வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் ஏமாற்றம் | தினகரன் வாரமஞ்சரி

வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் ஏமாற்றம்

அரசியல்தீர்வு, பொருளாதார அபிவிருத்தி, சம்பள உயர்வு என பல வாக்குறுதிகளை வழங்கித்தான் 2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், நான்கரை வருடங்கள் கடந்தும் கொடுக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டப் படவில்லை.

அரசியல் தீர்வு என்ற பேரில் வடக்கு மக்களை ஏமாற்றியுள்ளதுடன், 50 ரூபா கொடுப்பனவைக்கூடதோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு இவர்கள் தயாரில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்தார்.

‘தினகரன்’ வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவரது முழுமையான நேர்காணல் வருமாறு,

கேள்வி : தேர்தல் பணிகள் எவ்வாறு செல்கின்றன? 

பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஓர் அரசியல் கூட்டணியாக அமைக்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. அடுத்தவார இறுதிக்குள் சுதந்திரக் கட்சிஉள்ளிட்ட பல கட்சிகளை ஒன்றிணைத்து பாரிய கூட்டணியொன்றை அமைப்போம். அதற்கு அப்பால் பொதுஜன பெரமுனவின் சம்மேளன மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசாங்கத்துக்கு ஆதரவளித்துவரும் சில கட்சிகளுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.  

கேள்வி : பொதுஜன பெரமுனவுக்கும், சு.கவுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு தடையை ஏற்படுத்தும் வகையில் சிலர் முரண்பாடான கருத்துகளை வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பில்?  

பதில் : சு.கவின் சிலருக்கு இந்தபேச்சுவார்த்தையை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டுமென்ற தேவையில்லை. சிலர் சு.கவை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சு.கவில் எவரும் இல்லாது போனதும் அவர்கள் அதிகாரத்தை கைப்பற்ற பார்க்கின்றனர். தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலை கொண்டு வருவதால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. சு.க மீண்டும் ஐ.தே.கவுடன் இணைய முடியாது. ஐ.தே.கவுடன் இணைந்து செயற்பட்டமையால்தான் சு.க நாசமடைந்தது. ஐ.தே.கவுடன் இணைந்தால் சு.கவுக்கு எதிர்காலம் இல்லை. அவர்களது எதிர்காலம் பொதுஜன பெரமுனவில்தான் உள்ளது. விருப்பியோ அல்லது விருப்பமின்றியோ சு.க எம்முடன்தான் பயணிக்க வேண்டியுள்ளது.  

கேள்வி : பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் சு.கவில் சிலர் உறுதியாகவுள்ளனரே? 

பதில் : ஜனாதிபதித் தேர்தலில் சின்னமல்ல முக்கியம். நபர்தான் முக்கியம். சின்னம் என்றால் நானும் நல்ல சின்னமொன்றை தெரிவுசெய்து தேர்தலில் போட்டியிட முடியும்தானே. அவ்வாறில்லை. நபர்தான் முக்கியம். இயலாமை ஏற்பட்டவுடன் ஏதாவது கருத்தொன்றை தெரிவிப்பதுதான் தற்போது சு.கவின் சிலரது வாடிக்கையாகவுள்ளது.  

கேள்வி : குறிப்பாக சு.கவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர பொதுச் சின்னம் தொடர்பில் உறுதியாகவுள்ளார்.

சின்னம் முக்கியமில் லையென்றால் அனைவரும் எந்தவொரு சின்னத்திலும் போட்டியிடலாம்தானே என்கிறாரே? 

பதில் : தயாசிறி ஜயசேகர பிணைமுறி மோசடியில் பணம்பெற்றவர்தானே. அதனால் அவர் ஐ.தே.கவுடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டிருக்கக் கூடும். 

கேள்வி : சமகால அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதென நினைக்கின்றீர்களா? 

பதில் : 2015 ஆண்டு பாரிய வாக்குறுதிகளை கொடுத்தே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் இவர்களை ஆதரித்தனர். அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடக்கு மக்கள் வாக்களித்தனர். சம்பளம் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வை எண்ணி மலையக மக்கள் இந்தஅரசாங்கத்தை ஆதரித்தனர்.

அரசாங்கம் பொறுப்பேற்று நான்கரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், வடக்கு மக்களுக்கும், மலையக மக்களுக்கும் எவ்வித தீர்வையும் வழங்கவில்லை. அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதுதான் வடக்கு மக்களின் பிரதான எதிர்பார்ப்பாகவுள்ளது. நான்கரை வருடமாக இப்பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றில் பேசப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. அரசியலமைப்புபேரவை, உப குழுக்கள் என மக்களை ஏமாற்றியதுடன், 20 கோடிக்கும் அதிகமான பணத்தை செலவழித்து உலகம் சுற்றினர்.

ஆனால், நடைபெற்றது ஒன்றும் இல்லை. 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென பிரதமர் தலவாக்கலையில் வைத்து கூறியிருந்ததை எவரும் இன்னமும் மறக்கவில்லை. 1000 ரூபா ஒருபுறம் இல்லாது போனது. மறுபுறம் 50 ரூபா கொடுப்பனவைக் கூட இவர்கள் வழங்கவில்லை. ஆறுமாதகாலமாக 50ரூபாவை வைத்து ஏமாற்றி வருகின்றனர். 50 ரூபாவுக்குக் கூட தோட்டத் தொழிலாளர்கள் பெறுமதியில்லையா எனகேட்க விரும்புகிறேன்.

இந்தஅரசாங்கத்தை கொண்டுவருவதற்காக தோட்டப்புற மக்கள் பாரிய ஆதரவைவழங்கியிருந்தனர். அமைச்சர்களான திகாம்பரம் மற்றும் மனோகணேசன் ஆகியோர் 50 ரூபாவை வழங்காவிடின் அரசாங்கத்தைவிட்டு வெளியில் செல்வோமென கூறினர். ஆனால், எவரும் வெளியில் செல்லவில்லை. மக்களுக்கும் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.

ஆகவே, தமிழர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளமை மாத்திரமே உண்மை. ஜனாதிபதித் தேர்தலில் எமது பொது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.கோட்டாபய ராஜபக்ஷ இம்முறை தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. அதனை எவராலும் தடுக்க முடியாது.

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பாரிய வாக்குகளை பொதுஜன பெரமுனதான் கைப்பற்றியிருந்தது. அத் தருணத்திலிருந்த எதிர்ப்பை காட்டியும் தற்போது அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. சிறுபான்மை மக்களின்ஆதரவுடன்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக செல்ல வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளார். ஆகவே, தமிழ் மக்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். 

கேள்வி; நீங்கள் மலைய கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஓர் அரசியல்வாதி. கோட்டா பயராஜபக்ஷவுக்கு மலையக மக்களிடம் எவ்வா றான வர வேற்புள்ளது? 

பதில் : மலையகத்தில் நல்ல வரவேற்புள்ளது. அந்த மக்கள் அபிவிருத்தியை எதிர்பார்த்துக் காத்துள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் சிறந்த அபிவிருத்திகளை முன்னெடுத்தவர். அதனால் மலையக மக்கள் மத்தியிலும் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பிலான எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. அண்மையில் தொண்டமான், கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலொன்றை நடத்தினார். அதன்போது தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் முறைமை பற்றி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் தொண்டமானுக்கு தெளிவான விளக்கமொன்றை கொடுத்திருந்தார்.

தொண்டமான் அதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மலையக இளைஞர்களின் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதில் கோட்டாபய உறுதியாகவுள்ளார்.

அரச சேவைக்கு தோட்டப்புற இளைஞர்களை அதிகமாக உள்வாங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளார். தோட்டப்புற அபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுப்பதென குழுவொன்று அமைக்கப்பட்டு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

கேள்வி : நீங்கள் வடக்குக்கான விஜயமொன்றை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தீர் கள். அங்கு இளைஞர்களின் மனநிலை எவ்வாறுள்ளது? 

பதில் : கூட்டங்களுக்கு 90 சதவீதம் இளைஞர், யுவதிகள்தான் வருகை தந்திருந்தனர். வயதுபோனவர்கள் அதிகளவில் வரவில்லை. இளைஞர்கள் அங்கு மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். இளைஞர்கள் தாம் இந்த அரசாங்கத்தின் காலத்தில் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளனர். இளைஞர்களின் வாக்குகள் இம்முறை எமக்குஅதிகமாக அங்கு கிடைக்குமென்ற நம்பிக்கையுள்ளது. 

கேள்வி : கோட்டாபய ராஜபக்ஷ வுக்கு உண்மையான தமி ழர்கள் எவரும் வாக்களிக்க முடியாதென ஒரு கருத்தை முன்னாள் வடக்கு முதல் வர் வெளி யிட்டிருந்தார். இவ்வாறா னக் கருத்துகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில் :காரணம் என்னவென அவரிடமே வினவுகிறேன். பிரதேச சபைத் தேர்தலில் அவர் மாற்றுத் தரப்புக்குதானே ஆதரவளித்தார். அவரது நிலைப்பாடு வடக்கு மக்களின் நிலைப்பாடாக இருக்கவில்லை என்பது அதில் ஊர்ஜிதமானது. சரத் பொன்சேகாவுக்கு எவ்வாறு வாக்களித்தனர்.

அவர்தான் யுத்தத்தை முன்னின்று நடத்தினர். வடக்கில் பாரிய அபிவிருத்திகளை கோட்டாபயவும், மகிந்தவுமே முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. புகையிரத சேவைஆரம்பிக்கப்பட்டது.

பல அபிவிருத்தித்திட்டங்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த அரசாங்கம் என்னசெய்துள்ளதென கேட்க விருப்புகின்றேன்.

நாங்கள் வடக்கு மாகாணத்தில் விஜயம் மேற்கொண்ட தருணத்தில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதை கேட்பதற்கு நாங்கள் தயாராக இல்லையென மக்கள் கூறினர். கடந்த முறை கூட்டமைப்பின் பேச்சை கேட்டுதான் வாக்களித்திருந்தோம். ஆனால், தமிழ்மக்களுக்கு இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். கடந்த பிதேச சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குவங்கி பாரிய அளவில் வீழ்ச்சிகண்டது.

மக்கள் இனியும் கூட்டமைப்பை நம்புவதற்கு தயாராகவில்லை. அதேபோன்றுதான் தோட்டபுற மக்களும் இந்த அரசாங்கத்தை நம்புவதற்கு தயாரில்லை. காலங்காலமாக மலையக மக்களை ஐ.தே.க. ஏமாற்றியே வந்துள்ளது. 

கேள்வி : வடக்கில் இம்முறை எவ்வளவு சதவீத வாக்குக ளைப் பெறமுடியுமென எதிர் பார்க்கின்றீர்கள்? 

பதில் : இதுவரை நடைபெற்றுள்ள ஜனாதிபதித் தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குகளையும்விட இம்முறை அதிகமான வாக்குகளை நாம் வடக்கில் பெறுவோம் என்ற நம்பிக்கையுள்ளது. இந்த அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாகவுள்ளனர். 15 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை வடக்கு, கிழக்கில் நாம் பெறுவோம். 

கேள்வி : கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் தமிழ் மக்கள் அச்ச உணர்வுடன் உள்ளதாக கூறுப்படும் கருத்துகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில் : அவை பொய்யான குற்றச்சாட்டுகளாகும். கோட்டாபயவின் காலத்தில் வெள்ளைவேனில் ஆட்கள் கடத்தப்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டுகள்முன்வைக்கப்பட்டிருந்தன. 2010 முதல் 2015ஆம் ஆண்டுவரை வெள்ளை வேனில் எவராவது கடத்தப்பட்டனரா என பாராளுமன்றில் உதய கம்மன்பில எம்.பி. கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்திருந்த சாகல ரத்னாயக்க, அவ்வாறு எவ்வித கடத்தல்களும் இடம்பெறவில்லையென பதிலளித்திருந்தார். இவை அனைத்தும் கட்டுக்கதைகள்.கோட்டாபய தொடர்பில் அச்சப்பட வேண்டியதில்லை. அவர் மிகவும் எளிமையானவர். யுத்தம் முடிந்த குறுகிய காலத்தில் அங்கு தேர்தலை நடத்தினார்.

அவர் அங்கு இராணுவத்தின் மூலம் கட்டுப்பாடுகளை விதித்திருக்க முடியும். அந்த மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதுடன் அபிவிருத்தியையும் அவர்தான் முன்னெடுத்தார். பலகோயில்கள் புனரமைக்கப்பட்டன. கோட்டாபய மிகவும் ஒழுக்கமான ஆட்சியை முன்னெடுக்கக் கூடியவர். 

கேள்வி : அமைச்சர் சஜித் பிரேம தாச தமிழ்த்தேசியக் கூட் டமைப்புடனான சந்திப்பில் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்து வேன் எனக் கூறியுள்ளார். சஜித்தின் வாக்குறுதிகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில் : 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த சஜித்பிரேமதாச எதற்கு?. 13ஆவது திருத்தம் ஏற்கனவே அமுலில்தான் உள்ளது.

அதனை நடைமுறைப்படுத்த சஜித் அவசியமில்லை. 13ஆவது திருத்தம்தான் அமுல்படுத்தப்படுமென்றால் கடந்த தேர்தலில் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால்சென்று புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவோமென கூறித்தான் மக்களின் வாக்குளைப் பெற்றனர்.

சித்தார்த்தன் எம்.பி. எம்முடன் பேச்சுகளை நடத்தியுள்ளார். ‘13 பிளஸ்’ தீர்வுத்திட்டத்தை வழங்குவோமென மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மகிந்தவும், கோட்டாவும் சொல்வதை செய்பவர்கள். 

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சி யின் ஜனாதிபதி வேட்பாள ராக சஜித் பிரேமதாச நியமிக் கப்பட்டால் உங்கள் தரப்புக்கு அது சவாலாக அமையுமா? 

பதில் : ஐக்கிய தேசியக் கட்சியில் எவர் வந்தாலும் எமக்கு சவால் இல்லை. ரணில், சஜித்,கரு என எவர் ஐ.தே.கவின் வேட்பாளராக களமிறங்கினாலும் அக்கட்சி பிளவுப்படும் என்பது உறுதியாகும்.

சஜித் என்பவர் சிறுபிள்ளையல்ல. கடந்த நான்கு வருடத்தில் நாட்டை  நாசமாக்கியவர்களில் சஜித்தும் ஒருவர்.

மத்தியவங்கி மோசடி தொடர்பில் அவர் ஒரு வார்த்தை பேசினாரா?.

பிக்குகள்சிறைப்படுத்தப்பட்ட போது பேசினாரா?. நாட்டை காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கைகள் செய்யப்பட்ட போது பேசினாரா?.

நேற்று இரவு பிறந்தவர் போன்று சஜித் பேசுவதை எவரும் நம்பப்போவதில்லை.

சஜித்துக்கு மக்கள் ஆதரவு உள்ளதெனகூறுவது ஒரு மாயையாகும்.

கேள்வி : கோட்டாபய ராஜபக் ஷவை அமெரிக்க குடியுரி மையாளரென ஐ.தே.க. குற் றஞ்சாட்டுவதுடன், அமெரிக்கர் ஒருவருக்கா வாக்களிக்கப் போகின்றீர்களென ஐ.தே.க. மக்களிடம் பிரசாரத்தை முன்னெடுத்துச்செல்கிறதே?

பதில் : அவர் அமெரிக்காவில் குடியுரிமையை பெற்றிருந்த போதும், அவர் ஒரு இலங்கை பிரஜை.

அவரும் இந்நாட்டில் வாக்களிக்கத் தகுதிபெற்றவர். ஐ.தே.கவின் போலிப் பிரச்சாரங்களை கண்டு இம்முறை மக்கள் ஏமாறப்போவதில்லை என்றார்.

நேர்காணல்: சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Comments