கட்சிதாவிய ஐவரின் உறுப்புரிமை நீக்கம் | தினகரன் வாரமஞ்சரி

கட்சிதாவிய ஐவரின் உறுப்புரிமை நீக்கம்

- பாராளுமன்ற பதவியும் பறிபோகும் அபாயம்
- சட்டரீதியாக எதிர்கொள்வோம் - பௌஸி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கட்சித்தாவிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் உறுப்புரிமையை சு.க. அதிரடியாக இரத்துச் செய்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா, ஏ.எச்.எம். பௌசி, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரின் உறுப்புரிமைகளே நேற்றுமுதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பின் போது ஏ.எச்.எம். பௌசி, விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் ஐ.தே.க அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக கட்சித் தாவியிருந்தனர். எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் கடந்த மாதம் 29ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டிருந்தனர்.

இவர்கள் ஐவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சு.கவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்திருந்தார்.

செப்டெம்பர் 9ஆம் திகதிக்கு முன்னர் கட்சித்தாவியமைக்கான காரணத்தை கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன்னிலையில் தெரிவிக்குமாறும் அவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 9ஆம் திகதிவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கட்சித்தாவியமைக்கான காரணத்தை ஒழுக்காற்று குழு முன்னிலையில் தெரியப்படுத்தவில்லை.

அதன் காரணமாகவே நேற்று முதல் இந்த ஐவரின் உறுப்புரிமையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சட்டரீதியாக எதிர்கொள்வோம் 

கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியிடம் வினவிய போது,

கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நான் உட்பட ஐவர் நீக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இன்னமும் எமக்கு எவ்வித உத்தியோகப்பூர்வ கடிதங்களும் கிடைக்கவில்லை.

நான் இன்னமும் சு.கவின் உறுப்பினராகவே உள்ளேன். உறுப்புரிமைக்கான 3,000ரூபா பணத்தையும் தவறாது செலுத்தி வருகின்றேன். அவர்கள் நினைத்தவுடன் கட்சியைவிட்டு நீக்க முடியாது. பாராளுமன்ற பதவியையும் நினைத்தவுடன் பறிக்க முடியாது. இந்த விடயத்தை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளோம் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவிக்கையில்,

கட்சியின் மத்திய குழு இவர்கள் ஐந்து பேரையும் நீக்குவதென முடிவு செய்துள்ளது.

மத்திய குழுவின் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்துக்கு அறிவித்தவுடன் அவர்கள் ஐந்து பேரினதும் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுவிடும் என்பது சம்பிரதாயமென்றும் தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments