காணாமல் போனோர் விடயத்தை யதார்த்தமாக அணுகுங்கள் | தினகரன் வாரமஞ்சரி

காணாமல் போனோர் விடயத்தை யதார்த்தமாக அணுகுங்கள்

தமிழ் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டார் என எவரையும் தனியாக முத்திரை குத்திவிட முடியாது என்று கூறுகின்றார் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் மீண்டும் தம்மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுமென்று தமிழ்மக்கள் அஞ்சவில்லையென்றும், தமிழ் மக்கள் சொல்வதாக வெளிவருபவையெல்லாம் அரசியல் பிரமுகர்களினதும், தன்னலங்கொண்டவர்களினதும் விருப்பங்களென்றும் அவர் வெளிப்படையாகக் கூறுகின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய பேட்டி...

கேள்வி: தமிழர்கள் தங்களின் எதிரியாகக் கருதும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க நீங்கள் முன்வந்ததேன்? 

அடிப்படையில் பார்த்தால் இரண்டு பிரதான வேட்பாளர்கள்தான் இம்முறை ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுகின்றார்கள். ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக சஜித் பிரேமதாச. அடுத்தது பொதுஜன பெரமுனவின் சார்பில் கோட்டாபய ராஜபக்ஷ. ஐக்கியதேசியக் கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதாகக் கூறியும், அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாகக் கூறியும் வெறுமனே ஏமாற்றியே வந்திருக்கின்றது. அபிவிருத்தியும் இல்லை. அரசியல் தீர்வும் இல்லை என்ற நிலைதான் இப்போது. அரசு மாத்திரமல்ல தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தான் சேர்ந்து மக்களை ஏமாற்றியது மறுபுறமாக, சிறிலங்கா பொதுஜன பெரமுனவை எடுத்துக்கொண்டால் அதன் தலைவர், முன்னாள் ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக் காலத்தில் வடக்ைக பெருமளவில் அபிவிருத்தி செய்திருக்கின்றார். எனவே அவரது தற்போதைய கட்சியான பொதுஜன பெரமுனவின் ஆட்சியிலும் அபிவிருத்தி தொடரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அதுமாத்திரமல்ல, தீர்வு விஷயத்திலும் அவர்கள் காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். மாகாண சபை மீள இயங்கியது, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றதெல்லாம் அதன் பாற்பட்டதே. விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபை நிர்வாகம் தனது பணியை செவ்வனே ஆற்றவில்லையே தவிர, மஹிந்தவின் அரசு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த அக்கறையைக்  காண்பித்திருக்கின்றது. எனவேதான் மகிந்தவின் ஆட்சி திரும்பவும் வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அந்த ஆட்சி வரவேண்டும் என்றால் ஜனாதிபதித் தேர்தலில் வெல்லவேண்டும். அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கான ஆதரவென்பது அந்த அடிப்படையிலானது. அதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கின்றோம் அவ்வளவே.  

கேள்வி: உங்கள் முடிவினை பகிரங்கமாக அறிவித்தது முதல் நீங்களும் உங்களது தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் பல எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றீர்கள். உங்கள் அரசியல் பயணத்துக்கு இது ஆரோக்கியமானதொரு முடிவாக அமையுமா? 

அரசியலில் எதிர்க் கருத்துக்களும் முரணான கருத்துக்களும் இயல்பானதுதான். அவ்வாறில்லாத ஒரு அரசிலை நீங்கள் பார்க்க முடியாது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 35 சதவீ த வாக்குகளை மாத்திரம்தானே பெற்றது. அப்படியானால் 65 சதவீதமானோர் எதிராகத்தானே இருந்தார்கள் என்று அர்த்தம்? அனேகமானோர் தங்களை எதிர்க்கின்றார்களே என்று அவர்கள் அரசியல் செய்யாமலா இருக்கின்றார்கள்? முரண்பாடுகளும், எதிர்க்கருத்துக்களும் ஏனைய எல்லாத்துறைகளிலும் பார்க்க அரசியலில் மிகவும் சர்வசாதாரணமானது. அதனை வைத்துக்கொண்டு ஒரு அரசியல் தீர்மானத்தை நாங்கள் எடுக்க இயலாது. எங்களுக்கு எது சரி எனப்படுகின்றதோ எங்கள் மக்களுக்கு எது உகந்ததெனப் படுகின்றதோ? அதனடிப்படையில் நாங்கள் செயற்படுகின்றோம். நாங்கள் எங்கள் ஆதவைச் சொன்னபோது ஆரம்பத்தில் பலர் எதிர்த்தாலும் தற்போது தங்கள் முடிவை அவர்கள் மாற்றிக்கொண்டுள்ளனர். தமிழ்த்தேசியப் போர்வை போர்த்த பலரும் தற்போது கோட்டாபயவை ஆதரிப்பதே சரியாதெனக் கூறுகின்றனர்.  

கேள்வி: கடந்த காலங்களின் ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற தமிழ் விரோதசெயற்பாடுகள் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்படுவதன் மூலம் தொடரலாம் என்ற அச்சம்தானே மக்களிடம் இருக்கின்றது? 

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சாத்தியப்படாமை, அவர்கள் மீதான அராஜகம், வன்முறை, பாதுகாப்பு என்பனவற்றுக்கெல்லாம் எல்லா சிங்கள அரசியல் கட்சிகளும் தான் பொறுப்பு . இன்னமும் சொல்வதானால் தமிழ் மக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து அதனை மிக நீண்டகாலம் தொடர்ந்தது ஐக்கியதேசியக் கட்சிதான். இந்தக் கட்சி கூடாது அது நல்லதெனக் கூறுவதெல்லாம் அவரவர் சார்பு நிலையைப்பொறுத்தே. இவர்தான் தமிழ் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டார் என தனியாக எவரையும் முத்திரை குத்திவிட முடியாது. இங்கு விளங்கப்பட வேண்டியது என்னவெனில், இங்கு நீங்கள் குறிப்பிடும்பொது மக்கள் யார் என்பதுதான். அவர் சாதாரண ஒரு மீன் வியாபாரியோ அல்லது ஒரு விவசாயியோ அல்லது ஒரு கூலி ​ேவலை செய்பவரோ அல்ல. அவ்வாறு சொல்பவர்கள் அரசியல் பிரமுகர்களும், வெவ்வேறு தன்னலங்கொண்ட பிரமுகர்களும் ஊடகங்களும்தான், தற்போது நீங்கள் குறிப்பிடும் ‘மக்கள்’ என்ற போர்வைக்குள் அடங்குகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசியல் குறிக்கோள்களுடன் செயற்படுபவர்கள். அவர்களுக்கு உள்நோக்க அரசியல் என்ற ஒன்றிருக்கின்றது.  

கேள்வி: காணாமல் ஆக்கப்பட்டோர் யாரும் இப்போது உயிருடன் இருக்கும் சாத்தியக் கூறுகள் இல்லையென்று நீங்கள் கூறியிருந்தீர்கள். அதுதான் உண்மையான நிலையாக இருந்தால் அதனை ஏற்றுக்ெகாண்டு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் பாதிக்கப்பட்டோருக்கான வேறு தீர்வுகள் குறித்து ஆராய்வதில்லையே ஏன்? 

அரசில் தலைமைப் பதவிகளில் இருப்போர் எல்லோரும் காணாமற் போனார் என்று யாரும் இல்லை என்றே கூறுகின்றார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதனை பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவ்வாறுதான் சொல்லியிருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் கூட காணமல்போன யாரும் உயிருடன் இருப்பதாகச்சொல்லவில்லை. ஏன் தமிழ்தேசியக கூட்டமைப்பு கூட அவர்கள் யாரும் உயிருடன் இருப்பதாக எங்கேயும்சொன்னதில்லை.

காணாமல் ஆக்கப்பட்டது என்பது வெறுமனே இந்த கடைசி யுத்தத்தை மாத்திரமே அடிப்படையாகக்கொண்டு கூறப்படுவதல்ல. அதற்கு முன்னரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்றுதானே எல்லாரும் சொல்கின்றார்கள்? புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் யாரும் உயிருடன் இல்லை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் மாத்திரம் எவ்வாறு உயிருடன் இருப்பதாகக் கருத முடியும்?

தங்களுடைய பிள்ளை இன்ன இடத்தில்தான் இருக்கின்றது என்று எந்தவொரு பெற்றோராவது சொல்லியிருக்கின்றாரா? இல்ல. இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும். எல்லோரும் ஒத்துக்கொண்டு எல்லோரினதும் மனசாட்சியும் ஏற்றுக்கொண்ட ஒரு விடயத்தை நான் வெளிப்படையாகச் சொன்னேன் அவ்வளவுதான்.

கேள்வி: தமிழ் மக்களில் உணர்வு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை இருப்பதால் அதனை எவ்வாறு அணுகுவது சாத்தியப்பாடுடையதாக இருக்கும்?

ஒருத்தர் இறந்து விட்டார். மருத்துவர் நாடிபிடித்துச் சொல்கிறார் அவர் இறந்து விட்டதாக. அவ்வாறானால் அந்த மருத்துவர் குற்றவாளியா? தங்கள் பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால், அந்தப் பெற்றோருக்கு அது காலாகாலமும் பரிதவிப்புத்தான். அதனை எவரும் மறுக்க முடியாது. வீட்டில் யாரேனும் இறந்தால் அந்த இறப்பை எவரும் இலகுவாக ஏற்றுக்கொள்வதில்லையே. அவரைப் புதைத்த அல்லது எரித்த பின்னரும் கூட, இறந்த நபர் தங்களி​ைடயே வாழ்வதாகத்தான் அவர்கள் கருதுவார்கள். இதுதான் அந்த உணர்வு. அது தவறானதல்ல. யாதார்த்தமாகப் பார்க்கும் போது எது உண்மையானது என்பது பகுத்தறிந்து பார்க்கப்பட வேண்டும். அதுவும்பொது உண்மைகள் சம்பந்தப்பட்ட விடயத்தை உணர்வு பூர்வமாக அணுகக் கூடாது அது பகுத்தறிவு பூர்வமாவே அணுகப்படவேண்டும்.

இதில் கவனிக்ப்பட வேண்டிய இன்னோர் அம்சம் என்னவெனில் அவ்வாறு தங்கள் உறவுளைப் பறிகொடுத்து பரிதவிக்கும் சிலரை வெளிநாட்டில் இருக்கும் சிலரும், சில அரசியல்நோக்கங் கொண்டோரும் ஆட்டுவிக்கின்றனர். அவர்களுக்கு காசைக்கொடுத்து நடுவீதியில் தொடராக உண்ணாவிரதம், இருக்க வைக்கின்றனர். அதுவும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த மக்களுக்கான தீர்வென்ன என்பது தான் இப்போது சிந்திக்கவேண்டியது. ஆண்டாண்டுகாலம் அழுது புலம்பினாலும் மாண்டார் வரமாட்டார் என்பதுதானே நியதி? அவ்வாறானால் நாங்கள் செய்யவேண்டியது என்ன?

காணாமல் ஆக்கப்பட்டோரில் தங்கி வாழ்பவர்களுக்கான உதவிகளே இன்று ​ேதவைப்படுகின்றன. அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றுக்கான திருப்திகரமான உதவிகளே இன்று தேவைப்படுகின்றன. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பிச்சைக்காசு கொடுப்பதுபோல ஆறாயிரம் அல்லது ஐயாயிரம்கொடுப்பது பிச்சை வழங்குவது போலத்தானே? அதனைக் கூட இந்த ஐந்து வருடங்களில் கொடுத்திருக்கலாமல்லவா? கடைசியில் தேர்தல் காலத்தில் கொடுப்பது ஏன்? அதுவும் வெறும் கண்துடைப்புத் தானே? நான் அறிந்த வரையில் காணாமற் போனவர்களுக்காக உதவும் நாடுகள், ஐயாயிரம் மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளன. ஆனால் அந்தப்பணம் காணாமற்போனோரைக் கண்டுபிடிக்கும் விசாரணைகள், விவரணப்படம் எடுத்தல், ஊடகங்களில் பிரசாரம் செய்தல், காணாமற்போனோர் அலுவலக பணியாளர்கள் சம்பளம் என்பனவற்றுக்குத்தான் பயன்பட்டிருக்கின்றது. மக்களுக்கென வந்த ஐயாயிரம் மில்லியன் ரூபாவை அந்த மக்களுக்குக்கொடுக்காமல் இந்த அரசு வேறுவழிகளில் செலவழிக்கின்றது. காணாமல்போனோர் என 6000 பேர் வரைதான் இதுவரையில் பதிந்திருக்கின்றார்கள். ஐயாயிரம் மில்லியனில் பத்து லட்சம் ரூபாவை ஒரு வீட்டுக்குக் கொடுத்திருந்தாலும் ஐயாயிரம் வீட்டுக்கு இதுவரையில் நட்ட ஈடு வழங்கியிருக்கலாம். அரசும், தமிழ்தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் வழங்காமல், அவர்களை நடுரோட்டில் இருக்க வைத்து ஒப்பாரி பாடவைக்கும் அரசியல் மாத்திரமே நடக்கின்றது. அந்த மக்களுக்கு மிகத் தாராளமான நிதியுதவி உடனடியாகச் செய்யப்பட வேண்டும். அவர்களது குடும்பங்களில் தகுதியுள்ளவர்கள் இருந்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவேண்டும். அவர்களுக்கு பணம் வழங்குதோடு மாத்திரம் நின்றுவிடாமல், அவர்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையில் அவர்களுக்கான உதவிகள் அமையவேண்டும் என்று நாங்கள் நினைக்கின்றோம். விரும்புகின்றோம். அரசைக் ​கோருகின்றோம்.

வாசுகி சிவகுமார்

Comments