வாக்களித்தபடி ஆசிரியர்களை பெற்றுத்தருவாரா இராதாகிருஷ்ணன்? | தினகரன் வாரமஞ்சரி

வாக்களித்தபடி ஆசிரியர்களை பெற்றுத்தருவாரா இராதாகிருஷ்ணன்?

மத்துகம கல்வி வலயத்தில்  கன்னங்கர மத்திய மகா வித்தியாலயம், இலவசக் கல்வியின் தந்தை எனப் போற்றப்படும் கலாநிதி  சீ.டப்ளியூ. டப்ளியூ. கன்னங்கரவின் பெயரில் இயங்கிவரும் ஒரு பிரபல பாடசாலையாகும். 

இங்கு சுமார் 4600 மாணவர்கள் கற்பதுடன் 185 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர். இங்கு தமிழ்ப் பிரிவும்  இயங்கி வந்த போதிலும் அது வெளியுலகிற்கு தெரிவதில்லை. பெயருக்கு தமிழ்ப்பிரிவாக இயங்கி வருகிறது. கல்வித்தரத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் கிடையாது. போதிய இடவசதியோ, தேவையான ஆசிரியர்கள் மற்றும் வசதிகளோ அற்ற நிலையில் ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் இந்த தமிழப்பிரிவு இயங்கி வந்துள்ளது.  

இத்தனை பின்னடைவுகளுக்கு மத்தியிலும் இப்பாடசாலைக்கென   சுமார் 300 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 48 X 40 அளவிலான மூன்று மாடிக் கட்டடம் ஒன்று கடந்த வருடம் ஜுலை 2ம் திகதி அப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த  வீ. இராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்துகம தொகுதியின் ஐ.தே.க பிரதான அமைப்பாளருமான ஜகத் வித்தானகே ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. 

ஆனால் நமது துரதிர்ஷ்டம் பாருங்கள், ஆரம்பகாலம்  முதலே குறைந்த எணணிக்கையைக் கொண்ட மாணவர்களுடன்  பின்தங்கிய நிலையில் இயங்கி வந்த இப்பாடசாலை அதே நிலையிலேயே இன்னும்  இயங்கி வருகின்றது.

தரம் ஒன்று முதல் க.பொ.த. சா.த வரையில் இயங்கிவரும் இப்பாடசாலையில் 140 மாணவர்களே கற்று வருகின்றனர். நீண்ட காலமாக  தமிழ், விஞ்ஞானம், சமயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் இல்லாத நிலை இன்றைக்கும் அப்படியே தொடர்கிறது.  

இங்கு சமய பாடத்துக்கான ஆசிரியர் ஒருவர் இருந்த வரலாறே கிடையாது. தேவையான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவும், தடையும் ஏற்பட்டுள்ளது. 

இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த சா.த பரீட்சையில் 11 மணவர்கள் தோற்றவுள்ளனர் என்பதுடன் இதுவரையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளும் திருப்திகரமாக அமையப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பிரிவுக்குப் பொறுப்பாக ஆங்கில ஆசிரியர் நியமனம் பெற்ற ஆசிரியர் ஒருவரும் (Sectional Head) ஆறு ஆசிரியர்களுமே  கடமையிலிருந்து வருவதுடன் மேலும் 10 ஆசிரியர்கள் இங்கு தேவைப்படுகின்றனர். 

பாடசாலையின் நிர்வாகம், மேற்பார்வை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மத்திய மகா வித்தியாலய அதிபரின் நிர்வாகத்துக்குட்பட்டதாகவே இருந்து வருகிறது. 

அன்று பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்து அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன்  இங்கு உரையாற்றுகையில் தமிழ்ப் பிரிவுக்கு அடியும் இல்லை, நுனியும் இல்லை. நடுப்பகுதி மட்டுமே உள்ளது. இப்பாடசாலையின் நிலை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். 

இப்பாடசாலையைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்று இங்கு நேரில் வருகை தந்து பார்வையிட்டதன் பின்னரே இதன் நிலை பற்றி தெரிந்து கொண்டேன். தமிழ்ப் பிரிவுக்கான ஆசிரியர்களை அதிகரிக்க வேண்டும். தமிழ், சிங்களம் இரண்டுமே ஒன்றாக சமமாக செல்ல வேண்டுமாயின் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் தொகை அதிகரிக்கப்படல் வேண்டும். இங்கு தேவையான ஆசிரியர்களைப் பெற்றுத்தரவும் உணவு விடுதியொன்றை அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அடுத்துவரும் வருடங்களில் இங்கு க.பொ.த உ.த ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

இன்று ஒருவருடத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால் அமைச்சர் அன்று கூறியவாறு இதுவரையில் இங்கு எந்தவொரு  மாற்றமும் ஏற்படவில்லை. இங்கு தற்பொழுது உடனடியாகத்  தேவைப்படுவது ஆசிரியர்களே.   தமிழ்க்கல்வி பற்றி அடிக்கடி மேடைகளில் முழங்கி வரும் அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் அன்று உறுதியளித்தவாறு தேவையான ஆசிரியர்களைப் பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர். 

இது இவ்வாறிருக்க, ஹோமகம கல்வி வலயத்தின் புவக்பிட்டி சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இரண்டு வாரங்களில் தேவையான ஆசிரியர்களைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்திருந்த போதிலும்  எதுவும் நடந்த பாடில்லை. 

அரசியல்வாதிகள் செலவின்றி சிரமமின்றி வஞ்சகமில்லாது. கணக்கு வழக்கு பார்க்காது தாராளமாக வாரி வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றிவைப்பதிலும் தாராள மனப்பான்மை இருத்தல் வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றி வைத்து மக்களின் நம்பிக்கை. விசுவாசம், நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இங்கிரிய மூர்த்தி

Comments