காணிகளை அடையாளப்படுத்த வடக்கு ஆளுநர் வேண்டுகோள் | தினகரன் வாரமஞ்சரி

காணிகளை அடையாளப்படுத்த வடக்கு ஆளுநர் வேண்டுகோள்

யாழ். மாவட்டத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம்  ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணி உரித்துடையவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாயினும் ‘தனியார் காணிகளை அடையாளம் காணும்’ விசேட விண்ணப்பப்படிவங்களை பெற்று அனுப்பி வைக்குமாறு வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்திலுள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஏற்கனவே யாழ். மாவட்டத்திலுள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வடக்கு ஆளுநரினால் வெளியிடப்பட்ட மீள் உரிமைகோரல் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படுகின்றன.

தனியார் காணிகளை ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் அடுத்தகட்டமாக யாழ். மாவட்டத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களிலும் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்துடையவர்கள் அறியத்தரவேண்டுமெனவும் வடக்கு ஆளுநர் அறிவித்துள்ளார்.

அவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாயின் அவர்களும் தமது காணிகளை அடையாளப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கென தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களை வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

விண்ணப்பப் படிவத்தை ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் வடமாகாண சபையின் np.gov.lk இணையத் தளத்திலும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை இணைத்து எதிர்வரும் (செப்டம்பர்) 20 ஆம் திகதிக்கு முன்னர் 'காணி கோரல்' வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி,  யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு வடமாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments