ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் யார்? | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் யார்?

பங்காளிக் கட்சிகளுக்கும் அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது தொடர்பில் இறுதி முடிவொன்றை எடுக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஐ.தே.மு.அரசின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையில் தீர்மானமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஐ.தே.கவின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இச்சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், ஐ.தே.கவின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் பணித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது தொடர்பில் தொடர்ந்து இழுபறி நிலை நிலவி வருகிறது. இதுதொடர்பில் இறுதி முடிவொன்றை எடுக்கவும், ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுவது மற்றும் வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கவுமே இந்த சந்திப்புக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் கட்சியும் ரணில், சஜித் ஆதரவுத் தரப்புகளென இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

இவ்வாறான பின்புலத்தில் இன்று நடைபெறும் சந்திப்பு தீர்மானமிக்கதாக அமையுமென ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments