ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்தவாரம் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்தவாரம்

தெரிவத்தாட்சி அலுவலர்கள், கட்சி செயலாளர்கள் பங்கேற்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை அடுத்தவார இறுதியில் வெளியிட ஆலோசித்துவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி காலை 10.30மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அதன் உறுப்பினர்களான பேராசிரியர் ரத்னா ஜீவன் ஹூல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் அபேசேகர ஆகியோர் தலைமையில் ஆணைக்குழு கூடவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பல முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காகவே இச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் அனைத்து மாவட்ட செயலாளர்கள், உதவி தேர்தல் ஆணையர்கள், துணைத் தேர்தல் ஆணையர்களுடனும்  தேர்தல் ஆணையாளர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

அத்துடன், அதே தினத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோமென தேர்தல் ஆணையத்திற்கு அறிவித்துள்ள கட்சிகளின் செயலாளர்களையும் தேர்தல்கள் ஆணையாளர் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தப்பணி தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் நேற்று ‘தினகரன்’ வாரமஞ்சரி வினவியபோது, “தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. எதிர்வரும் வார இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடும் எதிர்ப்பார்ப்புகளுடனே பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம்” என்றார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமான ஓர் ஆணைக்குழுவாகும். அதற்கான அதிகாரம் கிடைக்கும் காலப்பகுதியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அனுமதியின்றி தேர்தல்களுக்கான அழைப்புகளை விடுக்க முடியும். அதன் பிரகாரம் கடந்த 10ஆம் திகதியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான அழைப்பை விடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு 14நாட்களுக்கு குறையாத காலப்பகுதியிலும் 21நாட்களுக்கு அதிகமாகாத காலப்பகுதியிலும் வேட்புமனு கோரப்பட வேண்டும்.

20ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளதால் எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதித் தேர்தலுக்கான அழைப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடக்கூடுமென சிரேஷ்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற 4அல்லது 6வாரக் காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பது சட்டமாகும். 22ஆம் திகதி தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் நவம்பர் மாதம் 16ஆம் திகதி அல்லது 23ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் 5வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளதுடன், பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரான ஒருமாத காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் கூறுப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பது கட்டாயமாகும்.

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சிசை டிசம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதை கருத்திற்கொண்டு அதற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டுமென்பதில் அனைத்துக் கட்சிகளும் உறுதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments