புதிய படைப்பாளிகளை ஊக்குவித்த ஊடகவியலாளர் சோ. சிவபாதசுந்தரம் | தினகரன் வாரமஞ்சரி

புதிய படைப்பாளிகளை ஊக்குவித்த ஊடகவியலாளர் சோ. சிவபாதசுந்தரம்

1930ல் வெளிவரத் தொடங்கிய ஈழகேசரியை ஈழத்து நவீன இலக்கியத்துக்கான வழித்துணையாக மாற்றிக் காட்டியவர் சோ. சிவபாதசுந்தரம். 

காந்தீயவாதியான பொன்னையாவினால் ஆரம்பிக்கப்பட்ட ஈழகேசரி முதல் எட்டாண்டு காலம் ஒரே பழைய சுவட்டில் நடந்து கொண்டிருந்தது. 1938ல் ஈழகேசரியின் ஆசிரியரான சோ. சிவபாதசுந்தரம் அதன் பழைய பாணியை மாற்றிய மைத்து ஒரு புதுத்திருப்பத்தை ஏற்படுத்தி மாணவர்கள் மத்தியிலிருந்தும் பெண்கள் மத்தியிலிருந்தும் புதுப்புது எழுத்தாளர்களைத் தேடினார். கண்டு பிடித்தார் உற்சாக மூட்டி எழுதவைத்தார். 

ஈழகேசரி இளைஞர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி புதிய இலக்கிய இளைஞர்களை ஒன்று திரட்டி 200க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைச் சேர்த்தார். கல்வி அனுபந்தம் என்னும் இணைப் பத்திரிகையை ஈழகேசரியுடன் வெளியிட்டார். இந்த கல்வி அனுபந்தம் மற்றும் ஈழகேசரி இளைஞர் சங்கம் மூலமாக உருவாகி பிற்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்களானோர் நிறைய உண்டு. கனக செந்திநாதன். அ.செ.முருகானந்தன், வரதர், அ.ந. கந்தசாமி போன்றோர் உதாரணத்துக்கான ஒரு சிலர். கலைமகள், ஆனந்தவிகடன் என்று எழுதிக் கொண்டிருந்த நமது சிறுகதை முன்னோடிகளையும் ஈழகேசரியில் எழுதவைத்தவர் இவர். 

யாழ்ப்பாணத்தில் 27.08.1912ல் பிறந்த சோ. சிவபாதசுந்தரம் யாழ் மத்தியக் கல்லூரியில், கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியிலும், சட்டக்கல்லூரியிலும் கல்வி பயின்றவர். சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மணிக்கொடி ஆசிரியராக விருந்த வ.ரா. வீரகேசரிக்கு ஆசிரியராக வந்த போது இவர் தங்கியிருந்த செட்டியார் தெரு மாடி அறையில் தான் வ.ரா.வையும் சில காலம் தங்க வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மணிக்கொடிக் குழுவினருடனும், தமிழகப் பத்திரிகை சஞ்சிகைகாரர்களுடனும் நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டிருந்தவர் இவர். ஈழத்துப் படைப்புகளும் படைப்பாளர்களும் தமிழக இலக்கிய உலகிற்கு அறிமுகமாவதற்கும் பேசப்படுவதற்கும் காரண கர்த்தராகத் திகழ்ந்தவர் சோ. சிவபாதசுந்தரம். 

புதுமைப்பித்தனும் கு.ப.ராவும், பிச்சமூர்த்தியும் சிட்டியும் இங்கு அறிமுகமானது போலவே இலங்கையர்கோனும் வைத்திலிங்கமும், கனக செந்தியும் அசெமுவும் அங்கு அறிமுகமானார்கள். 

சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரியின் ஆசிரியரானதும் ஈழகேசரிக்கான ஓவியராக சானாவை இணைத்துக் கொண்டார். 

‘1937ல் நான் ஈழகேசரியில் சைத்திரியனாகச் சேர்ந்தேன். அப்போது சோ. சிவபாதசுந்தரம் ஆசிரியப் பதவியில் இருந்தார். பத்திரிகைக்கு ஏதாவது எழுதுங்காணும் எழுதுங்காணும் என்று நச்சரித்தே என்னை எழுதவைத்து விட்டார். பத்திரிகை ஆசிரியரான அவரிடமே முறையாகத்தமிழ் படித்து எழுத்தாளன் ஆனேன்’ என்கின்றார் சானா. ஈழகேசரியில் அவர் எழுதிய நடைச் சித்திரங்கள் பரியாரி பரமர் என்னும் பெயரில் நூலான போது (1964) ‘சைத்திரிகனான என்னை எழுத்தானாக்கிய நண்பன் சோசிக்கு நன்றியுடன் இந்த நூலை சமர்ப்பிக்கின்றேன்’ என்றும் பதிகின்றார் சானா. 

சோ. சிவபாதசுந்தரம் மணிக்கொடிக்கால எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறுகதை நாவல் போன்ற துறைகளில் என்னை வழி நடத்தினார். நல்ல விமர்சனங்களை எப்படி எழுத வேண்டும் என்பதையும் தொட்டுக்காட்டினார்’ என்கின்றார் கனக செந்திநாதன். 

அல்லயன்ஸ் வீ.குப்புசாமி ஐயர் வெளியிட்ட நல்ல தமிழ் சிறுகதைகள் என்னும் பெருந்தொகுப்புக்களில் ஈழத்துச்சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளமைக்குக் காரணம் கலைமகளும், ஈழகேசரியுமேயாகும். கலைமகள், கிராம ஊழியன் போன்ற சஞ்சிகைகள் இலங்கையில் பரவலாக வாசிக்கப்பட்டதைப் போலவே ஈழகேசரி தமிழக இலக்கியவாதிகளால் விரும்பி வாசிக்கப்பட்டிருக்கிறது’ என்று எழுதிவைத்துள்ளார் செங்கையாழியான். 1938லிருந்து குப்புசாமி ஐய்யரின் இக்கதைத் தொகுப்புக்கள் வெளிவரத் தொடங்கின. 

முதல் தொகுதியில் இலங்கையர் கோன், வைத்தியலிங்கம், சம்பந்தனும் இடம் பெற்றுள்ளதைப் போலவே இரண்டவது தொகுதியில் சோ. சிவபாதசுந்தரமும் இன்னும் சிலரும் இடம் பெறுகின்றனர். 

படைப்பாளிகளை ஊக்குவித்து எழுதத்தூண்டிய பத்திரிகை ஆசிரியர் மட்டுமல்ல அவரே ஒரு படைப்பாளியும் ஆவார். முப்பதுகளில் எழுத ஆரம்பித்த இவர் தோட்டத்து மீனாட்சி என்னும் சிறுகதையை ஆனந்த விகடனில் எழுதினார். பெரும்பாலான கதைகள் ஈழகேசரியிலேயே வெளிவந்துள்ளன. 

சொந்தப் பெயரிலும் சில புனை பெயர்களிலும் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நூல் அறிமுகங்கள் நூல் விமர்சனங்கள் என்று தொடர்ச்சியாக எழுத்துப் பணியாற்றியவர் சோ. சிவபாதசுந்தரம். ஈழகேசரி, வீரகேசரி போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிப் பிறகு இலங்கை வானொலியின் தமிழ்ப்பகுதி அதிகாரியாகக் கடமையாற்றினார். 

ஒலிபரப்புக் கலையில் சிறந்த தேர்ச்சிபெற்றவர் இவர். இவருடைய ‘ஒலிபரப்புக்கலை’ என்னும் நூல் பலராலும் விதந்து போற்றப்பட்டது. லண்டன் பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சியை ஆரம்பித்துவைத்த பெருமைக்குரியவர். இந்தியப் பிரஜையாகத் தமிழ் நாட்டில் சிறிது காலம் வாழ்ந்த போது சென்னை வானொலி நேரடி ஒலிபரப்புக்காக இவரை அழைப்பதுண்டு. காமராஜர், அறிஞர் அண்ணாத்துரை போன்ற பெரியவர்களின் மறைவின்போது மறைவிற்கான நேரடி ஒலிபரப்புக்காகவும் சோ சிவபாத சுந்தரத்தையே சென்னை வானொலி அழைத்திருந்தது. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழ் நாவல் நூற்றாண்டுக்காக நாவல் பற்றி ஆய்வுரையாற்றும் (1976) தமிழில் சிறுகதை வரலாறு பற்றி உரையாற்றவும் (1978) சோ. சிவபாதசுந்தரம் மற்றும் பெ.கோ. அந்தரராஜன் (சிட்டி) ஆகியோரையே தெரிவு செய்திருந்தது. இவ்விரு ஆய்வுகளும் பிறகு நூலாகவும் வெளிவந்துள்ளன. 

சோ. சிவபாதசுந்தரம் அவர்களின் நூல்களாக வெளிவந்திருப்பவை 

* மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் 1947 

* ஒலிபரப்புக்கலை 1954 

* கெளதம புத்தர் அடிச்சுட்டில் 1960 

* சேக்கிழார் அடிச்சுவட்டில் 1978 

கௌதம புத்தர் அடிச்சுவட்டில் 1960ஆம் ஆண்டுக்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றுக் கொண்டது. 

லண்டனில் மகளுடன் வாழ்ந்தபோது 8-11-2000ல் சோ. சிவபாதசுந்தரம் அமரர் ஆனார்.

தெளிவத்தை ஜோசப்

Comments