இராணுவத்துக்கான மாற்றுக் காணிகளை கண்டறிய மூவர் குழு | தினகரன் வாரமஞ்சரி

இராணுவத்துக்கான மாற்றுக் காணிகளை கண்டறிய மூவர் குழு

யாழ்.மாவட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸாரிடம் 3,028ஏக்கர் காணி விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும், அவற்றில் மிக விரைவில் விடுவிக்கக்கூடிய காணிகளின் விபரங்களை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளதுடன்,  மாற்றுக்காணிகள் தொடர்பில் அரசாங்க அதிபருடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ். மாவட்டத்தில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரினால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை இணங்கண்டு அவற்றை மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (14) காலை நடைபெற்றது. 

யாழ். மாவட்டத்தில் படைத்தரப்பு மற்றும் பொலிஸார் வசமுள்ள தனியார் காணிகளை மீள கையளிப்பதற்காக ஜனாதிபதியின் இந்த துரிதப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் கீழ் நேற்று நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பலாலி கிழக்கிலுள்ள சுமார் 1,800குடும்பங்களின் காணிகள் மற்றும் மயிலிட்டி பிரதேசத்தில் உள்ள 431குடும்பங்களின் காணிகள் உள்ளிட்ட யாழ். மாவட்டத்தில் படைத்தரப்பு வசமுள்ள ஏனைய காணிகள் தொடர்பிலும்; ஆராயப்பட்டது. இந்த கலந்துரையாடலில் பல முன்னேற்றமான விடயங்கள் இடம்பெற்றதுடன் இராணுவத்திற்கான மாற்றுக்காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்த மாற்றுக்காணிகள் தொடர்பில் மூன்றுபேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு இருவாரங்களுக்குள் அடையாளங்காணப்படல் வேண்டும் என்றும் ஆளுநர் அவர்கள் தெரிவித்தார். 

ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க நடேஸ்வராக்கல்லூரியின் புகையிரதப்பாதை அருகே அமைந்துள்ள காணிகளும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தளபதி இதன்போது குறிப்பிட்டார். 

இந்த கலந்துரையாடல் மிகவும் சாதகமாக அமைந்ததுடன் இதற்கு மேலதிகமாக படைத்தரப்பு , பொலிஸ் மற்றும் பொதுமக்களுடனும் கலந்துரையாடி இது தொடர்பிலான அடுத்த கட்ட கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி நடைபெறும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.  இந்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநரின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ் மாவட்ட முப்படைத் தளபதிகள், திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Comments