பெண்ணியவாதம்; சமூகத்துக்கு ஆபத்தானதா? | தினகரன் வாரமஞ்சரி

பெண்ணியவாதம்; சமூகத்துக்கு ஆபத்தானதா?

பெண்ணியம் அல்லது பெண்ணியவாதிகள் என்னும் பதங்கள் சமூகத்தில் பலருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்துகின்றது.

ஏன் சமூகம் போர்க்குற்றவாளிகளை விட கேவலமாக ஆபத்தானவர்களாக பெண்ணியவாதிகளை சித்தரிகின்றனர்?

பெண்ணியம் உலகத்தில் எந்த போரையும் நடத்தவில்லை, எந்த அழிவுகளையும் ஏற்படுத்தவில்லை, சித்திரவதை முகாம்களை உருவாக்கவில்லை, எந்த நாட்டு மக்களையும் குண்டு போட்டு அழிக்கவும் இல்லை, ஆயுத உற்பத்தி, விற்பனையில் ஈடுபடவுமில்லை,  ஆயுதக் குழுக்களை ஆரம்பித்து  போராட்டம் நடத்தவும் இல்லை. அப்படியாயின் ஏன் பெண்ணியவாதிகள் அல்லது பெண்ணியம் அச்சத்தை தருகிறது? ஏன் சமூகம் குற்றவாளிகளை விட கேவலமான ஆபத்தானவர்களாக பெண்ணியவாதிகளை சித்தரிகின்றனர்? காரணம் தான் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.

பெண்ணியம் அல்லது பெண்ணியவாதிகள் என்னும் பதங்கள் சமூகத்தில் பலருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்துகின்றது. அணு ஆயுதங்கள், இரசாயன குண்டுகள், கடத்தல், காணாமல் ஆக்கப்படுதல் அல்லது சித்திரவதை போன்றவற்றுக்கு இல்லாத பயம் பெண்ணியம் அல்லது பெண்ணியவாதிகள் என்றதும் பலருக்கு ஏற்படுகின்றது. இதை சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் காணலாம். அதில் ஒரு வடிவம் சமூக வலைதளங்களில் கருத்து பரிமாற்றங்கள், பின்னூட்டங்களில் பரவி காணப்படுகிறது.

பெண்ணியம் பற்றிய தவறான புரிதல்...

பெண்ணியம் என்பது அல்லது பெண்ணியவாதிகள் என்போர் ஆண்களுக்கு எதிரானவர்கள் என்ற பிழையான கற்பிதத்தை  சில பெண்ணியவாதிகள்  அடையாளப்படுத்துவதும் நடப்பதும் இதற்கு காரணமே. இவர்களும் பெண்ணியம் பற்றிய தவறான புரிதலுடன் இருப்பவர்களே.

பெண்ணியவாதிகள் ஆண்களுக்கு எதிரானவர்கள் என்ற பயம் ஏன் உருவாகிறது? குடும்ப கட்டமைப்பில் வீட்டிலுள்ள ஆணுக்கு அதாவது தாத்தா, பாட்டன், அப்பா அல்லது சகோதரன், துணைவன் போன்றவர்களுக்கு அடங்கி போக வேண்டும் என்று பெண் வளர்க்கப்படுகிறாள். ஆணும் அடக்குபவனாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கட்டுப்பாடுகள், தீர்மானங்களை அந்த வீட்டு ஆணே எடுக்கிறான். எடுக்கும்படி எதிர்பார்க்கப்படுகின்றான். அவ்வாறு ஆண் சிறந்த முடிவுகளை எடுக்காதவிடத்து அல்லது தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் அந்த குடும்பத்தை வைத்திருக்க முடியாதவன் கோழையாக ஆண்மை அற்றவனாக சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறான ஆண்களை சமூகம் மதிப்பதில்லை.

அவரவர் சுதந்திரத்தை, தெரிவை மதிக்கும் ஆணாக இருந்து துணைவியோ மகளோ சுதந்திரமாக முடிவெடுக்க விடும் ஆண்கள் சமூகத்தில் கையாலாகாதவனாக அல்லது பொண்டாட்டிக்கு பயந்தவனாக மற்றவரால் கருதப்படுகின்றான். அதாவது, ஆண் என்றால் தைரியம் அல்லது அதிகாரம் உள்ளவனாக இருக்கவேண்டும். மற்றவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆண்தான் குடும்பத்தில் தீர்மானம் எடுப்பவனாக இருக்கவேண்டும் என்று சமூகம் ஆணுக்கு கூடிய அதிகாரத்தை கொடுத்துள்ளது. ஆணுக்கு கூடிய அதிகாரம் என்றால் பெண்ணுக்கு குறைந்த அதிகாரம்தான் உள்ளது. இந்த நிலை மாறிவிடும், தங்கள் கட்டுப்பாட்டில் பெண்கள் இருக்கமாட்டார்கள், தங்களின் இருப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயமே மேலோங்கி நிற்கிறது.

அத்தோடு ஆணுக்கு அதிக அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் சமய, சம்பிரதாய முறைகள் இதை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.எவ்வளவு பொறுப்பில்லாத அப்பாவாக இருந்தாலும் தன் மகளின் திருமண நிகழ்வில் (அனைத்து மதங்களும்) மகளை மாப்பிள்ளையின் கைகளில் கொடுக்க தகப்பனையே அழைகின்றனர். இதில் இரண்டு விடயங்களை நோக்கலாம். பெண்ணை ஒரு பொருளாக உருவகித்து இன்னொருவருக்கு தாரை வார்ப்பது. இதுவும் பெண்ணை அதிகாரம் அற்றவளாகவே பார்க்கும் ஒரு முறையாகும். அப்பா இவ்வளவு காலமும் தனது அதிகாரத்தின் கீழ் இருந்த மகளை வேறொருவரின் அதிகாரத்தின் கீழ் இருக்கும்படி கை அளிப்பதாகும். அதாவது அதிகாரம் இடம் மாறுகிறது. இந்த முறை இந்து கிறிஸ்தவ, பௌத்த திருமண வைபவங்களில் காணக்கூடியதாக உள்ளது.

அதேவேளை ஆன்மீக தலைவர்களும் ஆண்களாக உள்ளனர். இவர்கள் சமூகத்தில் அதிகாரம் உள்ளவர்களாக நன்மதிப்பு பெற்றவர்களாக காணப்படுகின்றனர். இவர்களே தீர்மானம் எடுப்பவர்கள்.

ஆணுக்கு அதிகமான அதிகாரத்தை கொடுத்திருக்கும் நாட்டின் சட்டங்களும் கொள்கைகளும் பெண்ணுக்கு பாதகமாகவே காணப்படுகிறது. சட்டத்திட்டங்களில் பெண்ணுக்கு காணி அதிகாரத்தை கொடுக்கவில்லை. அதேபோல் அரசாங்கத்தின் காணி உரிமை சட்டம் கூட  ஆணின் பெயரில் தான் அரச காணிகளை எழுதிக்கொடுக்கின்றது. நிலம் என்பது அதிகாரம். அந்த அதிகாரம் பெண்ணுக்கு இல்லை.

பெண்மை, தாய்மை, கடமை, மேன்மை, கருணை என்றெல்லாம் உருவகித்து வீட்டு வேலைகளையும் பிள்ளை பராமரிப்பு இதர வேலைகளை செய்வித்து அவளின் உழைப்பை சுரண்டும் கட்டமைப்பாகும். பெண்ணை தனது அறிவை, திறனை பயன்பட விடாமல், அவளை சுதந்திரமாக பொருளாதாரத்தை ஈட்ட விடாமல் தடுக்கும் பொறிமுறையாகும். வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தாலும் கூட வீட்டு வேலைகள், பிள்ளை பராமரிப்பு போன்ற பொறுப்புக்கள் அவளின் தலையிலேயே கட்டப்படுகிறது.

மேல்குறிப்பிட்ட சில நடைமுறைகளின் வாயிலாக அதிக அதிகாரத்தை அனுபவிப்பவர்கள் ஆணாக உள்ளனர். வீடாகட்டும் நாடாகட்டும் சமய சம்பிரதாயங்கள், சட்டங்கள், கொள்கை வகுப்பு எல்லாவற்றிலும் பெண்களுக்கும் ஆணைபோல் சம அந்தஸ்து, சம வாய்ப்பும் வழங்கப்படவேண்டும், அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்று வலியுறுத்துவதே பெண்ணியம். இதுவே சமூகத்தில் அநேகமான ஆண்கள் பீதி அடைவதற்கு காரணமாக உள்ளது. யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள். பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல. ஆண்களுக்கு அதிக அதிகாரத்தை கொடுக்கும் கட்டமைப்புக்கு எதிரானது.

ஆனால் இப்போது பல ஆண்கள் இதை உணர்ந்து நடக்கின்றனர். பெண்களின் உணர்வுகளை, உரிமைகளை, தெரிவுகளை மதிக்கின்றனர். இவ்வகையான ஆண்கள் தம்மைப்பார்த்து ஆண்மை இல்லாதவன் என்று சமூகம் சொல்வதை ஐந்து சதத்துக்கும் கணக்கெடுப்பதில்லை. இவ்வாறான ஆண்கள் தன்னம்பிக்கை கூடியவர்கள். பெண்களை சகமனுஷியாக மதிப்பவர்கள். அதிகாரப்பகிர்வை ஆதரிப்பவர்கள். உண்மையான குடும்ப அபிவிருத்தி, நிம்மதியான வாழ்விற்கான சூட்சுமம் புரிந்தவர்கள். இவர்களும் எம்மோடு வாழத்தான் செய்கின்றனர். இப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையான ஜனநாயக வாதிகள்.

இவர்கள் தான் ஆரோக்கியமான குடும்பத்தை சமூகத்தை நாட்டை, நாட்டின் பொருளாதாரத்தை  கட்டியெழுப்ப கூடியவர்கள். இவர்களே நாட்டுப்பற்றாளர்கள்.

நளினி ரட்ணராஜா

Comments