரு வருட வதிவிட  வாய்ப்பு கிடைத்தது. அந்த வார்ட்டில் வதிவிட பயிற்சி பெறும் வாய்ப்பு  கிடைப்பது முதல் தரத்தில் பட்டத்தைப் பெறுபவர்களுக்கு மாத்திரமே. அவர்  வதிவிடப் பயிற்சியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில்தான் நான் முதன் முதலில்  கார்லோவைச் சந்தித்தேன்.

முதல் தர பட்டத்தைப் பெறும் ஒருவரை நாம் கடவுளாகவே  கருதுவோம். அன்று நான் போய் அவரைச் சந்தித்து கைகொடுத்து பிரார்த்தனை  செய்தேன்.  கார்லோ முதலில் பணியாற்றியது பிங்கிரிய அரச வைத்தியசாலையில்.  அங்கு பல வருடங்கள் பணியாற்றினார். அவரது காதலியான பர்ளியை திருமணம் செய்து  கொண்டது அந்த சமயத்தில்தான். வைத்தியசாலையில் பணியாற்றுவதை விட அவரது  விருப்பமாக இருந்தது மருத்துவ பீடத்தில் இணைவதே என்பது எனது கருத்தாகும்.  காரணம் கார்லோ பொன்சேகாவும் நானும் பின்பற்றிய ஒருவர்தான் பேராசிரியர் சேனக  பிபிலே.  

எடின்பரோ பல்கலைக்கழகத்தினால் கலாநிதி பட்டம்  

உலகில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மிகவும் பழைமைவாய்ந்த,  ஸ்கொட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கலாநிதி  பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பு கார்லோவுக்கு கிடைத்தது.  பட்டப்படிப்பை நிறைவு செய்து கொண்டு இலங்கைக்கு வந்ததன் பின்னர் கொழும்பு  மருத்துவ பீடத்தின் உடலியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராக அவருக்கு  நியமனம் கிடைத்தது. நான் MBBS பட்டத்தைப் பெற்றுக் கொண்டது 1962ம்  ஆண்டிலாகும்.  

எம்மிருவருக்கும் இருந்தது கல்வி நடவடிக்கைகள் துறையில்  செயற்படுவதற்கான ஆர்வமாகும். கல்வி போதிப்பதற்கும் எமக்கு மிகுந்த ஆசை  இருந்தது. 1969ம் ஆண்டில் மருத்துவ பீடத்தின் ஜூனியர் லெக்சரராக நியமனம்  பெற்றேன். கார்லோவும் நானும் மிக நெருக்கமாகியது அந்தக் காலத்தில்தான்.  அந்தக் காலத்தில் கார்லோ எனக்கு ஏராளமான விடயங்களைப் போதித்தார். அவற்றை  வேறு எவராலும் கற்றுக் கொடுக்க முடியாது. அவரால் மாத்திரமே கற்றுக் கொடுக்க  முடியும். அதற்கான காரணம் அவர் நடைமுறையில் அவற்றைத் தெரிந்திருந்ததுதான்.   

மருத்துக் கல்வி தொடர்பில் மிகச் சிறப்பான அறிவு காலோவுக்கு  இருந்தது. வைத்தியர் ஒருவராக நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எமக்கு  கற்றுத் தந்தது கார்லோவாகும். அந்த சட்டதிட்டங்கள் பற்றிய புத்தகங்கள்  இருக்கின்றன. எனினும் கார்லோ வைத்திய தொழிலைப் பற்றி ஒரு வசனத்தைக்  கூறினாலும் அதில் அனைத்தும் உள்ளடங்கியிருக்கும். ஏதேனும் ஒன்றைச் சொல்லித்  தரும் போது மனதில் ஆழமாகப் பதியும் வகையில் சொல்லித் தருவதற்கு அவருக்கு  புதுமௌன ஆற்றல் இருந்தது.  

சில விரிவுரையாளர்கள் தமது விரிவுரைகளுக்கு வருவோரை  குறித்துக் கொள்வார்கள். கார்லோ அவ்வாறு மாணவர்களின் வருகையினைக்  குறித்துக் கொள்வதில்லை. அனைத்து மாணவர்களும் அவரது விரிவுரைகளுக்கு  வருவார்கள். மாணவர்கள் எவ்வித சத்தங்களும் இன்றி அமைதியாக கார்லோவின்  விரிவுரையினைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவரது விரிவுரைகளில் நகைச்சுவை  கலந்திருக்கும்.  

ஆங்கில மொழியை அவர் எனக்கு கற்றுத் தந்தார். நான் கல்வி  கற்றது றோயல் கல்லூரியிலாகும். அந்தக் காலத்தில் எமக்கு கொஞ்சம் ஆங்கிலம்  தெரியும் என நினைத்துக் கொண்டிருந்தோம். எனினும் கார்லோவிடமிருந்து பெற்ற  ஆங்கில அறிவு மிகவும் சிறப்பானது. விரிவுரை மண்டபத்தில் எவ்வாறு விரிவுரை  நிகழ்த்த வேண்டும் என போதித்தார். அறிவு இருந்தாலும் மாணவர்களுக்கு  புரியும் மொழியில் விளங்கப்படுத்துவது, அவர்களது கேள்விகளுக்கு பதில்  வழங்குவதற்கு விஷேட திறமைகள் இருக்க வேண்டும். எனது விரிவுரைகளில் கார்லோ  மாணவர்களோடு அமர்ந்திருப்பார். எனது விரிவுரைகளில் இருக்கும் குறைபாடுகளைக்  குறித்துக் கொண்டு வந்து அவற்றை எனக்குச் சொல்லித் தருவார். சில  நேரங்களில் அவர் மிகவும் கண்டிப்புடன் சொல்லித் தருவார். அப்போது கோபமும்  வரும். அந்நேரங்களில் எம்மை விட மூத்தவர் என்பதால் பொறுத்துக்  கொண்டிருப்பேன்.  

ஆச்சரிப்பட வேண்டாம். ஆங்கில மொழியைப் போன்று சிங்கள மொழியை  எனக்கு கற்றுத் தந்ததும் அவரேதான். எனக்கு அவற்றைச் சொல்லித் தருவதற்கு  முன்னர் அந்த இரண்டு மொழிகள் தொடர்பில் அறிவு இருந்தது. எனினும் சிறப்புத்  தன்மை இருக்கவில்லை. அந்த மொழிகளில் புலமை வந்தது கார்லோவிடம் கற்றதன்  பின்னராகும். நான் பத்திரிகையொன்றில் எழுதுவதை நீங்கள் அறிவீர்கள். அவ்வாறு  எழுதுவதற்கான ஆற்றல் கிடைத்ததும் கார்லோவிடமிருந்தாகும். அவை பணத்தைச்  செலவு செய்தோ, புத்தகங்களிலிருந்தோ பெற்றுக் கொள்ள முடியாத விடயங்கள்.  

சுமார் 60 ஆயிரம் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்  

பட்டப் பின்படிப்பு மருத்துவ நிறுவனத்தின் மாணவர்களுக்கும்  கார்லோ விரிவுரை நிகழ்த்தினார். பல வருடங்களுக்குப் பின்னர் நானும் அவரது  அந்த வழியில் பயணித்தேன். பட்டப்பின் படிப்பு பட்டதாரிகளுக்கு கார்லோ  வழங்கிய சேவைகளுக்காக கெளரப் பதவி ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டது.  பரீட்சையில் தோற்றி சித்தியடைவதை விட அவ்வாறு கிடைத்த அந்த பதவி மிகவும்  பெறுமதியானது. College of General Practitioners of Sri Lanka  நிறுவனத்திலிருந்தும் கார்லோவுக்கு கெளரவப் பதவி ஒன்று கிடைத்தது. அது  அனைவருக்கும் கிடைக்கக்கூடிய விருது அல்ல. சில காலங்கள் அந்த  நிறுவனங்களுக்குச் செய்த சேவையினை மதிக்கும் வகையிலேயே இப்பதவிகள்  வழங்கப்படுகின்றது.  

கார்லோ நாற்பது வருட காலத்தில் மருத்து பீட மாணவர்கள் 48  ஆயிரம் பேருக்கு போதித்திருக்கின்றார். இத்தொகை இதனை விட கூடுமே தவிற  குறையாது. அவர் கற்பித்த பட்டப் பின்படிப்பு மாணவர்களின் தொகை 12ஆயிரம்  அளவில் இருக்கும். இதனடிப்படையில் அவர் மொத்தமாக சுமார் 60ஆயிரம்  மாணவர்களுக்கு கற்பித்திருக்கின்றார்.  

1971ம் ஆண்டில் நான் பட்டப் பின்படிப்பை மேற்கொள்வதற்காக  இங்கிலாந்து சென்றேன். இதனால் சுமார் மூன்று வருடங்கள் அளவில்  கார்லோவிடமிருந்து விலகியிருந்தேன். எனினும் நாம் கடிதங்கள் மூலம்  தொடர்ந்தும் தொடர்பில் இருந்தோம்.  

பல்வேறு விடயங்கள் தொடர்பில் கார்லோவுக்கு நிபுணத்துவ அறிவு  இருந்தது. அந்த நிபுணத்துவ அறிவினை விட அவரது உள்ளம் அந்த விடயங்களில்  இருந்தது.  

பேராசிரியர் சேனக பிபிலேவினால் எனக்கும் கார்லோவுக்கும்  இன்ஸ்பிரேஷன் கிடைத்தது. கார்லோ பொன்சேகா லங்கா சமசமாஜ கட்சியின் முழு நேர  அங்கத்தவராகச் செயற்பட்டார். கட்சியின் மத்திய குழுவிலும், வாக்களிப்பு  குழுவிலும் அங்கத்துவத்தை வகித்தார். அவர் மரணிக்கும் வரையிலும் லங்கா  சமசமாஜ கட்சியில் நம்பிக்கைமிக்கவராக இருந்தார். ஏனையவர்களைப் போன்று  கட்சிக்கு கட்சி தாவவில்லை. தனக்கிருக்கும் கருத்துக்கு மதிப்பளித்துச்  செயற்பட்டார்.  

விஜய குமாரதுங்க, சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்து  ஸ்ரீலங்கா மக்கள் கட்சியை உருவாக்கினார். நானும் அந்தக் கட்சியின்  அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டேன். விஜயகுமாரதுங்கவின் தேர்தல்  கூட்டங்களிலும் நாம் பேசியிருக்கின்றோம். நானும் கார்லோவும் வடமத்திய  மாகாணத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சென்றது எனக்கு நன்கு  நினைவில் உள்ளது. எனது காரிலேயே சென்றோம். நாம் அங்கு பிரசார மேடையில்  பேசினோம். வாக்குகள் எண்ண ஆரம்பிக்கும் போது நாம் வீட்டுக்குச் சென்றோம்.  நாம் வீட்டுக்குச் செல்லும் போது நாம் பிரதிநிதித்துவப் படுத்திய தரப்பினர்  தோல்வியடைந்திருந்தனர்.  

லங்கா சமசமாஜ கட்சி மற்றும் கொமியுனிஸ்ட் கட்சியுடன் எமக்கு  மிகுந்த நட்புறவு இருந்தது. இதனால் நாம் அவர்களது கூட்டங்களுக்குச்  செல்வோம். அவர்கள் எமது கூட்டங்களுக்கு வருவார்கள்.  

கார்லோவின் அரசியல் பேச்சுக்கள் அபூர்வமானவை. கூட்டங்களில்  எனது பேச்சு முடிந்ததும் ஓரளவுக்கு கைதட்டல்கள் கிடைக்கும். கார்லோவின்  பேச்சு முடிவடைந்ததும் மக்கள் சிரிப்பார்கள். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு  கைதட்டுவார்கள். இதிலிருந்து யார் சிறந்த பேச்சை நிகழ்த்தினார்கள் என்பதை  தெரிந்து கொள்வோம்.  

போதைப் பொருள் மற்றும் புகைத்தல் தொடர்பான தேசிய அதிகார  சபையின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டதும் கார்லோவாகும். சுகாதார  அமைச்சே அவருக்கான நியமனத்தைச் செய்தது. எமது நாட்டில் மதுபான பாவனை  மற்றும் புகைத்தலைத் தடுப்பதற்கு கார்லோ அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.  சுகாதார அமைச்சின் மூலமாகவும், காலோவே பாடசாலைகளுக்கும், சில சில  நிறுவனங்களுக்கும் சென்று செயலமர்வுகளை பாரிய சேவைகளைச் செய்தார். அதே  போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவராகவும் பல வருடங்கள்  அவர் செயற்பட்டார்.  

10 நாட்கள் பல்கலைக்கழகத்தில் தீ மிதிப்பு  

கார்லோ ஈப்ரஹம் டீ.கோவூரின் பகுத்தறிவாளர் சங்கத்தின் முன்னணி அங்கத்தவரானார். காலோ பொன்சேகாவே எனக்கு பகுத்தறிவுவாதம் என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை தெளிவு படுத்தினார். அதாவது பகுத்தறிவுவாதியாவதற்கான முக்கியத்துவத்தைச் சொல்லித் தந்தது கார்லோவாகும். பகுத்தறிவுவாதக்   கருத்துக்கள் இன்றி, எந்தளவுக்கு வார்த்தைகள் வெளிப்படுத்தப்படுகின்றன  என்பது அந்தக் கருத்தினைத் தெரிந்து கொண்டதன் பின்னரே எனக்குத் தெரிந்தது.  ஏப்ரஹாம் கோவூரின் கூட்டங்கள் சிலவற்றிற்கும் நான் கார்லோவுடன்  சென்றிருக்கின்றேன்.  

தீமிதித்தல் அற்புதமல்ல என்பதைக் காட்டுவதற்கு முயற்சி  மேற்கொண்டது கொழும்பு மருத்துவ பீடத்தின் உடலியல் துறையின் விரிவுரை  மண்டபத்திலாகும். நாம் அதில் கலந்து கொண்டோம். கார்லோ தீமிதிப்புக்குப்  பயன்படுத்தப்படும் விறகுகள் என்ன என்பதைத் தேடினார். அந்த விறகுகளே  எரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு  தீமிதிக்க முடியாது என்றும், மாணிக்க கங்கையில் குளித்ததன் பின்னர் இதில்  ஈடுபட வேண்டும் என்றுமே நம்பிக்கை இருந்தது. அதே போன்று மதுபானம்  அருந்திவிட்டும் தீமிதிப்பது தடை செய்யப்பட்டிருந்தது.  

விரிவுரை மண்டபத்தில் தீமிதிப்புக்கான குழி அமைக்கப்பட்டது.  அதில் விறகுகள் நிரப்பப்பட்டன. வெப்பம் அளவிடப்பட்டது. தீமிதிப்பில் கலந்து  கொள்ள இருந்தவர்களுக்கு மதுபானம் சிறிதளவில் அருந்தக் கொடுக்கப்பட்டது.  மாட்டிறைச்சிகளும் இரண்டு மூன்று துண்டுகள் உண்ணக் கொடுக்கப்பட்டன. இனி  தீயில் இறங்கச் சொன்னதும் அவர்கள் தீயில் இறங்கினார்கள். ஒருவருக்கும் தீ  சுடவில்லை. இந்த தீமிதிப்பு பத்து நாட்கள் தொடர்ந்தும் இடம்பெற்றது.  அந்நாட்களில் மருத்துவ பீடத்தில் கண்காட்சியும் இடம்பெற்றது. 

பார்வையாளர்கள் வந்தது கண்காட்சியைப் பார்ப்பதற்கு அல்ல  தீமிதிப்பை  பார்ப்பதற்கேயாகும். ஊடகங்களும் வருகை தந்திருந்தன. பீபீசி  நிறுவனத்தினாலும் நிகழ்ச்சி ஒன்று செய்யப்பட்டது. குளித்து விட்டே  தீமிதிப்பு செய்யப்பட்டது. தண்ணீருடனேயே இறங்கினார்கள். மற்றது இறங்குவதும்  ஒரு முறையிலாகும். விஞ்ஞான ரீதியில் கார்லோ அதனைக் காட்டினார். இந்தத்  தீமிதிப்புக்கு பாரிய எதிர்ப்புக்கள் வந்தன. தொலைபேசியில் கார்லோவை  திட்டினார்கள்.  

களனி பல்கலைக்கழத்தின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக பல  வருடங்கள் கார்லோ செயற்பட்டார். அன்று வட கொழும்பு தனியார் மருத்துவ  கல்லூரி தொடர்பில் சட்டரீதியான குழப்பங்கள் இருந்தன.

அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. முதல் தடவையாக அந்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக நியமனம் பெற்றது கார்லோ பொன்சேகாவாகும். அந்தக் காலத்தில் மருத்துவக் கல்வி தொடர்பில் பாரிய சர்ச்சைகள் இருந்தன. எனினும் அவற்றை வெற்றிகரமாகத் தீர்த்து வைப்பதற்கு கார்லோ பொன்சேகாவால் முடிந்தது. எந்த தரப்பினருக்கும் பக்கச்சார்பாக செயற்படாமல் கார்லோ நியாயமான முறையில் அந்தப் பிரச்சினையினைத் தீர்த்து வைத்தார்.  

கருத்து வேறுபாடுகள் 

வட கொழும்பு மருத்துவ கல்லூரி தொடர்பில் கார்லோவுக்கும், எனக்கும் ஒருபோதும் திருப்தியடைய முடியாத நிலை இருந்தது. அந்தக் காலத்தில் மருத்துவ மாணவர்கள், வைத்தியர்கள் ஏராளமானோர் அந்த தனியார் மருத்து கல்லூரியை எதிர்த்தார்கள். சைட்டம் பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் நான் இலங்கை மருத்துவ சபையின் ஒரு அங்கத்தவன். சைட்டம் தொடர்பில் கார்லோவுக்கு இருந்த நிலைப்பாட்டுடன் எனக்கு உடன்பாடிருக்கவில்லை. எமது நாட்டு மாணவர்களைப் பற்றியே நான் பேசினேன். இலங்கை மருத்துவ சபையின் உறுப்பினர்கள் அனைவரின் முன்னால் நான் அதனைத் தெரிவித்தேன். எம்மிருவருக்குமிடையில் கருத்துவேறுபாடுகள் இருந்தது சைட்டம் பிரச்சினையில் மாத்திரமேயாகும்.  சைட்டம் மருத்துவ கல்லூரியை மூடுவதே மருத்துவ சபையின் தீர்மானமாக இருந்தது. தற்போது சைட்டம் பிரச்சனை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்கு தீர்ப்புக்களிலிருந்து தெரிவது எனது நிலைப்பாடு சரி என்ற விடயமேயாகும்.  

திருமண வீடுகளில் கண்டிப்பாக ஒலிக்கும் பாடல் 

கார்லோ ஒரு கலை ஆர்வமிக்கவர். அவர் கலையை நேசித்தார். அவருக்கு நினைவில் பதிந்திருந்த பாடல்களை எழுதியிருப்பதைப் பாருங்கள். “ரத்தரங் துவே...” பாடல் இசைக்கப்படாத சிங்கள திருமண வீடுகள் இன்று இல்லை. “ருதுறு துரு வதுலே....” போன்ற கார்லோ எழுதிய அனைத்துப் பாடல்களும் நினைவுகளில் நிறைந்துள்ளது. அவர் அதற்கான எந்தப் பயிற்சிகளையும் பெற்றிருக்கவில்லை.  

கார்லோவைப் போன்று பல்துறை ஆற்றல் உள்ள வேறு எவரையும் நான் கண்டதில்லை. அவரது மரணம் எமது நாட்டிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். மரணம் எல்லோருக்கும் பொதுவானது. அதனை யாராலும் தடுக்க முடியாது. என்றாலும் இலங்கைக்கு ஒரு வளம் இழக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆழந்த அறிவுகொண்ட  மற்றொருவரின் பெயர் என்  நினைவில் இல்லை.  

ரசிகா ஹேமமாலி
தமிழில்: - எம். எஸ். முஸப்பிர்
(புத்தளம் விஷேட நிருபர்) 

Comments