"நான் அப்பிடிச் சொல்லேல்ல!" | தினகரன் வாரமஞ்சரி

"நான் அப்பிடிச் சொல்லேல்ல!"

செப்ரம்பர் மாதம் ரெண்டாந்திகதி கொழும்பிலை நடந்த விருது வழங்கும் விழா பற்றிக் கடந்த வாரம் எழுதியிருந்தோம். அந்த விழாவிலை நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொல்லி, அப்பிடி இனி நடக்காம இருக்க வேண்டுமென்றும் சொல்லியிருந்தம். அதிலை சம்பந்தப்பட்ட ஒருவர், பிரதம ஆசிரியரோட கோல் பண்ணிப் பேசியிருக்கிறார்.  

சம்பவம் நடந்தது உண்மைதான் எண்டு அவர் ஏற்றுக்ெகாண்டு இருக்கிறார். ஆனால், ஆற அமர எழுதியிருந்தமாதிரி, தாம் ஒருமை யில் கதைக்கயில்லை எண்டு அவர் மறுத்திருக்கிறார். ஆனால் பாருங்க, என்ரை காதுக்கு அப்பிடித்தான் கேட்டது. விருது வழங்க வந்த பிள்ளையும் மறுக்கல்ல. எண்டாலும் நான் ஒண்டைச் சொல்லத்தான் வேணும், இந்தப் பத்தியிலை, அவர் போட்ட "ர்"ரன்னாவை நான் போடேல்லை. "ங்கன்னா" போடுறதுக்கும் "ர்"ரன்னா போடுறதுக்கும் என்ன மரியாதை வித்தியாசம் என்று எங்களுக்குத் தெரியும்தானே! அவருக்கும் உது தெரியும். சரி, அதை விட்டுவிடுவம், விசயத்திற்கு வருவம்.   என்ன இருந்தாலும், சம்பவத்தை ஒத்துக்ெகாண்டதற்கு அவருக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். சம்பவம் உண்மை, ஆனால், இந்தப் பத்திக்கு இடப்பட்டிருந்த தலைப்பில் குறிப்பிட்டதைப்போன்று தான் பேசவில்லை என்று சொல்லியிருக்கிறார். சம்பவம் சரி, ஆனால், பத்தியின் சொற்பிரயோகம் தவறாகத் திரித்துக்காண்பிக்கின்றது என்பது அவர்பக்க நியாயம். அவரும் உலகறிந்த ஓர் ஊடகவியலாளர்; கலைஞர்; எழுத்தாளர். சர்வதேச ரீதியாக நூல்களையெல்லாம் வெளியிட்டிருக்கின்றார். எனவே, அவருடைய திறமைக்கும் ஆளுமைக்கும் தனிச்சிறப்பு உண்டு! 

அதேநேரத்திலை, ஒரு சம்பவத்தை, அல்லது செய்தியை உள்ளது உள்ளபடி ஒப்புவிக்கிறது ஊடகவியலாளனோட பணியில்லை என்பதையும் அவர் ஒத்துக்ெகாள்ளுவார் என்று நினைக்கிறன். இண்டைக்கு நிறைய ஊடகவியலாளர்கள் கிளிப்பிள்ளை மாதிரித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் மட்டுந்தான் சரியாக வியாக்கியானப்படுத்துறாங்கள். அதனாலை, அவர் சொன்னதை அப்பிடியே சொல்ல வேணும் என்றில்லைத்தானே! அவர் என்ன சொல்ல வந்தார் என்பதுதானே முக்கியம். அதைத்தான் ஆற அமர பத்தியிலை சுட்டிக்காட்டியிருந்தம்.  

உண்மையிலை, விருது விழாவை நடத்தின அமைச்சர் மனோ கணேசனை இந்த விசயத்திலை எந்தக் குற்றமும் சொல்லேலாது. நாங்கள் அறிந்தவரை, அவர் தலைமை தாங்குவாரே தவிர, இப்பிடியான சின்ன விசயத்திலை எல்லாம் தலையிடமாட்டாரென்பதுதான் உண்மை. ஆராருக்குப் பரிசு கொடுக்கோணும், ஆராரை கூப்பிட வேணும் என்றெல்லாம் பார்க்க வேண்டியது சம்பந்தப்பட்ட ஏற்பாட்டுக் குழு ஐயாமாரின்ரை வேலை. இந்தச் சம்பவத்திலை சம்பந்தப்பட்ட நடிகையைக் கூப்பிட்டவங்களை விட்டிட்டு, வளர்ந்து வரும் கலைஞரான அந்தப் பிள்ளையை அப்பிடி நொந்துகொண்டது எங்களுக்கு கொஞ்சம் கவலை விழா மேடையிலை நடந்த சலசலப்பைப்பற்றி அண்டைக்ேக பலர் என்ன பேசிக்ெகாண்டார்கள் என்பது அவருக்குத் தெரியுமோ தெரியாது, ஆனால், எனக்குத் தெரியும். எல்லாத்தையும் மேடைக்கு முன்னால் இருந்து ஆற அமர கவனிச்சுக்ெகாண்டுதான் நிண்டன். 

கிட்டடியிலை தமிழகத் தொலைக்காட்சி ஒன்றிலை, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பீ அவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தன். அந்த நிகழ்ச்சியிலை திறமையாகப் பாடின ஒரு சிறுவனோட காலைத் தொட்டுக்கும்பிட்டார் எஸ்.பி.பீ.! பார்த்துக்ெகாண்டிருந்த எல்லோருக்கும் பேரதிர்ச்சி! நீ கடவுளுக்குச் சமம்டா! என்றுதான் அந்தப் பையனைப் பாராட்டினார் அவர்! இதை எந்தக் கண்ணோட்டத்தில் நோக்குறது?  

எங்களால் இன்னொருவருக்குப் பெருமையோ மரியாதையோ கிடைக்குதென்றால், கிடைத்துவிட்டுப்போகட்டுமே! அதில் நமக்கு என்ன சிறுமை வந்துவிடப்போகிறது. உண்மையைச் சொன்னால், தமிழ் கலைஞர்களைத் தமிழர்கள் ஊக்குவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அதற்குத் தமிழ்க் கலைஞர்களும் ஒருவிதத்தில் பொறுப்பாளர்கள்தான் என்பதை அவரும் அறிவார். 

இப்பிடி விசயம் தெரிந்த அவர், பிரதம ஆசிரியரோட கதைக்கும்போது கொஞ்சம் கவலைபட்டிருக்கிறார்.

விசயம் என்னெண்டால், இந்தப் பத்தியைப் பொறுத்தவரை சமூக சீர்திருத்தத்திற்கான ஓர் ஆயுதமாகவே இதனைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் பல்வேறு சமூகப் பிறழ்வுகளை வெளிக்ெகாணர்ந்தபோது அதற்குப் பொறுப்பானவர்கள் உரிய தீர்வுகளையும் பெற்றுக்ெகாடுத்திருக்கிறார்கள். அப்பிடி இந்த விடயத்திலும் தவறுகள் திருத்தப்பட்டால், எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்ற விழாக்கள் செம்மையாக நடக்கும்; மகிழ்ச்சியாகவும் இருக்கும்! நாங்கள் இதனை எந்தவித காழ்ப்புணர்வுகொண்டும் எழுதவில்லை. சமுதாய நலனே எமது இலக்கு. எவரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது; எவரதும் ஜனநாயக உரிமை, பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரத்தின் மீது நாம் தலையிடவில்லை. இங்குச் சுட்டிக்காட்டிய விடயங்கள் தவறெனின், அதற்குரிய பரிகாரத்தைத் தேடுவதற்குப் பாதிக்கப்பட்ட தரப்பிற்குப் பூரண சுதந்திரம் இருக்கின்றது. 

எனவே, பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, நீதிமன்றம் உள்ளிட்ட நீதிப்பொறிமுறைகளை நாடுவதற்கும் பூரண உரிமை இருக்கிறது. 

உங்கள் மேல் எங்களுக்கு எந்த மனக் கிலேசமும் இல்லை. இது முற்றிலும் நடந்த சம்பவம் பற்றியதேயன்றிச் சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றியது அல்ல! சான்றோர் தவறையே வெறுப்பர், தவறு செய்தவரை அல்ல என்பதை நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.

இனியொரு விழாவில், இப்படியான குளறுபடிகளை மெத்தப்படித்த விழா ஏற்பாட்டுக் குழுவினர் தவிர்க்க வேண்டும் என்பதற்கே அந்தச் சம்பவத்தை பதிவு செய்தோம் என்பதை மீண்டும் உறுதியாகச் சொல்லிக் ெகாள்கின்றோம். விருதுபெற்ற சகலரையும் மீண்டும் இதயத்திலிருந்து வாழ்த்துகின்றோம்!  

Comments