மனப் பிரசவம் | தினகரன் வாரமஞ்சரி

மனப் பிரசவம்

எங்களூர் கடற்கரை மீனவர்களால் நிறைந்து வழிந்து கொண்டிருக்கிறது. பல மாதங்களாக மீன்பிடி இல்லாமல் காய்ந்து கிடந்த கடலில், தோணிகள் நிறைந்து கிடக்கின்றன. கடற்கரையெங்கும் கிடக்கின்றன. கடற்கரையெங்கும், மக்கள் நிறைந்து, மகிழ்ச்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. கடற்கரை ஓரங்களில் செழித்து நிற்கும் தாழை மரங்களின் கீழே பெண்கள் கூட நிற்கின்றனர். பூத்து நிற்கும் தாழம் பூக்களின் மணம், கடற்கரைக் காற்றில் கலந்து வீசிக் கொண்டிருக்கிறது.  

வடிவன் தோணில் வொச்சர் அத்துறசூல், வாடிக்குள் இருந்து பெரிய மீன் கூடைகளை, எடுத்துக் கொண்டு, மீன்மடி, கரை ஏறி நிற்கும் தோணியடிக்கு ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருக்கிறான். அவன் அவசரமாகப் போவதைப் பார்த்து, கரைத்தண்டயல்,  

“அத்துறுசூல்! என்ன பம்பலா?” என்று கேட்க,  

“நல்ல பாடுதான் தண்டயல்...! எல்லாம முண்டக்கண்னன் தான்” என்று அத்துறசூல் சொல்லி விட்டு ஓட்டமும் நடையுமாப் போகிறான்.  

கடல் முழுக்க தோணிகள் மீன்களை எதிர்பார்த்து கிடக்கின்றன. அப்பொழுது, வயிரன் தோணி வாடிக்குள் சிலர் குந்திக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது, அங்கு நாயும் புலியும் விளையாடிக் கொண்டிருந்த ஆடுகால் வீறான்.  

“தம்பே!.... சாடிக்க கெடந்த உப்புப் போட்ட கீரிமீனையெல்லாம் எடுத்துக் கொண்டு போய், வெயில காயப்போடுங்கடா... நேரத்தோட காயப் போட்டத்தான், பின்னேரம் சுப்பம் கட்டலாம்...” என்று வீறான் தண்டயல் கூறிவிட்டு கடலை நோக்கிக் கொண்டிருக்கிறார். கடல் பெரிய அலையின்றி அமைதியாக கிடக்கிறது.  

“நேத்து லாவு, ஊருக்குள்ள எஸ்ரிஎப் வந்து கடும் செக்கிங்காம். எல்லாரும் பயந்து போய், ஊட்ட இரிந்த கத்தி, கொடாலிகளையெல்லாம் கொண்டு போய் கிணத்திலையும், ஆத்திலையும் போட்டுப் போட்டு வந்திற்ராகளாம். ஊரெல்லாம் பயத்தால் ததிமிது கொள்ளுது. எவனோ ஒரு நாய் செஞ்ச வெலயால, எல்லாருக்கும் கஸ்ரமா போச்சி... இந்த நாயெல்லாம் இஸ்லாத்த காசிக்கு வித்துப்போட்டானுகள்” என்று நாயும் புலியும் விளையாடிக் கொண்டிருந்த சாளவாயன்ட சமது சொல்ல, பக்கத்திய கொறவீடி கொளந்த வாரிச் சுருட்டி எழுந்து,  

“அன்னா, கடல்ல கறுப்படிக்கிது, புள்ளுகளும் மீன்களத் தொரத்தி வருகிது. கெதியாய் போய் மூட்டானப் பார்த்து இழுங்கடா... படுத்தது போதும், எழும்புங்கடா” என்று கொளந்த சொல்லிக் கொண்டு, மூட்டான் கயிற்றடிக்குப் போகிறான். கொளந்தையைப் பின்தொடர்ந்து, வாடிக்குள் இருந்த எல்லோரும் போகின்றனர், கடலில் மீன் கொதித்து வருவதைப் பார்த்து தண்டயல், தோணியில் இருந்து தன் சால்வையைக் காட்டி எல்லா மீனவர்களையும் உசார்படுத்திக் கொண்டிருக்கிறான். இங்கே, சேலோடி செலயிமானும், அவிசனாட அச்சியும் லாவு உப்படிச்ச கீரிமீன்களை, கூடைகளில் அள்ளி எடுத்துக் கொண்டு, வெயிலில் காயப் போடுகின்றனர்.  

காலை எழுமணியை விழுங்கி விட்டு, சூரியன் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறான். வடிவன் வாடியில் படுத்துக்கிடந்த எல்லோரும் எழும்பி, வலைக்காலடிக்கு போகின்றனர். கடலில் மீன் கொதித்து கறுத்து வருகிறது, மீன் கொதிப்பை பார்த்து மீன்வர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். அலவக் கரவைக்குள், வலையில் முடிந்து விட்ட மூட்டான் கயிற்றை, பிடித்துக் கொண்டு, சாலாட சாவல் நீந்தி வருகிறான். சாவலிடமிருந்து மூட்டான் கயிற்றை பற்றிப் பிடித்து வலையை இழுப்பதில், மீனவர்கள் உசாராகி விட்டனர்.  

தண்டையில் வளைந்து கிடக்கும் மீன்களின் கொதிப்பைக் காட்டிக் காட்டி, விரைவாக வலையை இழுக்க, மீனவர்களை உசார்படுத்திக் கொண்டிருக்கிறான்.  

இரண்டு பக்கமும் மீனவர்கள் உசாராக வலையை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கின்றனர். வலை இழுக்கும் போது அம்பாப் பாடல்கள், இழுவைக்கு ஏற்றாப்போல், இரு வலைக்கால்களிலும் மீனவர்களால் ஏட்டிக்கு போட்டியாகப் பாடப்படுகின்றன....  

“ஏலேலோம்... ஏலேலோம்...  

ஓவடி ஏலம்... ஏலச்சியாமாய்..  

கள்ளச் சிலாமாய்..  

கலம்மக் கயிறு ....ஏலேலோம்  

கடலனப் பார்ரா...  

கறுப்படிக்கு...  

புள்ளப் பார்ரா  

அள்ளிப் போகுது...  

ஏலேலோம்...ஓவேலேம்...”  

வலை இழுக்கும் போது குசுவண்ட மம்மது அம்பாய் பாடலை ராகமெடுத்து பாட, மற்ற மீனவர்கள் ஏலோலோம்.... சொல்லி இழுக்கின்றனர். ஒரே மகிழ்ச்சி...  

கடற்கரையெல்லாம் கலியாண வீடுபோல் இருக்கிறது. கரையேறிய தோணிலிருந்து, கூடைகளில் வடிவன் தோணி கரைத்தண்டயல் மீன்களைக் கொண்டு வந்து, பெண்களுக்கும் ஆண்களுக்கும், இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சிலர் பெட்டிகளிலும், பேக்குகளிலும் வாங்கிய மீன்களை எடுத்து மகிழ்ச்சியுடன் போகின்றனர்.  

பெட்டி, பேக்குகள் கொண்டு வராதவர்கள் கடற்கரையோரத்தில் நிற்கும் அடம்பன் கொடிகளைப் பிடிங்கி வந்து, அதில் மீன்களை கோர்த்து கொண்டு போகின்றவனர். தூரத்தில் நிற்கும் மௌலவி ஒருவருக்கும் தண்டயல் மீன்களை அள்ளிக் கொடுத்து விட்டுப் போகின்றார். முஹைதீன் தைக்கா மோதினும் கூட நிற்பதைப் பார்த்து தண்டயல் மீன்களை மீண்டும் திரும்பி வந்து அவருக்கும் அள்ளிப் போட்டுவிட்டு சிரித்தபடி போகிறார்.  

வயிரன் தோணி கரை ஏறப்போகிறது. மீனவர்கள் சள்ளையைக் கூட்டிக் கொண்டிருக்கின்றனர். மடி நிறையை முண்டக் கண் பாரக்குட்டி.... மடி, மீனவர்களின் இழுவைக்கு சற்று அசையாதிருக்க, மடி வெடுத்து விடும் போல் இருக்கிறது. உடனே வீறான் தண்டயல் டே, சாவல்! வடிக்க ஓடிப்போய் மடிதாங்கிய எடுத்துக்கு ஓடியாடாம்பி...” என்று சொல்ல, சாவல் அம்பு போல், வாடிக்குள் போய், மடி தாங்கிய எடுத்து வருகிறான். மீனவர்கள், மீன்களால் நிரம்பி அசையாது கிடக்கும் மடிக்கு மடிதாங்கிய போட்டு இழுத்து கரையேற்றி குதுகலித்து நிற்கின்றனர். மடி நிறைய முண்டக்கன் பாரக்குட்டி மீன் கனத்துக் கிடப்பதைப் பார்த்து பார்த்து மீனவர்கள் குதுகலித்து நிற்கின்றனர். மடியில் விம்மிக்கிடக்கும் மீன்களை, கூடைகளில் அள்ளி, தரையில் கொண்டு போய் போடுகின்றனர். கரைத் தண்டயல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கிறார். வலைக்கால்களில் நின்று வலை இழுத்து களைத்த மீனவர்கள் சிலர், தேனீர் குடிப்பதற்காக கடைக்குப்போகின்றனர். தேயிலைக் கடை முதலாளியாக்குப்பு “ங்... வாங்க பாலப்பம், முட்டக்கோஸ் இரிக்கு... சூடாறல்ல... எடுங்க...” என்று கூறி விட்டு, தேனீர் போடுவதில் உசாராகி நிற்கிறான். வலையிழுத்து களைத்த மீனவர்கள் எல்லோரும் யாக்கூப்பின் தேனீர் கடையில் குவிந்து இருக்கின்றனர். அப்பொழுது கரைத்தண்டயல் சாலாட மீரான்  

“ங்... தேயிலைக் குடிச்சுப் போட்டு கெதியா வந்து, தோணில்ல வலய ஏத்துக்கங்க... அன்னா, மீன் கொதி, கறுப்படிச்சி வருகிது,  

ங்..., சட்டுப்பண்ணி வாங்க வாப்பா” என்று கூற, தேனீர்க் கடைக்குள் இருந்த மீனவர்கள் எல்லோரும் சுறுக்காப் போகின்றனர். தாளை மரநிழலில் குந்திக் கொண்டிருந்த பெண்கள், கரையேறிய வயிரன். தோணிலடிக்கு வந்து நிற்கின்றனர். அவர்களோடு புத்தியறிஞ்ச நாலந்து குமருப் பிள்ளைகளும் நிற்கின்றனர்.  

எல்லாம் நல்ல வடிவான குமருகள். அவர்களை ஏழ்மை சிறை பிடித்து, வாழ்வைக் கருக்கிக் கொண்டிருக்கிறது. கரைத் தண்டையல் சாலாட மீரான் கூடையில் கொஞ்சம் மீன்களை எடுத்து கூடி நிற்கும் பெண்களுக்கு கொடுக்கிறான். அங்கே அழகோடு போராடிக் கொண்டிருந்த குமருப் பிள்ளையை மீரான் பார்த்து “நீ, எங்கிட ஆதம் மாமாட எளய மகளா?” என்று கேட்க, பக்கத்தில் மீன் வாங்கிக் கொண்டிருந்த கெவிளி பெண்டி “ஓம் தம்பி, ஆதம் மாமாட ரெண்டாவது புள்ள இவதான். அவருக்கு ஓண்டுக்கும் ஏலா படுத்த படுக்கைதான், இப்ப” என்று கூறுகிறாள். “ச்சா...! ஆதம் மாமா எவ்வளவு உசாதாரண மனிசன். எங்கிட தோணிலுக்கு, அவரு இல்லாமல் போனா ஒரு கைமுறிஞ்ச மாதிரிபோச்சி’ என்று கரைத்தண்டயல் கூறி, பாரக்குட்டி மீன்களை அள்ளிப் போடுகிறார்.  

“கடக்கரைக்கு வாற நேரம், ஒரு பேக்கை கையில பிடித்து வாறல்லியா?” என்று தண்டையல் கூற, பக்கத்தில் நின்று கொண்டிருந்த அகமது ஓடிப் போய், அலம்பைக் கொடியொன்றை பிச்சி வந்து, மீன்களையெல்லாம் வடிவாகக் கோருத்து ஆதம்மாமாவின் மகளின் கையில் கொடுக்கிறான். அந்த நிமிடமே, அகமது மன்மதனாகிறான்.  

எங்கும், இளமையின் ஊஞ்சலில், கடற்கரை இசைபாடுகிறது ஆதம்மாமாவின் மகள் மீன்கோருவையோடு, அகமதைப் பார்த்துப் பார்த்து போவதைக் கண்டு கரைத் தண்டையல் மீரான் கொடுப்புக் கால் சிரிக்கிறார்.  

சூரியன், பன்னிரெண்டு மணியை விழுங்கிக் கொண்டு உச்சியைப் பிடித்த இறுமாப்பில், வெய்யிலைக் கக்கிக் கொண்டிருக்கிறான். மீனவர்கள் தங்கள் தோணிகளின் வலைகளை எல்லாம் வெய்யிலில் காயப்போட்டுக் கொண்டிருக்கின்றனர். கீரிக் கருவாட்டின் மணம், கடற்கரையெங்கும் வியாபித்து மணக்கிறது.  

மீனவர்கள் எல்லோரும் போய் விட கடற்கரையெங்கும் வெறிச்சோடிப்போகிறது.  

அந்திவானம் அமைதியாகக் கிடக்கிறது. மீண்டும், எங்களூர்க் கடற்கரை மீனவர்களால் உயிர்த்தெழுந்து சிரிக்கிறது. காலையில் பிடித்த மீன்களின் பணத்தைப் பிரிப்பதற்காக, மீனவர்கள் வாடிகளில் குந்திக்கொண்டிருக்கின்றனர்.

வாடிகளுக்குள் கடல் அரிக்கன் லாம்புகள் ஒளியேற்றிக் கொண்டிருக்கின்றன. தேனீர்கடை யாக்கூப், காலையில் மீனவர்களுக்கு கொடுத்த கடன் கொப்பியோடு வாடியை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். வாடியெங்கும் மகிழ்ச்சியும், கும்மாளமுமாக இருக்கிறது. காலையில் வியாபாரிகளுக்கு கொடுத்த மீன்களின் பணத்தோடு, கணக்கப்பிள்ளை வருகிறார். அவரோடு தண்டியிழுக்கிற பூனப்பல்லன்ட நாகூரானும் வருகிறான். காசிப் பையோடு வந்த கணக்கப்பிள்ளை வாடியில் அமர்ந்து கணக்கைப் பார்த்து மீனவர்களின் பங்குப் பணத்தை பிரிக்கின்றார். இரண்டு நாட்கள் பிடித்த மீன்களின் கணக்கை, கணக்கப் பிள்ளை இன்று தான், ஒன்றாக சேரத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களும் கடலில் மீன்பிடி நல்ல கதிப்பாக இருந்ததால், காசிம் கனப்பாக இருக்கிறது. பலமாதங்களாக கடலில் மீன்பிடி இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த கடற்கரை, மீன்பிடி கனத்ததால் மீனவர்களின் முகமெல்லாம் பூரித்து மலர்ந்து கிடக்கிறது. தேனீர்க் கடை யாக்கூப்பு, கச்சான் கொட்டை சுருள்களோடு வந்து குத்திக் கொண்டிருக்கிறான். மீனவர்கள் சிலர், கச்சான் கொட்டை சுருள்களை வாங்கி உடைத்து வாயில் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது, “தம்பேய்! என்ர மூத்த மகன் மம்மது, ஒரு சைக்கிள் வாங்கி கேட்டு, லாவெல்லாம் ஒரே கரச்சிப்படுத்திக்கு கிடந்தான். பெண்டாட்டியும் கூட, மகனுக்கு சப்போட் பண்றாள். எனக்கு செலவுக்குக் கூட கையில ஒரு சதமுமில்லை... இன்டைக்கு கிடைக்கிறதை கொண்டுதான், ஒரு மூட நெல்லு வாங்கிக் குத்தி எடுக்கணும். ஊட்ட பாடெல்லாம் கடும் கஷ்டம்டா தம்பி” என்று பொந்தன்ட பொக்கணியன் கூறிய படி கச்சான் கொட்டையை உடைத்து வாயில் போடுகிறான். பொந்தண்ட பொக்கணியனின் கதையை கேட்டுக் கொண்டிருந்த தோலன்ட சமது,  

“ஒன்ட சீலம் தான் எனக்கும் வந்திரிக்கு... இவள் வட்டியன்ட ஆசியா, நேத்து லாவு வந்து அவள்ள வட்டிக் காசக் கேட்டு கொம்புறாள். இல்லாட்டி ஊட்ட உட்டுப் போட்டு எழும்பச் சொல்றாள். ஐயாயிரம் வாங்கின காசிக்கு வட்டிக் காசே ரெண்டாயிரம் குடுத்திட்டன்.

இப்ப, ஒன்டுக்கும் மசியாம காசக் கேக்காள். இதுக்குள்ள பொண்டாட்டிக்கு சீனி வருத்தம்... ஒவ்வொரு நாளும் ரெத்தம் சோதிக்கிறத்திலேயே வாண்டபோகிது...” என்று சமது கூறிவிட்டு, கணக்கப்பிள்ளை காசி பிரிப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறான்.  

சூரியன் முற்றாக மறைந்து விட கடற்காற்று முழுமையாக வீசிக் கொண்டிருக்கிறது. வீசும் வாடைக் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் வாடிக்குள் கட்டி இருந்த கடல் லாம்புகள் இரண்டும் அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருக்கின்றன. மீனவர்கள் சுமார் இரண்டு மூன்று மாதங்கள் மீன்பிடி இல்லாமல் தாங்கள் பட்ட கஷ்ட நட்டங்களைச் சொல்லிச் சொல்லி அசைபோட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனவர்களின் காசி பிரிக்கும் வேலையில், கணக்கப் பிள்ளை கண்ணும் கருத்துமா இருக்கின்றார். அப்பொழுது, பூனப்பல்லன்ட மையதீன்  

“கணக்கப்புள்ள...! இந்தக் காசில புடிகாசியை எடுக்காம கெடச்சகாசி எல்லாத்தையும் போட்டுப் பிரிங்க... கனக்கச் செலவெல்லாம் கெடக்கு...” என்று கூற; அதை எல்லா மீனவர்களும் ஏகோபித்து ஆமோதித்து சிரிக்கின்றனர்.  

அப்பொழுது, சுப்ரிந்தார் பள்ளிவாசல் மோதின், கொழுக்கட்ட பொட்டிர கலந்தர், இஷ்ஷாத் தொழுகைக்குரிய பாங்கை ராகமெடுத்து விடுகிறார். பாங்கு சப்தத்தை கேட்டு மீனவர்கள், அமைதியாகி சப்தமின்றி இருக்கின்றனர்.  

பாங்கு முடிவடைந்து மீனவர்கள் அமைதியாக இருக்கும்போது, ஆதம்மாமாவின் மனைவி தன்னுடைய கடைசி மகளை கையில் பிடித்தவாறு வந்து வயிரன் தோணி வாடியடியில் நிற்கிறாள்.  

ஆதம்மாமா நல்ல மீனவராக இருந்து இந்த வயிரன் தோணி வளர்ச்சி பெறப் பாடுபட்டு, இன்று நோய்வாய்ப்பட்டு, ஆறுமாதங்களுக்கு மேலாக, படுத்த படுக்கையால் வீட்டிலேயே இருக்கிறார். இவரின் மேல் எல்லா மீனவர்களுக்கும் நல்ல மதிப்பும், மரியாதையும் இருப்பதினால், அவரின் மனைவி வாடிக்கு வந்திருப்பதைப் பற்றி அறிய அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனவர்களின் அவசரத்தை சாதகமாக்கிக் கொண்டு கரைத் தண்டயல், ஆதம்மாமாவின் மனைவி வந்த விடயத்தை கேட்கிறார். எல்லா மீனவர்களும் அவவின் பதிலை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.  

“ஆதம் மாமாவின் நெலம மிச்சம் மோசமாக கெடக்கு... கெதியா ஒப்பரசன் பண்ணனுமென்டு டாக்டர் செல்லிற்ராரு... கொழும்புக்குத்தான் போகணும்...  

என்ர ஊட்டு நெலம, ஒங்கெளுக்கெல்லாம் நல்லாத் தெரியும். இரிக்கிறத்துக்கு ஒளுங்கா ஒரு ஊடு கூடக் கிடையாது. இப்ப இரிக்கிற குடில்கூட, மழைக்குள்ள ஒழுகிக்கரயிது. நான் அவரக் கொழும்புக்கு கொண்டு போய், ஒப்பரசனப் பண்ண, ஒங்களால் முடியுமான ஒரு ஒதவியப் பண்ணுங்க... அல்லாஹ் ஒங்களுக்கு ஒதவி செய்வான். இந்தக் குமருகள்ள முகத்திற்காவது செய்ங்க...” என்று கூறிவிட்டு ஆதம்மாமாவின் மனைவி தன் முந்தானையை எடுத்து வழியும் கண்ணீரைத் துடைக்கிறாள்.  

ஆதம்மாமா எல்லா மீனவர்களுடனும் அன்பாகவும், ஆதரவாகவும் பழகியவர். அவரின் கஷ்டநிலையை கரைத் தண்டயல், மீன்வர்களிடம் எடுத்து கூறியதும், எல்லோரிடமும் வேதனை ஆட்சி செலுத்தி, மனிதத்துவம் மேலோங்கி நின்றது. காசி கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த கணக்கப்பிள்ளை “இப்ப என்ன செய்யிற? கட்டாயம் இதுக்கு ஒரு ஒதவி செய்யிறது நமது கடமை. பலகாலமாக நம்மளோடு ஒன்டாவேல செஞ்ச மனிசன். இந்த தோணிவலய பெரிசாக்க லாவுபகலெண்டு பாராம ஒழைச்ச மனிசன். புள்ளகுட்டிக்காரன்...” ன்று முடிப்பதற்கிடையில் எல்லா மீனவர்களும் ஒரு மித்து “அவட கையில, நேத்தும் இண்டைக்கும் வந்த காசில ஒரு சதமும் எடுக்காம குடுத்திருங்க... எங்களுக்கு அல்லாஹ் தருவான்...” என்று கூறுகின்றனர். மகிழ்ச்சியில் வாடி மூழ்கிக் கொண்டிருக்கிறது.  

மறுகணம், கணக்கப்பிள்ளை காசை எண்ணிக் கொடுக்க ஆதம் மாமாவின் மனைவி மனநிறைவோடு போகிறாள். அவளின் மகிழ்ச்சியில், வானத்தில் சின்ன நிலாவும் சேர்ந்து சிரிக்கிறது.

எஸ். முத்துமீரான் 

Comments