வீடு தேடி வந்த லக்ஷ்மி ! | தினகரன் வாரமஞ்சரி

வீடு தேடி வந்த லக்ஷ்மி !

கடந்த 7ம் திகதி யாழ். முற்றவெளியில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா 2019 திட்டம் கோலாகல ஏற்பாடுகளுடன் ஆரம்பமானது. சிறு மற்றும் நடுத்தர வர்த்தகதுறைகளில் ஈடுபட்டிருப்போருக்கு உதவி. அவர்களை கைதூக்கி விடுவதன் மூலம் கிராம பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம். கிராம பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கு பதவி வகித்த அரசுகள் முயற்சித்த போதிலும் அவை எதிர்பார்த்த வெற்றியை அளித்ததாகத் தெரியவில்லை. இலங்கையின் சாபம், ஒரு அரசு முன்னெடுக்கும் ஒரு பலன் தரக் கூடிய திட்டத்தை அடுத்து வரும் அரசு, முன்னைய அரசினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே அதைக்கிடப்பில் போட்டுவிடுவதாக இருந்திருக்கிறது. இதனால்தான் எவ்வளவோ நல்ல திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் அவற்றின் முழுப் பலன்களையும் எம்மால் பெற்றுக் கொள்ள முடியாமற் போனது. 

யாழ். முற்றவெளியில் விரிவான ஏற்பாடுகளுடன் ஆரம்பமான என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டம் நான்கு தினங்களாக நடந்து கடந்த பத்தாம் திகதி நிறைவு பெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து குறைந்த பட்சம் இருபதாயிரம் தொழில் முனைவர்களுக்கு உதவி கைதூக்கி விடுவது இத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். 

யாழ். குடாநாடு கொஞ்சம் வித்தியாசமான சிந்தனை கொண்ட பிரதேசம். மழை வீழ்ச்சி குறைவாக இருந்தாலும், முழு இலங்கைக்கும் புகையிலை, பெரிய ​ெவங்காயம், சின்ன வெங்காயம், திராட்சை, கிழங்குகள் என்பனவற்றை விநியோகிக்கும் திறனை அப்போதே தன்னில் கொண்டிருந்தது. ஈழத்தமிழ் சினமாவை உருவாக்கியது. இலங்கையிலேயே பிராந்திய தினசரிகளை வெற்றிகரமாக வெளியிடும் பிரதேசமாக வட மாநிலமே விளங்கி வருகிறது. இதனால்தான் அரசின் இந்த என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற கடன் வழங்கும் திட்டத்தை அங்கே ஒரு விழாபோல நடத்தினார்கள் போலும். 

இக் கடன் விழாவில் வங்கிகள், ஜனாதிபதி செயலகம், பல்வேறு அரச துறை நிறுவனங்கள், ஊடகங்கள், வடபுலம் சார்ந்த சிறு உற்பத்திகளின் விற்பனைக் கூடம், சிறுவர்களுக்கான கார்னிவேல், சிற்றூண்டி உணவகங்கள், மாலையில் இசை நிகழ்ச்சிகள் என மொத்த முற்றவெளியுமே களைகட்டி நின்றது. 

ஊடகப் பிரிவில், ரூபவாஹினி, ஐ.டி.என், யாழ்.எப்.எம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், டான்டி.வி, தகவல் திணைக்களம், அரசு வெளியிட்டுத் திணைக்களம் என்பனவற்றோடு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் – வண்ண வானவில் கூடமும் அப்பிரிவில் அமைக்கப்பட்டிருந்தது. அச்சு ஊடகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே கூடமாக தினகரன் காட்சிக் கூடமே இருந்தது.  

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்காவின் மூன்றாவது தினம். மாலை மூன்றரை மணியிருக்கும். அந்த நீண்ட சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட நடைபாதையை இரண்டு இளம் பெண்கள் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். நாம் அமைத்திருந்த தினகரன் கூடத்துக்குள்ளும் வந்து பெருக்கிச் சென்றார்கள். அந்த ஊடகத்துக்கான நீண்ட கூடாரத்தின் வாசலடியில் எமது கூடம் அமைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் கூட்டி பெருக்குவதை வெளியில் இருந்துவந்த எதிர்க்காற்று பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருந்தது. எனவே அவர்களிடம் சென்று வாசலடியில் இருந்து உட்புறமாகக் கூட்டி ஒரு ஓரமாக ஒதுக்கி வைக்குமாறு கூறினேன். 

அவர்களைப் பார்க்க, கூட்டிப் பெருக்கும் பணியைத் தொடர்ந்து செய்பவர்கள் போலத்தெரியவில்லை. பார்க்க வசீகரமாகவும், தங்க ஆபரணங்களை அணிந்தும், நல்ல உடைகளுடனும் அவ் விருவரும் காணப்பட்டனர். இதை ஒரு தொழிலாகவே செய்கிறீர்களா? என்று கேட்டேன். 

“நான்கு நாட்களுக்கு ஒரு வேலை இருப்பதாக தெரிந்த ஒரு அண்ணா சொன்னார். தினமொன்றுக்கு 900 ரூபா சம்பளம் கிடைக்கிறது. அதனால்தான் வந்தோம்” என்றார் அவர்களில் ஒருவர்.  

சந்தேகம் வரவே, பெற்றோர் இருக்கிறார்களா? என்று கேட்டேன். 

“ஓம் இருக்கினம்... எங்களுக்கு தொழில் இல்ல... ஏ லெவல் செஞ்சு போட்டியிருக்கிறம்” என்று பதில் வந்தது. அவர்கள் வன்னியைச் சேர்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.  

யாழ். மாவட்டத்தில் புதிய தொழில்கள் ஆரம்பிக்கப்படுவது குறைவு என்பதாலும், அபிவிருத்திப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாலும், புதிய தொழில் முயற்சியாளர்களர்களுக்கு ஊக்குவிப்பு குறைவு என்பதாலும் படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் கிடைப்பது குதிரைக் கொம்பாகி இருக்கிறது. அப்படிப் பாதிக்கப்பட்ட இரு இளம் பெண்களைத் தான் துடைப்பங்களுடன் நான் கண்டேன். இப் பெண்களைப் போல ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் வட புலமெங்கும் தொழில் வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். 

இந்த நிதர்சனத்தை முன் வைத்தே என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டத்தை நாம் பார்க்க வேண்டும். 

இங்கே நாம் கொஞ்சம் பின் நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.  

1977ம் ஆண்டு இலங்கை தான் கை கொண்டிருந்த சோஷலிச பொருளாதார கோட்பாட்டைக் கைவிட்டு, அதாவது மூடப்பட்ட பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டு, திறந்த பொருளாதார முறைமை நோக்கி நகரத் தொடங்கியது. பெரும்கைத்தொழில் வளர்ச்சி, பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, நுகர்வு கலாசார வளர்ச்சி, ஏற்றுமதி பொருளாதார வளர்ச்சி, தராள இறக்குமதி என்பன நிதர்சனமாயின. ஆனால் இதன் விளைவாக பல உள்ளூர் தொழில்கள், இறக்குமதி பொருட்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நசிந்து போயின. உதாரணத்துக்கு 1960முதல் படிப்படியாக முன்னேறி. எழுபதுகளின் மத்திய பகுதிவரை வளர்ந்து வந்த ஈழத்து திரைப்படத்துறை, திறந்த பொருளாதாரத்தின் கீழ் வகை தொகையின்றி புதிய தென்னிந்திய திரைப்படங்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் நசிந்தே போனது. ஈழத்தமிழ் திரைப்படத்துறை நசிந்ததைப்போலவே உள்ளூர் நெசவு கைத்தொழில், பீடித்தொழில், விவசாய பொருள் உற்பத்தி, பலகாரம் மற்றும் இனிப்பு பொருள் உற்பத்தி என்பன நசிந்துபோன பல கைத்தொழில்களில் சில. பெருவணிக நிறுவனங்களின் வருகையும், அவற்றின் விவசாய முதலீடுகளும், விற்பனை வலைப் பின்னல்களும் சிறு, மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் இயக்கத்தை விழுங்கிவிட்டன. பெரு முதலாளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட அதே சமயம் உள்ளூர் கிராம பொருளாதாரத்தை காப்பாற்றி கட்டிக் காப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளா மல் விட் டதே உள்ளூர் உற்பத்திகள் முடங்கிப் போனமைக்கான பிரதான கார ணம். 1977 இன் பினன்ர் வட இலங்கையில் கிழங்கு, வெங் காய  அறு வடை நடைபெறும் தருணங்களில் வெளிநாடுகளில் இருந்து கிழங்கு, வெங்காயத்தை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு சந்தையில் அறிமுகம் செய்தார் அன்றைய வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத் முதலி. இதனால் பாதிக்கப்பட்ட வடக்கு தமிழ் விவசாயிகள் அடுத்து வந்த தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு வாக்களித்து தமது வெறுப்பை வெளிப்படுத்தியதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். 

ஜே.ஆருக்கு பின்னர் பதவிக்கு வந்த அரசுகளும் கிராம பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் சிரத்தை காட்டவில்லை. தேசிய அளவில் நிலைமைகள் இவ்வாறிருக்க, 1965டட்லி அரசில் தமிழரசு கட்சி அங்கம் வகித்தபோது அக்கட்சியைச் சார்ந்த திருச்செல்வம் போன்றோர் அமைச்சர்களாக விளங்கினர். அதன் பின்னர் வடக்கு சார்ந்த எந்தவொரு தமிழ்க்கட்சியும், டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பியைத் தவிர, அரசுகளில் இணைந்து பணியாற்றவில்லை. 

இதே சமயம் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா, அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், தற்போது ரிஷாத் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் என்பன அரசுகளுடன் தொடர்ந்து கூட்டு வைத்துக் கொண்டதால் அக்கட்சிகளினால் தாம் சார்ந்த சமூகங்களுக்கு பணியாற்றக் கூடியதாக இருந்தது. தமது சமூகங்களின் வளர்ச்சிக்கு உதவியிருப்பதோடு ஏராளமானோருக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆனால் 1968ம் ஆண்டின் பின்னர் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன அரசுகளுடன் இணைந்து தமது தமிழர் வாழ்விடங்களை அபிவிருத்தி செய்யவோ அம்மக்களின் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தி அகில இலங்கை சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதோடு தொழில்வாய்ப்புகளை தொழிலற்ற இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுக்கவோ முன்வராமல் எதிர்ப்பு அரசியலை மட்டுமே நடத்திவந்துள்ளன. இதனால் பொருளாதார ரீதியாக வடக்கு கிழக்கு மக்கள் தமது பங்கைப் பெறத் தவறியிருக்கின்றார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக இது தான் தொடர்கதையாக இருந்து வந்திருக்கிறது. மேலதிகமாக, உள்நாட்டுப்போர் வடக்கு கிழக்கு மக்களை பிய்த்து எறிந்துள்ளது. அதில் இருந்து மீள்வதற்கு அரசியல் உரிமைகள் அவசியம் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இம் மக்கள் பொருளாதார விடுதலையையும் பெறவேண்டும் என்பது உண்மையாகும். 

இந்த வகையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் வழங்கும் திட்டம் முக்கியத்துவமானது என்றே கருதுகிறோம். இத் திட்டம் சிங்களவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட, சிங்கள முதலாளிமாரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரும் ஒரு முயற்சி என்றெல்லாம் இனவாத அரசியலை முன்நிறுத்தி அரசியல் செய்யாமல் வடபுலத்தில் வாழும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை கைதூக்கிவிடும் ஒரு அரசாங்கத்தின் நடவடிக்கையாகவும், ஒரு அபிவிருத்தி திட்டமாகவும் பார்க்க வேண்டும். முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத வீடுகளை முழுமையாகக் கட்டுவதற்கான கடன், விவசாய, கால்நடை, மீன்பிடி, பனை சார்ந்த கைத்தொழில் முயற்சி என்பனவற்றில் மீதான கடன், சிறிய பாடசாலை போக்குவரத்து வானுக்கு பதிலாக பஸ் வாங்குவதற்கான கடன் வசதி, தையல், சிறுபொருள் தயாரிப்பு போன்றவற்றுக்கான கடன்வசதி என்பன இக் கடன் திட்டத்துக்குள் அடங்கும். 

இலங்கையின் வடக்கு, கிழக்கில் நுண்கடன் (Micro finanu) என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஏழைகள் இக்கடனைப் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதும் சகஜமாகி உள்ளது. அரசாங்கமே சிறு முதலீட்டாளர்களுக்கு கடன் அளித்து வட்டியின் ஒரு பகுதியை தாமே செலுத்தவும் முன்வந்துள்ளதோடு, முன்னாள் போராளிகள் மற்றும் விதவைகளிடம் பிணை கோருவதில்லை என்ற தீர்மானத்தையும் எடுத்திருக்கிறது. டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருப்பதை ஒட்டியே யாழ்ப்பாணத்துக்கு இக்கடன் சேவையை வழங்க அரசு முன்வந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் தமிழ்த் தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், நடுத்தர மற்றும் கீழ் மட்ட சிறு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் ஒரு அரசின் திட்டத்தைக் குறை சொல்லிக் கொண்டிருக்காமல் அதன் ஆக்கபூர்வமான பக்கத்தைப் பார்த்து பலன்களை அறுவடை செய்ய வட புலத்தோர் முன்வர வேண்டும். வீடு தேடி வந்த சீதேவியை துரத்தியடிப்பதால் நஷ்டம் நமக்குத்தான்! 

யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் இறுதி நாளன்று வருகை தந்திருந்தார். மேலும் மூன்று நாட்களுக்கு இந்நிகழ்வை நீடிக்கும்படி தனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தான் எதிர்பார்த்ததற்கும் மேல் வெற்றியடைந்திருப்பதாகவும் அவர் பூரிப்புடன் தெரிவித்தார். கடன்பெறத் தகுதிபெற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான கடன்கள் வழங்கப்படும் என்றார். என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா மூலம் இதுவரை நாற்பதாயிரத்துக்கும் அதிகமானோருக்கு கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் 90 பில்லியன் வரை கடன் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கு அமைக்கப்படிருந்த நிதியமைச்சின் கூடத்தினுள் பல சிறு உற்பத்தியாளர்களைச் சந்திக்க முடிந்தது. கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களைச் சேர்ந்த பாவனைப் பொருட்கள் மற்றும் உணவுகள் உற்பத்தி செய்வோரை காணமுடிந்தது. இவர்களைப் போன்றோருக்கு இலகு கடன்வசதிகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதன் மூலம் மிகத் தரமான உற்பத்திகளை வெளிக்கொண்டுவரும் உற்பத்தியாளர்களாக இவர்களை மாற்ற முடியும். 

இங்கே அமைக்கப்பட்டிருந்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன கூடத்தின் முன்பாக சிங்களத்தில் மட்டுமே பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அவசியமில்லாமல் சிங்களத்தில் அறிவிப்புகள் செய்யப்பட்டன. ஆடல்பாடல் அரங்கில் அடிக்கடி சிங்களப்பாடல்கள் இசைக்காகப்பட்டன. சிங்களம் தேசிய மொழி மட்டுமல்ல. அவசியம் அனைவரும் கற்க வேண்டிய மொழியும் கூட. இதில் மாற்றுக் கருத்து எவருக்குமே இருக்க வழி இல்லை. ஆனால் அது திணிக்கப்படுவதாக இருக்கக் கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் திணிக்கப்படுவதாக உணராமல் இருந்தால் சரி. அரச வெளியீட்டு திணைக்களத்தில் ஏராளமான நூல்கள் விற்பனைக்கு இருந்தன. அக்கூடத்தில் எப்போதும் சனக் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. ஆனால் தாம் தேடிவந்த சில நூல்கள் அங்கே தமிழில் கிடைக்கவில்லை என்று சிலர் வருத்தம் தெரிவித்தனர். சிங்கள நூல்களைக் கட்டுகட்டாக அடுக்கி வைத்திருக்க முடியுமானால் ஏன் தமிழ் மொழிபெயர்ப்புகளை வைத்திருக்க முடியாது என ஒருவர் காட்டமாகவே கேட்டார். அது நியாயமான கேள்வியாக இருந்தது. 

இங்கே சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு உணவு விடுதி அமைக்கப்பட்டிருக்கவில்லை. அம்மாச்சியை தேடியலைந்தோம் கண்ணில் சிக்கவில்லை.

ஒரு சிறிய உணவகம் மட்டுமே சில உணவுப் பண்டங்களுடன் காட்சியளித்தது. தோசை, வடை, இட்லி, பொங்கல் என்றாலும் நல்ல சைவ உணவு என்றாலும் வெளியேதான் தேடி அலைய வேண்டியிருந்தது. இரவு எட்டுமணிக்கு மேல் யாழ்ப்பாணத்தில் உணவு தேடுவது கஷ்டம். எனவே அரை வயிற்றுடன் நித்திரைக்கு செல்ல வேண்டியிருந்தது. 

இவை குறைபாடுகள். அடுத்த முறை மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்காவை நடத்தும்போது இக் குறைபாடுகளை தவிர்ப்பதற்காகவே இவற்றைக் குறிப்பிடுகிறோம்.   

அருள் சத்தியநாதன்

Comments