இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பாரிய பொருளாதார சரிவு | தினகரன் வாரமஞ்சரி

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பாரிய பொருளாதார சரிவு

நமது பெரியண்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் கீழ் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதும் 2024ஆம் ஆண்டாகும்போது இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒரு பொருளாதாரமாக மாற்றும் கனவும் இப்போதைய நோயினால் கணிசமாக பாதிக்கப்படலாம். இப்போது இந்தியப் பொருளாதாரத்தின் பருமன் சுமார் 3 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை அது தக்கவைத்துக் கொண்டால் 2019ம் ஆண்டில் தற்போது உலகின் 5 ஆம் நிலையில் உள்ள பெரிய பொருளாதாரமாகிய இங்கிலாந்தைப் பின்தள்ளி ஆறாவது நிலையில் இருந்து ஐந்தாவது நிலைக்கு முன்னேறும் என்றும் எதிர்வுகூறப்பட்டது.  

உலகில் மிகவேகமாக முன்னேற்றங்கண்டு வரும் 'எழுச்சிபெற்று வரும் பொருளாதாரங்கள்' மத்தியில் இந்தியாவின் வீறுகொண்ட செயலாற்றத்தை பலரும் எதிர்பார்த்தனர். சீனாவின் பொருளாதார செயலாற்றத்தை விட இந்தியப் பொருளாதாரமானது மிகவும் காத்திரமானதோர் வளர்ச்சிப் பாதையை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.  

ஆயினும் மோடி அரசாங்கத்தின் பணவலுவிழப்பு நடவடிக்கைகளின் பின்னர் இந்தியப் பொருளாதார இயந்திர சக்கரங்களின் சுழற்சி மெதுவடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆயினும் அரசாங்கம் நவீன இந்தியாவில் இடம்பெற்றுவரும் டிஜிட்டல் பொருளாதார மாற்றங்களை உள்வாங்கும் நிலையில்,  பாரம்பரிய வளர்ச்சிக் குறிகாட்டிகள் இல்லாதபடியினால் அவை தரும் தகவல்களை முழுமையானதாக கொள்ளக்கூடாது என வாதிட்டது. எவ்வாறாயினும் இம்மாதம் 12ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது எதிர்பார்க்கப்பட்டதை விட மிகப் பலவீனமாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் தொடக்கம் ஜுன் மாதம் வரையிலான காலாண்டுப் பகுதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது வெறும் 5 வீதமாக இருந்துள்ளது.  முன்னைய ஆண்டு இதே காலாண்டுப்பகுதியில் இது 8 வீதமாக இருந்துள்ளது. அத்துடன் 2019ம் ஆண்டில் 7 வீத வருடாந்த பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்வதும் சவால்மிக்க ஒன்றாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. 

2008ஆம் ஆண்டில் அமெரிக்க வீட்டு நிர்மாணத்துறையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பும் அதனைத் தொடர்ந்து நிதித்துறை நெருக்கடிகளும் இணைந்து மேற்குலகப் பொருளாதாரங்களைத் தொடர் நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட்டன. அந்நெருக்கடிகளிலிருந்து அவை பத்தாண்டுகளின் பின்னரும் இன்னமும் மீட்சிபெறவில்லை.  

மேற்குலக பொருளாதாரங்களின் பின்னடைவானது எழுச்சி பெற்றுவரும் இருபெரும் பொருளாதாரங்களான சீனாவையும் இந்தியாவையும் உலகின் நம்பிக்கை நட்சத்திரங்களாக பிரகாசிக்கச் செய்தன. ஆயினும் சீனப் பொருளாதாரம் மேற்குலக சந்தைகள் பாதிக்கப்பட்டதால் நெருக்கடிகளை எதிர்கொண்டது. அதுமட்டுமன்றி அமெரிக்கா அறைகூவல் விடுத்த வர்த்தகப் போரிலும் சிக்கியதால் அதன் செயலாற்றமும் மெதுவடைந்து வருகிறது.  

உலகம் சுற்றும் வாலிபனாக உலக நாடுகள் பலவற்றிலும் கால்பதித்து இந்தியாவின் கதாநாயக அந்தஸ்துள்ள பிரதமராக வலம்வரும் மோடியின் காலத்தில் இந்தியா மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் எனப் பலரும் ஹேஸ்யம் கூறினாலும் தற்போது அதிலும் 'கண்பட்'டிருப்பதாகத்தான் தெரிகிறது.   உலகின் எந்தவொரு நாடும் தனித்து இயங்க முடியாது என்பது ஒருபுறமிருக்க   சர்வதேச ரீதியில் ஏற்படும் அதிர்ச்சிகளுக்கு தாக்குப் பிடிக்கக் கூடியவாறு உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். நிச்சயமற்ற தன்மைகளால் ஏற்படும் பீதி நிலை முதலீடு, உற்பத்தி, வியாபாரம் என்பவற்றோடு மக்கள் பொருட்கள் சேவைகளுக்கு ஏற்படுத்தும் உள்நாட்டுக் கேள்வி பற்றியும் அரசாங்கங்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு இப்போது இந்தியப் பொருளாதாரத்தைப் பீடித்துள்ள இந்த நோய் நல்ல உதாரணமாகும்.  

இந்தியப் பொருளாதாரத்தின் இப்பலவீனமான செயலாற்றத்திற்கு சர்வதேச நாணய நிதியம் கூறும் காரணங்கள் மூன்றாகும்.  

1. உள்நாட்டுக் கேள்வியானது எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை விட குறைவாக உள்ளமை. 

2. சுற்றுச்சூழல் துறையிலும் கம்பனித்துறையிலும் (Corporate Sector) நிர்வாக முறைமையின் நிச்சயமற்றதன்மை. 

3. வங்கியில்லா நிதித்துறை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பலவீனமான நன்மை. 

இவற்றுள் இரண்டாவது மற்றும் மூன்றாவது காரணங்கள் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி முதலீடுகளையும் வியாபார முயற்சிகளையும் இடர் அபாயங்களுக்குள் தள்ளிவிடும். இதனால் ஏற்படும் பீதி காரணமாக முதலீட்டாளர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்கள். வெளிநாட்டு முதலீடுகளை கவரும் கனவுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நேரிடலாம்.  

பொருட்கள் சேவைகள் மீது உள்நாட்டு நுகர்வோர் ஏற்படுத்தும் கேள்வி எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக உள்ளமை மிகவும் பாரதூரமான ஒரு விடயமாக பார்க்கப்பட வேண்டும். குறிப்பாக உலகின் இரண்டாவது சனத்தொகை கூடிய நாடான இந்தியாவின் உள்நாட்டுச் சந்தை மிகப்பெரிதாக இருக்க வேண்டும். அதுவும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக நடுத்தர வகுப்பினரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களின் கேள்வி கணிசமாக அதிகரிக்க வேண்டும். உள்நாட்டில் ஏற்படும் கேள்வி அதிகரிப்பு உள்நாட்டு உற்பத்திகளுக்கு தேவையான சந்தைகளை விரிவாக்கச் செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும்.  

ஆயினும் இந்தியாவில் கடந்த சில வருடங்களாக விவசாயத்துறை உற்பத்தி நடவடிக்கைகள் தேக்க நிலையில் உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அத்துறையின் வேலையின்மையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் ஒரு சந்தைப் பொருளாதாரத்திற்கே உரிய பண்பாடாகிய பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் மிகச் செல்வந்த வர்க்கத்திடமே சென்று சேர்ந்துள்ளது. அதாவது வருமானச் சமமின்மை மோசமடைந்துள்ளது. இதனால் சராசரி பொதுமகனின் கொள்வனவு சக்தி எதிர்பார்த்ததைப்போல அதிகரித்துச் செல்லவில்லை. அத்தோடு கைத்தொழில்துறையிலும் எதிர்பார்த்தளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இவற்றின் கூட்டு விளைவாக பொருட்கள் சேவைகள் மீதான மக்களின் மொத்தக் கேள்வியானது வீழ்ச்சியடைந்துள்ளது.  

பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய எதிர்பார்க்கை நிச்சயமற்றதாக மாறும்போது மக்கள் நெடுவாழ்வு கொண்ட நுகர்வுப் பொருட்கள் (கார், ஏசி) மீது கேள்வி எழுப்ப மாட்டார்கள். மாறாக இருக்கின்ற வருவாய் மூலாதாரங்களை சிக்கனமாகப் பயன்படுத்தவே முனைவார்கள்.  

ஒருபுறம் வேலையின்மை காரணமாக கொள்வனவு சக்தி பாதிக்கப்படல் மறுபுறம் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மையினால் எழும் பீதி என்பன இணைந்து பொருட்கள் சேவைகள் மீதான கேள்வியை மோசமாக பாதித்துள்ளன.  

மொத்த நுகர்வுக் கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறை இந்தியாவின் மோட்டார் வாகன உற்பத்தித் துறையாகும். கடந்த சில மாதங்களில் இந்தியாவின் மோட்டார் வாகன விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் சதவீதங்கள் பின்வருமாறு. 

2019 ஏப்ரல் 15.93% வீழ்ச்சி 

மே 8.64% வீழ்ச்சி 

ஜுன் 12.34% வீழ்ச்சி 

ஜுலை 18.71 % வீழ்ச்சி 

ஒகஸ்ட் 23.55% வீழ்ச்சி 

இவ்வாறு வாகன விற்பனையில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி காரணமாக வாகன உற்பத்தியாளர்கள் தமது பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளில் டீடுபட்டுள்ளதோடு உற்பத்தி மேற்கொள்ளப்படாத விடுமுறை நாட்களையும் அறிவித்துள்ளன.  

உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தமது உற்பத்தி தொழிற்சாலைகளையும் கிளைகளையும் நிறுவியுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சூழல் ஒரு பெருத்த இழப்பினை ஏற்படுத்தக்கூடும்.  

பெரியண்ணனுக்கு சுகமில்லை நமக்கென்ன வந்ததென்று சும்மா இருக்கவும் முடியாது. ஏனென்றால் இப்போதுதான் நம்மிடமிருந்து பெரியண்ணா ஒருசில பொருட்களை இறக்குமதி செய்து நமது பிரதான ஏற்றுமதி நாடுகளில் மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறார். நாம் எப்போதும் போல அவரிடமிருந்துதான் நமக்குத் தேவையான பெரும்பாலானவற்றை வாங்குகிறொம். இனியும் வாங்குவோம் என்றாலும் அண்ணா மிகப் பெரியவர். நம்மோடு ஒப்பிடும்போது ஒரு கோழியையும் ஒரு நுளம்பையும் ஒப்பிடுவதுபோல. ஆகவே கொசுவின் சைசில் உள்ள நமது ஏற்றுமதிகளுக்கு தொடர்ந்தும் இடந்தருவார் என்றே நம்புவோம்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments