கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா - 2019 | தினகரன் வாரமஞ்சரி

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா - 2019

மாகாணப் பணிப்பாளர் எஸ். நவநீதன்

"கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா” எதிர்வரும் 22ம்,23ம் திகதிகளில் மட்டக்களப்பு தேவநாயகம் கூட்டுறவுக் கலையரங்கில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட இருக்கிறது – மாகாணப் பணிப்பாளர் எஸ். நவநீதன் 

கிழக்கு மாகாணம் மூன்று மாவட்டங்களைக் கொண்ட பல் இனங்களும், பல் சமயத்தவர்களும் செறிந்து வாழும் மாகாணமாகும். இங்கு வாழும் இனங்கள் தத்தமது பண்பாட்டுக் கோலங்களை மேம்படுத்தி, வளர்த்து, பாதுகாத்து செழிப்பூட்டி பகிர்வதற்கான வாய்ப்புக்களையும், வசதிகளையும் தங்கு தடைகளின்றி எமது திணைக்களம் வழங்கி வருகிறது. 

அது வருடாவருடம் நடத்துகின்ற பன்மைத்துவம் கொண்ட ”கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா” எதிர்வரும் 22ம், 23ம் திகதிகளில் மட்டக்களப்பு தேவநாயகம் கூட்டுறவுக்கலையரங்கில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட உள்ளது என்றார் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன். அதுபற்றிய முழுவிபரங்களையும் நேர்காணலின்போது விளக்கினார் அவர். அதன் முழுவடிவம் கீழே தரப்படுகிறது..... 

கேள்வி: முதலில் உங்களது திணைக்களத்தின் தொலைநோக்கு, பணிக்கூறு, முன்னுரிமையான கடமைகள் பற்றி கூறுவது பொருத்தமானது என நினைக்கிறேன். 

பதில்: எமது திணைக்களத்தின் தொலைநோக்கு நல் விழுமியங்களும், சமாதானமும், நல்லிணக்கமும், செறிவூட்டப்பட்ட நிலைபேறான பன்மைத்துவ கலாசார பேணுகையுமாகும். 

திணைக்களத்தின் பணிக் கூறானது, நிலைபேறான நிலையில் சம்பந்தப்பட்ட சிணைக்களங்களின் திறனை வலுவூட்டுவதினூடாக பாரம்பரிய விழுமியங்களையும், கலாசார பெறுமதிகளையும் பாதுகாத்தலும், பன்மைத்துவ இயல்பினை மதிக்கச் செய்யும் வகையில் சமுதாயத்தை மாற்றியமைத்தலுமாகும், 

முன்னுரிமைக் கடமைகள் என்று பார்க்கும்போது. பல்லின கலாசார விழுமியங்களை பாதுகாத்தலும் மதிப்பளித்தலும், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கலை இலக்கிய மன்ற அங்கத்தவர்கள், மற்றும் கலை, கலாசாரக் குழுக்களின் ஆற்றலையும், வலிமையையும் மேம்படுத்தல், அழிவடைந்து செல்லும் கலாசார விழுமியங்களையும், அதன் பெறுமதிகளையும் பாதுகாத்தல், பல்லின சமூங்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தல் என்பனவாகும். 

மேற்கூறிய பின்னணியில் வருடாந்த செயற்பாடுகளை ஏற்படுத்தி வருவதுடன், இச் செயற்பாடுகளுக்கு அப்பால் காலத்திற்குக் காலம் வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு விதமான ஆற்றுகை நிகழ்வுகளையும், போட்டிகள் மற்றும் கொளரவிப்பு நிகழ்வுகள் போன்ற பண்பாட்டியல் சார்ந்த செயற்பாடுகளிலும் எமது திணைக்களம் ஈடுபட்டு வருகிறது. 

வருடாந்த செயற்பாடுகளை பொறுத்தவரை தைப்பொங்கல் நிகழ்வு, தமிழ்-சிங்கள புத்தாண்டு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பு காலத்தில் ”இப்தாா்” நிகழ்வு, இந்துக்களால் கல்வி, செல்வம் வீரம் இவைகளை வேண்டி அனுட்டிக்கப்படும் ” நவராத்திரி” விழா, மற்றும் கிறிஸ்தவர்களின் யேசு பிறந்த தினமான ”பாலன் அவதரிப்பு அல்லது ஒளி விழா” பௌத்த சமயத்தவர்களின் "வெசாக்” ”பிரித்“ ஆகிய நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றது. 

மூவின பண்பாட்டியல் பின்னணியைக் கொண்ட அரச உத்தியோகஸ்தர்கள் ஏனைய சமய, சமூகத்தவர்களின் பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொள்வதற்கும், நல்லிணக்கத்தினை மேம்படுத்தவும், இந் நிகழ்வுகள் பேருதவியாக அமைகின்றன. 

கேள்வி: இவ் வருடத்தில் தமிழ் இலக்கிய விழாவை பன்மைத்துவம் கொண்டதாக வெகு விமரிசையாக மட்டக்களப்பில் கொண்டாட இருப்பதாக அறிய முடிந்தது.  இதில் என்னென்ன விடயங்களை முன்வைக்க இருக்கிறீர்கள்? 

பதில்: மாகாண கலை இலக்கிய விழா பன்மைத்துவம் கொண்டதாகவே இருக்கும். இரண்டு பிரிவுகளாக நடாத்தப்படுகின்ற, தமிழ் இலக்கிய விழா என்றும், சிங்கள இலக்கிய விழா என்றும் நடாத்தப்படுகின்றன. தமிழ் இலக்கிய விழா மட்டக்ளப்பில் எதிர்வரும் 22ம், 23ம்  திகதிகளிலும், சிங்கள இலக்கிய விழாவை கோமரன் கடவெலவில் அடுத்தமாதமும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன. மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் முதலாம் நாள் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி ஆரம்பமாகும். அன்றைய நிகழ்வுகள் காலை நேர நிகழ்வாகவும் மாலை நேர நிகழ்வாகவும் இடம்பெறும். காலையில் ஆய்வரங்கமும், பிற்பகலில் கலாசார நிகழ்வும் இடம்பெறும். காலையில் எனது தலைமையிலும், மாலையில் கல்வி கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர்  வெ.தவராசா தலைமையிலும் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. 

விசேடமாக ஆய்வரங்கம் இடம்பெற இருக்கின்றது. இதற்கான தொனிப்பொருள் ”பிரதிகளின் உயிர்ப்பு, பேசாப் படைப்பை பேசுதல்” என்பதாகும். ஆய்வரங்கிற்கு பேராசிரியர் யோகராஜா தலைமை தாங்குவார். ஆய்வரங்கில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், திருமதி ரூபி வலன்ரினா பிரான்ஸீஸ், போராசிரியர் ரமீஸ் அப்துல்லா, மென் பொருளாளர் மு.மயூரன், ஆசிரியர் மேகராசா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்குவர். பிற்பகல் நிகழ்வுகளில் இலக்கிய விழா தொடர்பாக இடம்பெற்ற போட்டிகளில் பரிசு பெறுவதற்கு தெரிவு பெற்றிருக்கும் படைப்புகள் அரங்கேற்றப்படுவதோடு பரிசுகளும் வழங்கப்படும். 

முதலாம் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக மட்டக்களப்பு நகரின் தெற்கு, வடக்கு ஆகிய இரு முனைகளிலிருந்து ஊர்வலமும், ஊர்திகள்,  நடனங்கள்,  சிறப்பு நிகழ்ச்சிகள்,  என்பனவற்றை உள்ளடக்கிய பவனி நகரும்.  இதில் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள், ஆன்மீக அறிஞர்கள் என பல திறத்தாரும் உள்ளடங்குவர். வட முனையில் தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலய முன்றலிலிருந்தும், தென் முனையில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகிலுள்ள புனித செபஸ்தியன் தேவாலய முன்றலிலிருந்தும், ஆரம்பமாகும் இவையிரண்டும் மட்டக்களப்பு அரசடியிலுள்ள ”தேவநாயகம் கூட்டுறவு கலையரங்கை” வந்தடையும் முதலாம் நாள் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதய குமாரும் இரண்டாம் நாள் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் ’ஷான் விஜேலால் டி சில்வாவும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர். இரண்டாம் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா தலைமை தாங்குவார்.

இந்த இரண்டு நாட்களுக்கான நிகழ்வுகளையும் தேவநாயகம் கூட்டுறவு கவையரங்கிலே நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு நாள் மாலை நேர நிகழ்விலும் மனதிற்கு இதமளிக்கும் கலை, ஈலக்கிய நிகழ்வுகள் மேடையில் இடம்பெற இருக்கின்றன . 

கேள்வி: இனி போட்டிகள் பற்றியும் கூறுங்கள். 

பதில்: பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகளில் புதுக் கவிதை, மரபுக் கவிதை சிறுகதை கட்டுரை,நாடகப்பிரதி,ஓவியம், ஆய்வு போன்ற போட்டிகள் நடைபெறும்.  இவை கனிஸ்ட, இடைநிலை, சிரேஸ்ட பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு துறையிலும் மாகாண மட்டத்தில் 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு பதக்கம் அணிவித்து கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது. 

அடுத்ததாக நாட்டுக் கூத்துப் போட்டியை வடமோடி தென் மோடி என இரண்டுவகையாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு துறையிலும் மாகாண மட்டத்தில் 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெறறோருக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதைவிட ஒவ்வொரு துறையிலும் அதாவது வடமோடி தென்மோடி ஆகிய இரு துறைகளிலும் பங்குபற்றிய சிறந்த ஆண் பாத்திரத்திற்கான கலைஞர், சிறந்த பெண் பாத்திரத்திற்கான கலைஞர், சிறந்த நெறியாள்கை, சிறந்த ஒப்பனை, சிறந்த உடையலங்காரம், சிறந்த தாளக்கட்டு என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்போருக்கு பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன. 

முஸ்லிம் பாரம்பரிய கலைகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன. அவை ”ஹஸீதா”, ”றபான் பாடல்கள்”, ”சீனடி சிலம்படி” நாட்டார்கவி”, ”களிகம்பு” ஆகியவற்றில் மாகாண மட்டத்தில் 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்ற கலை மன்றங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

எஸ்.தவபாலன்

Comments