சுயேச்சையாக வரும் ஜனாதிபதியே பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வல்லமையுடையவர் | தினகரன் வாரமஞ்சரி

சுயேச்சையாக வரும் ஜனாதிபதியே பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வல்லமையுடையவர்

ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க 20ற்கும் அதிகமான வேட்பாளர்கள் தயாராகியுள்ளனர். பிரதான மூன்று கட்சி வேட்பாளர்களுக்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர்கள், சிறுகட்சி வேட்பாளர்கள் எனப் பலரும் போட்டிக்கு தயாராகியுள்ளனர். இவர்களிடையே தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க குறிப்பிடத்தக்க ஒருவர். 

2017ஆம் ஆண்டு ஜுன் 27ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை இலங்கை இராணுவத்தின் 22ஆவது தளபதியாக கடமையாற்றியிருந்தார். ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னர், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த மகேஷ் சேனாநாயக்க முன்னெடுத்த நடவடிக்கைகளின் ஊடாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தார்.  தற்போதைய அரசியல் நிலைமை, ஜனாதிபதியாக சாதிக்க எதிர்பார்கும் திட்டங்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து மஹேஷ் சேனாநாயக்கவுடன் ஆராயப்பட்டது. தேசிய மக்கள் இயக்க முக்கியஸ்தர்களில் ஒருவரான முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவும் இந்த நேர்காணலில் இணைந்து கொண்டார். நேர்காணலின் முழுவிபரம் இதோ, 

கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உங்கள் திடீர் முடிவுக்கு என்ன காரணம்? 

பதில்: மகேஷ் சேனாநாயக்க.  கட்சி சாரா சுயாதீனமான வேட்பாளர் ஒருவரை நிறுத்த தேசிய மக்கள் இயக்கம் எடுத்த முடிவுக்கமைய எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறேன்.  மூளையினால் சிந்தித்து செயற்படும் குழுவே எம்முடன் இணைந்து செயற்படுகிறது.  மதத்தலைவர்களின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.  நாட்டின் மீது அன்பு செலுத்தும் நபர்களே எமது அணியில் இருக்கிறார்கள்.  71வருட கால கட்சி அரசியலினால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.  நாட்டிலுள்ள ஆட்சி முறைமையில் இருக்கும் குறைபாடுகள் மாற்றப்பட வேண்டும். தனிப்பட்ட லாபத்திற்காக அன்றி நாட்டு நலனுக்காக இணைந்துள்ள புத்திஜீவிகள்,  தொழில்சார் நிபுணர்கள் அடங்கிய குழு சார்பில் தான் நான் போட்டியிடுகிறேன்.  எந்த வேட்பாளருக்கும் எதிராகவோ,   யாரின் அழுத்தத்திற்காகவோ நான் களமிறங்கவில்லை.  மக்களின் அடிமனதிலுள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தான் எமது ஒரே நோக்கமாகும்.  

பதில்: காமினி விஜேசிங்க.  லஞ்ச ஊழலுடன் நாட்டை முன்னேற்ற முடியாது.  தற்போதைய அரசியல் முறைமையும் நாட்டை முன்னேற்ற உகந்ததாக இல்லை. வறுமையை ஒழிக்க முடியுமாக இருந்தாலும் அதனை ஒழிக்காமல் அரசியல் செய்கின்றனர்.  

கட்சி அரசியலின் கீழ் திருடர்களை காப்பாற்ற வேண்டியிருக்கும்.  ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 4முதல் 5பில்லியன்ரூபா வரை செலவிடுகின்றனர்.  இதற்கு பல்தேசிய கம்பனிகள்,  வியாபாரிகள் உதவுகிறார்கள்.  வென்ற பின்னர் அவர்களை கவனித்தாக வேண்டும். எமக்கு அந்த பிரச்சினை இல்லை.  

கேள்வி: உங்கள் குழு எப்பொழுதில் இருந்து செயற்படுகிறது.  எதிர்காலத்தில் வேறு தேர்தல்களிலும் போட்டியிடுவீர்களா? 

பதில்: காமினி விஜேசிங்க.  இந்தக் குழு சுமார் 5வருடங்களாக இயங்கி வருகிறது. நானும் சில காலத்திற்கு முன்னர் தான் இதில் இணைந்தேன்.  முதலில் ஜனாதிபதி தேர்தல் வந்ததால் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.  அடுத்து பாராளுமன்ற தேர்தல்,  மாகாண சபைத் தேர்தல் என்பவற்றிலும் குதித்து எமது தரப்பு அழுத்தத்தை பிரயோகிக்க இருக்கிறோம். இது தொடர்ந்து செயற்படும் குழுவாகும் 

கேள்வி: இராணுவத்திற்கு கட்டளையிடும் பொறுப்பை தான் இராணுவ தளபதி செய்வார்.  ஜனாதிபதியாக தெரிவாகி அவரால் எப்படி சிவில் நிர்வாகம் செய்ய முடியும்? 

பதில்: மகேஷ் சேனாநாயக்க.  இராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்றி நிறைய அனுபவங்களை கற்றிருக்கிறேன். யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கம்,  மீள்குடியேற்றம்,  புனர்வாழ்வு,  புனரமைப்பு செயற்பாடுகளிலும் இராணுவம் பங்களிப்பு செய்து வருகிறது.  சிவில் நிறுவனங்களுடனும் சிவிலியன்களுடனும் இணைந்து தான் நாம் பணியாற்றுகிறோம். நாம் கட்டளையிடுவது மட்டுமன்றி பொதுமக்கள் நலன் சார்ந்தும் செயலாற்றி வருகிறோம்.  நாம் கட்டுக் ​கோப்பான ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள். தலைமைத்துவத்திற்குரிய தரம் எமக்கு உள்ளது. இத்தனைக்கும் மேலாக கட்டளை அதிகாரி சிறந்த செவிமடுக்கும் நபராக இருக்க வேண்டும்.  நானும் அவ்வாறானவன் தான்.  

கேள்வி: இராணுவத் தளபதி ஒருவர் நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுப்பது பாரதூரமாக இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் அச்சம் எழாதா? 

பதில்: மகேஷ் சேனாநாயக்க.  இராணுவத்தளபதியை விட அதிக அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது.  இராணுவமன்றி சிவிலியன்கள் தான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். நான் ஜனாதிபதியாக தெரிவானாலும் தனிநபராக செயற்பட முடியாது.  நாம் ஒரு குழுவாகவே இயங்கி வருகிறோம். சகல முடிவுகளும் கூட்டாகவே எடுக்கப்படும்.  கட்சிசாரா அணியாக இருப்பதால் எமக்கு முடிவுகள் எடுப்பதில் பிரச்சினை எழாது. சொந்த நலனுக்காக நாம் செயலாற்ற மாட்டோம்.  

கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கத்திலா போட்டியிட முன்வந்தீர்கள். அல்லது வேறு கட்சி வேட்பாளர்களுக்கு சவாலுக்காக களமிறங்குகிறீர்களா? 

பதில்: மகேஷ் சேனாநாயக்க.  வெற்றி பெறுவது தான் எமது நோக்கம்.  அதற்காகவே களமிறங்கியிருக்கிறோம்.  மற்றவர்களுக்கு சவால் விடும் நோக்கில் நாம் போட்டியிட முன்வரவில்லை. அரசியல் நோக்கில் போட்டியிடுபவர்களுக்கு எமது குழு சவாலாக இருக்கலாம். இந்த அரசியல் முறைமை தொடர்பில் மக்கள் விரக்தியில் இருக்கிறார்கள்.  அதனால் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் . அதனை நிறைவேற்றவே போட்டியிடுகிறேன். ஜனாதிபதி தேர்தலுடன் நின்றுவிடாது பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் என்பவற்றிலும் நாம் ஒரு அணியாக போட்டியிடுவோம்.  நாமன்றி மக்கள் தான் அந்த தரப்பிற்கு சவால் விடுகின்றனர்.  

கேள்வி: உங்கள் அணியின் கொள்கை என்ன? 

பதில்: மகேஷ் சேனாநாயக்க.  எமது தரப்பின் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  7ஆம் திகதி வேட்புமனு நிறைவடைந்த பின்னர் எமது கொள்கைப் பிரகடனம் வெளியிடப்படும். இதில் நீண்ட கால இலக்குகளை வைத்து திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  அவற்றை ஒன்றுவிடாமல் செயற்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்.  

பதில்: காமினி விஜேசிங்க.  நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதிக்கு கொள்கை பிரகடனம் முன்வைக்கும் அதிகாரம் கிடையாது. இருக்கும் சட்ட கட்டமைப்பிற்குள் தான் அவரினால் செயற்பட வேண்டியுள்ளது.  நாம் தயாரித்துள்ள கொள்கை பிரகடனத்தின் பிரகாரமே எமது ஜனாதிபதி செயற்பட வேண்டும். நாட்டில் மாற்றம் செய்வதற்கு தேவையான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு இருக்கிறது.  கட்சி சாரா ஜனாதிபதியினால் நாட்டின் 75வீதமான குறைபாடுகளை தற்பொழுதுள்ள சட்ட கட்டமைப்பினூடாக தீர்வு காண முடியும்.  ஆனால் அதனை யாரும் செய்வதில்லை. நாம் ஆட்சிக்கு வந்து இரண்டொரு மாதத்தில் உணரக்கூடிய வகையில் மாற்றம் செய்ய இருக்கிறோம்.  

கேள்வி: சுதந்திரமாக செயற்படுவதற்கு தடையாக வெளிநாட்டு தலையீடுகள் வரும். இதற்கு என்ன மாற்றுவழிகளை கையாள்வீர்கள்? 

பதில்: காமினி விஜேசிங்க.  அழுத்தங்கள் வரத்தான் செய்யும். நாடு பலவீனமாக இருக்கும் நிலையில் தான் வெளிநாடுகள் தலையீடு செய்யும். நாம் சுயாதீனமாக செயற்பட வேண்டும். வெளிநாடுகளின் உதவியின்றி செயற்பட முடியாது என்ற மனப்பாங்கை மாற்ற வேண்டும்.  கடன் பெற்று 'கொமிசன்' வாங்கி செயற்படும் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். நடுநிலை ​போக்கை கடைப்பிடித்து ஆட்சி புரிய வேண்டும். எந்த தரப்பிற்கும் தலையீடு செய்ய இடமளிக்கக் கூடாது.  

கேள்வி: தேசிய பாதுகாப்பு குறித்து சகல வேட்பாளர்களும் பேசிகிறார்கள். நீங்கள் இராணுவ தளபதியாக இருந்த போது தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தது.  இந்த நிலையில் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? 

பதில்: மகேஷ் சேனாநாயக்க.  நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் யாருக்கு அதிகாரங்கள் இருக்கின்றன.  சட்டம் ஒழுங்கு தொடர்பில் பொறுப்பு எவரிடம் இருக்கிறது.  இதற்கு பதில் தெரிந்தால் இக் கேள்வி எழாது.  உயிர்த்த ஞாயிறு சம்பவத்தின் போது சுயமாக செயற்பட எமக்கு அதிகாரம் கிடையாது.  அவசரகால சட்டத்தின் பின்னரே எமக்கு செயற்பட அதிகாரம் கிடைத்தது.  நாம் தலையிட்ட பின்னர் ஒரு பலூன் கூட நாட்டில் வெடிக்கவில்லை.  

தாக்குதல் தொடர்பில் கடிதங்கள் பரிமாறப்பட்டுள்ளன.  பொறுப்பானவர்கள் தமது கடமையை செய்தார்களா? மக்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின் 12ஆவது சரத்து திருத்தப்பட்டு இராணுவத்திற்கு செயற்பட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் அரசியல் ​நோக்கிலே எம்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பின் பின்னரே இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.  

அவசரகால சட்டத்தின் கீழ் நாட்டை நிர்வகிக்க முடியாது.  சட்டத்தில் திருத்தம் அவசியம்.  ஒன்றிணைந்த புலனாய்வு முறை அறிமுகம் செய்யப்பட வேண்டும்.  

கேள்வி: யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணை நடைபெறாத நிலையில் இராணுவத் தளபதி நியமனம் முதல் இராணுவம் தொடர்பான பல்வேறு நகர்வுகளின் போது சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டுகள் வருகிறது. இது பற்றி. . . . ? 

பதில்: மகேஷ் சேனாநாயக்க.  2009இல் யுத்தம் நிறைவடைந்த பின்னர் யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பல் பல முன்னெடுப்புகள் நடந்தன. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டும் அதன் பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை.  இதனை செயற்படுத்தியிருந்தால் 2019வரை யுத்த குற்றச்சாட்டு தொடர்பான பிரச்சினை நீடித்திருக்காது. தனிநபர் சார்ந்த பிரச்சினைகளும் தலைதூக்கியிருக்காது.  பொறுப்பை நிறைவேற்றாதது இராணுவ தளபதியின் தவறல்ல.  யுத்தக் குற்றச்சாட்டுகளுடன் இராணுவத்திற்கோ வேறு படைப்பிரிவுகளுக்கோ தொடர்பு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.  கடந்த கால பலவீனங்களே இன்றும் இந்த பிரச்சினை நீடிக்க காரணமாக அமைந்தது.  

கேள்வி.  நீங்கள் ஜனாதிபதியாக தெரிவானால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவீர்களா? 

பதில்: மகேஷ் சேனாநாயக்க.  நிச்சயமாக. அத்தோடு 2020, 2025களில் இராணுவத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளையும் செயற்படுத்துவோம்.  

கேள்வி: உங்கள் தேர்தல் பிரசார திட்டம் என்ன? 

பதில்: மகேஷ் சேனாநாயக்க.  பல குழுக்கள் எம்முடன் கைகோர்த்துள்ளனர். ஏனைய தரப்பினர் ​போலன்றி வெளியில் தெரியாத பாரிய ஏற்பாட்டு வலையமைப்பு எம்மிடம்  இருக்கிறது. இதனை பயன்படுத்தி மக்களுக்கு எமது கொள்கைகளை விளக்கி பரந்தளவில் பிரசாரம் செய்ய இருக்கிறோம்.  வழமையான முறைக்கு மாற்றமாக விசேட முறையில் எமது பிரசாரம் அமையும்.  

பதில்: காமினி விஜேசிங்க.  அடிமட்டத்தில் இருந்து எமது ஏற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. வழமையான முறைமைகளை நாம் முன்னெடுக்க தயாரில்லை. புத்திசாதுர்யமான மக்கள் எமது நிலைப்பாட்டை செவிமடுப்பார்கள்.  கடந்த முறை 150இலட்சம் வாக்காளர்களில் 112இலட்சம் வாக்காளர்கள் தான் கடந்த தேர்தலில் வாக்களித்தார்கள். இம்முறை 15இலட்சம் புதிய வாக்குகள் இணைந்துள்ளன. நாட்டின் மீது அன்பு செலுத்தும் மக்கள் எம்முடன் இணைவார்கள்.  

பதில்: மகேஷ் சேனாநாயக்க.  ஏனைய அரசியல்வாதிகள் தமது குடும்பத்தை பற்றி சிந்தித்து செயற்படுகிறார்கள்.  நாம் மற்றவர்களின் குடும்பம் குறித்து சிந்திக்கிறோம்.  

கேள்வி: உங்கள் தரப்பு முன்வைக்கும் கருத்துகளை ஒத்ததாக சட்டத்தரணி நாகானந்த, வர்த்தகர் ரொஹான் பல்லேவத்த போன்றோரும் முன்வைக்கின்றனர். அதிக வேட்பாளர்கள் இப்படி களமிறங்குவது வாக்காளர்களை குழப்பாதா? 

பதில்: காமினி விஜேசிங்க.  ஒருவர் அரிசி கழுவுகிறார். மற்றவர் விறகு திரட்டுகிறார்.  மற்றவர் நீர் கொண்டுவருகிறார். அனைவரும் சோறு சமைக்கத்தான் தயாராகிறார்கள்.  இவர்கள் ஓரிடத்தில் இணைவார்கள். அது ​போல நாகானந்த கொடிதுவக்கு, ரொஹான் பல்லேவத்த போன்றவர்களும் எமது அணியுடன் கைகோர்ப்பார்கள். அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஜே. வி. பியுடனும் பேச உள்ளோம்.  

கேள்வி: தேர்தலில் வெற்றியீட்ட சகல இனக்குழுக்களினதும் ஆதரவு தேவை. இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் உங்கள் நிலைப்பாடென்ன? 

பதில்: மகேஷ் சேனாநாயக்க.  கட்சி சாரா வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாவது ஒன்றே இவ்வாறான பிரச்சினைக்கு தீர்வாக அமையும். அவராலே பக்கசார்பற்று முடிவு எடுத்து தீர்வு காண வேண்டும். அவர் கட்சி சாரா ஜனாதிபதி என்பதால் எவரிலும் எந்த கட்சியிலும் தங்கியிருக்க நேராது.  ஒரு நாடு ஒரு சட்டம் என்பது தான் எமது பிரதான கொள்கை. அவ்வாறான நிலைமை இன்மையே பிரதான பிரச்சினையாகும். 

இனப்பிரச்சினை உட்பட நாடு முகங்கொடுக்கும் சகல பிரச்சினைகளுக்கும் கட்சிசாரா ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவது ஒன்றே தீர்வாக அமையும்.  

ஷம்ஸ் பாஹிம்

Comments