சவூதி எண்ணெய் ஆலை மீது திடீர் 'டோனர்' தாக்குதல் | தினகரன் வாரமஞ்சரி

சவூதி எண்ணெய் ஆலை மீது திடீர் 'டோனர்' தாக்குதல்

சவூதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் இரண்டு ஆலைகள் மீது நேற்று அதிகாலை, ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவூதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அரம்கோ புக்கியாக் மற்றும் குரைஸ் பகுதிகளில் உள்ளன. சவூதியிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் இந்த ஆலையிலேயே சுத்திகரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை அந்த இரு ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், அரம்கோ ஷேபா எண்ணெய் ஆலையில், இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் இடத்தில் ஏமன் போராளிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஹூதி போராளிகளும் சவூதி அரேபியா மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். கடந்த 2006ஆம் ஆண்டு, அல்கொய்தா பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தி அரம்கோ ஆலையை அழிக்க முயன்றனர்.

இருப்பினும் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது நடத்தப்பட்ட தாக்குதலையும் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என அஞ்சும் சவூதி அரசு, அதுகுறித்து தீவிரவிசாரணை நடத்துகின்றனர். இந்த தாக்குதலில் ஆலையில் இருந்தவர்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

Comments