ஈவு இரக்கமின்றி அழிக்கப்படும் காடுகளும் மரங்களும் | தினகரன் வாரமஞ்சரி

ஈவு இரக்கமின்றி அழிக்கப்படும் காடுகளும் மரங்களும்

காலம் பொய்த்துப் போய்விட்டது. பருவகாலங்களை வைத்து பயிர்  செய்யவும் முடியவில்லை. மழை எப்ப வரும் காற்று எப்ப வீசும். கோடை எப்ப  தொடங்கும். பனி எப்ப பெய்யும் எல்லாமே இப்போது குறித்த காலத்தில் நடக்க  மறுக்கிறது. காலங்களை நான்காக வகுத்தவர்கள் இப்போது இல்லை ஆனால் எல்நினோ  லாலினோ என காலநிலைகளுக்கும் அதன் பிறழ்வுகளுக்கும் புதிய இலக்கணங்கள்  வகுக்கப்பட்டுவிட்டது.  

எது எப்படிப் போனாலும், எமது காடுகள் வலிந்து  அழிக்கப்படுகின்றன. கொஞ்சம்கூட ஈவு இரக்கமின்றி காடுகளும் மரங்களும்  அழிக்கப்படுகின்றன. கொஞ்சம்கூட அக்கறை இல்லாமலே காடுகளை அழிக்க  வனபரிபாலனமும் பிரதேச செயலகங்களும் அனுமதிகளை அள்ளி வீசிக்  கொண்டிருக்கின்றன. பாரம்பரியமாக வன்னியில் தாமாக முளைத்து வளர்ந்த  பெருமரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு அதன் கிளைகளோ கொப்புகளோ உதிர்ந்த இலைகளோ  கூட அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்ட அந்த இடத்தில் ஒரு மரம் நின்றதற்கான  அறிகுறிகளும் அழிக்கப்பட்டு துடைத்தெடுக்கிறார்கள் வெட்டிய மரத்துக்கு  என்ன நடந்தது அதை யார் உரிமை கோரினார்கள் என்பதெல்லாம் தெரியாமலே தெருக்கரை  மரங்கள் பறிபோகின்றன.  

 காடுகள் அழிந்து வீடுகளாக மாறுகின்ற அதே வேளை  நிலத்துக்காகவும் வீடுகட்டுவதற்காகவும் மரங்கள் உயிர் விடுகின்றன.  நாற்பதாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்துக்காக இரண்டு லட்சம் மரங்கள்  அழிக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. வீடுகள் அனைத்தும்  தேவையோடுதான் கட்டப்படுகிறதா? இல்லவேயில்லை. ஏற்கெனவே பெரிய கல்வீடுகளை  வைத்திருப்பவர்களுக்கு வீடமைக்கும் திட்டத்திலும் வீடுகள் (ஆம் ஒன்றல்ல  இரண்டு மூன்று வீடுகள்) கட்ட வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.  கனகபுரத்தில் மட்டும் கட்டப்பட்ட பதினாறு வீடுகளில் யாருமில்லை. அவர்களுக்கு  வேறிடத்திலோ வெளிநாட்டிலோ வீடுகள் இருக்கிறதாக அக்கிராம வாசியொருவர்  சொன்னார்.  

 இதைவிட கடற்றொழிலுக்காகவும் மரங்கள் செல்கின்றன.  தொழிலாளர்கள் அல்லாத வர்த்தகர்களே இந்த மர வியாபாரத்தில் பெரும் பணத்தை  லாபமாக ஈட்டுகின்றனர்.. தவிர்க்கமுடியாத தேவைகளுக்காக மரங்களை வெட்ட அனுமதி  அழிப்போர், இந்த வர்த்தக முதலைகளுக்கு பெருமளவிலான மரங்களுக்கான  சட்டவிரோதமான அனுமதிகளையும் வழங்கி வருவதாக அறியமுடிகிறது. ஒருவருக்கு  நூற்றைம்பது தடிகளை வெட்ட மட்டுமே அனுமதி அழிக்க முடியுமெனில் அந்த ஒரு  அனுமதியை வைத்துக் கொண்டு விரைவாக அதேநாளில் ஆயிரத்து ஐநூறு தடிகளை வெட்டி  விற்பனை செய்து விடுகின்றனர்.  

இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க சாதாரண மக்களுக்கு அனுமதி  உண்டா என்பது இங்கே கேள்வி ஆகிறது. ஆம் ஒவ்வொரு நாட்டின் பிரசையும் இந்தச்  செயல்களால் பாதிக்கப்படும் போது கேட்கும் உரிமை ஏன் இல்லை. நிச்சயமாக  உண்டு. ஆயிரத்து ஐநூறு தடிகள் என்றால் அவை வெறுமனே தடிகள் அல்ல விண்ணாங்கு  காயா, காட்டாமணக்கு, வெடுக்குநாறி, முதிரை, வீரை, பாலையென வளரவுள்ள முழு  மரங்கள் என்பதை நினைவிருத்தி யோசித்தால் நமக்கு அதன் தாக்கம் புரியும்.  இவ்வளவு வேகமாக காடுகள் அழிவதையிட்டு எந்த அரச அதிகாரியும்  கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவர்களே தமது அலுவலக வளாகங்களில் வளர்ந்த பல  வருடங்களாக இருந்த மரங்களை வெட்டி அழித்துவிட்டு தரையையும் மூடி  கற்களைப்பதித்து சொகுசு மாடி காட்டுகிறார்கள். காரணம் அவர்கள் அழிப்பது  அவர்கள் பிறந்த மண்ணையல்ல. எங்கோ பிறந்து வளர்ந்து எங்கோ படித்துவிட்டு  எங்கோ போய் உத்தியோகம் பார்ப்பவருக்கு தான் வாங்கும் சம்பளமோ அல்லது அது  சார்ந்து வரும் வருமானமோதான் இலக்காக உள்ளதாக தெரிகிறது. மாறாக,  

இந்த மரங்களை மீள நடுவதற்காக வருடத்தில் ஒரு வாரம்  ஒதுக்கப்படும் அதிலும் இவர்கள் சாதனையை நிலைநாட்டி, கூட்டங்கூட்டி.  பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்கள் சகிதம் சென்று, மாலை மரியாதை  வரவேற்புகளை பெற்று, தானாக வளர்ந்தாலும் வளர்திருக்கக் கூடிய கன்றுகளை  பிடுங்கிவந்து, நட்டுக்காட்டி படமும் எடுத்து பத்திரிகையில் போடுவார்கள்.  அவ்வளவுதான்.  

எங்காவது இந்த மரம் நாட்டு விழாக்களில் நடப்பட்ட காடுகள்  உண்டா என்ன? சிரிக்க அல்ல சிந்திக்க சொல்கிறேன். நட, பட்டுப்போன  காடுகள்தான் அதிகம். அந்த கன்றுகளை முளைத்த இடத்திலேயே விட்டிருந்தாலும்  பிளைத்துப் போயிருக்கும். எப்பவாவது சென்ற வருடம் நட்ட கன்றுகளைக்  காட்டுங்கள் என்று எந்த அதிகாரியும் கேட்டிருக்கிறார்களா? கேட்க  மாட்டார்கள் ஏனெனில் அவர்களும் இதே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.  

ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றோ  என அவ்வை பாடினாள். ஆற்றங்கரையின் மரம் காலப்போக்கில் நீரால் அரிப்புண்டு  சாய்ந்து போகும். ஆனால் இப்போது நீரே பாயாத காலத்தில் ஆற்றங்கரை மரங்கள்  மணல் அகழ்வதால் அரிப்புண்டு வீழ்ந்தழிகின்றன. இங்கேயும் அனுமதிப்பத்திரத்தை  வாங்குபவர் மோசடி செய்கிறார். ஒரு நடை மணலுக்காக அனுமதி எடுப்பவர். ஒரே  நாளில் குறைந்தபட்சம் நாலு நடையாவது மணல் ஏற்றி விற்று விடுவார்கள்.  

வனங்களில் அழிந்து போகும் மரங்களை நாம் எதுவிதத்திலும் நட்டு  உண்டாக்க முடியாது. அவை இயற்கைத்தாவரங்கள் மண்ணை அப்படியே விட்டுவிட்டால்  தானாக காடாகிவிடும். பாலைப்பழத்தை பெட்டிக்கணக்கில் வாங்கி தின்றுவிட்டு  அதன் விதைகளை வளவெங்கும் சிதறுகிறோம் அதிலிருந்து கன்றுகள் வருவதில்லை  வந்தாலும் உயிர்வாழ்வதில்லை. முதிரையும் அவ்வாறே. ஆனால் எமது மண்ணுக்கு  சற்றும் பொருந்தாத இறக்குமதி செய்யப்பட்ட மரங்கள் நடுவதால் ஏற்படும்  பிரச்சினைகளுக்கு இந்தியாவே சாட்சியாக நிற்கிறது.

எமது மண்ணிலும் நாம்நட்ட  யூகலிப்டஸ் மரங்கள் வேகமாக நிலத்தடி நீரை உறிஞ்சியதால் அவற்றை பெருக்காமல்  அழிவு வட்டத்துக்குள் கொண்டு போயுள்ளனர். இபில்இபில் மரமும் பெருமளவு  விதைகளை சிதறி வாழ்ந்த இடமெங்கும் முளைத்து பற்றைகளாகிவிட்டதை யல்ல காடாகவே  நிற்பதை நிண்டகாலம் ராணுவப்பிடியிலிருந்த தெல்லிப்பளை  மயிலிட்டிப்பகுதிகளில் காண்கிறோம். இவை மரக்குப் பெருத்து தூணுக்குதவாது,  என்பதையும் ஒதியமரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரமாகாது என்ற  பழமொழிகளையும் போல எமக்கு பயனற்ற மரங்களே வெறுமனே விறகாகவும்  ஆடுமாடுகளுக்கு தீனியாகவும் கொள்ளலாம். இப்போது காடுகள் விறகைத்  தரும்பகுதிகளில்கூட காஸ் அடுப்பே நாகரீகமாகிவிட்டது. ஏனைய தேவைகளுக்கும்  மாற்று வழிகள் வருமா?                

தமிழ்க் கவி பேசுகின்றார்

 

Comments