பிரேமதாசவுக்கு நன்றிக்கடன் செலுத்த மலையக மக்கள் சஜித்தை ஆதரிப்பார்கள் | தினகரன் வாரமஞ்சரி

பிரேமதாசவுக்கு நன்றிக்கடன் செலுத்த மலையக மக்கள் சஜித்தை ஆதரிப்பார்கள்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அபிவிருத்திகளை மலையகத்தில் முன்னெடுத்துள்ளோம். அதன்காரணமாக தேர்தலில் பூரண ஆதரவை மக்கள் வழங்குவார்கள். சஜித் பிரேமதாச இளைய தலைவராகவுள்ளார். முழுநாடும் இளைய தலைமைத்துவத்தைத்தான் விரும்புகிறது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மலையக பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்க முக்கிய பங்காற்றியவர் என்ற அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு மலையக மக்கள் கட்டாயம் ஆதரவளிப்பார்கள் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ‘தினகரன் வாரமஞ்சரி’க்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலின் போதே மேற்கண்டவாறு கூறினார். அவரது முழுமையான நேர்காணல் வருமாறு,

கேள்வி: நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு நான்கரை வருடங்கள் கடந்துள்ளதுடன், இன்னும் சில மாதங்களில் அதன் ஆயுட்காலமும் முடிவடையவுள்ளது. இத்தருணத்தில் இந்த அரசாங்கமானது வெற்றியடைந்த ஓர் அரசாங்கமென கருதுகின்றீர்களா?

பதில் : நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் பாரிய வெற்றிகளை நாம் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மலையக சமூகம் சார்ந்தப் பிரச்சினைகளில் பல முற்போக்கான தீர்மானங்களை எடுத்துள்ளோம். தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கி அவற்றுக்கு உறுதி பெற்றுக்கொடுக்கப்பட்டு தனிவீட்டுத்திட்டத்தையும் உருவாக்கியமை நாம் அடைந்த முக்கிய வெற்றியாகும். மலையகத்தில் சில பாடசாலைகள் கணித, விஞ்ஞானப் பாடசாலையாக உருவாக்கப்பட்டுள்ளன. தேசியப் பாடசாலைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். கல்வி அமைச்சு முன்னெடுக்கும் ‘அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற திட்டத்தின் மூலம் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். அதுபோன்று மலையகத்தில் ஏனையத்துறைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உள்ளூராட்சி சபைகளை அதிகரித்தமை, பிரதேச செயலகங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மற்றும் மலையக அபிவிருத்தி அதிகார சபையை உருவாக்கியமை என்பன மலையக சமூகத்தின் வளர்ச்சியில் அடைந்த மற்றுமொரு மைல் கல்லாகும். எமக்கு இடையூறாக இருந்த பிரச்சினை சம்பளப் பிரச்சினைதான். கூட்டு ஒப்பந்தம் காரணமாக சம்பள விவகாரம் ஓர் இழுபறி நிலையில் காணப்படுகிறது. அதனை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். ஆகவே, கடந்த காலத்தில் முன்னெடுக்கப்படாத பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் இந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுத்துள்ளோம்.

கேள்வி: கடந்த நான்கரை வருடகாலமாக மக்களுக்கு இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொள்ள முடியுமென நினைக்கின்றீர்களா?

பதில்: நிச்சயமாக வெற்றிக்கொள்வோம். கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம அபிவிருத்திகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. மலையகத்தில் ஓளரவு முக்கிய பிரச்சினைகளை எம்மால் இந்த அரசாங்கத்தின் மூலம் தீர்க்க முடிந்துள்ளது.

கேள்வி : அரசாங்கம் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ள போதிலும், மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் முதல் பல்வேறு ஊழல் குற்றுச்சாட்டுகளுக்கும் உள்ளாகியுள்ளது. இவை தேர்தலில் தாக்கம் செலுத்தக் கூடிய காரணிகளாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலை வெற்றிப் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதா?

பதில்: ஒவ்வோர் அரசாங்கத்தின் காலகட்டத்திலும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளமைதான் வரலாறாகவுள்ளது. இந்த அரசாங்கத்தின் காலத்தைவிட கடந்த அரசாங்கத்தின் காலத்தில்தான் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் பிரதான குற்றச்சாட்டு பிணைமுறி விவகாரம்தான். பிணைமுறி மோசடியை ஒருசிலர்தான் செய்திருந்தனர். ஆனால், முழு அரசாங்கமும் ஊழல் செய்ததென கூற முடியாது. தப்பு செய்தது எவராக இருந்தாலும் அவருக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எனவே, இது எவ்வகையிலும் பாதிப்பாக இராது.

கேள்வி: வீடமைப்புத் திட்டம் தொடர்பில் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு மாத்திரமே வீடுகள் வழங்கப்படுவதாக நீங்களும் கருத்துகளை வெளியிட்டிருந்தீர்கள் தற்போதைய நிலவரம் என்ன?

பதில் : இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானவையாகும். தொழிற்சங்க அரசியலில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவது சகஜமான விடயமாகும். பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தாலும் அவை சுமூகமாகத் தீர்க்கப்பட்டுள்ளதுடன், தற்போது சமமாக வீடுகளை பகிர்ந்தளிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.

கேள்வி : வீடமைப்புத் திட்டங்களில் தரமில்லையென பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவற்றை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் : அவ்வாறு சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், அவ்வாறான குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டிருந்தால், ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க முடியும். தகவல் அறியும் சட்டம் உள்ளது. அதனை அனைவரும் பயன்படுத்த முடியும். இவற்றை ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டுவர முடியும். வெறுமனே ஒருசிலரால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறதே தவிர உறுதிப்படுத்தப்படவில்லை.

கேள்வி : உங்களுடைய அமைச்சின் மூலம் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்க முடியுமா?

பதில்: இந்த அமைச்சு புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் அமைச்சாகும். வரவு – செலவுத் திட்டத்தின் பின்னர்தான் இவ்வமைச்சு உருவாக்கப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்தில் பெரிதாக நிதி ஒதுக்கப்படாவிடினும், மலையகத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கொண்டுசெல்வதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. குறிப்பாக பிரதேச பாதைகள், கல்வி அபிவிருத்தித் திட்டங்கள், மகளிர் விவகாரங்கள், சுகாதாரப் பிரச்சினைகள், தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாடு சம்மந்தமான உதவிகளை வழங்குதல் என பல்வேறு அபிவிருத்திகளை எம்மால் மலையகத்துக்கு முன்னெக்கக் கூடியதாகவுள்ளது.

கேள்வி: மலையகச் சமூகம் அடைந்த பிரதான வெற்றிகளில் உள்ளூராட்சி சபைகளை உருவாக்கியதை சமகாலத்தில் கூறலாம். தமிழ் முற்போக்குக் கூட்டணி பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியாக இதனைப் பார்க்கின்ற போதிலும் அவற்றின் அதிகாரத்தை இ.தொ.காவே கைப்பற்றியது. இச்சபைகள் ஆக்கப்பூர்வமாக இயங்குவதில்லையென சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றதே?

பதில்: அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை முறைமையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இவற்றின் மூலம் முறையாக பணிகள் இடம்பெறுவதில்லை. அரசாங்கம் ஒருபக்கமும், பிரதேச சபைகள் ஒருபக்கமும் செயற்படுகின்றன. அதனால், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. பெயரளவில் அவை பிரதேச சபைகளாக உள்ளதே தவிர, முன்னேற்றகரமான விடயங்கள் எதுவும் நடைபெறவில்லை. பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் போதிய அனுபவமில்லை என்பதாலேயே பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கேள்வி: பிரதேச செயலகங்கள் உருவாக்கும் செயற்பாடு எவ்வாறு நடைபெறுகிறது?

பதில் : புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. துறைசார் அமைச்சும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராகவுள்ளது. அடுத்த வருட ஆரம்பத்தில் இவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படும். பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படும் போது அவற்றுக்கான பல வேலைத்திட்டங்கள் உள்ளன. அவை தற்போது நடைபெற்று வருகின்றன.

கேள்வி: முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் மலையகத்தின் சமகால கல்வி வளர்ச்சியின் போக்கு எவ்வாறு அமைந்துள்ளது?

பதில்: கல்வியில் மலையகச் சமூகம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றோம். ஆனால், இன்னமும் வளங்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் அங்கு அதிகரிக்கப்பட வேண்டும். நான் இராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும் பல பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் இன்னும் சில பாடசாலைகள் பழைய முறையிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன. அடுத்த அரசாங்கத்தின் காலத்தில் அவற்றுக்கு முழுமையான தீர்வை பெற்றுக்கொடுக்க எண்ணியுள்ளோம்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments