தொழிலாளர்களின் தேவை உழைப்புக்கேற்ற ஊதியமே தவிர 50 ரூபா அரசு நிவாரணமல்ல | தினகரன் வாரமஞ்சரி

தொழிலாளர்களின் தேவை உழைப்புக்கேற்ற ஊதியமே தவிர 50 ரூபா அரசு நிவாரணமல்ல

“நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50சதவீதத்திற்கு மேலான செல்லுபடியான வாக்குகள் கிடைக்கும் என்பது சந்தேகமே. அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்காது இலங்கையை தொடர்ந்து ஆண்டு வருகின்ற வர்க்கங்கள் புதிய பல சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளதால் மக்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீது வெறுப்படைந்து தேர்தல்களில் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதே இதற்கான காரணம். இதனால் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவடையலாம். அத்துடன் பிரதான கட்சிகளில் பிளவுகள் காணப்படுவதாலும் பல வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாலும் வாக்குகள் பிரிந்து போகலாம். இது ஆளப்படும் மக்களுக்கு பாதிப்பல்ல. ஆனால் எவருக்கும் 50சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிட்டால் ஏற்படப்போடும் சர்ச்சைக்குரிய, நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். எனவே மக்கள் சரியாக தலையிட்டு, பங்களிப்பு செய்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஜனநாயக அரச கட்டமைப்பை உறுதி செய்யும் புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாட்டு மக்களும் மென் மேலும் அழிவை சந்திக்க நேரிடும் என்பதே யதார்த்தமாகி விடும்” என்கிறார்   இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் தொழிலாளர் சங்கம் என்பவற்றின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான இளையதம்பி தம்பையா.

நாட்டு மக்கள் இன, மத ரீதியாக பிரிக்கப்பட்டு துருவப்படுத்தப்பட்டுள்ளனர். பரந்தளவில் நாட்டின் அனைத்து தொழிலாளர்களும் விவசாயிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன, மத ரீதியாக தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதற்கும், அடக்கப்படுவதற்கும் எதிரான அரசியல் தீர்வு காணப்படாமல் காலம் கடத்தப்பட்டுள்ளது. யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு பத்தாண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களோ, மீளமைப்பு திட்டங்களோ திருப்திகரமானதாக இல்லை. 

அரசியல், நிர்வாக பாதுகாப்பு கட்டமைப்புகளில் இன, மத மேலாதிக்க பாசிசம் நிறுவனமயப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றை மாற்றியமைக்க வல்லமையுடைய, வேட்பாளரை மக்கள் தேடுவது கடினம். இந்நிலையில் 1978முதல் பல ஜனாதிபதிகளை கண்டுள்ள மக்களுக்கு கோட்டாபய, ரணில், சஜித், அனுரகுமார போன்றோரில் எவர் ஜனாதிபதியானாலும் பிரச்சினைகள்   தீரும் என்று எப்படி நம்புவது? இதனால் மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வரப்போகும் ஜனாதிபதி தேர்தல் சவாலானதாகவே இருக்கும். இதில் குறிப்பாக தமிழ் மக்கள் இலங்கையின் இன மேலாதிக்க பாசிச அரச கட்டமைப்பினாலேயே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை பட்டறிந்தவர்கள் என்பதால் தலைவர்களை மாற்றுவதால் மட்டும் தீர்வுகிடைக்கும் என நம்புவதற்கு இடமில்லை என்கிறார் தம்பையா.

கேள்வி: பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி சம்பள உயர்வு விடயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர். இரண்டு வருடங்களுக்கொருமுறை புதுப்பிக்கப்படும் சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்தங்களால் நன்மையடைந்தவை இலங்கை முதலாளிமார் சம்மேளனமும், பெருந்தோட்டக் கம்பனிகளுமே என்றால் மிகையாகாது. இன்னும் எத்தனை காலத்திற்கு இப்பிரச்சினை இப்படியே தொடரப்போகிறது?

பதில் :  எமது மக்கள் தொழிலாளர் சங்கம் கூட்டு ஒப்பந்தத்தில் பேரம்பேசவோ, கைச்சாத்திடவோ அனுமதிக்கப்படவில்லை. கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கு வெளியில்  இருந்து தனியாகவும், கூட்டாகவும் போராடி வந்திருக்கிறோம். கூட்டு ஒப்பந்தத்தினூடாக நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்காமைக்கு முழுப்பொறுப்பையும் அதில் கைச்சாத்திட்டுள்ள இ.தொ.காவும், இ.தே.தோ தொ. சங்கமும் ஏற்கவேண்டும். அவற்றின் பேரம் பேசும் ஆற்றலின்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் வெட்டிப் பேச்சு பேசுவதை விடுத்து அவர்களின் ஆற்றலின்மையை ஏற்றுக்கொண்டு கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதே சிறந்தது. கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு நன்மை அளிக்காததால் அதனை முடிவுறுத்தும் அறிவித்தலை கொடுத்து விட்டு அவை வெளியேற வேண்டும். அப்படி வெளியேறினால் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தால் தனித்து செயற்பட முடியாத நிலை ஏற்படும். அவ்வாறான நிலையில் புதிய, மற்றும் சரியான வழிமுறைகளை தேடிக்கொள்ள முடியும். இவ்விடயத்தில் அரசாங்கத்தின் சரியான தலையீட்டையும் பெற்றுக் கொள்ள முடியும் அதற்காக போராட தொழிலாளர்களும், எம்மை போன்ற அமைப்புகளும் தயார், இ.தொ.காவும், இ.தே.தோ.தொ.சங்கமும் தயாரா?

அதனால் தொழிலாளர்கள் அவை மீது தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல் மாற்று வழிகளை தேட வேண்டும். அதற்கு தலைமையேற்க நாம் தயாராக இருக்கிறோம்.

கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியில் இருக்கும் தமிழ் முற்போக்கு முன்னணி அரசாங்கத்துடன் கலந்துரையாடி தொழிலாளிகளுக்கு வேலை வழங்கப்படும் நாளொன்றுக்கு 50ரூபா நிவாரணமாக கொடுப்பதற்கு வழிசெய்யும் ஒன்றுக்கு இரண்டு அமைச்சரவை தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இன்னும் கொடுக்கப்படவில்லை. அக்கொடுப்பனவு தற்காலிகமாக ஒருவருடத்திற்கு மட்டும் நிவாரணமாக வழங்கப்படுமாம். இந்த ஏற்பாடு தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வல்ல. இவ்வேற்பாடு பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எவ்வித அழுத்தத்தையும் கொடுக்காது. தொழிலாளர்களுக்கு தேவை உழைப்புக்கேற்ற, வாழ்வதற்கேற்ற சம்பளமேயன்றி அரசாங்க நிவாரணமல்ல.

கேள்வி: தற்போதைய அரசாங்கத்தின் பங்காளி கட்சியான தமிழ் முற்போக்கு முன்னணி மலையகப் பகுதிகளில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி உங்கள் கருத்தென்ன? தோட்டங்கள் எப்போது கிராமமாகும்?

பதில் – அபிவிருத்தித் திட்டங்கள் வாழ்விற்கும் இருப்பிற்குமான விவாசாயம் தொழிற்றுறை போன்றவற்றை, அபிவிருத்தி செய்வதாகும். அத்துடன் அவற்றை பலப்படுத்தவல்ல குடியிருப்பு, கல்வி, சுகாதார, போக்குவரத்து, மின்சாரம் கட்டமைப்புகளும் அவசியமாகும். தற்போது மலையகத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன. அவை திருப்தியான கட்டட அடிப்படையில்லாதவை என்ற முறைப்பாடுகள் அதிகமாகவே இருக்கின்றன. பாதைகள், பாலங்கள் ஆங்காங்கு அமைக்கப்படுகின்றன. இவை முன்பு மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களால் அமைச்சர்களால் செய்யப்படாதவை. ஆனால் இந்த வீடமைப்பு, பாதை, பாலம் கட்டமைப்புகள் மலையகத் தமிழ் மக்களின் வாழ்விற்கும், இருப்பிற்குமான விவசாயம், தொழிற்றுறை போன்றவற்றுடன் தொடர்பு பெறாதவரை அர்த்தமுள்ளதாக இராது. மலையக கல்வியின் இன்றைய வளர்ச்சி நிலைக்கு கடந்த 40வருடகால முயற்சிகளின் விளைவாகும். ஆனால் மலையக தோட்டங்கள் கிராமங்களாகவோ, பட்டினங்களாகவோ இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. தோட்டக்குடியிருப்புகள் கிராம, நகர குடியிருப்புகளாக அடையாளம் காணப்படவில்லை. இலங்கையின் இரண்டுவகை குடியிருப்புகளான கிராமம், நகரம் என்பவற்றில் அவை உள்ளடக்கப்படவில்லை.

மலையக தோட்டங்களில் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொள்ள பெருந்தோட்டக் கம்பனிகளின் சம்மதம் தேவை. பிரதேச சபை சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள போதும் தோட்டப்பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ள கம்பனிகளின் சம்மதம் தேவைப்படுகிறது.

மலையக அதிகாரசபை அமைக்கப்பட்டுள்ள போதும் அவையும் கம்பனிகளின் அனுமதியின்றி சுதந்திரமாக அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க முடியாது. எனவே தோட்டங்கள் தொடர்ந்து பெருந்தோட்டக் கம்பனிகளின் காலனியாக இருக்கும் நிலை மாற்றமடையாமல் அங்கு அபிவிருத்தி வேலைகளை சரியாக முன்னெடுக்க முடியாது.

அவ்வாறான, மாற்றம் ஏற்படாதவரை தோட்டங்கள் தோட்டக் கம்பனிகளின் காலனிகளேயன்றி கிராமங்களாக மாற்றமடைய முடியாது.

கேள்வி: பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமைப் பிரச்சினை விடயத்தில் உங்களது நிலைப்பாடு என்ன? புதிய வீட்டுத்திட்டத்தில் வீட்டுடன் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறதே!

பதில்: 1970களில் தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடியிருப்பிற்கென 20பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்கு உடன்பாடு காணப்பட்டது. ஆனால் அவ்வுடன்பாடு, நடைமுறைக்கே வரவில்லை. பெ. சந்திரசேகரன் தோட்ட உட்கட்டமைப்பிற்கு பொறுப்பான அமைச்சராக இருந்தபோது 7பேர்ச்சஸ் காணியில் வீடமைக்கும் திட்டங்கள்  ஓரிரு தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன. திகாம்பரம் மலையக புதிய கிராமங்களுக்கான அமைச்சரான பிறகு வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அவ்வீடுகள் அனைத்தும் 7பேர்ச் காணியில் கட்டப்படவில்லை. சில 3பேர்ச் காணியில் அமைந்துள்ளன என்றும் கட்டடங்கள் கூரைகள் உறுதியாக இல்லை என்றும் முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன.

அவற்றுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாக கூறப்பட்டபோதும் அவை காணி உறுதிகள் பற்றிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக வழங்கப்படவில்லை. அதனால் அவற்றின் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மையில் சிக்கல் இருக்கிறது.

தற்போது வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு காணியின் பரப்பளவு, அமைவிடம், நிலஅளவைப்படம் போன்ற விபரங்களைக் கொண்ட, அரசாங்கத்தினால் அதிகாரமளிக்கப்பட்டவரினால் காணி உறுதிகள் வழங்கப்பட வேண்டும். அவற்றில் பெறுகிறவரின் சொந்தம் அல்லது உரித்து உறுதி செய்யப்பட வேண்டும்.

கேள்வி: பொதுவாக மலையக கட்சிகளிடம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களின் நாளாந்த வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு அப்பால் அரசியல் பொருளாதார சமூக விஞ்ஞான தொலைநோக்குப் பார்வை இருப்பதாக தெரியவில்லை. வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளைப் போன்று மலையக அரசியல் கட்சிகள் ஒரு பொது அமைப்பாக செயற்பட முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டுடனான செயற்பாடுகளை முன்னுதாரணமாக அல்லது ஆதர்சமாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு அவற்றின் செயற்பாடுகள் முற்போக்கான முன்நகர்வுகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அடக்கப்படுகின்ற ஒடுக்கப்படுகின்ற மக்கள் மத்தியில் இயங்கும் அமைப்புகள் பிரிந்து செயற்படுவது அடக்கு முறையாளர்களுக்கே ஆதாயத்தை கொடுக்கும். மாறாக ஒரு பொது அமைப்பாக இல்லாவிடினும் பொது இணக்கப்பாட்டுடன் ஒரு வானவில் கூட்டாகவாவது செயற்படுவது அவசியம். அடக்கப்படும் சமூகங்களின் அமைப்புகளுக்கு பொது இணக்கப்பாட்டுடனாவது செயற்பட வேண்டும் என்ற புரிதல் ஏற்படுவது குறைவு. அவை பிரிந்து செயற்படுவது போன்று அடக்குமுறையாளர்களிடையே தாம் பிரிவுகளை ஏற்படுத்தி நன்மையடையலாம் என்று நினைப்பது தவறு. ஏனெனில் பொது இணக்கப்பாட்டுடன் செயற்படும் புரிதலும், வல்லமையும் நீண்ட வரலாறும் அடக்குமுறையாளர்களுக்கே இருக்கிறது. அடக்கப்படும் அமைப்புகள் அடக்கு முறையாளர்களுடன் பங்காளிகளாகி அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிவதென்பது சாத்தியமல்ல.

இன, மத, பிறப்பு, வசிப்பிட அடையாளம் என்பதைவிட அடக்கப்படும் மக்கள் சார்ந்த, போராடுபவர்கள் சார்ந்த, இயங்கு தளம் சார்ந்த அடையாளமே முக்கியமானது. அதனடிப்படையில் எமது செயற்பாடு மலையகம் சார்ந்தும் இருந்து வருகிறது.

1988ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலுக்காக இ.தொ.கா  தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் பேரவை சொற்ப காலமே இருந்தது. அதே ஆண்டு இ.தொ.காவிலிருந்து விலகிய பெ. சந்திரசேகரன் கொழும்பில் பழைய நகரசபை மண்டபத்தில் உரையாற்றிய கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். அப்போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது)யின் (தற்போது புதிய ஜனநாயக கட்சி) மலையகப் பிரதேச செயலாளராக இருந்தேன். அப்போது சந்திரசேகரனுடன் இணைந்து தனிக்கட்சி அமைக்கும் நோக்கமோ தேவையோ எமக்கு இருக்கவில்லை. அப்போது மலையக மக்கள் முன்னணி உருவாகியிருக்கவில்லை. மாறாக மலையக அமைப்புகள், மலைய மக்களில் அக்கறை கொண்ட அமைப்புகள் பொதுப் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும் என்ற தேவையும், விருப்பமும் எம்மிடம் இருந்தது. அது சாத்தியப்படவில்லை. அதன் பின்னரும் பல போராட்டங்களில், கட்சி, கொள்கை வித்தியாசங்களுக்கு அப்பால் கலந்து கொண்டுள்ளோம். 2001ஆண்டு பிந்துனுவெவ தடுப்பு முகாம் படுகொலைகளுக்கு எதிராக தலவாக்கலையில் ம.ம. முன்னணி ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் நாம் முழுமையாக பங்கெடுத்திருந்தோம். 1985, 1986பூண்டுலோயா, தலவாக்கலை பகுதிகளில் நடத்தப்பட்ட மலையக மக்களுக்கு எதிரான இன வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தோம். 1991ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிராக எமது பிரதான பங்களிப்புடன் ஏனைய தொழிற்சங்கங்களும் பங்கெடுத்தன. 2005முதல் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக நடத்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளிலும் நாம் ஐக்கியப்பட்டு செயற்பட்டுள்ளோம். தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்விற்காக ஐக்கியப்பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2004, 2005காலகட்டங்களில் மேல்கொத்மலை (நீர்த்தேக்கத்) திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தினூடாக   ஐக்கியப்பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் பெருந்தோட்ட பொருளாதாரத்தை பாதுகாக்கவும், தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தை வென்றெடுப்பதற்குமான ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை எமது மக்கள் தொழிலாளர் சங்கம் முன்னெடுத்தது.

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 2018ம் ஆண்டு எல்லோரும் ஐக்கியப்பட்டு செயற்படுவதற்காக பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தை ஏற்படுத்தினோம்.

ஐக்கியப்பட்டு செயற்படும் நோக்கில் கொள்கை பேதங்களுக்கப்பால் 2018செப்டெம்பர் தொழிலாளர் தேசிய சங்கம் தலவாக்கலையில் நடத்திய பேரணியிலும் கலந்து கொண்டோம்.

இதிலிருந்து எமக்கு மிகத்தெளிவாக தெரிவதெனில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், மலையகத் தமிழ் மக்கள்   ஐக்கியப்பட்டு போராட பின் நிற்கவில்லை என்பதுதான். 1977ஆம் ஆண்டு சிவனுலெட்சுமணன் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த நடவடிக்கைகளிலிருந்து மலையக தமிழ் மக்களில் அனைத்து பிரிவினரும் ஐக்கியப்பட்டு செயற்பட்டமையை அவதானிக்க முடியும்.

ஆனால் பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபை ஆசனங்களை பெற்றுக் கொண்டு தமது அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் செயற்படுபவர்களால் மலையக அமைப்புகளை இணைத்து ஒரு அமைப்பாகவோ, பொது இணக்கப்பாட்டுடனோ செயற்பட முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு அப்பாலேயே ஐக்கியம், பொது இணக்கப்பாடு போன்றவற்றை கட்டியெழுப்ப முடியும். இது வரலாற்று தேவை என்பதால் நிறைவேறுவது கடினமல்ல.

நேர்கண்டவர்: பி. வீரசிங்கம்

Comments